Saturday, December 26, 2015

பீப்........ வந்தது வெள்ளச் சேதம் போச்சு.......டும்......டும்......டும்......


நம்ம வீட்டு சுவற்றில் திரியும் பல்லிகளின் வாலுக்கு ஒரு சிறப்பு குணம் உண்டு.  வேணும் போது பல்லியே கட் பண்ணி போட்டுடும், கொஞ்ச நாளில் திரும்பவும் அது வளர்ந்திடும்!!


அது சரி,  அந்த மாதிரி கட் பண்ணி போடும்அவசியம் பல்லிக்கு எப்போது வரும்?  பூனை மாதிரி அதை பிடிச்சு சாப்பிடும் பிராணிகள் மூலமா வரும்.  
பூனைகள் அவற்றை துரத்தினால், அந்த நேரத்தில தன்னோட வாலை  பல்லி கட் பண்ணி போட்டுட்டு ஓடிடும்.  அந்த வால் கொஞ்ச நேரம் துள்ளிக்கிட்டு கிடக்கும்.  அங்க வரும் பூனை அந்த வாலை காலால் சீண்டி விளையாடிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பல்லி எஸ்கேப்!!இந்த பதிவுக்கும்,  ஊடகங்களும், மக்களும்  மழையால் வந்த பிரச்சினைகள் அத்தனையும் மறந்துவிட்டு பீப் சாங் பற்றியே பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!  ஜெயலலிதா பல்லி என்றும், பீப் சாங் பல்லி வால் என்றும்,  அரசு மழைப் பிரச்சினையை கையாண்ட விதத்தால் மக்களின் கோபம் பூனை என்றும் சம்பந்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.Wednesday, December 23, 2015

அப்ப‬ 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா...................??

\\சிறார்களின் தண்டனை வயது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பு
‪#‎அப்ப‬ 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா....\\ ன்னு நண்பர்கள் கேட்கிறார்கள்.
தப்பு செய்பவர்கள் ஒருபுறம், மறுபுறம் குற்றம் சுமத்துபவர்கள்.  டெல்லியில் அந்த பெண்ணை கொலை செய்தவனை நினைத்தால் இன்னமும் வயதை குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் நம்ம போலீஸை நினைத்தால் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது.  ஐந்து வயது குழந்தை மீது கஞ்சா வழக்கு பதிந்தனராம்.  இன்னொரு வழக்கில் ஒரு வயது குழந்தை மீது ஏதோ குற்றச் சாட்டு, கைது செய்து வழக்கு பதிவு செய்ததாக செய்தித் தாட்களில் படித்தேன்.  இந்த மாதிரி செய்திகளைப் படித்த போது பல நாட்கள் மன நிம்மதியின்றி தவித்தேன்.  ஒரு வயது, ஐந்து வயது குழந்தைகளுக்கெல்லாம்  என்ன தெரியும், அவர்களை அவ்வாறு செய்ய  ஒருத்தருக்கு எப்படிப் பட்ட கல் நெஞ்சமாக இருக்கும்? 

எனவே எதற்கும் ஒரு எல்லை கோடு அல்லது வரையறை உண்டு.  அவ்வாறு வரையறுத்த பின்னர் அதை மீற முடியாது, அது தான் சட்டம்.  மன்னர்கள் காலத்தில் சட்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும் மன்னனே விசாரித்து காலம், இடம், குற்றவாளி என பல கோணங்களில் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினான்.  தற்போது அது சாத்தியமில்லை.  16 வயதுக்கு ஒரு நாள் முன்னாடி அவன் கற்பழித்தாலும் தையல் மெஷீனும், 10 000 ரூபாயும் கிடைக்கும்!!

Thursday, November 19, 2015

நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம்

 நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம் அப்படின்னு யாரோ சொல்றாங்க, ஆனாலும் ஒன்னு கூட நம்ம கண்ணுக்குத் தெரியலையே?  என்ன காரணம்?


இந்த நேரத்தில் சம்பந்தேமேயில்லாமல் எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை, ஞாபகத்திற்கு வருகிறது. 

ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க அணை அந்த அணையை  நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்”

“ஓ அப்படியா மகிழ்ச்சி. அணையும் வீடும் அழகாக உள்ளது ”பாராட்டினார்.

பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.

பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.

எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.

“இது யாருடையது?”

“என் பங்களாதான் “

 “வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?”

“அதோ தெரியுது பாருங்க அந்த அணையை  நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்”

வெளி நாட்டு அமைச்சர்”- “அங்க எந்த பாலமும் தெரியலையே?”
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....

“நீங்க அணையை  கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க அணை கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....”

மகாபாரதத்தில் அபிமன்யு ஏன் போரில் கொல்லப் பட்டான்?

ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள் மிகவும் மோசமாக தோற்கடிக்கப் பட்டனர்.  மீண்டும் மீண்டும் போர் நடந்தது, ஆயினும் அனைத்துப் போர்களிலும் தேவர்கள் கையே ஓங்கியது, அசுரர்கள் அவர்களது லோகத்தில் இருந்தே விரட்டியடிக்கப் பட அவர்கள் பூமியில் தஞ்சம் புகுந்து அங்கே தோன்ற ஆரம்பித்தனர்.  அசுரர்களின் பாரத்தை [பாரம் அவர்கள் உடல் எடையால்  அல்ல, அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் !!] தாங்க முடியாத பூமிதேவி பிரம்ம தேவனிடம் முறையிட, அவர் சிவன் உட்பட தேவர்களை அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் அமர்ந்து அதில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமன் நாராயனனை எண்ணித் தவம் செய்கிறார். அதற்கு இசைந்த ஸ்ரீமன் நாராயணன் தான் பூமியில் அவதரித்து லீலைகள் புரிய இருப்பதாகவும், அப்போது அசுரர்கள் அழிக்கப் பட்டு பூமி பாரம் குறைக்கப் படும், அவதாரத்தின் போது தன்னுடன் தேவர்களும் உடன் வர வேண்டும், ஆகையால் அவர்கள் அனைவரும் பூமியில் சென்று பிறக்கவும் வேண்டும் என்ற செய்தியை பிரம்மனின் ஹிருதயத்திற்கு அனுப்புகிறார். [வாட்சப்பா, எஸ் எம் எஸ்ஸான்னு மட்டும் தெரியலை].

