Thursday, September 27, 2012

ஒளியின் [Light] வேகத்துக்கும் எல்லை உண்டு என கண்டுபிடிக்கப் பட்ட கதை!

திருவிழாக்களில் வானவேடிக்கைகள் பார்த்திருப்பீர்கள்.  ஒரு வானவெடி மேலே சென்று வெடித்தவுடன் அதிலிருந்து வெளிச்சம் முதலில் தெரியும், அடுத்து ஒரு கணம் கழித்து அது வெடித்த சத்தம் கேட்கும்.  வெளிச்சம், சப்தம் இரண்டுமே வானவெடி வெடித்தபோதே நடந்தது எனினும் ஒளி [Light] விரைவாக நம்மை வந்தடைந்தது, ஆனால் ஒலி [Sound] சற்று தாமதாக வந்தது.  ஏனெனில் காற்றில் அதன் வேகம் வினாடிக்கு 330 மீட்டர்கள் மட்டுமே.  நீங்க 700  மீட்டர் தொலைவில் இருக்கிறீர்கள் என்றால் வெடித்த பின்னர் இரண்டு வினாடி கழித்தே அதன் சப்தம் உங்களுக்குக் கேட்கும்.  இதைப் போலவே ஒளியின் வேகத்துக்கும் [Light] ஏதாவது  எல்லையுண்டா  என்று நெடுங்காலமாக சிந்திக்கப் பட்டு வந்தது. பதினேழாம் நூற்றாண்டு வரை ஒளியின் வேகத்துக்கு எல்லையே இல்லை என்ற நம்பிக்கையே  நிலவி வந்தது.  இதன் பொருள் ஒரு நிகழ்வு, அது எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்தாலும் உங்களால் உடனடியாகப் பார்க்க முடியும் என்பதே.  அது உண்மையா? 

கலிலியோ கலிலி [Galileo Galilei 1564-1642], நவீன அறிவியலின் தந்தை, இயற்பியல், கணிதம், வானவியலில் சிறந்து விளங்கிய இத்தாலிய தத்துவஞானி!!

ஒளியின் வேகத்தை அளக்கலாம் என்ற முதல் முயற்சியை இயற்பியலின் தந்தை   என்றழைக்கப்படும் கலிலியோ 1638 ஆம் ஆண்டு மேற்கொண்டார். அவர் செய்தது இதுதான்.  ஒரு மைல் இடைவெளியில் உள்ள இரண்டு மலை உச்சிகளில், மூடித் திறக்கும் லாந்தர்ன் விளக்குகளோடு, ஒன்றில் கலிலியோ நின்று கொண்டு, இன்னொன்றின் மீது அவருடைய உதவியாளரை நிற்க வைத்தார்.  இவருடைய விளக்கின்  கதவை இவர்  திறந்து மூடுவதைப் பார்த்தவுடன் அவரது உதவியாளர் தனது விளக்கின் கதவைத் திறந்து மூட வேண்டும். அதை பார்த்து கலிலியோ தனது கடிகாரத்தில் எவ்வளவு நேரம் ஆனது என்பதை வைத்து ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம். 
இது நல்ல முயற்சி என்றாலும் பலன் தராதது.  ஏனெனில் 1 மைல் தூரத்தைக் கடக்க ஒளி ஒரு வினாடியில் 1,86,000 யில் ஒரு பங்கு நேரமே எடுத்துக் கொள்ளும், மனிதன் கதவைத் திறந்து மூடுவதற்கே ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரம் ஆகிவிடும், மேலும் அவர்கள் பயன்படுத்திய கடிகாரம் ஒன்றும் ஒரு கோடி நிகழ்ச்சியில் வருவது போல ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தையும் கூட துல்லியமாகக் காட்டக் கூடியது அல்ல.  இந்தச் சோதனைகளை பல்வேறு தூரங்களை வைத்து பலமுறை திரும்பச் திரும்ப செய்தாலும் கிடைத்த முடிவில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கவில்லை. இறுதியாக, ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] இல்லை, ஆனாலும் ஒலியின் [Sound ] வேகத்தைக் காட்டிலும் பத்து மடங்காவது பெரியது என்ற முடிவுக்கு கலிலியோ வந்தார்.

கலிலியோவின் சோதனைகள் மூலம் ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] இல்லை என்று நிரூபிக்க இயலாவிட்டாலும், வானவியலில் அவரது மற்றொரு பங்களிப்பு அதற்க்கு உதவி செய்தது.  முதன் முதலில் டெலஸ்கோப்பைச் செய்த அவர், அதைக் கொண்டு 1610 ஆம் ஆண்டு ஜூபிடரின்  நான்கு பெரிய துணைக் கோள்களை  உலகிற்க்குச் சொல்லியிருந்தார். அவை ஒளியின் வேகத்துக்கும் எல்லையுண்டு என்று உறுதி செய்ய உதவியது.  எப்படி?


http://www.nbi.ku.dk/english/www/roemer/roemer/uddannelse/roemer/roemer.jpg/
ரோமர் [Ole Christensen Rømer 1644-1710], டென்மார்க்கைச் சேர்ந்த வானவியலாளர், ஒளியின் வேகத்திற்கும் எல்லையுண்டு என்பதை முதலில் நிரூபித்தவர்.

பாரிஸ் நகர அரச சபையைச் சார்ந்த வானவியல் ஆய்வுக் கூடத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய ரோமர் என்ற இளைஞன் அதன் இயக்குனர் காசினிக்கு உதவியாளராகச் சேருகிறான். உதவிக்கு வந்தவன், பின்னால் அந்த ஆய்வகம் சந்தித்துக் கொண்டிருந்த மிகப் பெரும் புதிரையும் விடுவித்தவனாகவும் ஆனான்!!  அவனுக்கு கொடுக்கப் பட்ட வேலை, ஜூபிடரின் துணைக்கோள் ஐஒ Io ஜூபிடரைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரத்தை கணக்கிட்டுச் சொல்வதாகும்.  இது, கப்பல் மாலுமிகளுக்கும்,  வரைபடம் [map] தயாரிப்பவர்களுக்கும் இடத்தைப் பொறுத்து மாறாத கடிகாரமாய் [Standard Clock] இருக்கும். [ஆனால் அந்த முயற்சி பலனளிக்க வில்லை].


ஜூபிடரின் 67 சந்திரன்களில் ஒன்றான ஐஒ Io, 400 எரிமலைகளைக் கொண்டுள்ளது [சூரிய குடும்பத்திலேயே ரொம்ப ஆக்டிவ் ஆன இடம் இது!!] , இது ஜூபிடரை  ஒரு முறை  சுற்றி வர ஆகும் காலம் 42 மணி, 27 நிமிடம், 34 வினாடிகள். வாரத்துக்கு நான்கு முறை சுற்றி வருகிறது,  ஜூபிடரின் துணைக் கோள்களில் இதன் பாதையே ஜூபிடருக்கு அருகாமையில் உள்ளது.

பூமியிலிருந்து பார்க்கும்போது, தனது சுற்றுப் பாதையில் செல்லும் Io சில சமயம் ஜூபிடரின் நிழலில் ஒளிந்து கொள்ளும், சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியே வரும்.  இரண்டு அடுத்தடுத்த முறை அது ஒளிந்துகொள்ளும் நேரத்தையோ, அல்லது ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வரும் நேரத்தையோ வைத்து வேறுபாட்டை கணக்கிட்டால்  ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்று தெரியவரும். [இது இன்றைய கணக்கீட்டின் படி 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகளாகும்.] Io ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலத்தை ரோமர் 1668 முதல் - 1677 வரை 70 முறை கணக்கிட்டார்.     இந்த விபரங்களை தொகுக்கும்போது ரோமருக்கு ஒரு விஷயம் விந்தையாகப் பட்டது.

Io ஒரு முறை ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்பது தெரியுமாகையால் அது எப்போதெல்லாம் ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வரும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியும்.  ஆனால் நிஜத்தில் இது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் Io கணக்கிடப் பட்ட நேரத்திலிருந்து சில வினாடிகள் காலம் கடந்து தோன்றியது. ஒரு மாதத்திற்கு அது நான்கு முறை ஜூபிடரைச் சுற்றுவதால் மொத்தமாக 3 1/2 நிமிடங்கள் காலதாமதம் ஏற்ப்பட்டது. இந்த கால தாமதம் ஆறு மாதங்களுக்கு [பூமி நேர் எதிரே செல்லும் வரை]  தொடர்ந்தது.  ஒவ்வொரு முறையும் ஏற்ப்பட்ட கால தாமதத்தையும் மொத்தமாக சேர்த்து ஆறு மாதங்களுக்கு 22 நிமிடங்கள் கால தாமதம் என ரோமர் கணக்கிட்டிருந்தார்.   அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் கணக்கிடப் பட்ட நேரத்துக்கு சில வினாடிகள் முன்னதாகவே தோன்ற ஆரம்பித்தது. ஒவ்வொரு மாத இறுதியில் மொத்தமாகச் சேர்த்தால் வர வேண்டிய நேரத்துக்கு 3 1/2 நிமிடங்கள் முன்னதாக தோன்றியது, ஆறு மாத இறுதியில் வருட ஆரம்பத்தில் என்ன நேரத்துக் தோன்ற வேண்டுமோ அதே நேரத்துக்கு தோன்றியது. 

Io on Jupiters Edge
ஜூபிடரின் பின்னால் இருந்து வெளியே வரும் துணைக்கோள் Io
Io ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் பூமி எங்கே இருக்க வேண்டுமென்பதைப் பொறுத்து மாறுபட வேண்டியதில்லை என்பதில் ரோமர் உறுதியாக இருந்தார்.  அவ்வாறு காலதாமதம் ஏற்படக் காரணம், பூமிக்கும் ஜூபிடருக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிப்பதால், அந்த தூரத்தை கடப்பதற்கு ஒளி மேலும் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதால் தான் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.  இது எப்படி?  மேலும் விரிவாகப் பார்ப்போம்.

பூமி E1 நிலையில் இருந்து E2 நிலைக்கு இடஞ்சுழியாக [Anti -clockwise] சுற்றுகிறது.  E 1 ஆம் நிலையில் ஜூபிடருக்கு உள்ள தொலைவு E 2 ஆம் நிலைக்குச் செல்லும்போது படிப்படியாக குறைகிறது. மீண்டும் E 1 ஆம் நிலைக்குச்செல்லும்  அதிகரிக்கிறது. 
பூமி, ஜூபிடர் இரண்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும், இரண்டுமே நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதால் இரண்டுக்குமிடையே உள்ள தொலைவு நிலையாக இருப்பதில்லை.  அது 63 கோடி கிலோ மீட்டர்களில் இருந்து 93 கோடி கிலோமீட்டர்கள் வரை மாறிக் கொண்டே இருக்கிறது.   முதலாவதாக இரண்டு கோள்களும் 63 கோடி கிலோ மீட்டர் இடைவெளியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம், ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. என்பதால், இந்த தூரத்தைக் கடக்க அதற்கு முப்பத்தைந்து நிமிடங்கள் தேவைப்படும். ஆகையால், ஜூபிடரில் எது நடந்தாலும், உடனடியாக நமக்குத் தெரியாது, [தொலைநோக்கி மூலமே நீங்கள் நோக்கினாலும்], 35 நிமிடம் கழித்தே நமக்குத் தெரியும். 

