Friday, November 2, 2012

ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி- கோடீஸ்வரனாவதற்கு 100% நிச்சயமான வழி எது?

சுகபோக வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை, சிலருக்கே அது கிட்டுகிறது.  வஞ்சனை இல்லாமல் உழைக்கிறோம், ஆனாலும் பலர் வறுமையிலும் துன்பத்திலும் வாடுகிறோம். இதிலிருந்து விடுபட ஏதாவது மேஜிக் வழி இருக்கிறதா என்று பார்க்கிறோம், ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி, கைரேகை என எத்தனையோ தெரிகின்றன.  இவற்றில் எது நம் கஷ்டங்களைத் தீர்த்து, நம்மைக் கோடீஸ்வரனாக்கும்  என பார்க்கலாம்.

சோதிடம் காலங்காலமாக நம்பப் பட்டு வருவது.  இதன் மூலம் பணக்காரனாக முடியுமா? நம் கஷ்டங்கள் தீருமா?  எனக்குத் தெரிய இரண்டு சோதிடர்கள், ஒரே ஊர், ஒரே திறமை. ஒருத்தரைப் பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்து கார்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் வருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில் கொட்டுகிறார்கள், கார், பங்களா என கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்து விட்டார்.  இன்னொருத்தர் அதையே தான் சொல்கிறார் அவரிடம் செல்பவர்கள் பத்தும் இருபதும் மட்டுமே தருகிறார்கள், இன்னமும் அதே பழைய கூரை வீட்டில் தான் வசிக்கிறார் சைக்கிளிலேயே தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  ஊருக்கே சோதிடம் சொல்கிறார், இவர் சோதிடத்தைப் பயன் படுத்தி இவரும் அந்த சோதிடர் மாதிரியே சம்பாதித்திருக்கலாமே?  ஆனால் முடியவில்லையே!!  தன்னுடைய பொருளாதார நிலையையே மேம்படுத்திக் கொள்ளத் தெரியாத சோதிடரிடம் போய் நமது பொருளாதார நிலையைக்கு எங்கே தீர்வு கண்டு பிடிப்பது!!அப்படியானால் சோதிடம் பொய்யா?  அது தான் இல்லை, அது உண்மைதான், அதை வைத்து நீங்கள் பணக்காரராக வாய்ப்பு உள்ளதா இல்லையா என்றுதான் பார்க்க முடியுமே தவிர அது எல்லோரையும் பணக்காரனாக மாற்றும் வித்தை இல்லை.  அது கண்ணாடி மாதிரி, அதில் தெரியப் போவது சல்மான் கானா, இல்லை உராங்குட்டானா என்பது நம்முடைய உருவத்தைப் பொருத்தது.   அப்படியானால் நம்முடைய உருவத்தை [இன்ப துன்பங்களை] தீர்மானிப்பது எது?இதற்க்கு பலர் பலவிதமான பதில்களைத் தருகின்றனர்.  கடவுள் இல்லை என்பவர்கள் இதற்க்கு எந்த விளக்கமும் தருவதில்லை.  சிலர் கடவுள் இருப்பதை நம்பினாலும் மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் கணக்குப் படி  நாம் இப்பிறவியில் செய்த நல்லது கெட்டதுகளைப் பொறுத்தே நம் இன்ப துன்பங்கள் தீர்மானிக்கப் படுகின்றன.  அப்படியானால் பிறக்கும்போதே ஏன் ஏழை குடும்பத்தில் நான் பிறக்க வேண்டும்?  ஒன்றுமறியா குழந்தை என்ன நல்லது கெட்டதை செய்திருக்க முடியும்?  அப்படியென்றால் கடவுள் குற்றமற்ற குழந்தையை தண்டித்தவனாகிறான்.  அதாவது கருணையற்றவனாகிறான்.   இல்லையில்லை, அவன் கருணைக் கடல் தான் என வைத்துக் கொள்வோம்,  இந்த அப்பாவிக் குழந்தையின் கஷ்டத்திற்கு என்ன பதில்?    கருணைக் கடலாக இருந்தும் அப்பாவி தண்டிக்கப் படுவதை தடுக்க இயலவில்லை என்றால் அவன் கையாலாகாதவன் என்று ஆகிவிடும்.  இது ஏற்கத் தக்க விளக்கமல்ல.