இதை மற்ற தேவர்களுக்கும், பூமாதேவிக்கும் பிரம்மா தெரிவிக்கிறார்.  மகிழ்ச்சியோடு பூமாதேவி  திரும்பிச் செல்ல, தேவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து யார் எங்கே பிறக்க வேண்டும் என்றுமுடிவெடுக்கின்றனர்.  அதன்படி சோமனின் [Moon god] மகன் வர்சாஸ் அர்ஜுனனின் மகன் அபிமன்யூவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது.  ஆனால் சோமனோ தன்னால் மகனைப் பிரிந்திருக்க இயலாது, ஆகையால் தனது மகனுக்கு பூமிக்குச் சென்று பிறப்பதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறான்.

இதை மறுத்த மற்ற தேவர்கள், இது பரம புருஷோத்தமனின் உத்தரவு என்பதால் அதை மீறுவது, மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.  மகனை அதிக காலம் பிரிந்திருக்க விரும்பாத சோமன் நிபந்தனையோடு தனது மகனை அர்ஜுனனின் மகனாகப் பிறக்க ஒப்புக் கொள்கிறான்.  அதன்படி அவன் இளம் வயதிலேயே தேர் படை செலுத்துவதில் வல்லவனாகத் தேர்வான். 16 வயது நிரம்பியதும் மகாபாரதப் போரில் வீரதீர பராக்கிரமத்தோடு போரிட்டு, வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் வண்ணம் பெயர் பெற்று  பின்னர் தன்னிடம் திரும்ப வேண்டும்.  அப்போரில் தனது உயிரை விடும் முன்னர் எதிரியின் படையில் கால் பங்கை அரை நாளிலேயே கொன்று குவிப்பான். அத்தோடு, பரத வம்சத்தின் அடுத்த வாரிசும் அபிமன்யூ மூலமாகவே உருவாக வேண்டும். அதன் படி பாரதப் போரின்போது கற்பமாக இருந்த அபிமன்யூவின் மனைவி உத்தராவின் வயிற்றில் பரிஷித்து மகாராஜா பிறக்கிறார். அப்போது போர் முடிந்த சமயம் அபிமன்யு உயிருடன் இல்லை.  பின்னர் பாண்டவர்கள்  ராஜ்ஜியத்தை மகாராஜா பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு மேலுலகம் சென்றனர். பாண்டவர்கள்  சென்ற பின்னர் நீதி நெறி தவறாது இப்புவியை பரிஷித்து மகாராஜா சீரும் சிறப்புமாக வெகு காலம் ஆட்சி புரிந்தார்.

Tuesday, November 17, 2015

கூந்தல் கருப்பு....... ஆஹா........ குங்குமம் சிவப்பு ஓஹோ....... பாடலின் உள்ளர்த்தம்.

கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ...........

பரிசு படத்தில் வரும் இப்பாடலுக்கு எம்ஜிஆரும் சாவித்திரியும் வாயசைத்திருப்பார்கள்.

கூந்தல் கருப்பு என்று எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போதே, அடேயப்பா உலகமகா கண்டுபிடிப்புடா என்று அன்றைய இரசிகர்கள் நக்கலடித்திருக்கிறார்கள்.  மேலோட்டாமாகப் பார்த்தால் அதுவும் சரிதானே என்று தோன்றும்.

யாருக்கைய்யா கூந்தல் கருப்புன்னும், குங்குமம் சிவப்புன்னும்  தெரியாது?  ஆனாலும் இதற்கு என்ன முக்கியத்துவம் அதை ஏன் எம்ஜிஆர் பாட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விடை தெரியாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.


இன்னொரு பாடல், படம் : விவசாயி

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

சரி இந்தப் பாடலிலும் " கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்" என்ற வரியை இருமுறை அழுத்தமாக டிஎம்எஸ் பாடுவார்.  இதில் வரும் கருப்பு சிவப்பு எதற்கு?

இன்னமும் புரியவில்லையா?  ஹி ...........ஹி ...........ஹி ...........

சரி அடுத்த பத்திக்கு போவோமா?

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
[மீண்டும்] பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
.....................
இங்கே அப்படியே பாட்டு வேகம் குறைஞ்சு நின்றே போய்விடும்.  அப்புறம் மெதுவாக ஆரம்பிப்பார்.
அது....................

[இங்கே ஒரு சிறிய இடைவெளிவிட்டு பின்னர் அதே பழைய ஜோரில்!!]
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

இப்பவாச்சும் புரிஞ்சதா?!!  புரிஞ்சவங்க புரிஞ்சிக்குங்க, புரியாதவங்க விட்டிடுங்க.

நன்றி:  திண்டுக்கல் ஐ. லியோனி.

Friday, November 13, 2015

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்- விஷால் முடிவு சரியா?

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது - விஷால்.

முதல் முறையாக சினிமாக் காரர் ஒருத்தர் தெளிவா பேசியிருக்கார்!!  இதைப் பார்த்துவிட்டு அவரை தமிழன் மேல் அக்கறையில்லாத தெலுங்கன் என்று சிலர் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள் போராட்டத்தால் எதாவது பலன் இருக்கிறதா எனக் கேட்டால், "அந்த ஆட்டோ கண்ணாடிய திருப்பினா இந்த ஆட்டோ எப்படி ஓடும்?" என்ற கதை தான்.  