ஜுபிடரின் முன்னால் Io, ஜூபிடரில் அதன் நிழலும் தெரிகிறது!!

ஜூபிடரின் சந்திரன்களில் ஒன்றான Io [ஐஒ] அதைச் சுற்றி வரும்போது அதன் பின்னால் செல்லும், மறைந்து சிலமணி நேரம் ஆன பின்னர் வெளிப்படும்.  அது ஜூபிடரைச் சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு என்பதும் நமக்குத் தெரியுமாகையால் [42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடி] இன்றைக்கு எத்தனை மணிக்கு அது அவ்வாறு வெளியே வந்தது என்பது தெரிந்தால், அடுத்ததாக ஒரு சுற்று சுற்றி முடிந்து எப்போது அவ்வாறு வெளியே வரும் என்பதை நம்மால் கணக்கிட முடியும்.  தற்போது,  63 கோடி கி.மீ. தொலைவில் பூமி இருப்பதாகக் கொள்வோம்.  Io [ஐஒ] தோன்றி அடுத்த முப்பத்தைந்து நிமிடங்கள் கழித்து நம் தொலைநோக்கியில் அது தெரியும். பூமிக்கும் ஜூபிடருக்கும் இடையே உள்ள தூரம் மாறாமல் இருந்தால், 35 நிமிடங்கள் தாமதமாகப் பார்த்தாலும், ஒவ்வொரு 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகள்  இடைவெளியில்   நாம்  Io ஜூபிடரின் பின்னால் இருந்து வெளியே வருவதைப் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் பூமி/ஜூபிடர் நிலையாக இல்லை. பூமி அதன் சுற்றுவட்டப் பாதையில் வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது, மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள்.  ஆகையால் அடுத்த இரண்டுநாள் கழித்து Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வந்தாலும், நாம் கணக்கிட்ட நேரத்தில் நமக்கு அது தெரியாது.   அந்த 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகள்  இடைவெளியில் பூமி   எவ்வளவு தூரம் ஜூபிடரை விட்டு விலகிப் போயுள்ளதோ அதற்குத் தகுந்தார்ப் போல மேற்கண்ட நேரத்துடன் மேலும் சில வினாடிகள் கழித்தே அது நமது தொலைநோக்கியில் தெரிய வரும். உதாரணத்துக்கு பூமி  ஜூபிடரில் இருந்து 42 லட்சம் கிலோ மீட்டர்கள் அந்த கால இடைவெளியில் விலகியிருந்தால், ஜூபிடரில் இருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்தடைய 35 நிமிடங்களோடு மேலும் 14 வினாடிகள் தாமதமாகும்.  இன்று நாம் எதிர் பார்த்த நேரத்தை விட 14 வினாடிகள் தாமதமாக Io வெளியே வருவது தெரியவரும் [42 மணி நேரம், 27 நிமிடம், 48 வினாடிகள்]. பூமிக்கும்  ஜூபிடருக்கும் உள்ள தொலைவு தினமும் அதிகரித்துக் கொண்டே போய் 93 கோடி கிலோமீட்டர் ஆகும் சமயத்தில், ஜூபிடரில் இருந்து புறப்படும் ஒளி பூமியை வந்தடைய 51.7 நிமிடங்கள் பிடிக்கும்.   [அப்போது சூரியன் பூமிக்கும், ஜூபிடருக்கும் நடுவில் இருக்கும்]  எனவே நாம் எதிர்பார்த்ததை விட 16.7  நிமிடங்கள் கழித்தே Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வருவதைப் பார்க்க முடியும்.  [16.7 நிமிடங்கள் என்பது புவி வட்டப் பாதையின் விட்டத்தை ஒளி கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமாகும்.]  அதே மாதிரி,  மீண்டும் பூமிக்கும் ஜூபிடருக்குமுள்ள தொலைவு குறையும்போது, நீங்கள் கணக்கிட்டதை விட முன்பாகவே Io வெளியே  வருவதைப் பார்க்க முடியும். ரோமாரின் சோதனைகளில் இதுதான் நடந்தது. 

ஒருவேளை, ஒளியின் வேகம் முடிவிலி [Infinity] ஆக  இருந்திருந்தால், பூமிக்கும் ஜூபிடருக்குமிடையே உள்ள தூரம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு 42 மணி நேரம், 27 நிமிடம், 34 வினாடிகளுக்கும் ஒருமுறை Io ஜுபிடரின் பின்னால் இருந்து வெளியே வருவதைப் பார்த்திருக்க முடியும்.  இந்த மாறுபாடு இருந்தே இருக்காது.  ஆனால், அடுத்தடுத்து Io ஜூபிடரின் நிழலில் இருந்து வெளியே வருவதற்கான இடைவெளி ஆறு மாதத்திற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது, அடுத்த ஆறு மாதத்திற்கு இது குறைந்து கொண்டே வருகிறது,  ஆகையால், ஒளியின் வேகத்துக்கு எல்லை இருக்கிறது.  எங்கு எது நடந்தாலும் உடனடியாகப் பார்க்க முடியாது.  சூரியன் எட்டு நிமிடம் முன்பாக இருந்ததைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம், ஒன்றரை வினாடிகளுக்கு முன்பு இருந்த சந்திரனைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்.  சில விண்மீன் கூட்டங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்!!    அவ்வளவு ஏங்க, நம் முன்னால் 3 மீட்டர் தூரத்தில் உள்ள நம் நண்பரைக் கூட ஒரு வினாடியில் பத்துகோடியில் ஒரு பங்கு நேரத்துக்கு முன்னாடி அவர் இருந்ததைத்தான் நாம் பார்க்கிறோம்!!  அப்படின்னா நிகழ் காலத்துல நாம் இல்லவே இல்லியா, எப்பவும் பழசைத்தான் பாத்துகிட்டு இருக்கோமா.......அடங்கொப்புரானே!!


 இத்தகவல்களை தனது பாஸ் காசினியிடம் தெரிவித்தபோது அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை, ஒளியின் வேகம் எல்லையற்றது என்ற கருத்தில் அவருக்கு அசையா நம்பிக்கை!!  


ஜீன் டொமினிக் காசினி Jean-Dominique Cassini (1625-1712) இத்தாலியில் பிறந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வானவியளாலர்,  சனி கிரகத்தின் நான்கு சந்திரன்களையும், அக்கிரகத்தின் வளையங்களில் இடைவெளி இருப்பதையும் கண்டுபிடித்துச் சொன்னவர். இவர் தான் பாரிஸ் வானவியல் ஆய்வகத்தில் ரோமரின் பாஸ்!!


எந்த புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர்தான் அதை வெளியிட முடியும், அவர் மறுக்கிறார் என்ன செய்வது? இங்க இத்தனை வருஷம் குப்பை கொட்டிட்டோம், இனியும் நாம் கண்டுபிடிச்சத வெளியே சொல்லாட்டி அது சரியாக இருக்காதுன்னு நினைச்ச ரோமர், தனியாவே ஒரு கை பார்த்திடுவோம்னு முடிவு செய்தார்.  1676 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பாரிஸ் அறிவியல் கழகத்தின் கருத்தரங்கில், அன்றைய தினம் ஜூபிடரின் பின்னால் இருந்து சரியாக 5:25:45 மணிக்கு Io வெளியில் வரும் என்று காசினி சொல்லியிருந்தார்.  ஆனால், ரோமர் பத்து நிமிடம் காலதாமதமாக 5:35:45 க்குத்தான் வரும் என்றார், அதைக் கேட்டார்கள், நம்பவில்லை, பார்த்தார்கள், ரோமர் சொன்னபடியே சரியாக நடந்தது!!  அவரது கட்டுரையை ஏற்று அறிவியல் கழகம் பிரசுரித்தது.  ஆனாலும் கடைசி வரை காசினி தனது தவறை ஒப்புக் கொள்ளவேயில்லை. ஒளியின் வேகத்தை கணக்குப் போடும் வேலையை கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் [Christian Huygens] ஏற்றுக் கொண்டார், பூமியின் சுற்று வட்டப் பாதையின் விட்டத்தை [Diameter] ஏற்ப்பட்ட மொத்த காலதாமதத்தால் வகுக்கும் போது ஒளியின் வேகம் கிடைக்கும்.  அவ்வாறு கணக்கிட்ட போது அவருக்குக் கிடைத்தது, 2,27, 000 கி.மீ/மணிக்கு.  ஆனால் உண்மையான வேகத்தை விட [~300,000 கி.மீ/மணிக்கு] இது 24% குறைவு.  இதற்க்குக் காரணம் அவர் உபயோகப் படுத்திய கடிகாரங்களின்  ஊசல் நீளம் வெயில் அடித்தலேயே மாறிவிடுமாம், அதனால் நேரமும் துல்லியமாக இருக்காதாம்!! மேலும் பூமியின் சுற்றுப் பாதையின் விட்டமும் அந்த காலகட்டத்தில் துல்லியமாகத் தெரிந்திருக்கவில்லை.  எனினும் இது ரோமரின் கண்டுபிடிப்புக்கு உண்டான பெருமையை எந்த விதத்திலும்  குறைத்துவிடவில்லை.

ரோமர் இதை அறிவித்த அடுத்த முப்பது வருடங்களில் துல்லியமான தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, ஏற்ப்பட்ட மொத்த காலதாமதம் 22 நிமிடங்கள் அல்ல, 16.7 நிமிடங்கள் மட்டுமே, சூரியனுக்கும் பூமிக்குமிடையே உள்ள தொலைவு 14.4 கோடி கி.மீ. இவை இரண்டையும் போட்டுப் பார்த்தால் ஒளியின் வேகம் வினாடிக்கு 2.8742  லட்சம் கி.மீ. என கிடைக்க்கிறது, இன்றைய கணக்கீடான 3 லட்சம் கி.மீ. -க்கு மிக நெருக்கமாக இது உள்ளது, எனவே ரோமர் சிந்தனை சரியான பாதையில் தான் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது!!

இதன் பின்னர் டென்மார்க் திரும்பிய ரோமர் கோபன்ஹேகனில் திருமணம் முடித்து அந்நாட்டின் தலைமை வானவியலாளர் ஆனார்.  ஃபாரன்ஹீட்  வெப்பமானி செய்ய அவர் உதவியாக இருந்தார், செப்டம்பர் 19, 1710,தனது  65 வது வயதில் அவர் காலமானார்.  அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களாக அறிந்திராத உண்மையை வெளிக்கொணர்ந்த ரோமரின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு சிறப்பு வாய்ந்த பங்களிப்பு ஆகும் !!
இந்தப்  பதிவிற்கு  தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும். 

Monday, September 24, 2012

தன்னை வணங்காதவர்களை சாமி கண்ணைக் குத்திவிடுமா!

 இந்தப் பதிவிற்குச் செல்லும் முன் நாம் சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.  முதற்க்கண் Dr. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், [சாமியின் மன அலைகள்]. 

 Dr. பழனி கந்தசாமி Ph.D ஐயா அவர்கள்
[சாமியின் மன அலைகள்.] 

ஐயாவின் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? பதிவிற்கு நாம் எழுதிய பின்னூட்டத்தை, அது பதிவின் கருத்துக்கு சற்று மாறுபட்டதாக இருப்பினும்  ஆமோதிக்கிறேன் என்று பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் அதையே தனிப்பதிவாகவும் வெளியிட்டு நம்மை சிறப்பித்தார்கள். [சுட்டி] இந்தப் பதிவைப் படித்த நண்பர் மதுரைத் தமிழனும், [அவர்கள் உண்மைகள்]  தனது வலைப்பூவில் நமது பின்னூட்டத்தை தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறார்.  [சுட்டி]மேற்கண்ட இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் நமது நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.  இவர்கள் இருவரும் கலக்கல் முன்னணிப் பதிவர்கள், ஒரு சாமானியனின் வார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இவர்கள் பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட்!!

நிகழ் காலத்தில் சிவா
பதிவு போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்து எல்லா டெக்னிகல் சப்போர்ட்டும் மனமுவந்து வழங்கி வரும், நிகழ் காலத்தில் சிவா!! தங்களுக்கும் எனது நன்றிகள்!!


தற்போது பதிவிற்குச் செல்வோம்.  மேற்கண்ட பதிவுகளில் சில அன்பர்கள் சில கேள்விகளை  எழுப்பியுள்ளார்கள்.  அவற்றை இங்கு தருகிறோம்.

[கடவுளை] எதற்கு வணங்க வேண்டும்? வணங்காவிட்டால் சாமி கண்ணைக் குத்திவிடுமா!

பதில்: நிச்சயம் குத்தாது!! எப்படி?  அப்படிக் குத்துவதாக இருந்தால் முதலில் இந்தக் கேள்வியைக்  கேட்டவரை அது  குத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை, அவர் பிளாக் படிக்கிறார், பின்னூட்டம் போடுகிறார், கண்கள் நன்றாகத்தான் இருக்கின்றன, எனவே சாமி கண்ணைக் குத்தாது என்பது உறுதியாகத் தெரிகிறது.  அப்படியானால் கடவுளை எதற்காக ஒருத்தர் வணங்கவேண்டும்?
இந்தக் கேள்விக்குப் பதில், இறைவனிடம் எந்த வகையில் நாம் தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதில் இருக்கிறது.  அதைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்துகொள்வோம். சரி, இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? வாழ்க்கையில் உள்ள கேள்விகள் அத்தனைக்கும் பதில் தரும் கண்ணனின் கீதையில் இதற்கும் பதில் உள்ளது.   


உலகமெனும் சிறையில் உள்ள உயிர்கள் அத்தனையும் என்றென்றும் எனது பகுதியான அங்கங்களே.  சிறை வாழ்க்கையில் இருப்பதால் மனம் உள்ளிட்ட ஆறு புலன்களோடு வாழ்க்கைப் போராட்டத்தில் அலைக்களிக்கப் படுகிறார்கள். பகவத் கீதை[15.7]

பகவத் கீதை[15.7] பதத்தில், தனக்கும்  ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை ஸ்ரீகிருஷ்ணர் மமைவாம்சோ என்று கூறுகிறார்.  ஜீவன்கள் எக்காலமும் தன்னில் பகுதியான அங்கங்களே [Parts and parcels] என்கிறார். இதில் மமைவாம்சோ என்பதன் பொருள் என்ன? அவ்வளவு எளிதாக ஒரே வார்த்தையில் இதை விளக்குவது கடினம். இதை இரண்டு உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். 

உடல் உறுப்புகள் அனைத்தும் வயிற்றுக்காக உழைத்தால் மட்டுமே தங்கள் நலனைக் காத்துக் கொள்ள முடியும்.

1. நமது உடலில் வயிறு இருக்கிறது, கைகள், கால்கள், கண்கள் என பல உறுப்புகள் இருக்கின்றன.  மற்ற உறுப்புகள் அனைத்தும் வயிற்றுக்காக பாடுபட வேண்டும், உழைக்க வேண்டும்.  வயிற்றுக்கு சேவை செய்வதன் மூலம் உறுப்புகளுக்கும் போஷாக்கு போய்ச் சேருகிறது.   ஆக, தாங்கள் நலமுடன் இருக்க வேண்டுமானால் உறுப்புகள் வயிற்றுக்கு சேவை செய்ய வேண்டும்.  அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் உழைப்பால் வந்த உணவை தானே உண்ணலாம் என உறுப்புகள் செயல்பட்டால், அவற்றால் உண்ணவும் முடியாது, அவற்றுக்குரிய ஆற்றலும், போஷாக்கும் கிடைக்காது, சோர்வடைந்தும் போகும்.  சுவையான ரசகுல்லாவில் அரைமணி நேரம் வேண்டுமானாலும் கையை வைத்திருக்கலாம் ஆனால் அதை கைகள் சுவைக்க முடியாது, அதை எடுத்து வயிற்றுக்கு கொடுப்பதன் மூலமே தங்கள் நலனை அவை பேணிக் காத்துக் கொள்ள முடியும்.
2. அடுத்து, ஒரு பெரிய இயந்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் பல பகுதிகள் இருக்கக் கூடும். அவை ஒவ்வொன்றும் அந்த இயந்திரத்தின் பகுதிகளாக இருந்து அவற்றின் பணியைச் செய்யும்போது தான் அவற்றுக்கு மதிப்பு.  அதிலிருந்து கலண்டு  வீதியில் விழுந்து கிடக்குமானால் எதற்கும் பிரயோஜனப் படாது, அதற்க்கு மதிப்பே இல்லை.  [மேலும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், நம் தலைமுடி தலையில் இருக்கும் வரை உலகிலேயே அதற்க்குண்டான மதிப்பை வேறு எதற்கும் கொடுக்க மாட்டோம், அதே சமயம் அது தலையில் இருந்து விழுந்துவிட்டால் அதைவிட கேவலமான ஒன்று வேறு எதுவுமே இருக்காது!!  எதுவும் அது இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு, இடம் மாறினால் அதன் வேல்யூ போய்விடும்.]


எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு!!

மேற்சொன்ன இரண்டு உதாரணங்களையும் சேர்த்தால்  நமக்கும் இறைவனுக்கும் உள்ள  தொடர்பை  புரிந்து கொள்ளலாம்.  அடிப்படையில் இறைவன் எஜமானன், நாம் அவருடைய சேவகர்கள், அதுதான் நம்முடைய உண்மையான நிரந்தரமான, மாற்றவே இயலாத  ஸ்வரூபம் [Constitutional position], எப்படி உடல் உறுப்புகள் வயிற்றுக்கு சேவை செய்வதன் மூலம் தாங்களும் தானாகவே திருப்தியடைகின்றனவோ, அதே மாதிரி நமக்கு மகிழ்ச்சி அந்த இறைவனுக்கு சேவை செய்வதில் மட்டுமே கிடைக்கும். இறைவனிடமிருந்து தனித்து வந்து விட்டால் நமக்கு மதிப்பே இல்லை.  இந்த இரண்டும் சேர்ந்த நிலைதான் ஆங்கிலத்தில்  [Parts and parcels] என்று கூறப்படும் மமைவாம்சோ என்ற உறவாகும். இறைவனுக்கும், ஜீவன்களுக்கும் ஆரம்பமும் முடிவும் கிடையாதாகையால், இந்த உறவுக்கும் ஆதியும் அந்தமும் இல்லை.  மேற்ச்சொன்ன உதாரணத்தில் ஒரு சிறிய திருத்தம், வயிற்றுக்கு உணவளிக்கவில்லை என்றால் உறுப்புகள் வயிறு இரண்டும் சேர்ந்து வாடும், ஆனால் இறைவனுக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் இழப்பு நமக்கு மட்டுமே. மேலும் முடி கீழே விழுந்த பின்னர் அதற்கும் நமக்குமுள்ள உறவு அந்து போகும், ஆனால் இறைவனுக்கும் நமக்குமுள்ள உறவு ஒருக்காலும் அந்து போகாது.  அது நிரந்தரம்.


பக்தன் பகவானுக்கு சேவகனா, இல்லை பகவான் பக்தனுக்கு சேவகனா?

இந்த மாதிரி, "எதற்காக அவனை நான் வணங்க வேண்டும்" என்ற கேள்விகள் அன்பர்கள் மனதில் ஏன் எழுகிறது?  இங்கே நாம் பார்த்தவரை, எஜமானன் எல்லா சுகத்தையும் அனுபவிப்பான் அதற்க்கு அடிமை கஷ்டப் படுவான்.   உழைப்பவன் வேலைக்காரன், நோகாமல்   நொங்கு சாப்பிடுபவன் முதலாளி. அவர்கள் இங்கு உள்ள இந்த மாதிரியான ஆண்டான், அடிமை உறவைப் பார்த்து பார்த்து, வெறுத்துப் போனதால்தான், இறைவனின் அதிகாரத்தையும் ஏற்க மறுக்கிறார்கள். அப்படியானால், இறைவனும் இங்குள்ளவர்களைப் போலவே அடுத்தவர் உழைப்பை பிழிந்து, அந்த ஜூஸில் சுகம் காண்பவனா?  இல்லவே இல்லை.  இங்கே சிலர் தங்கள் வேலைக்காரர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பார்கள், சிலர் ஓரளவுக்கு வசதியாக வைத்திருப்பார்கள், அனால் தனக்கு நிகராக தன்னுடைய வேலைக்காரர்களை நடத்துபவர்கள் இருப்பார்களா?  ஆனால் இறைவன் அதற்கும் மேல், பக்தனுக்கு பங்களாவை கொடுத்து விட்டு அவன் வாட்ச் மேனாகக் காவல் இருப்பான்.  அர்ஜுனனுக்கு தேர்ச் சாரதியாக மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்ததே  இதற்கு சாட்சி.  எங்கே தேர் போகவேண்டும் என்று உத்தவுக்கேற்ப்ப தேரை ஓட்ட வேண்டும்.  எந்தப் பக்கம் போக வேண்டுமென்பதை  தேரில் உள்ள வீரன் சாரதியின் இடுப்புக்கு அருகே காலால் இடித்து சமிக்சை செய்ய வேண்டும். யோசித்துப் பாருங்கள் மகாபாரதப் போர் முழுவதும் அவன் இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரை உதைத்திருக்கிறான். சண்டையின் நடுவே குதிரைகளுக்கு தண்ணீர் குடிக்க வைத்தல், அவற்றை குளிர்ந்த நீரால் கழுவுதல் போன்றவற்றையும் சாரதியே செய்ய வேண்டும்.  இது அத்தனையும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தனுக்காக ஏற்றுக் கொள்கிறார். இதில் யார் எஜமான், யார் வேலைக்காரன்?!!


இங்கு இன்னொரு முக்கியமான விஷயம்,  இறைவன் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவன், அவனுக்கு நாம் செலுத்தும் வணக்கமும், சாதிக்கும் சேவைகளும் அவனுக்கு பெரிய பொருட்டே அல்ல.  சொல்லப் போனால் இந்த தேகமே நம்முடையதல்ல, இங்குள்ள பொருட்கள் எதுவும் நம்முடையதல்ல.  ஏனெனில் நம் தேகத்தில் உள்ள வஸ்துக்கள் உட்பட அத்தனையும் நாம் பிறப்பதற்கு முன்னரும், நாம் செத்ததற்கு அப்புறமும் இருக்கவே செய்கின்றன, ஒரு தூசியைக் கூட எவரும் உருவாக்கவில்லை, எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம் அவ்வளவே.   


http://www.dinodia.com/photos/VDA-102453.jpg
கங்கையில் இருந்து கையளவு நீரை எடுத்து கங்கைக்கே செலுத்துவதால் கங்கைக்கு என்ன லாபம்?  ஆயினும் அச்செயலால் வழிபடுபவரின் பக்தி மேம்படுகிறது!!
சூரியனை வழிபடும் போது காட்டப் படும் தீபத்தின் ஒளியை நம்பியா ஆதவன் இருக்கிறான்?!!
 
சூரியனுக்கு திருவிளக்கு காண்பித்து ஆரத்தி செய்வதைப் போலவும் கங்கையில் இருந்து ஒரு கை நீரை அள்ளி கங்கைக்கே அர்ப்பணித்து கங்கையை வணங்குவது போலவும் நாம் இறைவனுக்கு வணக்கத்தையும் சேவையையும் தருகிறோம்.  இறைவனுக்கு கொடுக்க நம்முடையது இவற்றில் எதுவும் இல்லை.  ஆகையால் இவற்றின் மூலம் உண்மையில் இறைவன் எதிர் பார்ப்பது தான் என்ன?  அன்பு.......அன்பு........அன்பு...........  ஒன்று மட்டுமே.  நாம் இறைவனிடமிருந்து முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்டு விட்டோம், என்னைத் திரும்பிப் பார், என் மீது அன்பு செலுத்து என்று நம் அன்புக்காக இறைவன் ஏங்குகிறான்.  
உன் மனதில் எந்நேரமும் என்னையே நினைத்திரு, என் பக்தனாக ஆகு, உன் வந்தனங்களை எனக்கு சமர்ப்பி, என்னை வழிபடு, இங்ஙனம்  என் சிந்தனையிலேயே முற்றிலும் மூழ்கி இருக்கையில் நிச்சயம் என்னை வந்தடைவாய். ப.கீ-9.34

http://2.bp.blogspot.com/_OCu_uIvUaLs/S-a6QTewT5I/AAAAAAAABCE/zRXFZ2vroPQ/s1600/vrindavan_introduction_and_history.jpg


தன்னை வணங்காதவர்களை சாமி என்ன செய்யும்?  அது ஒன்றும் செய்யாது,  அவர்களுடைய கர்மங்களுக்கேற்ப்ப வாழ்வில் சுக துக்கமும், மீண்டும் மீண்டும் எல்லையில்லா பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.  இறைவன் பிறப்பித்த விதிகளின் படி தீர்ப்புகள் வழங்கப் பட்டுக் கொண்டே இருக்கும், அந்த டிபார்ட்மெண்டே வேற அதில் இறைவன் தலையிடுவதே இல்லை!!  சரி அப்படியே இருந்து விடலாமா? வாடகை வீட்டை எத்தனை தடைவதான் மாற்றுவது, நமக்கென்று நிரந்தரமான சொந்த வீடு இருந்தால் தேவலைன்னுதானே எல்லோரும் அதிக பொருட் செலவில் அதை வாங்குகிறோம்?   அப்படியே வீட்டை மாற்றிக் கொண்டே இருந்தாலும் மனத் திருப்தி கிடைக்குமா? ஒரு மீனை தண்ணீரில் இருந்து தரையில் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்க்கு கார், பங்களா, செல்பேசி, ஐ-போன், தங்கம், வைரம், கோகோ கோலா என எதைக் கொடுத்தாலும் அது அவற்றில் திருப்தியடையாது.  இதெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம் என்னை என்னுடைய இடமான தண்ணீரில் கொண்டுபோய் விடுங்கள் அது போதும் என்றுதான் சொல்லும். நமக்கும் அதே நிலைதான், வணங்காதவர்கள், வாழ்வில் எத்தனை சொத்து சேர்த்தாலும் மகிழ்ச்சி மாத்திரம் மிஸ் ஆகிறதே என்று கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பார்கள்.    மீன் தண்ணீரைத் தேடுவது போல, நாம் இறைவனின் அன்பைத் தேடுகிறோம், அது கிடைக்காதவரை எது கிடைத்தாலும் நமது துன்பத்தை, தவிப்பை அவை எதுவும் போக்காது.  

இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டு என்னை ஊக்கப் படுத்த இங்கே சொடுக்கவும்.

Saturday, September 22, 2012

அணுகுண்டு தயாரிப்பில் ஐன்ஸ்டீனின் சமன்பாடு E=mc^2 பக்க வாத்தியம் மட்டுமே வாசித்தது என்றால் கச்சேரி செய்தது எது?பெர்லின் [ஜெர்மனி]  அல்டெஸ் [Altes] மியூசியம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான E=mc2 வடிவம்.


சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியல் சமன்பாடு எது என்று கேட்டால் நாம் எல்லோருமே ஒருமனதாக  ஐன்ஸ்டீனின் E=mc^2 என்றுதான் சொல்லுவோம்.  இதில் m என்பது நிறை, c-ஒளியின் திசை வேகம் ஒரு மாறிலி [Constant].  c -ஐ வர்க்கப் படுத்தினால், 9-க்கு அப்புறம் பதினாறு பூஜ்ஜியங்களோடு மிகப் பெரிய எண் கிடைக்கும்.  ஆகையால், மிகச் சிறிய m  இருந்தாலே போதும் எக்கச் சக்கமான ஆற்றல் E  கிடைக்கும். உதாரணத்திற்கு, ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகள் ஒவ்வொன்றும் 20,000 டன் TNT வெடி மருந்துக்குச் சமம்.  அவ்வளவு ஆற்றலும் வெளியாக எடுத்துக் கொண்ட நிறை எவ்வளவு?  வெறும் 28 கிராம் [ஒரு அவுன்ஸ்] மட்டுமே.  அப்படியென்றால்,  E=mc^2, நிறையை ஆற்றலாக மாற்றும் வித்தையைச் சொல்லும் சமன்பாடு எனவும், ஆற்றல் வெளியாவதற்கு காரணம் c ஒரு அதி பயங்கரமான எண்ணாக இருப்பதும் தான் என்ற முடிவுக்கு வரலாமா?  அங்குதான் உதைக்கிறது.  எப்படி என்று பார்ப்போம்.


உதாரணத்துக்கு, மேற்கண்ட சமன்பாட்டின்படி பார்த்தால், ஞாயிற்றுக் கிழமை வரும் ஹிந்து செய்தித் தாளின் நிறையை முற்றிலும் ஆற்றலாக மாற்றினாலே போதும், சென்னையின் ஒரு மாதத்திற்கான மின்தேவையையே சமாளிக்க முடியும்.  அப்படின்னா, ஹிந்து பேப்பர் தான் வீதி வீதிக்கு கிடைக்குதே, வாங்கி தமிழகத்தின் மொத்த மின் தேவையையும் பூர்த்தி செய்து விடலாமே?  ஏன் இதைச் செய்யவில்லை? அடுத்து, ஒரு கிரிக்கெட் பந்தின் எடையை முற்றிலும் ஆற்றலாக மாற்றினால் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடும் ஒரு சராசரிக் காரை 5000 வருடங்களுக்கு ஓட்ட முடியும்.  கிரிக்கெட் பந்துக்கா பஞ்சம், அதான் எல்லோர் வீட்டிலும் இருக்கே, அவற்றில் ஒன்றை எடுத்து ஆற்றலாக மாற்றி நாட்டில் பெட்ரோல் பிரச்சினை எல்லாம் தீர்த்து விடலாமே?  ஏன் ஒருத்தரும் இதைச் செய்யவில்லை?  எங்கோ ஏதோ இடிக்கிறதல்லவா!! நிறையை ஆற்றலாக மாற்றுவதற்கு E=mc^2 என்ற சமன்பாடோ, அதிலுள்ள c^2 -ன் பிரம்மாண்ட மதிப்போ காரணமில்லை, வேறு ஏதோ இருக்கிறது அது என்ன?E=mc^2 என்ற சமன்பாட்டைப் பார்க்கும் போது நம் எல்லோர் மனதிலும்  உடனடியாகத் தோன்றுவது அணுகுண்டுதான்.  ஆனால் இதை வெளிட்ட காலகட்டத்தை பற்றி நாம் யாரும் யோசிப்பதே இல்லை.   இந்த சமன்பாட்டை ஐன்ஸ்டீன் 1905-ல் தனது சிறப்பு சார்பியல் கொள்கையில் [Special Theory of Relativity]  வெளியிட்ட போது எலக்ட்ரான் மட்டுமே கண்டறியப் பட்டிருந்தது, அணு என்பது கொய்யாப் பழம் போலவும், எலக்ட்ரான்கள் அதிலுள்ள விதைகள் போலவும் உள்ளது, அணுவின் நிறை அணு முழுவதும் சீராகப் பரவியுள்ளது என்ற மாடலே அப்போது இருந்தது. அணுக்கரு [Nucleus] என்ற ஒன்று இருப்பதே 1911 ஆம் ஆண்டு ரூதர்போர்டு அதைக் கண்டுபிடிக்கும் வரை ஒருவருக்கும் தெரியாது, அடுத்து அவரே புரோட்டானை 1917 ஆம் ஆண்டும், சாட்விக்  நியூட்ரானை 1932 ஆண்டும் கண்டுபிடித்தார்கள்.  அதற்கப்புறம்தான் அணுகுண்டு தயாரிப்பு ஆராய்ச்சிகள் நடந்தன.  அப்படியென்றால்  E=mc^2 என்ற சமன்பாடு 1905 ஆம் ஆண்டே நிறை, ஆற்றல் சமானத்தைப் [Mass Energy Equivalence] பற்றி கூறுகிறதே, அது அணுக்கரு  ஆற்றல் [Nuclear Energy] இல்லையென்றால் வேறு எதைக் குறிக்கிறது?


 உண்மையில் E=mc^2 என்பது நிறையை ஆற்றலாகவும், ஆற்றலை நிறையாகவும் மாற்றலாம் என்று கூறவில்லை, மாறாக ஆற்றல், நிறை இரண்டும் வேறு வேறு அல்ல ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறது.  அதாவது, நிறை என்பதும் ஆற்றலே, m  அளவு நிறை இருந்தால் அதை mc^2 அளவு ஆற்றலாகவும், E அளவு ஆற்றல் இருந்தால் அதை  E/c^2 அளவு நிறையாகவும் கருதலாம்.  இதன் விளைவாக, ஒரு  அமைப்பில் [system] இருந்து  E அளவு ஆற்றல் வெளியேறினாலோ/ உள்ளே வந்தாலோ அதன் நிறை E/c^2 அளவு அதிகரிக்கும்/ குறையும்.  இங்கு ஆற்றல் என்பது, வெப்ப ஆற்றல் [Heat], இயக்க ஆற்றல் [kinetic energy], ஒளி ஆற்றல் [light], நிலை ஆற்றல்[potential energy],  வேதி ஆற்றல் [chemical energy] என எல்லா வகையான ஆற்றலையும் குறிக்கும்.  உதாரணத்துக்கு,  
  • சாவி கொடுக்கப் பட்ட பின்னர் வாட்ச் ஒன்றின் நிறை அதிகரித்து இருக்கும்.
  • ஒரு கப் குளிர்ந்த காபியை விட சூடான காபியின் நிறை அதிகமாக இருக்கும்.
  • கையில் இருக்கும் கிரிக்கெட் பந்தை விட வீசப் பட்ட பந்தின் நிறை அதிகமாக இருக்கும்.
  • எரியும் எந்த ஒரு பொருளும் எரிந்து வெப்பத்தை வெளியிட்ட பின்னர் அதன் எடை குறைவாக இருக்கும்.  [நீங்கள் அதை மூடி எரிய வைத்து பொருள் வெளியேற விடாமல், வெப்பம்/ஒளி ஆற்றலை  மட்டும் வெளியேற்றினாலும் இது நடக்கும்.]
ஆனால் இவை அனைத்தும் எந்தக் கருவியாலும்  அளக்கவே முடியாத அளவுக்கு சிறிய அளவுகள்.  உதாரணத்துக்கு ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து நீராக உருவாகும் போது வெப்பம் உண்டாகிறது.  ஆகையால், ஒரு நீர் மூலக்கூறின் நிறையானது,  2 ஹைட்ரஜன் + ஒரு ஆக்சிஜன் அணுக்களின் மொத்த நிறையை விட சற்று குறைவாக இருக்கும். இரண்டரை கிலோ நிறை குறைவதைக் காண மேட்டூர் அணையை நிரப்பும் அளவுக்கு நீரை உருவாக்க வேண்டியிருக்கும்!! அதைப் போலவே அணுக்கருவில் இருந்து ஆற்றல் வெளியாகும் போதும் அதன் நிறை குறைகிறது.  எனவே நிறை ஆற்றலாக மாற்றப் படுகிறது என்பது தவறு, ஆற்றல் வெளியேறுவதால் நிறை குறைகிறது என்பதே சரி.

 
ஒரு அமைப்பில் [system] இருந்து எந்த வகை ஆற்றல் வெளியேறினாலும் அதன் நிறை குறையும், ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமானம் E=mc^2 [Mass Energy Equivalence] அவ்வாறு ஆற்றல் வெளியேறினால் நிறை எவ்வளவு குறையும் என்பதை மட்டுமே கூறுகிறது  ஆனால் ஏன் ஆற்றல் வெளியேறுகிறது [Mechanism] என்பதை அது கூறவில்லை.

ஒரு அமைப்பின் ஆற்றல் வெளியாவதால் நிறை குறைவது, அணுக்கருவிற்க்கு மட்டும் சொந்தமானது அல்ல,  முன்னரே பார்த்தபடி ஆற்றல் எங்கெல்லாம் வெளியாகிறதோ, அது எந்த வகை ஆற்றலாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் நிறை குறைகிறது. உதாரணத்திற்கு ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்து நீர் உருவாகும் போது வெப்ப ஆற்றல் வெளியாவதால்  நிறை இழப்பு இருக்கிறது, ஆனால் குறைவாக இருக்கிறது,  ஒரு யுரேனியம் அணு பிளவுபடும் போதும் அதீத ஆற்றல் வெளியாவதால் நிறை இழப்பும் அதீதமாக இருக்கிறது, இவ்விரு நிகழ்வுகளிலும் எவ்வளவு நிறை இழப்பு ஏற்பட்டது என்பதை வெளியான ஆற்றலை வைத்து m=E/c^2 சமன்பாட்டின் மூலம் கண்டு பிடிக்கலாம்.  ஆனால் நீர் உருவாகும் போது வெளியான ஆற்றல், ஏன் ஜப்பானில் போட்ட அணுகுண்டு அளவுக்கு இல்லை?   இரண்டுக்குமே E=mc^2 சமன்பாடு  பொருந்தினாலும் வெளியாகும் ஆற்றலில் ஏன் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்?  காரணம், நீர் உருவாகும்போது ஆற்றல் வெளியாவது  அணுக்களுக்கிடையே உள்ள மின்காந்த ஈர்ப்பு  விசையால் [Electromagnetic interaction],  அணுப்பிளவு ஏற்ப்படும் போது ஆற்றல் உருவாவது  அதைப் போல 100 மடங்கு பலமான அணுக்கரு விசையால் [Strong nuclear force].  எனவே அணுக்கருச் சிதைவால் அதிபயங்கர ஆற்றல் வெளியாவதற்கும், அதன் விளைவாக ஏற்ப்படும் நிறை இழப்பிற்கும் காரணம், அணுக்கரு விசை இயற்கையின் மற்ற விசைகளை விட வலுவானது என்பது தானே தவிர E=mc^2 என்ற சமன்பாடு அல்ல. [உதாரணத்திற்கு m நிறையுள்ள ஒரு கல் h உயரத்தில் இருந்து தரையில் விழுந்தால் தரையிலும் கல்லிலும் தோன்றும் வெப்ப ஆற்றல் mgh அளவு இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.  இதே நிகழ்வு ஜூபிடரில் நடந்தால் இரண்டரை மடங்கு ஆற்றலும், சூரியனில் நடந்தால் 28 மடங்கு ஆற்றலும் உருவாகும்.  காரணம் பொருளீர்ப்பு விசை g யின் மதிப்பு அத்தனை மடங்கு உயர்வதால்தான்.  விசை வலுவானதாக இருந்தால் வெளியாகும் ஆற்றலும் பயங்கரமாக இருக்கும்.  அணுக்கரு விசை புவிஈர்ப்பு விசையை விட 10^38 மடங்கும், மின்காந்த விசையை விட 100 மடங்கும் அதிகம்.]

E=mc^2 சமன்பாட்டின் படி நிறையை 100% ஆற்றலாக ஒருபோதும் மாற்றவே முடியாதா?


முடியும்!!  பொருள் [matter], அதன் எதிர் பொருளைச் [anti-matter] சந்திக்கும்போது நிறை 100% ஆற்றலாக மாறும்.  ஒரு எலக்ட்ரான் அதன் எதிர் பொருளான பாசிட்ரானைச் சந்திக்கும்போது நிறை E=mc^2 சமன்பாட்டின் படி 2mc^2 அளவு முற்றிலும் ஆற்றலாகும்.  இதில் m எலக்ட்ரான்/பாசிட்ரானின் நிறை.  அதைப் போலவே, ஒரு புரோட்டான், anti-புரோட்டானைச் சந்திக்கும் போதும் நிறை நூறு சதம் ஆற்றலாக வெளியாகும்.  அதற்கும் மேல் பாசிட்ரானையும் anti-புரோட்டானையும் சேர்த்து anti-ஹைட்ரஜன் அணுவை உருவாக்கி அதை ஹைட்ரஜன் அணுவோடு மோத விட்டாலும் அவை ஆற்றலாக மாறும்.  இது வரை இந்த அளவுக்கு மட்டுமே வர  முடிந்துள்ளது ஒரு anti-ஹைட்ரஜன் அணுவை உருவாக்குவதே பெரிய காரியம்.  அதற்கும் மேல் anti-மூலக்கூறுகள்,  anti-பொருட்கள் எதுவும் இதுவரை சாத்தியப் படவில்லை  எனவே நடைமுறைக்கு உதவும் வகையில் பொருள் 100% ஆற்றலாக மாறுவது இப்போதைக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.


அப்போ அணுகுண்டு தயாரிக்க ஐன்ஸ்டீன் என்னதான் செய்தார்?

இயல்பில் ஐன்ஸ்டீன் போரை விரும்பாதவர், போர் என்று வந்தால் யார் பக்கம் நியாயம் இருப்பினும், அதில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஒருபோதும் ஈடுபடமாட்டேன் என்று பிரகடனப் படுத்தி வந்தவர். ஆனாலும் 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவி ஏற்ற பிறகு அவரது இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.   1938 ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி யுரேனியத்தை உடைக்கும் தொழில் நுட்பத்தைப் பெற்றுவிட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன, ஆயினும் அமேரிக்கா அணு ஆயுதம் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தது.  இது குறித்து லியோ ஸ்சிலார்ட் , [Leo Szilard], விக்னர், [Eugene Wigner], டெல்லர்  [Edward Teller] என்ற மூன்று இயற்பியலாளர்களும் கவலையடைந்து என்ன செய்வது என்று தவித்தனர். [இவர்கள் மூவரும் ஹங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.] ஆனபோதிலும் அமெரிக்க அதிபரை தங்கள் பேச்சைக் கேட்க வைக்கும் அளவுக்கு இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல, எனவே யாரைப் பிடித்தால் வேலையாகும் என புரிந்து கொண்ட அவர்கள், ஐன்ஸ்டீனிடம் ஓடினார்கள்.  அணு ஆயுதம் பற்றி எடுத்துக் கூறி அதை அதிபருக்கு எடுத்துரைக்குமாறு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டி, அவர்களே அந்தக் கடிதத்தையும் எழுதி, இறுதியில் ஐன்ஸ்டீனை கையொப்பமிடச் செய்து அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்க்கு அனுப்பிவிட்டனர். [நன்றாகக் கவனியுங்க, அணுக்கருச் சிதைவு மூலம் அபரீதமான ஆற்றலை எடுக்க முடியும் என்ற தகவல் ஐன்ஸ்டீனுக்கே தற்போதுதான் (1939) தெரியும், தொடர்வினை [Chain reaction] பற்றியும் அதனால் வெளியாகும் பயங்கர ஆற்றல் பற்றியும் ஸ்சிலார்ட்  விளக்கிய உடனே அவர் அதைப் புரிந்து கொண்டாலும், "அடடே இதை நான் யோசிக்கவே இல்லையே" என்று ஆச்சரியப் பட்டிருக்கிறார்!!]


தெளிவான எழுத்துருக்களில்  கடிதத்தைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

கடிதம் எழுதப் பட்ட கதையை மேலும் படிக்க நல்ல தகவல் தரும் சுட்டி. 

