Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts

Monday, March 4, 2013

பெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா !

அன்பு மக்காஸ்,

நேற்று பெங்களூரு பன்னாரகட்டா தேசிய உயிரியல் பூங்காவிற்குச் சென்றிருந்தோம்.  [வேறென்ன உறவினர்கள் வந்திருந்தார்கள், நாமாகப் போவோமா!!].  அங்கேயெல்லாம் உங்களையும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று அவா, அது முடியாட்டாலும் நான் பார்த்தைதை எல்லாம் நீங்களும் பார்க்க வேண்டாமா?  அதைத்தான் என் காமிராவில் படம்பிடித்து இங்கே போட்டுள்ளேன்.  பார்த்து மகிழுங்கள்.  பெங்களூரு வந்தால் கண்டிப்பாக நீங்களும் ஒரு முறை இங்கே சென்று வாருங்கள்.  ஒரு நாள் முழுவதும் இருந்தால் தான் பார்த்த திருப்தி இருக்கும்.  பூங்கா நேரம்:  காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, வெள்ளி விடுமுறை.  நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ. 60 பூங்காவிற்கு, உள்ளே வண்டியில் சென்று சிங்கம், புலி, மான், மற்றும் பல தலைவர்கள் சுதந்திரமாக உலாத்துவதைப் பார்க்க நபர் ஒருவருக்கு 150 ரூபாய் தனிக் கட்டணம்.  மொத்தம் ரூ.210. சிறுவர்களுக்கும்[40+60= ரூ.100] முதியோருக்கும் [60+80= ரூ.140] கட்டணத்தில் சலுகைகள் உண்டு,  மேலும் "பட்டாம் பூச்சி பூங்கா" [ரூ.25] என்று தனியாகவும் உள்ளது, நாங்கள் போகவில்லை!!

சரி வாங்க பூங்காவுக்குள் நுழையலாம்.  முதலில் பொது பூங்கா.  கிளிகள் விதம் விதமாய்!!





இதுங்க ரெண்டும்  பயங்கரமான சப்தம் போட்டுக் கொண்டிருந்தன.  நாங்கள் ஏதோ குரங்குகள் தான் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு கத்துகின்றன என நினைத்தோம், பார்த்தால் கிளிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டு இருந்தன.  புருஷன் பெண்டாட்டி சண்டையோ என்னவோ தெரியவில்லை!!  அல்லது ஏன்டா எங்களை அடைச்சு வச்சு கொடுமைப் படுத்துறீங்கன்னு சப்தம் போட்டுச்சான்னும் விளங்கவில்லை.





தலைவரு ஆடாம அசையாம மணிக்கணக்கா அப்படியே படுத்திருந்தாரு!!  இவர் இயல்பும் அப்படித்தானாம், ஏதாவது இரை அதுவா போய் மாட்டினால்தான் உண்டு, இல்லாவிட்டால் அப்படியே பாத்துகிட்டு இருப்பாராம்.  முழு ஆட்டையும்/பறவைகளையும்  அப்படியே விழுங்கிடுவாரு, இறுதியில் முடி, நகம் இறகுகளை மட்டும் அப்படியே வெளியே தள்ளிடுவாரு!! கில்லாடிதான்.


இவரு நம்ம கேமராவைப் பார்த்ததும் நேரா ஓடி வந்தாரு ............கர் ..........கர் ......... அப்படின்னாரு.....

ஒழுங்கா இருன்னு மிரட்டிட்டுப் போனாரு!! 



ஆந்தையார்.

கரடியார்......ஜோடியா..........

தனியாக.........

வரிக்குதிரையார்.........

விதம் விதமான மான் கூட்டம்.


யானை தன்னுடைய கியூட் குட்டியுடன்!!

கொஞ்சம் வளர்ந்த பொடிப் பசங்க!!

அப்பப்போ குட்டிகளின் காதைப் பிடித்து பாகன் இழுத்துக் கொண்டு வருகிறார், குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் தரச்சொல்லுகிறார்.  வேற எதுக்கு ஐஞ்சோ, பத்தோ கொடுப்போமான்னுதான்..  அதைப் பார்க்க மனதுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.
ஹார்ன்பில் படுத்துகிட்டு இருக்காரு!!

 விதம் விதமான ஆமைகள்:

இவர்களுக்கு சூடான பல்பு வெளிச்சம் தேவைப் படுகிறது போல!!
நட்சத்திர ஆமைகள்: எதிரெதிரே இரண்டு வண்டிகள், ம்ம்......... கிராஸ் ஆயிடுச்சு!!