இலங்கை பிரச்சினையை இந்திய-இலங்கை அரசுகள் ராஜீய ரீதியாகவும், காவிரிப் பிரச்சினை தமிழக-கர்நாடக அரசுகளால் சட்ட ரீதியாகவும் தீர்க்கப் பட வேண்டியவையாகும்.  பின்னர் நடிகர் சங்கம் ஏன் போராடுகிறது?  " இத்தனை பிரச்சினைகள் வெட்டு குத்துன்னு நடக்குது இவனுங்க சினிமா எடுக்கிறதிலேயே குறியா இருக்கானுங்களே, எதையாச்சும் கண்டுகிறானுங்களா?" என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றக் கூடும், அந்த மாதிரி கொதிக்கும் மன நிலையில் மக்கள் இருந்தால் அது இவர்களது படங்களின் வசூலைப் பாதிக்கும். அதை சமாதானம் செய்யவே நடிகர்களின் அறப் போராட்டம், அதாவது எந்த விளைவும் இல்லாத போராட்டம்!!  
இவர்கள் போராட்டங்கள் எதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு போதும் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சாராயக் கடையை எதிர்த்து இவர்கள் ஒரு போதும் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள்.  தற்போது அரசே தாமிரபரணி ஆற்று நீரை பெப்சிக்கு 100 வருடத்துக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செய்தி பற்றி இவர்களுக்கு தெரியவே தெரியாது.  மாநிலம் முழுவது நடந்து வரும் ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை பற்றி மூச்.  அவ்வளவு ஏன் முல்லை பெரியார் அணை விஷயத்தில் கூட நடிகர்கள் ஒருத்தரும் வாயையே திறக்கவில்லை, காரணம் அவர்கள் படம் கேரளத்தில் கணிசமான தொகையை வசூலிக்கிறது, அவர்களுக்கெதிராக எதையாது பேசினால் அது பாதிப்புக்குள்ளாகும், அதனால் ஒருத்தனும் வாயைத் திறக்கவே மாட்டான்.

சரி நடிகர்கள் போராட்டத்தால் பிரயோஜனம் தான் இல்லை, அது  பிரச்சினைகளையாவது கிளப்பாமல் இருக்க வேண்டுமல்லவா?  அதுவும் இல்லை.  காவிரிப் பிரச்சினைக்கு இவர்கள் கூட்டம் போட்டு கன்னாபின்னாவென்று கோபத்தில் பேச அவை தொலைக் காட்சியிலும் செய்தித் தாட்களிலும் வெளிவர, அது ஒரு மானப் பிரச்சினையாகி, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விட்டாலும் அடுத்த தேர்தலில் ஆட்சி போய்விடும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளி விடப் பட, பிரச்சினை தீர்க்கவே முடியாது என்ற கட்டத்திற்குப் போய் விட்டது தான் இவர்கள் போராட்டத்தால் நாம் கண்ட பலன்.

எனவே இந்த மாதிரி தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவது இவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  அத்தகைய முடிவை விஷால் எடுத்திருக்கிறார், அதை வரவேற்போம்.

Friday, August 28, 2015

Friday, August 21, 2015

காபி செய்ய அனுமதிக்காத இணைய பக்கங்கள்- உடைப்பது எப்படி?

சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது.  உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது.  ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.

நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது......  ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!

பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன.  அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன.  இந்த ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.

எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும்.  காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும்.  இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.  படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.

How to Bypass Right Click Block on Any Website

இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம்.  இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.
  
"RightToClick" என்ற ADD-ON ஐ Firefox Browse-ல் நிறுவ வேண்டும்.  எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த இணைய பக்கதிற்குச் சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.


சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, "RightToClick" -ஐ நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.


நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும்.  காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம்.  இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.


இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.  நன்றி.............!! 

Friday, July 3, 2015

பாபநாசம்-பெரிய லாஜிக் ஓட்டை..........

த்ரிஷ்யம் மோகன்லால், மீனா நடித்து சக்கை போடு போட்ட மலையாளப் படம்.   தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ன்னு  ரீமேக் ஆகியிருக்கு, இப்போ தமிழில் பாபநாசம்.

ஒரிஜினல் படத்தில் மோகன்லால், படத்தோட கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருந்தார், கூடவே ஜோடி மீனா பிரமாதமான நடிப்பு.   தற்போதைய தமிழ் படத்தின் டீசர் பார்க்க நேர்ந்தது.  அதைப் பார்த்தால், மலையாளப் படத்தின் ஜெராக்சை எடுத்து கேரக்டர்களின் தலையை வெட்டிப் போட்டு விட்டு தமிழ் காரர்களின் தலையை ஒட்டிய மாதிரி இருக்கிறது.  இதுக்கு பேசாமல் படத்தை டப்பிங் செய்தே போட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும் போது படத்தை மலையாளத்தில் முன்னரே பார்த்திருந்தால் தமிழில் பார்க்கவே தேவையில்லை, ஒரு சுவராஸ்யமும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
போன மூன்று படங்களாக எதுக்குன்னே தெரியாம பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கூடவே இழுத்துக்கொண்டு திரிஞ்ச மனுஷன் இந்த படத்தில் இன்னொரு குளறுபடியும் பண்ணியிருக்காரு.  மீனாவுக்குப் பதில் தன்னுடன் வசித்து வரும் கௌதமியைப் போட்டிருக்காரு.  படம் மற்ற அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதால், எந்த கழுதையைப் போட்டாலும் ஓடிடும் என்ற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வருவது நியாயம் தான் என்றாலும் மீனா அளவுக்கு இவர் ஜொலிப்பாரா  என்பது  சந்தேகமே.

படத்தின் கதையில் பெரிய லாஜிக் விரிசல் என்று ஒரு விஷயம் எனக்குப் பட்டது.  ஒரு குற்றம் நடந்து விட்டால், காவல் துறை மயிலே மயிலே இறகு போடு என்ற முறையில் அணுகாது,  சந்தேகப் படும்படி எவனும் கிடைக்கவில்லையென்றாலும் அப்பாவி, இளிச்சவாயன் எவனையாவது ஜீப்பில் அள்ளிப் போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நோண்டி நொங்கெடுடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் தான் தன்னுடைய மகனுடைய சாவுக்குக் காரணம் என்று வழுவாக சந்தேகிக்கும் உயர்நிலை அதிகாரி  வெறும் கேள்வி பதில் லெவலிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக காட்டுவது நடைமுறைக்கு ஒவ்வாத லாஜிக் மீறல் என்பது நமது கருத்து.   கொடுமைப் படுத்துவது பின்னால் வருகிறது என்பது வேறு விஷயம்!!

படம் பார்க்கலாமா?  மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம், அப்புறம் உங்க இஷ்டம்!!


Wednesday, July 1, 2015

ஹெல்மெட்: வாழ்க்கை ஒரு வட்டம்............!!


ஹெல்மெட் பிசினஸ் டல்லடிக்குது, விற்பனை அவ்வளவா இல்லை.  என்ன செய்யலாம்னு ஹெல்மெட் கம்பனிக்காரன் யோசிக்கிறான்.  அவனுக்கு ஒரு ஐடியா வருது.  நேரா போய் கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிறான், ஹெல்மெட் சேல்ஸ் ஆவதற்கு கொஞ்சம் உதவும் படி கேட்டுக் கொள்கிறான்.

கள்ளச் சாராயம் குடிச்சா செத்துப் போறாங்களே, அதனால சாகா வரம் தரக்கூடிய டாஸ்மாக் சாராயத்தை குடிக்க வச்ச மக்கள் நலனுக்காகவே செயல்படும் அரசு, வண்டி ஒட்டிகிட்டு போய் சாவட்டும்னு விட்டுடுவாங்களா என்ன?  


டூ வீலர் ஓட்டுறவனும், பின்னாடி உட்கார்ந்துகிட்டு போறவனும், பெண்களோ  7 கிளாஸ் மேல் படிப்பவனாகவோ இருந்தாலும் ஆளுக்கொரு ஹெல்மெட் போடணும்னு சட்டம் போடுது.

சென்னையில 30 லட்சம் ரெண்டு சக்கர வாகனம் ஓடுதாம்.  [சத்தியமா சைக்கிளைஎல்லாம் சேர்க்கலீங்க!!].  60 லட்சம் ஹெல்மெட் வித்து தீர்க்கும்.  500 ரூபாய் வித்த ஹெல்மெட் 1500 ரூபாய் ஆக்கினாலும், நைட்டு பன்னிரண்டு மணி வரைக்கும் ஹெல்மெட் கடையில கூட்டம் அலை மோதுது, கடைக்காரன் பணத்தை அள்ளுறான்.  ஏன்னா போடாட்டி அடுத்த நாள் பைக் வண்டியில ஆபீஸ் கூட போக முடியாதே!!

இப்போதைக்கு அஞ்சு லட்சம் ஹெல்மெட் வித்திருக்காம், இன்னும் இருக்கிற பயலுக எப்ப வாங்குவானுங்களோ தெரியல.  இப்போதைக்கு போடாதவங்களை முட்டு சந்துக்கு முட்டு சந்து நின்னுகிட்டு விரட்டி விரட்டி பிடிப்பாங்க.  ஒருவழியா இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா பயலுங்களும் ஒன்னுக்கு ரெண்டா ஹெல்மெட் வாங்கிருவானுங்க.  அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கணக்கா கதை ஆகும், கேள்வி கேட்க நாதியிருக்காது.  


ஹெல்மெட் கம்பனிக்காரன், கடைக்காரன் ஓரளவுக்கு பணத்தை தேத்தியிருப்பான்.  சரி போதும்னு சிக்னல் குடுப்பான்.  சனங்க ஹெல்மெட்டால ரொம்ப சிரமப் படுறாங்கன்னு மக்கள் நலனுக்கே போராடும் அரசாங்கத்துக்கு திரும்பவும் தோணும்.  சரி, சரி, இனிமே போடத் தெவையில்லைம்பாங்க.

அப்போ ஒன்னுக்கு ரெண்டா வாங்கின ஹெல்மெட்டு?  அதை வீட்டுக்கு வெளியே கட்டி தொங்க விடுங்க, காக்க முட்டை போடும்!!    அப்படியே மழையில நனைஞ்சு, வெயிலில காய்ஞ்சு அது மக்கி துருப்பிடிச்சு ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாம போகும்.  அப்படியே ரெண்டு வருஷம் போனதுக்கு பின்னாடி................

ஹெல்மெட் சேல்ஸ் படுத்திருக்கும், ஹெல்மெட் கம்பனி காரன் கவனிக்க வேண்டியவங்களை கவனிப்பான்............. அப்புறம் .............??  அப்படியே பதிவோட முதல் வரிக்கு போங்க...........!!

Saturday, June 6, 2015

இரண்டு கொள்ளையர்கள், ஒரு அப்பாவி கதை.

ஒரு சலவைத் தொழிலாளி விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். 


அதை கண்கானித்துக் கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்தி என்ற ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று


“இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

 உடனே சலவைத் தொழிலாளி   “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு  தக்ஷிணாமூர்த்தி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்” என்றான்.

சலவைத் தொழிலாளி “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

தக்ஷிணாமூர்த்தி  எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு பெண் வைர வியாபாரி கோமளவல்லி அந்த சலவைத் தொழிலாளியிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டாள் .

இதை சற்றும் எதிர்பாராத தக்ஷிணாமூர்த்தி  அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய்” என்றான்.

அதைகேட்ட சலவைத் தொழிலாளி பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்றவாறே தனது கழுதையை அழைத்துக் கொண்டு நடக்கலானான்.

பின்குறிப்பு:  இது அரசியல் பதிவு அல்ல.  

Friday, May 22, 2015

கழகங்களின் பரிணாமம்..............

பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் தனது  இயக்கத்தை உருவாக்கினார், அவருக்கு பதவி ஆசை இல்லை, ஆனாலும் மக்களிடத்தில் ஊடுருவி இருந்த மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும், குறிப்பிட்ட சாதியினரின் பித்தலாட்டத்தை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அவரின் கீழ் இருந்த அண்ணாதுரைக்கு கொஞ்ச நாள் சென்ற பின்னர் பதவி ஆசை வந்தது.  பெரியாரை  கொள்கை அளவில் எதிர்க்காமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை காரணம் காட்டி தி.மு.கவை ஆரம்பித்தார்.

அண்ணாதுரை காலத்தில் கட்சியில் உள்ள உப தலைவர்கள் ஊக்குவிக்கப் பட்டனர், பூரண சுதந்திரம் இருந்தது.  எனவேதான், கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் உருவாயினர்.
அதன் பின்னர் கருணாநிதி, தனக்கு நிகராக [ஏன் மேலாக என்று கூடச் சொல்லலாம்] இருந்த தலைவர்களை , குழியில் தள்ளிவிட்டு திமுக வை தனதாக்கிக் கொண்டார்.  பின்னர் அதை தன்னுடைய குடும்பச் சொத்தாக்கியும் விட்டார்.

இருந்த போதிலும் அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் திறமைசாலிகளாகவே இருந்தனர்.  துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் கட்சித் தலைமையை எதிர்த்து கேள்வியெழுப்பும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது.

பல முறை ஆட்சியை இழந்த போதிலும் பழையவர்களே அமைச்சர்கள் ஆனார்கள்.  குண்டக்க மண்டக்க என்று தூக்கியடிப்பது குறைவாகவே இருந்தது.

அதே போலவே, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெற்றோரும் பண்ரூட்டி, நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன் என ஜாம்பவான்களாகவே இருந்தனர். 
கருணாநிதி, எம்ஜிஆர் இருவருக்கும் இருந்த ஒற்றுமை இவர்கள் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள் அத்தனையும் இவர்கள் இருவருக்காக மட்டுமே விழுந்தவை.

இவர்களிடத்தில் இருந்த இன்னொரு ஒற்றுமை, இவர்களுக்குப் பின்னர் யார் கட்சியை நடத்துவதற்காக ஒரு வழுவான தலைமையை உருவாக்காமல் போனதுதான்.


உதாரணத்துக்கு அண்ணாதுரை காலத்தில் இருந்து கருணாநிதி, எம்ஜிஆர் என அனைவரது மந்திரி சபைகளிலும் நம்பர் இரண்டு இடத்தில் இருந்த நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் வேளச்சேரியில் தனித்து நின்று அவருடன் போட்டியிட்ட எஸ்.வி. சேகரை விட குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட்டையும் இழந்திருந்தார். 


என்னதான் இருந்தாலும், கருணாநிதி, எம்ஜிஆர் இருவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் சாமர்த்தியசாலிகள், திறம்பட செயல்படுபவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இருவருமே தங்களது அமைச்சர்களை யாரையும் நாயைப் போலவோ, தலையில் உள்ள கேசத்திற்கு இணையாகவோ நினைக்காமல் மனிதர்களாகவே மதித்தார்கள்,அமைச்சர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகளாக இருக்கவில்லை, கருத்து சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தார்கள், காலில் விழுந்தால் தான் வாழமுடியும் என்ற நிலை அப்போது இல்லை, இப்போதும் திமுகாவில் இல்லை.

மொத்தத்தில் தாங்கள் தனித்து பெரிய தலைவர்கள் ஆக முடியாவிட்டாலும் தன்மானத்துடன் அவர்களால் அமைச்சர்களாக இருக்க முடிந்தது.  ம்ம்............  அது ஒரு கனாக்காலம்.

Saturday, April 11, 2015

உண்ட கட்டி வாங்கி தின்ன- வேணும் ஆதார்கார்ட்!!

நல்லாக் கேட்டுக்குங்க,

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

அப்புறம்?

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

சரி, அப்புறம்?

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓ அப்புறம்?

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
அதுவும் சரிதான், அப்புறம்?

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

ஓஓஓஓஓ அப்புறம்?

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

ஐயையோ அப்புறம்?

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க, அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவி!,


ஹோ........... ஆஹாஹாஹாஹாஹா!


Saturday, February 14, 2015

1992 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து செய்த மொள்ளமாறித் தனம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 தற்போது நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்னர் பல உலகக் கோப்பை போட்டிகள் நடந்திருந்தாலும், இன்று நாம் பார்க்கப் போவது 1992 போட்டிகளைப் பற்றித்தான்.  ஏன்?  காரணம் அந்த போட்டிகளை தற்போது போலவே நியூசிலாந்தும்-ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தின என்பதேயாகும்.

போட்டி துவங்கும் முன்னர் கோப்பையை யார் வெல்லுவார்கள் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள்.  நம் கவாஸ்கர், "பாகிஸ்தான் கோப்பையை வெல்லும்" என்று எதையோ வைத்து சொல்லிவிட்டார்.  ஆனால் ஆரம்ப ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி ஆடிய விதம் நம்பிக்கையூட்டும் விதமாக இல்லை.

முதல் ஐந்து மேட்சுகள் நடந்த பின்னரும் ஒரே ஒரு மேட்சில் மட்டுமே பாகிஸ்தான் வென்றிருந்தது, அதன் மூலம்  கிடைத்த 2 பாயிண்டுகள் மற்றும் மழை வந்ததால் இங்கிலாந்துடன் தோற்கவிருந்த ஒரு மேட்சில், பாடாவதி கிரிக்கெட் விதிகள் மூலம் கிடைத்த ஒரு பாயிண்டுடனும் சேர்த்து வெறும் மூன்று பாயிண்டுகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.  "தப்பா ஆருடம் சொல்லிட்டோமோ?" என்ற உறுத்தல் கவாஸ்கருக்கே உள்ளுக்குள் அவ்வப் போது எட்டிப் பார்த்திருக்கலாம்!!  ஆனாலும் தன்னுடைய ஆருடம் குறித்து அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.லீக்கில் கடைசி ஆட்டம் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் மோத வேண்டும்.  அதுவரை நியூசிலாந்து ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தது.  நியூசிலாந்து சொந்த மண்ணில் விளையாடியதே இதற்குக் கரணம்.  முதலைக்கு நீரிலும், யானைக்கு நிலத்திலும் பலம் அல்லவா!!  பாகிஸ்தானுடனான எட்டாவது ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அடுத்து நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து விளையாட வேண்டும்.   அதைத் தவிர்க்க ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது.  அது, பாகிஸ்தானுடன் எட்டாவது லீக் ஆட்டத்தில் தோற்பது!!  இதை நியூசிலாந்து செய்யும் என்பதை கிரிக்கெட் நோக்கர்கள் யூகித்தே இருந்தனர்.  அந்த ஆட்டத்தில் தோற்கும்படி ஆடி மேட்சை கோட்டை விடுவீர்களா என்று நியூசிலாந்து கேப்டனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவ்வாறு செய்ய மாட்டோம் என்றே அவர் சொல்லி வைத்தார்.  ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.  மகா மட்டமான ஸ்கோருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.


பாகிஸ்தான் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.  இந்த மேட்சை வென்றதன் மூலம் அதன் பாயிண்டுகள் 7-லில் இருந்து 9 ஆக உயர்ந்ததால், நான்காம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் அது தகுதி பெற்றது.  ஒரு வேளை நியூசிலாந்து இந்த மேட்சில் வெற்றி பெற்றிருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ, இங்கிலாந்து அணியோ அரையிறுதிக்கு வந்திருக்கக் கூடும்!!  பாகிஸ்தான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நாடு திரும்பியிருக்கும்!!


நியூசிலாந்து நினைத்த படியே அரையிறுதி ஆட்டத்தை  சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுடன் ஆட வாய்ப்பு கிட்டியது.  மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் 166 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆயிருந்த போதும், இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற 263 ரன்கள் இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.  இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் மிக நன்றாக ஆடி சவாலில் ஜெயித்து இறுதியாட்டத்துக்குச் சென்றனர், கேப்டன் உட்பட நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.  அவர்களது கோணல் புத்தி அங்கே தோற்றது!!இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது.  இனவெறிக் கொள்கையால், உலகக் கோப்பையில் இருந்து விலக்கப் பட்டிருந்த அந்த அணிக்கு இது முதல் பெரிய போட்டியாக இருந்தது.  ஆனாலும், அவர்கள் ஆட்டம் மற்ற அணிகளுக்குச் சவாலாகவே இருந்தது, நன்றாக ஆடி அரையிறுதி வரை வந்திருந்தனர்.  மழையின் காரணமாக அரையிறுதி ஆட்டம் 50 லிருந்து 45 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது.  இந்த உலகக் கோப்பையின் போது   முன்னரே நாம் சொன்ன சில பாடாவதி விதிகளை கண்டுபிடித்து அமல் படுத்தியிருந்தனர்.  ஏன் இவை பாடாவதி என்றால், இவ்விதிகளை மடையன் கூட இவற்றுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதற்கு இந்த போட்டியே சாட்சி.  ஆட்டம் நடக்கும் போதே எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்பதை கழுதை கூட ஒப்புக் கொள்ளாது.  முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 252 ரன்களைக் குவித்திருந்தது.  தென்னாப்பிரிக்கா 253 ரன்கள் பெற்றால் வெற்றி!!  ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது மழை காரணமாக 45 ஓவர்கள் 43 ஆகக் குறைக்கப் பட்டது, ஆனாலும் இலக்கு அதே 253 ரன்கள் தான் என்ற அறிவிப்பு கடைசி ஒரு பந்து இருக்கும் போது ஸ்கோர் போர்டில் வெளியானது.  எனவே வெற்றி பெற தென்னாப்பிரிக்கா ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது.  பைத்தியக் காரன் கூட இதை சரி என்று சொல்ல மாட்டான்.  ஆனாலும் அறிவாளிகள் அதேசரி என்று சாதித்தனர்.  தென்னாப்பிரிக்க அணியின் மட்டையாளரால் கடைசிப் பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயினர். இந்த அயோக்யத் தனம் மூலம் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றாலும் இறுதி ஆட்டத்தில் அதற்கான தண்டத்தை கட்ட வேண்டியிருந்தது.இறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதினர்.   பாகிஸ்தான் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றனர்.  பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு இங்கிலாந்துடன் ஆடிய லீக் ஆட்டத்தில் மழையால் கிடைத்த ஒரு பாயிண்டும், நியூசிலாந்து விட்டு கொடுத்த மேட்சும் தவிர்க்க முடியாத இரண்டு அடிப்படைக் காரணங்களாகும்.   மொத்தத்தில், கவாஸ்கர் சொன்ன ஆருடம் எப்படியோ மெய்யானது!!  பின்னர் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து சிறப்பு விருந்து கொடுத்து கவுரவித்தனர் பாகிஸ்தானியர்!! 