 அந்தக் கடிதத்தைப் படித்த அதிபர் ஒரு கமிட்டியை நியமித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார், அதன செயல்பாடு ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.  அதன் பின்னர் இங்கிலாந்தில் இருந்து 1941-ல் அமெரிக்க அதிபருக்கு, அணு ஆயுத தயாரிப்பை துரிதப் படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த பின்னர் மேன்ஹாட்டன் புராஜக்ட் ஆரம்பிக்கப் பட்டு அணு ஆயுதம் தயாரிக்கப் பட்டு ஜப்பானின் தலையில் இரண்டு போடப் பட்டது. ஜெர்மனி அந்நேரம் வீழ்ந்துவிட்டிருந்தது. அணு ஆயுதத் தயாரிப்பில் ஐன்ஸ்டீனின் பங்கு மிகச் சொற்பம், 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டு நாட்களில் அவர் பணி முடித்த பின்னர்,  அவரை அதில் யாரும் சேர்த்துக் கொள்ளவே இல்லை. [ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாதவர் என அவர் மீது நம்பிக்கையற்று இருந்தார்களாம்!].  அணு ஆயுதத் தயாரிப்பில் இந்தக் கடிதம் தான் அவர் ஆற்றிய பெரிய பங்கு!!   இந்த கடிதத்தில் கையொப்பமிட்டது தான் தன்  வாழ்நாளின் மிகப் பெரிய தவறு என ஐன்ஸ்டீன் பின்னர் வருந்தியதாகத் தகவல். 
மேன்ஹாட்டன் புராஜக்ட் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்ட முக்கியமான விஞ்ஞானிகளில் சிலர்:

Robert Oppenheimer (USA), David Bohm (USA), Leo Szilard (Hungary), Eugene Wigner (Hungary), Rudolf Peierls (Germany), Otto Frisch (Germany), Felix Bloch (Switzerland), Niels Bohr (Denmark), James Franck (Germany), James Chadwick (Britain), Emilio Segre (Italy), Enrico Fermi (Italy), Klaus Fuchs (Germany) and Edward Teller (Hungary). 

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மேலும் சில தகவல்கள் [நீங்கள் விரும்பினால் படிக்கலாம்!!]

1. Binding Energy குறித்த தவறான புரிதல்.

அணுக்கரு இயற்பியல் படிக்கும் போது  Binding Energy பற்றி விளக்கம் தரப்பட்டிருக்கும்.  பொதுவாக ஆற்றல் என்றாலே ஒரு விதமான +ve சக்தி, அதை வைத்து இழுத்தல் தள்ளுதல் போல வேலையைப் பெற முடியும் என்ற எண்ண ஓட்டமே நமக்கு இருக்கிறது.  இந்த ஆற்றல் அப்படிப் பட்டதல்ல. எளிய உதாரணம், m  எடையுள்ள பொருள் h உயரத்தில் இருந்து  விழுந்தால் நிலை ஆற்றல் mgh, இயக்க ஆற்றலாக மாறி தரையில் மோதியவுடன் வெப்பமாக மாறுகிறது.   தற்போது நீங்கள் மீண்டும் அதே உயரத்துக்கு அந்தப் பொருளை திரும்பக் கொண்டுபோய் வைக்க வேண்டுமானால் விழும் போது வெளியான mgh ஆற்றலை திரும்ப வேலையாகச் செய்தால் மட்டுமே முடியும். இதையே  பிணை ஆற்றல் Binding Energy என்கிறோம்.  இதன் பொருள் முந்தைய நிலைக்கு [Original state ] திரும்ப கொண்டுசெல்ல நீங்கள் செலவு செய்ய வேண்டிய ஆற்றல் என்பதாகும்!!  இதை -ve ஆற்றல் என்றும் கூறலாம்.  அதைப் போலவே, தனியாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் ஒரு எலக்டிரான் ஒரு அணுவின் பந்தத்துக்குள் விழும்போது ஆற்றலை வெளிப்படுத்துகிறது.  நீங்கள் அந்த எலக்டிரானை அணுவின் கட்டுப் பாட்டில் இருந்து விடுவிக்க, அணுவின் ஈர்ப்பில் விழுந்தபோது வெளியான அதே அளவு ஆற்றலை மீண்டும் கொடுத்தால் மட்டுமே முடியும்.  இதுவும் Binding Energy ஆகும்.  அதைப் போலவே, தனித் தனியாக இருந்த புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து அணுக்கரு உருவாகும் போது அணுக்கரு ஈர்ப்பு விசைக்கு உட்படுவதால் ஆற்றல் வெளியாகிறது அதுவும் Binding Energy, ஆகும்.  சில சமயம் மாணவர்களிடையே,  இதை அணுக்கரு புரோட்டான்+நியூட்ரான்களை கட்டிப் போட பயன்படுத்திக் கொள்கிறது என்ற தவறான புரிதலும் இருக்கிறது. அதன் அர்த்தம் அப்படியல்ல!!  தற்போது நீங்கள் அணுக்கருவில் உள்ள எல்லா புரோட்டான்+நியூட்ரான்களை தனித் தனியாக பிரிக்க வேண்டுமானால் அவை இணைந்த போது வெளியேறிய ஆற்றலை கொடுத்தால் மட்டுமே முடியும்.  அதுவரை அவை அணுவில் பத்திரமாக கட்டப் பட்டிருக்கும். கடன் பட்டிருக்கும், வெளியே வர முடியாது.  அந்த ஆற்றலை Binding Energy, என்று சொல்கிறோம். அதை எவ்வாறு கணக்கிடுவது?  தற்போதைய அணுக்கருவின் நிறையையும், அதிலுள்ள துகள்களின் தனித் தனியான நிறையையும் கணக்கிட்டு வித்தியாசத்தைப் பார்த்து அதை c^2 ஆல் பெருக்க இது கிடைக்கும்.  


2. அடிப்படைத் துகள்கள் பற்றிய எளிய அழகிய நல்லதொரு  மென்நூலை நேற்று பார்த்தேன், அதிலிருந்து ஆற்றல் நிறையாக உள்ளதைக் காட்டும் ஒரு சிறந்த உதாரணம்:

ஒரு  புரோட்டான் மூன்று குவார்க்குகளால் ஆனது,  அவை குளுவான்களை [Gluons] ஒன்றுக்கொன்று பகிர்வதன் மூலம் தங்களுக்கிடையேயான அதீத அணுக்கரு ஈர்ப்பு சக்தியை [strong nuclear force]  வெளிப்படுத்துகின்றன.  மூன்று குவார்க்குகளின்  மொத்த நிறை 15 MeV மட்டுமே,குளுவான் நிறை பூஜ்ஜியம்.  ஆனால்  ஒரு  புரோட்டானின்  நிறை 938.27 MeV.  அப்படியானால் மீதமுள்ள 923 MeV எதனால் வருகிறது?  அது, எங்களை இவ்வளவு சின்ன இடத்துல அடைச்சு வச்சிட்டீங்கலேடான்னு குவார்க்குகள் கும்மாளம் போட்டு கலாட்டா செய்வதானால் தான்!!  எனவே, 98% புரோட்டானின் நிறை அதிலுள்ள குவார்க்குகளின் இயக்க ஆற்றலே.  ஆற்றல் இருந்தால் அதற்கும் நிறையுண்டு!! [குறிப்பு: MeV அப்படின்னா மிகச் சிறிய நிறையின் ஒரு அலகு (unit) அவ்வளவுதான், அது என்னன்னு போட்டு குழப்பிக்க வேண்டாம்.]
 மேற்கண்ட மென்நூலை தரவிரடிக்கிப் படிக்க சொடுக்கவும். 

3. System பற்றிய விளக்கம்

இந்தப் பதிவில்  ஒரு அமைப்பில் [System] இருந்து ஆற்றல் வெளியானால் அதன் நிறை குறையும், அதற்க்கு ஆற்றல் கொடுக்கப் பட்டால் நிறை அதிகரிக்கும் என்று சொன்னோம். அமைப்பு [System] என்ற வார்த்தையை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?  உதாராணத்திற்கு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருப்பதாகக் கொள்வோம்.  அது ஒரு system.  அதை வெப்பப் படுத்துகிறோம் அல்லவா, அதற்க்கான அடுப்பு அது இன்னொரு system. வெப்பம் வெளியாவதால் அடுப்பில் உள்ள நிறை குறையும், வெப்பத்தை ஏற்றுக் கொள்வதால் நீரின் நிறை அதிகரிக்கும்.  அதே சமயம் நீங்கள் அந்த மொத்த அறையையே ஒரு  system மாகக் கருதினால் அதன் நிறையில் எந்த வேறுபாடுமே இருக்காது. ஏனெனில் ஆற்றல் அந்த அறைக்குள்ளேயே தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்குச் சென்றிருக்கிறது, அறையை விட்டு வெளியேற வில்லை, எனவே அறையின் நிறை மாறாது.  அதே மாதிரி ஒரு அணுகுண்டை வெடிக்கச் செய்து அதன் ஆற்றலை வெளியே செல்ல இயலாதபடி ஒரு பெட்டிக்குள் அடைக்க முடிந்தால் வெடிப்பிற்கு முன்னரும் வெடிப்பிற்குப் பின்னரும் அந்தப் பெட்டியின் நிறை மாறது.  எனவே, ஆற்றலுக்கும் நிறை உண்டு, நிறை இருந்தால் அதற்க்கு ஆற்றலும் உண்டு, இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!!


4. இந்தப் பதிவு எழுதியதன் பின்னணி:

ஒருநாள், குவாண்டம் மெக்கானிக்ஸ்  பற்றி ஒன்னும் தெரியாதே, ஏதாவது எளிமையா ஒரு புத்தகத்தைப் படிக்கலாம் என்று அவா எழுந்தது. இணையத்தில் ஒரு மென் நூலைத் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.  அதில் ஒரு அத்தியாயத்தில்  E=mc^2 பற்றி போட்டிருந்ததைப் பார்த்த போதுதான் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
 இதில் சொல்லப் பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால், நாம் இத்தனை நாளும் ஐன்ஸ்டீனின் சமன்பாட்டைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.  அத்தோடு நில்லாமல் இணையத்தில் இது குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று மேற்கண்ட பக்கத்தில் சொல்லிய அர்த்தத்திலேயே வார்த்தைகளைக் கோர்த்து கூகுளில் தேட ஆரம்பித்தேன், ஒரே ஒரு தளம் மட்டும் கிடைத்தது, அதற்க்கான சுட்டி இதோ.இந்தப் பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால், தமிழ்மணத்தில் வாக்களிக்க  சொடுக்கவும்.

Wednesday, September 19, 2012

இரண்டு குதிரைகளின் பின்புறத்தின் அகலம் எதையெல்லாம் தீர்மானிக்கும்?

ஸ்பேஸ் ஷட்டில் [Space Shuttle] அறிமுகம்


சர்வதேச விண்வெளி மையத்திற்கு [ISS-International Space Station] ஆட்கள், கருவிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லுதல்,  விண்வெளியில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ஹப்பிள் டெலஸ்கோப்பை [Hubble Telescope] பழுது பார்க்க ஆட்களை அனுப்புதல், மனிதன் ஏவிய ஆயிரக் கணக்கான செயற்கைக் கோள்களில்  [Satellites] ஏதாவது செயலிழந்து போனால் யார் தலைமேலும் விழாமல் மீட்டு வருதல் போல பல நோக்கங்களுக்காக திரும்பத் திரும்ப உபயோக்கியப் படும் வகையில் வடிவமைக்கப் பட்ட விண்வெளி ஓடமே ஸ்பேஸ் ஷட்டில் [Space Shuttle]  ஆகும்.

எவுதளத்திற்க்குக் கொண்டுவரப்படும் ஷட்டில் [Shuttle].  முன்னால்  தெரிவது ஆர்பிடர், இதில்தான் ஆட்கள், கருவிகள், உணவு மற்றும் பொருட்கள் இருக்கும்,  விண்வெளிக்குச் சென்று இது மட்டுமே பூமிக்குத் திரும்பும்.  அதன் பின்னால் இருபுறமும் வெள்ளை நிறத்தில் உள்ளவை திட எரிபொருள் பூஸ்டர்கள், இவைதான் ஆர்பிட்டரை மேலே 400 கி.மீ உயரத்திற்கு கொண்டு போய் மணிக்கு 28,000  கி,மீ. வேகத்தில் செலுத்தத் தேவையான 71% உந்துதலைத் தருகிறது,  இரண்டு நிமிடத்தில் நாற்பதைந்து கி.மீ. உயரத்தை அடைந்த பின்னர்  இவை எரிந்து முடிந்து கடலில் பாரசூட்டுடன் விழும் பின்னர் மீட்கப் படும்.  ஆரஞ்சு நிறத்தில் உள்ளது திரவ எரிபொருள் டேன்க், இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் திரவநிலையில் வைக்கப் பட்டிருக்கும், இவை ஆர்பிடரில் உள்ள மூன்று எஞ்சின்களுக்கு சப்ளை ஆகும்.  அங்கு இரண்டும் சேர்ந்து வினைபுரிந்து நீராவியாக மாறி அதீத வெப்பத்துடன் வெளியேறும்போது ஏற்ப்படும் உந்துதலால் ஷட்டில் மேலே செல்லும்,  மொத்த உந்துதலில் 29% .இதிலிருந்து கிடைக்கிறது.  எட்டு நிமிடத்தில் இதன் வேலை முடிந்ததும் தனியாகக் கலண்டு  புவியின் வாயு மண்டலத்தில் நுழைந்து காற்றின் உராய்வால் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும்.  இந்த டேங்கைத்  தவிர மற்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.   இவை அத்தனையும் சேர்த்து மொத்த எடை இரண்டாயிரம் டன்கள்
பைக், கார், பஸ், ரயில், கப்பல், விமானம் என மனிதனால் வடிவமைக்கப் பட்டதிலேயே எல்லாவற்றையும் விட தொழிநுட்பத்தில் மிகவும் சிறந்ததும், பல்லாயிரம் மடங்கு சிக்கலானதுமான  போக்குவரத்து வாகனம் இதுவாகும்!!  ஆறு  நாட்கள்  முதல்  இரண்டு  வாரங்கள்  வரை  விண்வெளியில்  இருந்துவிட்டு  பத்திரமாக  பூமிக்குத்  திரும்பும் இந்த ஓடம் ஒவ்வொன்றும் நூறு முறைக்கும் மேல் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டவை.  1981 ஆண்டிலிருந்து இதுவரை 135 முறை விண்வெளிக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்ற இவ்வகை ஓடங்கள், இரண்டு முறை விபத்துக்குள்ளானது, அதில் ஒன்று [கொலம்பியா, 2003] பயண  முடிவில் தரை இறங்குவதற்கு சற்று  முன்னரும், மற்றொன்று [சேலஞ்சர், 1983] புறப்படும் போதும் வெடித்துச் சிதறின.  கொலம்பியா விபத்தில் தான் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.இதில் ஆர்பிட்டரை பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் கொண்டு போய் மணிக்கு 28,000  கி.மீ. வேகத்தில் அதன் பாதையில் செலுத்தத் தேவையான 71% உந்துதலைத் தரும் திட எரிபொருள் பூஸ்டர்கள் SRB.  இவற்றை இன்னமும் கொஞ்சம் பருமனாக இருந்தால் தேவலையே என என்ஜினீயர்கள் விரும்பினார்கள்.  ஆனால் அது முடியவில்லை. என்ன காரணம்?

கடமை முடிந்ததும், கடலில் விழும் SRB

கடலில் இருந்து மீட்கப் பட்டு கரைக்கு கொண்டுவரப்படும் SRB
 
  இவை அமெரிக்காவில் யூட்டா [Utah ] என்னுமிடத்தில் அமைந்துள்ள தியோகோல் [Thiokol] என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப் படுகிறது. அங்கிருந்து வரும் ரயில் பாதை ஒரு மலையின் பாறைகளைக் குடைந்து உருவாக்கப் பட்ட சுரங்கப் பாதையில் நுழைந்து வரவேண்டும்.  அந்த ரயில் பாதையின் அகலம் 4 அடி 8.5 இன்ச்கள்.  சுரங்கப் பாதை இதை விடச் சற்று அகலமாக இருக்கும் அவ்வளவுதான்.  எனவே இஷ்டத்துக்கும் இதை பருமனாக்க முடியாது.

பகுதிகளாக இரயிலில் வந்த SRBயின் பாகங்கள் ஏவுதளத்திற்கு அனுப்பவதற்கு முன்னர் இணைக்கப் படுகின்றன.
அதுசரி, ரயில் பாதையின் அகலம் 4 அடி 8.5 இன்ச் என்றால் என்னைய்யா கணக்கு?  இது என்ன நம்பர் எதிலும் சேராத மாதிரி இருக்கே?  அமெரிக்காவில் ரயில் பாதையை அமைத்தவர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஆகையால் அங்கே எப்படி அமைத்தார்களோ அதையே இங்கும் பின் பற்றுகிறார்கள்.


அப்போ, இங்கிலாந்தில் ஏன் அந்த அகலத்தை ரயில் பாதைக்குத் தேர்ந்தெடுத்தார்கள்?  அங்கே ரயில் பாதையை வடிவமைத்தவர்கள், அதற்க்கு முன்னர் இருந்த டிராம் வண்டிகளை செய்துவந்தவர்கள், அவர்களிடமிருந்த கருவிகள், தட்டு முட்டுச் சாமான்களை வைத்து அந்த வண்டியின் சக்கரங்களுக்கிடையே என்ன தூரமோ அதே அகலத்தில் தான் பாதையை அமைக்க முடியும்

இங்கிலாந்தின் பாரம்பரிய டிராம் வண்டி.


அதுசரி, அந்த சாரட்டு வண்டி சக்கரங்களுக்கிடையே இருக்கும் தூரத்தை எதை வச்சு முடிவு பண்ணினாங்க?  இங்கிலாந்தில் நெடுந்தூர மண் சாலைகளில் உள்ள சக்கர வழித்தடங்கள் [ruts ] அப்படி இருந்தன, அந்த இடைவெளியை மாற்றினால் சக்கரம் உடைந்து போகும், ஆகையால் அந்த இடைவெளியிலேயே சக்கரங்களை வடிவமைத்தனர்.


Att00003

ஆஹா........... அப்ப அந்த மண் சாலைகள் ஏன் அந்த மாதிரி அமைக்கப் பட்டது?  
Att00004

ஐரோப்பாவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ரோமாபுரிப் பேரரசு மன்னர்கள், அவர்களின் தளபதிகள், போர் வீரர்கள் எல்லோரும் தங்கள் வண்டியில் இரண்டு குதிரைகளைப் பூட்டி ஒட்டினார்கள், அவர்கள் அக்குதிரைகளின் பின்புற அகலத்துக்குச் சமமான இடைவெளி விட்டு சக்கரங்களை அமைத்தார்கள், ஐரோப்பா முழுவதும் சாலைத் தடங்கள் இந்த அகலத்திலே அமைந்தது, எனவே எல்லோரும் தங்கள் வாகனகளுக்கும் இதே இடைவெளி விட்டு சக்கரங்களை அமைக்க வேண்டி வந்தது.

அப்போ, உலகிலேயே அட்வான்சான ஒரு போக்குவரத்து முறையை முடிவு செய்தது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த குதிரைங்க ரெண்டோட பின் புறத்து சைசுதானா?  என்ன கொடுமை சார் இது?


இது குறித்து மாற்று கருத்துகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்தப் பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும், நன்றி!!

Sunday, September 16, 2012

பிரபல பதிவரைக் கவிழ்க்க நான் ஊட்டிக்குப் போனேன்.

தற்போது தமிழ்ப் பதிவுலகில் அசூர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு முன்னணிப் பதிவரைக் கவிழ்க்க என்னடா செய்யலாம் என்று யோசித்ததில் எனக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது. அவர் பதிவு போடும் ஸ்டைலிலேயே நாமும் போடலாம்.  இது தான் என் திட்டம்.  நான் இருக்கும் ஊரில் உள்ள சாப்பாட்டுக் கடைகளைப் பத்தி எழுதி யாராச்சும் அங்க சாப்பிடப் போனா, சாப்பிட்டு பாத்திட்டு என்னை உதைக்க வந்திடுவாங்க.  அதை விட்டா, வாழ்க்கையில நொந்து நூடுல்சா போனவங்ககிட்ட போயி உட்கார்ந்துகிட்டு அவங்க சொந்தக் கதை சோகக் கதையை கேட்டு, ஒரு அழுகாச்சி காவியம் படைச்சு அத பதிவா போடலாம். ஆனா அதுல ஒரு பிரச்சினை, நமக்கு இந்த சோகம்னாலே தாங்க முடியாது, நொடிஞ்சு போனவங்க கதையை உட்கார்ந்துகிட்டு கேட்கிறதுக்கு எல்லாம் நம்மாள ஆவாது, அதுக்கும் மேல படிக்கிறவங்கள அழ விடறது சுத்தமா பிடிக்காது.  எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா ஒன்னே ஒன்னு மட்டும் தான் மிஞ்சியது.  அது பல இடங்களுக்கு டூர் போயிட்டு அங்க படம் பிடிச்சு பதிவா போடுறது!!  ஆஹா........ இது சூப்பர்.  எங்க போகலாம்னு யோசிச்சப்போ முதலில் மனதுக்குத் தோன்றிய இடம் ஊட்டி, நான் அங்கு போனதும் இல்லை.  நிறைய சினிமாக்களில் பார்த்து இங்கெல்லாம் ஒருநாள் நாம் போய்ப் பார்க்கமாட்டோமா என ஏங்கிய இடம் அது, அங்கேயே போகலாம் என முடிவு செய்தேன். குடும்பத்தோட போயிட்டு வரலாம்னு, கடந்த ஜூலை மாதம் பஸ்ஸில் டிக்கட் புக் பண்ணி ஊட்டிக்குப் போய் மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்துவிட்டு நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.

போயிட்டு வந்ததுக்கப்புறம் ஒரு தயக்கம்.  ஊட்டிக்கு போகாதவங்க யாராச்சும் இருப்பாங்களா, நிறைய சினிமாவிலும் பார்த்திருப்பாங்க.  இந்தப் படத்தையெல்லாம் போட்டா யாரு பார்ப்பாங்க, அப்படி என்ன நாம எடுத்த படங்களில் இருக்கு என்றெல்லாம் எண்ணியபடி அதை பதிவில் ஏற்றத் தயங்கிக் கொண்டே இருந்தேன். அந்தத் தயக்கத்தையும் அந்த முன்னணிப் பதிவரே நீக்கிட்டாரு!!  எங்க ஊருக்கு அவரு இப்போ வந்திட்டு இங்கே எடுத்த புகைப் படங்களைப் பதிவா போட்டிருந்தார், அதைப் பார்த்த பின்னர் நாம எடுத்த படங்களை நிச்சயம் பதிவாகப் போடலாம், தப்பே இல்லை என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.  அதன் விளைவுதான் இந்தப் பதிவு!!