இவையும் நட்சத்திர ஆமைகள்தான், ஆனால் உருவத்தில் சிறிதாக இருக்கின்றன.

முதலியார்..........  சாரி, முதலையார்!!

சிங்கமுகக் குரங்கு.........

பெரிய முதலையார்..........



நீர் யானை, புல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாங்க..........


பெலிகன் வகை மற்றும் பல வகை வெளிநாட்டு நாரைகள்.......

கலர்புல் வாத்து.........  இது ஒரு டைப்பாக இருந்தது!!

நம்மூர் மயில்கள், அசந்து போய் படுத்துட்டாங்க 

நீங்கள் போட்டிங் வேண்டுமானாலும் செல்லலாம்.  இதைப் பார்த்ததும், என் மகள், " டேய் அண்ணா, நான் இப்போ கண்டுபுடிச்சிட்டேன்டா, அது அங்க நடுவில் இருந்து கொட்டுதே அந்த தண்ணிதான் இந்த குளம் புல்லா நிரம்பிடிச்சுடா.........!!" என்று வியப்பாகச் சொன்னாள்.  ஆஹா......  நிச்சயம் பெரிய விஞ்ஞானியா வருவேடி என்று மனதுக்கு நினைத்துக் கொண்டேன்!! [கட்டணம்:நபருக்கு ரூ.50, குழந்தைகளுக்கு கட்டணமில்லை].
இதைத் தொடர்ந்து வரும் படங்கள், வேனில் SAFARI அழைத்துச் சென்றபோது எடுக்கப் பட்டவை.










பெண் சிங்கங்கள் உருவத்தில் சற்றே சிறியவை.

இதில் மொத்தம் மூன்று சிங்கங்கள் உள்ளன!! ரெண்டு தெரியும், ஒன்று ஆண்  சிங்கத்தின் அப்பால் உள்ள உள்ள பாறையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறது, தாடைப் பகுதி மட்டும் தெரியும்,  ஆண் சிங்கம், அதனுடன் பொய் சண்டை போட்டுவிட்டு வந்தது,  [சும்மா வாய்த் தகராறுதான்!!] அதைப் படம் பிடிக்க முடியவில்லை!!

தலைவரு வெயிளுக்கு தண்ணீரில் குளிச்சிக்கிட்டு இருந்தார்...........



அப்படியே எழுந்து ..............

...........போயிட்டாரு.  சில சமயம் இவர்கள் SAFARI வேனின் முன்னால் நிமிடக் கணக்கில் உட்கார்ந்து விடுவதும் உண்டாம்!!


வெள்ளைப் புலி.



Thursday, October 18, 2012

சென்னை கோல்டன் பீச் அருகே பிரம்மாண்டமான அழகிய கோவில்!!

சென்னை கோல்டன் பீச் அருகே பிரமாண்டமான ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் கடந்த ஏப்ரல் 26, 2012 அன்று குடமுழுக்கு [மகா சம்ப்ரோக்ஷணம்] செய்யப் பட்டுள்ளது.  [ஹெலிகாப்டரில் மலர் தூவி குடமுழுக்கு ஹிந்து செய்தி]. இது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் [ISKCON] சார்ந்த கோவிலாகும்.  இந்தக் கோவிலை நாம் அக்டோபர் 15, 2012 அன்று தரிசனம் செய்தோம், பல படங்களையும் எடுத்தோம், இதோ அவை உங்கள் பார்வைக்கு!!  வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம், சென்னை நண்பர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துச் சென்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டிய கோவில்.  ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நிகழ்சிகள் முடிந்த பின்னர் 1:30 மணிக்கு மதிய உணவு வழங்கப் படுவதால் இவ்வளவு தூரம் வந்த பின்னர் உணவு அருந்துவது எப்படி என்ற கவலை வேண்டியதில்லை!!

இது கோவிலின் நுழைவு வாயில், கோல்டன் பீச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் வந்தால் ஐந்து ரூபாய் ஆகும்.  இங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் கோவிலை அடையலாம்.  சில சமயம் நேரடி ஷேர் ஆட்டோக்களும் கிடைக்கும்.

தொலைவில் கோவில்!!

சற்று அருகே!!

 
கோவில் வெளிச் சுவர் 














































ISKCON ஸ்தாபக ஆச்சாரியார் தவத்திரு AC பக்திவேதாந்த சுவாமி.

