Thursday, August 11, 2016

ஒலிம்பிக் தங்கப் பதக்கம், வியப்பான தகவல்கள்

ரியோ ஒலிம்பிக் ஆரம்பிச்சிடுச்சு, அமெரிக்காவும் சைனாவும் பதக்கப் பட்டியலில் யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, இந்தியா காரன் ஒரு தங்க மெடலாச்சும் வராதான்னு ஏக்கத்தோடு பார்த்துகிட்டு இருக்கான்.  வருஷம் முழுக்க கிரிக்கெட்டே கதின்னு டிவி முன்னாடி உட்கார்ந்தே இருந்தா எங்கிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்கும், நாச்சியப்பன் கடையில வாங்கினாத்தான் உண்டு!!

பள்ளியில் படிக்கும் போது நான் லண்டன் பிபிசி தமிழ் சேவையை தவறாமல் கேட்பதுண்டு.  ஒருநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பற்றி சொன்னார்கள்.  எனக்கு அது வியப்பாகவும் விந்தையாகவும் இருந்தது!!   அப்படி என்ன சொன்னார்கள்....???  நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஒலிம்பிக்கில் வழங்கப் படும் தங்கப் பதக்கம் என்பது தங்கத்தால் செய்யப் பட்டது இல்லையாம், வெறும் தங்க முலாம் பூசப் பட்டதாம்!!  (இதை நண்பர்களிடம் சொல்லப் போய் அவர்கள் யாரும் நம்பாமல் என்னை உதைக்க வந்தது வேறு கதை!!).

2016 ஆம் கனக்குப் படி ஒரு தங்க மெடலின் மொத்த எடை 500 கிராம், ஒரு ஆளுக்கு அரை கிலோ தங்கமாகவே கொடுக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் தங்க மெடல்களுக்கே சரியாகி விடும்!!  இது தாங்காதுடான்னு யோசிச்ச ஒலிம்பிக் கமிட்டீ 1912-ம் ஆண்டுடன் தங்கப் பதக்கத்தை தங்கமாகவே கொடுப்பதை நிறுத்திவிட்டு, தங்க முலாம் பூசிய மெடல்களையே  பரிசளிக்க பயன்படுத்தி வருகிறதாம்.  இதில் தங்கம் வெறும் 6 கிராம் மட்டுமே, மீதம் 494 கிராம் தூய வெள்ளி !!  அப்போ முலாம் பூசிய பதக்கத்துக்கா மனுஷன் இந்த அடி அடிச்சிக்கிறான்?  பதக்கத்தின் மதிப்பு அதை செய்யப் பட்ட பொருளால் அல்ல, சொல்லப் போனால் அதன் மதிப்பு கண்ணால் தெரியும் பொருளாக இல்லை, அது அதற்கும் மேலே........!!

Tuesday, February 23, 2016

அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.

அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.
அடுத்து என்ன தி.மு.க தானே ???...
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்"
எது வேண்டும்? என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை.
எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்-
எரிச்சல் தாங்கவே முடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.
அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
நாமேதான்.
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும் தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?


[ஃபேஸ் புக்கில் படித்தது] கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான்.  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன்.  இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?  அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!

Thursday, February 4, 2016

கெயில் - இளிச்சவாயன் தமிழன் மட்டுமே............

கெயில் எரிவாயு குழாய் கேரளாவிலும், கர்நாடகாவிலும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலை ஓரங்களின் வழியாக கொண்டு செல்லப் படும்.  தமிழகத்தில் மட்டும் அது ஆயிரக்கணக்கான் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும்.

இதற்காக நிலங்கள் கையகப் படுத்தப் படும், அங்கிருக்கும் மரங்கள் பிடுங்கி வீசப் படும், நஷ்ட ஈடு அடிமாட்டு விலைக்கு தரப் படும், இருபுறம் 6 மீட்டருக்கு எந்த விவசாயமும் செய்யக் கூடாது, எக்காரணத்தைக் கொண்டு குழாய் வெடித்தாலும் அந்த விவசாயியே [ஒரு வேலை உயிர் தப்பியிருந்தால்] குற்றவாளியாக்கப் படுவார்.
தமிழக அரசு இதை எதிர்த்து வழக்கு போட்டது, ஆனால் உப்பு சப்பில்லாத வழக்கறிஞர்கள் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  வரைவுத் திட்டம் போடும்போது தமிழக அரசு சும்மா இருந்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  அப்பாவி மக்களை நம்ப வைத்து முதுகில் குத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
விவாசாயிகளுக்கு ஆதரவாக எந்த கட்சியும் இல்லை.  காரணம் அதனால் எத்தனை வாக்குகளை இழந்து விடப் போகிறோம் என்பதே.  தமிழக மக்கள் அனாதையாக சாக வேண்டியது தான், யாரும் காக்கப் போவதில்லை.

Monday, January 25, 2016

பத்மா புருஷன் அவார்டு.

சார் உங்களை பத்மா புருஷன் அவார்டு குடுக்க செலக்ட் பண்ணியிருக்கோம்!!

அப்படியா, ரொம்ப சந்தோசம்.  விருது கிடைச்ச சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை.  அதுசரி விருது குடுத்ததும், என் பேருக்கு முன்னாடி "பத்மா புருஷன்" அப்படின்னு போட்டுக்கலாமா?

ஏன் சார் அப்படி போட்டா ஒரிஜினல் பத்மாவோட புருஷன் அடிக்க வந்துட மாட்டானா, அதெல்லாம் முடியாது.  மீறி எங்கேயாச்சும் போட்டிங்கன்னு கண்டு பிடிச்சோம்னா  விருதை திரும்ப பிடுங்கிக்குவோம்.