கடைசியாக: இந்த ஆட்டத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் அணிகளின் மோதலில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, விக்கட் கீப்பர் கிரண் மோரேவுக்கும்- பாகிஸ்தானின் மியாண்டாடுக்கும் வாய்த் தகராறும் இந்த மேட்சில் நடந்தேறியது.  மியாண்டாட் இவர்களை நக்கல் செய்யும் வண்ணம் குதிக்க, அம்பயர்கள் வந்து நடத்தை மீற வேண்டாமென்று அறிவுருத்திச் சென்றனர்!!


Thursday, February 12, 2015

இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்: கேஜ்ரிவால் முடிவு சரிதானா?

டெல்லியில் 67/70 என இடங்களை வென்று கேஜ்ரிவால் பதவியிழந்த பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் முதல்வராகிறார்.  சென்ற முறை வென்ற பின்னர், சாமான்யனின் கட்சி என்ற பெயருக்கேற்ப, அரசு வழங்கவிருந்த சவுகர்யங்களைப் புறக்கணித்து விட்டு பதவியேற்பு விழாவுக்கு மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயிலில் பயணித்தும், மக்கள் தங்கும் சாதாரண அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தங்கியும் தன்னை மற்ற அரசியல் வாதிகளில் இருந்து வேறுபட்டவராகக் காண்பித்துக் கொண்டார்.  அதே பாணியில் தற்போதும் தனக்கு வழங்கவிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.


இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது, "அடேங்கப்பா கேஜ்ரிவால் என்ன ஒரு எளிமையான மனிதர், பதவி அந்தஸ்து வந்தும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புகிறாரே!" என்று அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் நமக்கு ஏற்படுவது நிஜம் தான்.

நம்மூரில் தன்னுடைய காருக்கு முன்னும் பின்னும் நூறு கார்கள் தொடர, எந்திரத் துப்பாக்கி தாங்கிய கறுப்புப் பூனைகளின் பாதுகாப்போடு திரியும்  அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமாகத் தெரியக் கூடும்.  ஆனாலும், அவரது முடிவு சரிதானா?  சரியல்ல என்றே நான் சொல்லுவேன்.  மேலும் அலசுவோம்.

நம்மூர் மேலாண்மை பாடங்களில் எளிமைக்கு ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வார்கள்.   அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்வது ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் யாரையாவது தான்.  [கவுண்டமணியின் "பஞ்சுமிட்டாய் விற்கிறவன், கூடை பின்னுறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கிறான்" என்ற டயலாக் நினைவுக்கு வரக் கூடும், ஆனால் இவர்கள் நிஜ தொழிலதிபர்கள்!!].  அவ்வளவு பணமிருந்தாலும், அவர் அலுவலக கேண்டீன் வந்தால் அவரது தருணம் வரும்வரை மற்றவர்களோடு வரிசையில் காத்திருந்து,  அவரது உணவைப் பெற்று கொண்டு மற்ற ஊழியர்கள் போலவே உண்டு செல்வாராம்.  சிலர் தங்களது உடைகளைக் கூட தாங்களே துவைத்து, சலவையும் செய்து கொள்வார்களாம்.  [முடிவெட்டிக் கொள்வதை மட்டும் வேறு யாருக்காவது விட்டுக் கொடுப்பார்கள் போல!!].  இவர்கள் எளிமையானவர்களாம்.  என்னைக் கேட்டால் இது மடத்தனம் என்பேன்.

சாதாரண தொழிலார்கள் ஆயிரம் பேர் கிடைக்கலாம், ஆனால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் புத்திசாலி கிடைப்பது அபூர்வம். அவருடைய பொறுப்புகள் அதிகம், ஆகையால் அவரது நேரம் முக்கியம்.  எனவே, இவர் உணவுக்காகக் காத்திருக்காமல், தனது அறைக்கே உணவை வரவழைத்து உண்ணலாம், உடைகளை அயர்ன் செய்வதை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்.  அதைவிடுத்து எளிமை என்ற பெயரில் இந்த மாதிரி நேரத்தை வீணடிப்பது கூமுட்டைத் தனம் என்பதே நிஜம்.எனவே, தவிர்க்க வேண்டியது தேவையில்லாத ஆடம்பரத்தை, அடிப்படை அத்தியாவசியங்களை அல்ல.  டெல்லியின் முதல்வரும் ஒரு மனிதர் தான்.  ஆனால் சாமான்ய மனிதர் அல்ல, இரண்டரை கோடி மக்களின் பிரதிநிதி.  அவருக்கு வேண்டியவர்களும் இருக்கலாம், எதிரிகளும் இருக்கலாம்.   யார் எங்கே இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?  முதல்வர் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டியது நியாயம்தான் என்றாலும், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.  அவ்வாறு இருந்தால் தானே அவர் கனவு காணும் அரசியல் மாற்றத்தைச் செயல்படுத்த முடியும்?  எனவே முறைப்படி அவருக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பை ஏற்பதே சரியாக இருக்கும் என்பது எமது கருத்து.

எனவே கேஜ்ரிவால் அவர்களே, ஆடம்பரம் வேண்டாம் என்ற உங்கள் நோக்கம் உள்ளுக்குள் நிச்சயம் இருக்கட்டும், அதற்காக இந்த மெட்ரோ இரயிலில் பிரயாணம், குடிசையில் வாழ்க்கை, முட்டு சந்தில் மக்களோடு சந்திப்பு போன்ற ஷோ காட்டும் கோமாளி வேலைகளை விடுத்து, இன்னொரு ஆட்டோக்காரர் பளார் என்று உங்களை அறைவதற்கு முன்னர் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள, "ஊழலுக்கு ஒரு மாற்று" என்ற இமேஜை காப்பாற்ற முயலுங்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஜொலிக்குமா?

இன்று உலகக் கோப்பை துவக்க விழா ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் நடக்கவிருப்பதாக செய்தித் தாட்களில் படித்தேன்.  சென்ற முறை கோப்பையை வென்ற இந்திய அணி இம்முறையும் உச்சத்தைத் தொடுமா?

