Tuesday, November 13, 2012

கல்லூரி விடுதியில் நான் பார்த்த வித்தியாசமான தீபாவளி!!

சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் நான் படித்த 18 மாதங்களில்முதல் 6 மாதம் பி.டெக். மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!!  மொத்தம் ஒரு டஜன் விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதி கட்டிடத்திலும் ஒன்றையொன்று பார்த்தாற்ப்போல இரண்டு பிளாக்குகள், ஒவ்வொரு பிளாக்கிலும் மூன்று தளங்கள், அதில் தரைத் தளத்தில் எப்பொழுதும் முதலாண்டு மாணவர்கள், முதல் தளத்தில் இரண்டாமாண்டு, மேல் தளத்தில் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் என சுண்டெலிகள் முதல் சிங்கங்கள் வரை தங்கியிருப்பார்கள்!! 
இவர்கள் தீபாவளி   கொண்டாடும் விதம் சிறப்பாக இருக்கும்!!  இவர்கள் வாங்கும் வெடிகளில் முதலிடத்தில் இருப்பது ஏவுகணைகள் தான்.  நிறைய ராக்கெட்டுகளை வாங்கி வந்து, அதைச் செலுத்துவதற்கு பெரிய பெரிய நீளமான குழாய்களையும் தயார் செய்து கொண்டு வந்து விடுவார்கள்.  அது சரி இவர்கள் செலுத்தும் ஏவுகணைகளின் இலக்கு எது தெரியுமா?  அவர்களுக்கு எதிரே உள்ள பிளாக்குதான்!!  இவர்கள் ராக்கெட் எப்போதும் மேலே போகவே போகாது, பக்கவாட்டில்தான் செல்லும், எதிர் பிளாக்கில் உள்ளவன் அறைதான் இவர்கள் குறியே!!  எதிர் பிளாக்கு காரப் பசங்க என்ன ஏமாந்த சோனாங்கிகளா!! அவனுங்களும் தங்களது ஆயுத படை பலத்தோடு இவர்களை குறிவைத்து ரெடியாக இருப்பார்கள்.  இவன் கொளுத்திவிடும் ஏவுகணை புஸ் .......... என்று சீறிப் பாய்ந்து எதிர்த்த பிளாக்கில் போய் டமால் ........ என்று வெடிக்கும்.  அடுத்து அவன் கொளுத்தி விடுவது இங்கே வந்து வெடிக்கும்!!  எந்த நேரமும்  உ ஷாராகவே இருக்க வேண்டும்.  ஏவுகணைகள் வரும்போது தளத்தின் தடுப்புச் சுவரில் பதுங்கிக் கொண்டு பின்னர் தமது ஏவுகணையைச் செலுத்த வேண்டும்!! ஒரு சமயம் ஒரு பையன் அறையின் கதவை திறந்து வைத்து விட்டு ஏமாந்த சமயத்தில் ஒரு ராக்கெட் அவன் அறைக்குள்ளே புகுந்து உள்ளே இருந்தவனை விரட்டியது, பின்னர் டமால் என்று வெடித்தது.  ஓரே தமாஷ்தான்!!

இந்தச் சண்டை நாள் முழுவதும் நடக்கும், ஒவ்வொரு தளத்தில் இருப்பவனுக்கும் எதிரி யார் என்றால் நேர் எதிர் தளத்தில் இருப்பவன்தான். சில சமயம் முதல் தளத்தில் இருப்பவன் இரண்டாம் தளத்தில் இருப்பவனைத் தாக்குவதும் நடக்கும்.  இதைப் பார்த்தால் இரண்டு எதிரி நாடுகளின் இராணுவ வீரர்கள் போர்முனையில் ராக்கெட் செலுத்தி ஒருத்தரையொருத்தர்  தாக்குவது போன்ற கட்சியாக இருக்கும்.  ஒரு வேலை இந்த பசங்க சினிமாவில் பார்த்துவிட்டு இதை ஆரம்பித்தார்களா, இல்லை அதே மாதிரி த்ரில் வேணும்னு நினைப்பார்களா தெரியவில்லை!!

நாள் பூராவும் இந்த கூத்து நடந்தால் மாலையில் தொடங்கி இரவில் வேறு விதமான கூத்து நடக்கும்.  விடுதி மாணவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுதியின் மொட்டை மாடிக்குப் போய்விடுவார்கள்.  அங்கே இன்னமும் பலம் வாய்ந்த ராக்கெட் பட்டாசுகளை வாங்கிவந்து பக்கத்து விடுதிக்கு அனுப்புவார்கள், அந்த விடுதி மாணவர்களும்  தங்கள் படை பலங்களோடு தயாராய் மேலே வந்திருப்பார்கள். இவர்கள் அனுப்புவது  அங்கே போய்  வெடிக்கும், அவர்கள் அனுப்புவது இங்கே வந்து வெடிக்கும்.  யார் அனுப்புவது சரியா போய்த் தாக்கி பயமுறுத்துது என்பதில் தான் போட்டியே.  ஒரே கும்மாளம்தான்!!  இப்படி எல்லாம் வெடித்துக் கொண்டிருந்த போது ஒரு வெடி ஒரு பையனின் முகத்தைத் தாக்கியது.  உடனே மருத்துமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.  சோதித்துப் பார்த்ததில் அவனது ஒரு கண் சேதமடைந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  அந்தக் கண்ணில் பார்வை இழப்பு அதைத் தவிர்க்க முடியாது என்று மருத்துவர் கைவிரித்துவிட்டார்.  அந்த வருடம் மாணவர்கள் அடித்த லூட்டி சோகத்தில் முடிந்தது.  எல்லோருக்கும் தமாஷ் என்றாலும், ஒரு கண்ணின் பார்வை இழந்த அந்த மாணவனின் மீதி வாழ்நாள் எப்படி இருக்கும்?  நினைக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது. இந்த விஷயம் நிறுவனத்தின் டைரக்டருக்குப் போய் எல்லா  பயல்களும் உங்க ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துங்கடா என்று சட்டம் கொண்டு வந்தார்.  அதற்க்கு அடுத்த தீபாவளிக்கு நான் அங்கு இல்லை.  இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் என்று யாராவது விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!!

3 comments :

 1. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தரும் தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருக்கிற ஒரு சில இருட்டை - அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற தீய குணத்தை எரித்து, அனைவரும் மகிழ வாழ்வோம்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்.............

   Delete
 2. ராக்கெட் வெடி இல்லாத தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete