Thursday, November 19, 2015

மகாபாரதத்தில் அபிமன்யு ஏன் போரில் கொல்லப் பட்டான்?

ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள் மிகவும் மோசமாக தோற்கடிக்கப் பட்டனர்.  மீண்டும் மீண்டும் போர் நடந்தது, ஆயினும் அனைத்துப் போர்களிலும் தேவர்கள் கையே ஓங்கியது, அசுரர்கள் அவர்களது லோகத்தில் இருந்தே விரட்டியடிக்கப் பட அவர்கள் பூமியில் தஞ்சம் புகுந்து அங்கே தோன்ற ஆரம்பித்தனர்.  அசுரர்களின் பாரத்தை [பாரம் அவர்கள் உடல் எடையால்  அல்ல, அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் !!] தாங்க முடியாத பூமிதேவி பிரம்ம தேவனிடம் முறையிட, அவர் சிவன் உட்பட தேவர்களை அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் அமர்ந்து அதில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமன் நாராயனனை எண்ணித் தவம் செய்கிறார். அதற்கு இசைந்த ஸ்ரீமன் நாராயணன் தான் பூமியில் அவதரித்து லீலைகள் புரிய இருப்பதாகவும், அப்போது அசுரர்கள் அழிக்கப் பட்டு பூமி பாரம் குறைக்கப் படும், அவதாரத்தின் போது தன்னுடன் தேவர்களும் உடன் வர வேண்டும், ஆகையால் அவர்கள் அனைவரும் பூமியில் சென்று பிறக்கவும் வேண்டும் என்ற செய்தியை பிரம்மனின் ஹிருதயத்திற்கு அனுப்புகிறார். [வாட்சப்பா, எஸ் எம் எஸ்ஸான்னு மட்டும் தெரியலை].





இதை மற்ற தேவர்களுக்கும், பூமாதேவிக்கும் பிரம்மா தெரிவிக்கிறார்.  மகிழ்ச்சியோடு பூமாதேவி  திரும்பிச் செல்ல, தேவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து யார் எங்கே பிறக்க வேண்டும் என்றுமுடிவெடுக்கின்றனர்.  அதன்படி சோமனின் [Moon god] மகன் வர்சாஸ் அர்ஜுனனின் மகன் அபிமன்யூவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது.  ஆனால் சோமனோ தன்னால் மகனைப் பிரிந்திருக்க இயலாது, ஆகையால் தனது மகனுக்கு பூமிக்குச் சென்று பிறப்பதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறான்.

இதை மறுத்த மற்ற தேவர்கள், இது பரம புருஷோத்தமனின் உத்தரவு என்பதால் அதை மீறுவது, மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.  மகனை அதிக காலம் பிரிந்திருக்க விரும்பாத சோமன் நிபந்தனையோடு தனது மகனை அர்ஜுனனின் மகனாகப் பிறக்க ஒப்புக் கொள்கிறான்.  அதன்படி அவன் இளம் வயதிலேயே தேர் படை செலுத்துவதில் வல்லவனாகத் தேர்வான். 16 வயது நிரம்பியதும் மகாபாரதப் போரில் வீரதீர பராக்கிரமத்தோடு போரிட்டு, வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் வண்ணம் பெயர் பெற்று  பின்னர் தன்னிடம் திரும்ப வேண்டும்.  அப்போரில் தனது உயிரை விடும் முன்னர் எதிரியின் படையில் கால் பங்கை அரை நாளிலேயே கொன்று குவிப்பான். அத்தோடு, பரத வம்சத்தின் அடுத்த வாரிசும் அபிமன்யூ மூலமாகவே உருவாக வேண்டும். அதன் படி பாரதப் போரின்போது கற்பமாக இருந்த அபிமன்யூவின் மனைவி உத்தராவின் வயிற்றில் பரிஷித்து மகாராஜா பிறக்கிறார். அப்போது போர் முடிந்த சமயம் அபிமன்யு உயிருடன் இல்லை.  பின்னர் பாண்டவர்கள்  ராஜ்ஜியத்தை மகாராஜா பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு மேலுலகம் சென்றனர். பாண்டவர்கள்  சென்ற பின்னர் நீதி நெறி தவறாது இப்புவியை பரிஷித்து மகாராஜா சீரும் சிறப்புமாக வெகு காலம் ஆட்சி புரிந்தார்.

4 comments:

  1. கொள்ளப் பட்டான்? = ???

    ReplyDelete
  2. அவன் விதி முடிந்து போய்விட்டது! போய் சேர்ந்துட்டான்!
    எப்படி விவாதம் செய்தாலும் கடைசியில் விதி மேலே தானே கதையை முடிப்பேள்...!

    ReplyDelete
  3. தெரியாத புராணம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. ஜெய தேவ்! நலமா? வவ்வாலை காணாத தைரியத்தில் மறுபடியும் களமிறங்கீட்டாக்களாக்கும்:)

    ReplyDelete