ஊட்டி ஏரியின் படகுத் துறை, இது ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று.
ஊட்டி ஏரியை ஒட்டி ஓடும் குழந்தைகளுக்கான Toy Train.

ஊட்டி ஏரியின் முன்புறம் உள்ள அழகிய பூந்தோட்டம்.
படத்தில் கீழே தெரியும் மூன்று கட்டிடங்களுக்கு சற்று முன்பாக அருகே வரிசையாக கருப்பு நிற தார்பாலின் போலத் தெரிகிறதல்லாவா?  அங்கே ஸ்ட்ரா பெர்ரி விளைவிக்கிறார்களாம்.

 ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் என திரும்பிய பக்கமெல்லாம்  இதைப் போல ஒரே மாதிரியான தேயிலைத் தோட்டங்களே உள்ளன. இந்த டீத்தோட்டம் ஹிந்தி நடிகை மும்தாஜின் கணவருக்குச் சொந்தமாம், இந்த ஒரே இடத்தில் 2500 ஏக்கர் டீத் தோட்டம் அவர்களுக்கு உள்ளதாம்.  ஊட்டியில் உற்பத்தியாகும் தேயிலையின் உயர்ந்த ரகம் அத்தனையும் வெளிநாடுகளுக்கே எற்றுமதியாகிறதாம் நமக்குக் கிடைப்பதெல்லாம் கடைசியில் மிஞ்சும் குப்பை மட்டுமே.  அது சரி, இதன் நடுவில் உயரமான மரங்கள் எதற்கு நிற்கின்றன?  அவை, மண் அரிப்பைத் தடுப்பதற்காம், அவை இல்லா விட்டால் No தேயிலைத் தோட்டம்!!

போன இடத்தில நம்ம நண்பர் கிடைச்சார்!!

ஊட்டி தாவரவியல் பூங்கா Botanical Garden நுழைவாயில்.

ஊட்டி தாவரவியல் பூங்கா-கண்ணாடி அறையில் பூச்செடிகள்.

ஊட்டி தாவரவியல் பூங்கா வெளி மைதானம்

ஊட்டி தாவரவியல் பூங்கா- கடைசி பகுதி, இந்தப் படத்தோடு முதல் நாள் முடிகிறது.
இரண்டாம் நாள் முதுமலைக்குப் பயணமானோம்.  போகும் வழியில் உள்ள கோல்ப் மைதானம், இங்கே விளையாட மூன்று மாதத்திற்கான கட்டணம் நாற்பதாயிரம் ரூபாயாம்!!

ஊட்டியில் திரும்பிய இடமெல்லாம் இருக்கும் நீலகிரி மரக்காடுகள்.  ரோஜா படத்தில் அரவிந்தசாமியை தீவிர வாதிகள் காஷ்மீரில் கடத்தி வரும் காட்சியை இந்த மாதிரி காடுகளில் தான் எடுத்தார்களாம், ஐஸ் எபக்ட் வரவேண்டும் என்பதற்காக தரையில் நொறுக்கப் பட்ட தெர்மோகோல் [தொலைக் காட்சிபெட்டி, ஃப்ரிட்ஜ் வாங்கும்போது அடிபடாமல் இருக்க வைக்கப் படும் வெள்ளை நிற பேக்கிங் மெடீரியல்] போட்டு நிரப்பி எடுத்தார்களாம்!!

ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் நிறுவனம், காதல் கோட்டை படத்தில் மணிவண்ணன் நடத்திய டெலிபோன் பூத் இதன் முன்னர்தான் அமைக்கப் பட்டிருந்ததாம்.  இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள தபால் பெட்டியில் தான் அஜீத்துக்கு அனுப்பும் கடிதத்தை தேவயானி  போடுவாராம்!!

உருளைக் கிழங்கு செடி இதுதானாம்!!  பின்புலத்தில் அழகிய சர்ச்!!

இது காமராஜர் அணை, ரோஜா படத்தில் இறுதியில் தீவிரவாதிகள் அரவிந்தசாமியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை இதுதானாம்.  [அவ்வளவு கூமுட்டையாகவா நாம் இருந்தோம்  என்று தோன்றியது!!]

பைன் மரக் காடுகள், இவற்றின் கட்டைகளில் இருந்து தான் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் படுகின்றனவாம், ஆனால் நாற்பது ஆண்டுகள் ஆன மரங்களில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியுமாம்.  பம்பாய் படத்தில், "குச்சி குச்சி ராக்கம்மா...", பையா படத்தில் "அடடா........அடடா..........அடை மழைடா" பாடல்கள் இதற்க்கு அருகில் எடுக்கப் பட்டவை.

அண்ணாமலை படத்தின், "வந்தேண்டா பால் காரன்...", நாட்டாமை படத்தின் "கொட்டை பாக்கும்......" பாடல்கள் படமாக்கப் பட்ட மலைப் பகுதி.  எல்லா மொழிகளிலும் நிறைய படங்கள் இங்கு எடுக்கப் பட்டுள்ளன.  இந்த மலை முழுவதும் இரண்டு இன்ச் நீளமான புற்களால் கார்பெட் மாதிரி மூடப் பட்டிருக்கிறது, வேறெந்த மரங்களோ, உயரமான  செடிகளோ கிடையாது. மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும் சிறிய செடிகள் மட்டும்  நிறைய உள்ளன. 

முதுமலை போகும் வழியில் சாலையோரத்தில் பார்த்த யானை'கள்'.

யானை'கள்'!!- முன்னர் பார்த்த படத்தில் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் யானை இந்தப் படத்தில்.......!!.
முதுமலை விலங்குகள் சரணாலயம், டிக்கட் கொடுக்குமிடத்தில் அம்மா குழந்தையோட உட்கார்ந்திருக்காங்க......

முதுமலை விலங்குகள் சரணாலயம்- மான் கூட்டம்.

முதுமலை விலங்குகள் சரணாலயம்- தோகையுடன் மயில்.

முதுமலை விலங்குகள் சரணாலயம்- யானை.

இதில் காட்டுப் பன்றிகள் ஓடுவதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படும்!!
தங்கிய இடம்:
Heaven Holiday Resorts, Near Ooty Lake, Ooty, The Nilgiris-643001.
Ph: 0423-2447020, 2447030.
heavenresort.ooty@gmail.com
Website: www.heavenholidayresorts.com

இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, தனியான காட்டேஜ்கள், சிறிய but  சவுகரியமான அறைகள், அழகிய படுக்கைகள் வெந்நீர் வசதி, வேண்டுமானால் நாமே  சமைத்து உண்ணும் வசதி, அழகிய பர்னிச்சர்கள் என எல்லா சவுகரியமும் இருந்தது. சீசன் சமயத்தில் வாடகை நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வரை எகிருமாம், சீசன் அல்லாத சமயங்களில் ஆயிரத்துக்குள் அமுக்கலாம் என்கிறார்கள்.   டூர் முடிந்து அங்கிருந்து கிளம்ப மனசே இல்லாமல் புறப்பட்டோம்.  [ஊட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றி ஐநூறு ரூபாய்க்கே ரூம்கள் கிடைக்கும் என்கிறார்கள், வசதி அதற்குத் தகுந்தார்ப் போலத்தான் இருக்கும்!! தொடர்புக்கு மகாலட்சுமி டிராவல்ஸ்: 99525 21962, 98422 43650, 94898 60515].


ஊட்டியைச் சுற்றிப் பார்க்க தனியாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நிறைய பேகேஜ் வேன்கள் உள்ளன.  கட்டண விபரம்:  ஊட்டி உள்ளூர் பார்க்க, தொட்டபெட்டா, குன்னூர் சுற்றிப் பார்க்க ரூ.130/-,  இதற்கு ஒரு நாள் தேவை, அடுத்து முதுமலை சென்று வர ரூ. 180/-.  முதுமலை உள்ளே Zoo எதுவும் இல்லை, நீங்கள் ஒரு வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப் படுவீர்கள் மிருகங்கள் தற்செயலாகத்  தென்பட்டால் தான் உண்டு.  சிங்கம் புலி எனப் பார்க்கலாம் என நினைத்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்.  நாங்கள் போகும் போதே ஒரு பாட்டியம்மா , "வாங்குற காசுக்கு உள்ள என்னடா இருக்குது?  இப்படியெல்லாம் ஏமாத்தி காசு புடுங்கறீங்களேடா " -ன்னு கரித்துக் கொண்டே போவதைப் பார்த்தோம்.  உள்ளே போன பின்னர் தான் அது உண்மைதான் என்று தெரிய வந்தது.  அங்கு நிஜமாவே புலிகள் இருக்குமா என்று இன்னமும் சந்தேகமாகவே இறுகிறது!  தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப் படி அந்த அனுமதியும் நிறுத்தப் பட்டிருப்பதாகத் தகவல்.

ஊட்டியில் நிறைய சாக்கலேட் வகைகள் கிடைக்கின்றன, எல்லாம் வீட்டில் தயாரிக்கப் படுபவை என்று விளம்பரப் படுத்தி விற்கிறார்கள்.  ஊட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள  ஊட்டி மார்க்கெட் என்ற இடத்திற்க்குச் சென்றால்  ஊட்டியில் விளையும் விதம் விதமான பழங்கள் கிடைக்கின்றன முக்கியமாக பிளம்ஸ் இங்கு பிரசித்தம்.  பார்க்க கொள்ளையாய் இருக்கும் காய்கறிகள் கிடைக்கின்றன.  சென்னையில் அதிக விலைக்கு விற்கப் படும் பிராகோலி போன்ற காய்கறிகள் விலை இங்கு மிகக் குறைவு.  ஒரு மாதத்திற்க்குத் தேவையானதை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஊட்டி நினைவிலேயே உண்டு கழித்தோம்!!

பயணத்தின் போது:  பேருந்துகளில் ஊட்டிக்குச் செல்வதாக இருந்தால் மலைப் பாதையை நெருங்குவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக மிகக் குறைவான உணவை உண்டு முடித்திருப்பது நலம்.  அதே போல ஊட்டியில் இருந்து புறப்படும்போதும் உண்ணாமல், மலைப் பாதையைக் கடந்த பின்னர் வழியில் உணவு உண்ணுவது நலம்.  இல்லாவிட்டால் வாந்தி கியாரண்டி, எங்கள் பேருந்தில் ஓரிருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் வாந்தி எடுத்துவிட்டார்கள், ஏனெனில் அது வோல்வோ ஏ .சி. பஸ்.  ஓட்டுனர் அதற்காகவே சிறப்பு பிளாஸ்டிக் பைகளை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தந்து கொண்டிருக்கிறார்.  [ஆனால் அவர் மட்டும் அசாராம gun மாதிரி இருக்காரு, அதான் எப்படின்னே புரியலை.] ஜன்னல் திறந்திருக்கும் பேருந்துகளில் இந்தப் பிரச்சினை சற்று குறைவு.  நீங்கள் மலை ரயிலில் ஊட்டி வரை செல்வதானால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

பின் குறிப்பு:  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!  நான் என்னதான் செய்தாலும் அந்த அசூர வளர்ச்சிப் பதிவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் அது பாதிக்கப் போவதில்லை!!

இந்த பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்!!