கோவில் பிரதான ஹால்.  மூன்று விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர்.  [விபரம் கீழே]
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீ நித்யானந்தா பிரபு

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா, லலிதா, விசாகா ஆகிய முக்கிய தோழிகளுடன், கீழே கோவர்த்தன கிரி, உற்ச்சவ விக்ரஹங்கள்.

ஸ்ரீ ஜகன்னாத சுவாமி [வலது], ஸ்ரீ பலதேவ் [இடது], ஸ்ரீ சுபத்ரா [மத்தியில்]- ஒரிசாவில் உள்ள பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் விந்தாவனத்தை விட்டு மதுரா, துவாரகா சென்ற பின்னர் அவரது பிரிவால் வாடும் விருந்தாவன வாசிகள் வழிபடும் வடிவம் இது.  குருக்ஷேதர யுத்தத்தின் இடையில் ஸ்ரீ கிருஷ்ணரை விருந்தாவான பக்தர்கள் சந்தித்து மீண்டும் விருந்தாவனத்திற்க்கே அழைத்துச் செல்லும் நிகழ்வே பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ரத யாத்திரையாகும், இதற்க்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் 

சடாரியை ஏற்றுக் கொள்ளும் பக்தர்......
கோவில் ஹாலில் உள்ள சாண்டிலியர்.......

கோவில் ஹால், கண்ணாடி ஓவியங்கள், வெளியில் இருந்து வரும் வெளிச்சம் மின் விளக்கைப் போல பிரகாசிக்கச் செய்கிறது.
கொஞ்சம் குளோசப்பில் கண்ணாடி ஓவியம்!!

சுற்றுப் புறச் சுவர்களில் உள்ள கேரள முறைப் படி வரையப் பட்ட ஓவியங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனவாசிகளை இந்திரன் அனுப்பிய பெரும் மழையில் இருந்து காக்க கோவர்த்தன கிரியை இடது கை சுண்டு விரலால் ஏழு நாட்கள் தூக்கி நின்ற காட்சி.

கம்சனின் அரண்மனை வீரவிளையாட்டு மண்டபத்தில் குவளையப்பீடா என்ற யானையை  ஸ்ரீகிருஷ்ணர் சண்டையிட்டு கொல்லும் காட்சி.

காலியா என்ற பாம்பின் தலைகள் மீது நடனம், அந்தப் பாம்பின் மனைவிகள் தங்கள் கணவனை மன்னித்து அருளுமாறு பிரார்த்தனை செய்கின்றனர்.

கோபியர்களின் உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மரத்தின் மேலே அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணர்!!

கம்சனின் அரண்மனை மல்யுத்த வீரனை சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்துகிறார்.

 கம்சனின் சிறையில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவரது தாய் தந்தையர் வசுதேவரும், தேவகியும் பிரார்த்தனை செலுத்துதல்.

வசுதேவர்  ஸ்ரீ கிருஷ்ணரை கூடையில் வைத்து கொகுலத்துக்குத் தூக்கிச் செல்லும் காட்சி, யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது கொட்டும் மழைக்கு குடையாக ஆதிசே ஷன் பின்னால் வருகிறார் 

பூதனை என்னும் அரக்கி தன்னுடைய மார்பில் விஷத்தைப் பூசி  ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் புகட்ட அவர் பாலோடு அவள் உயிரும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்.  ஆனாலும், அவள் மறைந்த பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் தன்னுடைய கோலோக விருந்தாவனத்தில் தனக்குத் தாயார் அந்தஸ்தை அவருக்கு  கொடுக்கிறார்.

வெண்ணை திருடி உண்ணும்  ஸ்ரீ கிருஷ்ணர்.

வெண்ணெய் திருடியதற்காக தண்டிக்கும் யசோதை, மகனின் வால் தனத்தைக் கட்டுப் படுத்த உரலில் கட்டிப் போடுகிறார்.
நவராத்திரி கொலு தயார் செய்யும் பக்தை, தனது குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறார்!!

கோவிலை விட்டு வெளியே வந்து மேலும் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்தோம்!!



சென்னையைச் சேர்ந்த அன்பர்கள், கோவிலைப் பற்றி அறிந்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், தொலைபேசி எண்களுடன்.


இவற்றை வெளியே டேபிளில் வைத்திருந்தார்கள் பிளாக்கில் போட எடுத்து வந்துவிட்டேன் !!