அடுத்து  நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை வந்து சேர்கின்றன என்று சிலர் கருதுகின்றனர்.  இது உண்மையல்ல.  எதற்காக ஒரு பாவம் செய்த முன்னோர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறக்க வைக்கப் பட்டோம் என்ற கேள்வி அடுத்து எழும்.  நம் முன்னோர்கள் செய்த பாவத்தால் நாம் கஷ்டப் படவில்லை, நாம் படவேண்டிய கஷ்டத்திற்காக நம்முடைய தகுதிக்கேற்ற ஒரு குடும்பத்தில் பிறக்க வைக்கப் படுகிறோம் என்பதே உண்மை.

அப்படியானால் எது நம்முடைய சுக துக்கங்களைத் தீர்மானிக்கிறது?  நாம் இந்தப் பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்த பாவ புண்ணியங்களே.  நம்முடைய இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம், கடவுளோ நம் முன்னோரோ அல்ல.  இதன் படியே நம் வாழ்க்கை அமைகிறது, இதற்க்கான சில ஆதாரங்கள் தான் சோதிடம் போன்றவையாகும்.  ஆகையால் நம் இன்ப துன்பங்களை எதனாலும் மாற்ற முடியாது. சரி, ஏதோ பழைய பாக்கி விட்ட குறை தொட்டகுறை இப்போ கஷ்டப் படுகிறோம், இதை சுளுவா தீர்க்க, நம்மை பணக்காரனாக்க தொலைக்காட்சிகளில் விடிய விடிய நம்மைக் காப்பத்துவதர்க்காக மொட்டையசிச்சுகிட்டு ஜிப்பா போட்டுக்கிட்டு பலர் கஷ்டப் படுறாங்களே.  அவற்றில் எதையாவது நாடலாமா?


இதில முதலில் வருவது பெயரை மாற்றும் நியுமராலஜி.   உங்க பேரில் ஒரு எழுத்தோ, பல எழுத்தோ சேர்க்கணும் அல்லது பேரையே மாத்தணும். அதை விடிய விடிய உட்கார்ந்துகிட்டு எழுதணும்.  இது எவ்வளவு பேத்தல்னு பார்ப்போம்.  இப்போ ஒருத்தன் ஒரு கொலையை செஞ்சிடறான்.  அதற்க்கான கைரேகை போன்ற தடயங்கள் போலீஸ் கிட்ட இருக்கு, ஆனா இவன் பேரை மட்டும் மாத்தி வச்சுகிட்டான்.  இவனைப் பிடிக்க போலீஸ் வருது, ஆனா இவன் போலீஸ் கிட்ட, சார் என் பேர்ல கடைசியா ஒரு a சேர்த்திட்டேன், அதனால என்னை உட்டுடுங்க என்கிறான்.  போலீஸ் விடுமா? விடாது அள்ளி போட்டுக்கிட்டு போயிடும்.  சாதா போலீசை ஏமாற்றிவிடலாம் இந்த கடவுளோட போலீஸ் விதி, அதை யாராலும் ஏமாற்ற முடியாது.  பேரை மாற்றி ஒருபோதும் அதை ஏமாற்ற முடியாது.  

 இதே பதில்தான் ராசிக்கல், கைரேகைக்கும்.  வாஸ்து என்பது வீட்டை, தொழில் செய்யும் இடத்தை சவுகரியமான முறையில் கட்ட மட்டுமே அதற்கும் பணம் சேர்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 கஷ்டம் என்பது நாம் தேடித் போகமலேயே நம்மை வந்தடைவது போல சுகமும் தானாகவே வரும் அதற்காக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளத் தேவையில்லை நம்மால் முடிந்தததைச் செய்தாலே போதும், வேறு எந்த குறுக்கு வழியையும் நாட வேண்டியதில்லை.

6 comments :

 1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 2. பெருமைக்கும் ஏனைசிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.

  ReplyDelete
 3. சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி;அதில் பரிகாரம் என்பது வெயிலுக்குக் குடை பிடிப்பது போல்.
  த.ம.2

  ReplyDelete
 4. //கஷ்டம் என்பது நாம் தேடித் போகமலேயே நம்மை வந்தடைவது போல சுகமும் தானாகவே வரும் அதற்காக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளத் தேவையில்லை நம்மால் முடிந்தததைச் செய்தாலே போதும், வேறு எந்த குறுக்கு வழியையும் நாட வேண்டியதில்லை//
  சரியாக சொன்னீங்க!

  ReplyDelete
 5. தீதும் நன்றும் பிறர் தர வாரா...

  ReplyDelete
 6. கடைசியில சொல்லி இருக்க பஞ்ச் ரொம்ப சூப்பர்!

  ReplyDelete