என்னைய்யா இது, உங்ககிட்டா பேஜாரா போச்சு.  சரி பேருக்கு முன்னாடி தான் போட முடியாது, போனா போகட்டும்.  விருதுன்னா எதாச்சும் பணமுடிப்பு தருவாங்களே அதாவது இருக்குமா?

ஒரு ம..ரும் கிடையாது.

அட நாரப் பசங்களா, அதை காமிச்சு ஒரு இரயில் டிக்கெட்டாச்சும் புக் பண்ண முடியுமாடா??

அதுவும் முடியாது.

அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா.......................எனக்கு அவார்டு வேணும்னா நான் நாச்சியப்பன் பாத்திரக் கடையிலேயே வாங்கிக்கிறேன்டா...........

Tuesday, January 12, 2016

ராமன் வளர்த்த குதிரை-தெரிஞ்ச கதை தான் ஆனாலும்.............

ராமன் வளர்த்த குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படை வலிமையுள்ளதாக இருந்தது. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதன்படி , ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு அளவு பணமும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு, குதிரையை நன்கு உணவளித்து வளர்த்து வந்தார்கள் மக்கள். 


தெனாலிராமனும், வளர்ப்பதற்கென்று ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு பராமரிப்புத் தொகையையும் பெற்றுக் கொண்டார்.

குதிரையை கொண்டுபோய் ஒரு குடிசைக்குள் அடைத்து வைத்து சுவரின் வாசலில் சுவர் ஒன்றை எழுப்பி அந்தச் சுவரின் ஒரு பக்கத்தில் துவாரம் அமைத்தார். அந்தத் துவாரத்தின் வழியாக அன்றாடம் ஒரு கைப்பிடி புல்லை எடுத்து நீட்டுவார். பசி மிகுந்த குதிரையும் வெடுக்கென்று அதைப் பற்றி கொள்ளும். குதிரை சரியான தீனி கிடைக்காததால் எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டிருந்தது.

மன்னர் விதித்த நிபந்தனையின்படி மக்கள் அனைவரும் தாங்கள் வளர்க்கும் குதிரைகளை அரண்மனையில் கொண்டு காட்டும் நாள் வந்தது.
தெனாலிராமன் மட்டும் குதிரையின்றி தான் மட்டும் வந்திருந்தார். மன்னர் ராமனை நோக்கி, “தெனாலிராமா உன் குதிரை எங்கே” என்றார்.

ராமன் “அரசர் பெருந்தகையே, குதிரை மிகவும் முரட்டுத்தனமும் வலிமையும் கொண்டதாக உள்ளது. அதனால் இங்கே கொண்டு வரவில்லை. எனவே தயைகூர்ந்து நமது குதிரைலாயத் தலைவரை எனது குதிரையைப் பார்வையிட அனுப்புங்கள்” என்றார்.

அரசாங்க குதிரைலாயத் தலைவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் மன்னரின் உத்தரவுப்படி தெனாலி ராமனுடன் சென்றார். “அதோ அந்தத் துவாரத்தின் வழியாகக் குதிரையைப் பாருங்கள். முரட்டுக் குதிரை, ஜாக்கிரதை” என்று சொன்னான் ராமன்.

அதிகாரி துவாரத்தின் வழியாக கழுத்தை உள்ளே நீட்டி பார்த்தார். குதிரையோ, அதிகாரியின் நீண்ட தாடியை, தெனாலிராமன் தனக்கு வழக்கமாகக் கொடுக்கும் புல்தான் என எண்ணி வெடுக்கென்று வாயால் பற்றி இழுத்தது. “ஐயோ ஐயோ என்று அலறி குதிரையிடமிருந்து தாடியை விடுவித்துக்கொள்ள அதிகாரி படாத பாடுபட்டார். ஆனால் முடியவில்லை. அதிகாரியின் இந்த பிராணவதையைக் கேள்விப்பட்ட மன்னர் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தெனாலிராமன் வீட்டிற்கு வந்தார்.

உடனே காவலர்களிடம் கூறி அதிகாரியை மீட்க நடவடிக்கை எடுத்தார். கடைசியில் அதிகாரியின் தாடியைக் கத்தரித்து அதிகாரியை மீட்டனர். மன்னர் உத்தரவுப்படி குடிசையின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. உள்ளே பார்த்தால் நிற்கக் கூட சக்தியில்லாமல் குதிரை எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது.

தெனாலிராமனைப் பார்த்த அரசர், “ராமா, குதிரையை வளர்க்கக் கொடுத்த நிதியை நீ தின்றுவிட்டு குதிரையை இப்படி பட்டினிபோட்டு விட்டாயே” என்று கோபித்தார்.

உடனே ராமனும், “அரசே ஒருவாய்ப் புல்லுக்கே அதிகாரியின் தாடியை குதிரையிடமிருந்து மீட்பது பெரும்பாடாகிவிட்டது. இன்னும் வயிறு நிறையத் தீனி கொடுத்திருந்தால் அதிகாரியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்காதா” என்றான்.

மன்னர் தன்னை மறந்து சிரித்துவிட்டார். “ராமா, இனி இதுபோல் பிராணிகளை வதை செய்யாதே” என்று எச்சரித்தார்.

குறிப்பு:  இந்த கதைக்கும், தமிழக மக்கள் ரேஷன் கடையில் 100 ரூபாய் பணம், ஒன்னேமுக்கால் அடி நீள கரும்பு, ஒரு கிலோ பச்சரிசியை கூட்டமாய் நின்று அடித்துப் பிடித்து வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மக்களை இந்த கதையில் வரும் பஞ்சத்தில் கிடந்த குதிரையாகவும், குதிரையை கேவலமான நிலையில் வைத்திருந்த தெனாலிராமனை ஆட்சியாளர்களாகவும் நான் சித்தரிக்கவில்லை.