பதில் தொடாது.  பயிற்சி ஆட்டங்களில்  நம்மவர்கள் சொதப்பிக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இதற்க்கு வேறு காரணங்களும் உண்டு.  சென்ற உலகக் கோப்பை நடந்தது இந்தியாவில், சொந்த மண்ணில்.  இந்திய ஆடுகளத்திற்க்கும், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.  இந்திய பிட்சுகள், Flat பிட்சுகள், ஆனால் தற்போது ஆட்டம் நடக்கவிருக்கும் பிட்சுகள் உயிருள்ளவை.  அதாவது பந்து ஆடுகளத்தில் பட்டு கன்னா  பின்னாவென்று திரும்பும்.  பந்து வீச்சாளர்களுக்குத் திருவிழாதான்.  அவற்றை சொந்த மண்ணாகக் கொண்ட மட்டையாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான், வெளுத்துக் கட்டுவார்கள்.  நம்மாட்கள் மண்ணைக் கவ்வுவார்கள்.

அதுசரி,  உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு கிடைக்கும் தொகை இங்கே ஐ பி எல்லில் ஒரே ஆளே ஒரு சீசனில் சம்பாதித்து விடுவார்.  எவனுக்குக் கவலை!!  விசனம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் , ஆடுபவர்களுக்கல்ல!!

Monday, February 9, 2015

2015 பிப்ரவரி 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருமா?
இந்த 2015 பிப்ரவரியில் 4 ஞாயிறு 4 திங்கள் 4 செவ்வாய் 4புதன் 4 வியாழன் 4 வெள்ளி 4 சனிக் கிழமைகள் வருதாம்.! இது 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருதாம்.! இதை சீனாவில் பணப்பை வருடம் என்பார்களாம்..
இந்த செய்தியை 5 க்ரூப்புகளில் 11 நிமிடங்களுக்குள் நாம் பங்கிட்டு கொண்டால் 4 நாட்களுக்குள் நமக்கு பணம் கொட்டுமாம்.. இப்படி ஒரு அபத்தமான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது..
நம்ம ஆட்களும் அதை வைரல் ஃபீவராக பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.! அட அப்பாவிகளா.! இந்த பிப்ரவரி 1ம் தேதி ஞாயிறு, 28ம் தேதி சனிக் கிழமை.. இது மாதிரி வர எதுக்குப்பா 823 வருஷம் காத்திருக்கணும்..! வெறும் 6 வருடம் போதுமே.!
2009 & 2003 ஆம் ஆண்டு காலண்டரை பார்க்கவும்..! முகனூல் காலத்திலும் மூட நம்பிக்கைகளை வலைத்தளங்களில் இது போல பரப்புவது நாம் தான்.. இனியாவது இது போல ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்ப வேண்டாமே.

‪#‎கோடி_பெரியார்_வேணும்_போல‬

Sunday, January 25, 2015

தயாநிதி சாப்பிட்ட ஒரே ஒரு பழம்

ஒரு ஊரில் தயாநிதி என்று ஒரு புத்தி கூர்மையுள்ள ஆள் இருந்தான்.  அவன் உண்மையைத்தான் எப்போதும் பேசுவான், ஆனால் அதற்குள் இருக்கும் சூட்சுமம் வெளியில் தெரியவே தெரியாது!!  அப்பேற்பட்ட சாமர்த்தியசாலி.

அவன் ஒரு  நாள் தன் நண்பர்களிடமிருந்து எப்படியாவது பணம் வசூல் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.  பணம் சும்மா கொடுப்பார்களா, காரணம் வேண்டுமே.  அதற்காக ஒரு பிட்டை போட்டான். 

"என்னிடம் சாப்பிடக் கூட பணமே இல்லை.  அதனால் இன்றைக்கு நான் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டேன்.  எனக்கு இன்றைக்கு வயிறு சரியில்லை, டாக்டரிடம் போக வேண்டும்.  பணம் கொடுத்து உதவி செய்யுங்கள்" என்றான்.

அவனுடைய நண்பர்கள் ஏமாளிகள்.  ஏதேதோ பண்ணி 440 ரூபாய் தேத்தி கொடுத்து போய் உடனடியாக மருத்துவரிடம் செல்லச் சொன்னார்கள்.

அவன் சென்ற பின்னர் அவனுடைய பக்கத்து வீட்டுக் காரர் அங்கே வந்தார்.  அவரிடம் நண்பர்கள் நடந்த விஷயத்தை சொல்ல அவர் ஷாக்காகி போனார்.

"அவன் உங்களையெல்லாம் முட்டாளாக்கிட்டான்பா......"  என்றார்.

"என்ன சொல்றீங்க, அவன் இன்றைக்கு சாப்பிடக்கூட பணம் இல்லையாமே, ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டானாமே?" என்று நண்பர்கள் வினவினார்கள்.

ஆமாப்பா, ஆமாம்.  அவன் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டான்.  ஆனா, அது வாழைப் பழமோ மாம்பழமோ அல்ல, பலா பழம்.  முழு  பழம்.  மொத்த பழத்தையும் வெட்டி அவனே சாப்பிட்டான்.  டேய்........டேய்.......  எனக்கு ஒன்னாச்சும் குடுடான்னு கேட்டேன், முடியாதுன்னு எல்லாத்தையும் அவனே சாப்பிட்டுட்டு கடைசியா மொத்தம் 343 சுளைகள் அதில் இருந்துச்சுன்னு எண்ணி கணக்கு மட்டும் சொல்லிட்டு கெக்கே...........பிக்கேன்னு சிரிச்சி கிட்டே ஓடிட்டான்.இப்போ இங்கே வந்து உங்ககிட்ட 440 ரூபாய் ஆட்டயப் போட்டிருக்கான்.   அவன் விட்ட பீலாவை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டீங்களேப்பா...................??!!