Friday, May 22, 2015

கழகங்களின் பரிணாமம்..............

பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் தனது  இயக்கத்தை உருவாக்கினார், அவருக்கு பதவி ஆசை இல்லை, ஆனாலும் மக்களிடத்தில் ஊடுருவி இருந்த மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும், குறிப்பிட்ட சாதியினரின் பித்தலாட்டத்தை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அவரின் கீழ் இருந்த அண்ணாதுரைக்கு கொஞ்ச நாள் சென்ற பின்னர் பதவி ஆசை வந்தது.  பெரியாரை  கொள்கை அளவில் எதிர்க்காமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை காரணம் காட்டி தி.மு.கவை ஆரம்பித்தார்.

அண்ணாதுரை காலத்தில் கட்சியில் உள்ள உப தலைவர்கள் ஊக்குவிக்கப் பட்டனர், பூரண சுதந்திரம் இருந்தது.  எனவேதான், கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் உருவாயினர்.
அதன் பின்னர் கருணாநிதி, தனக்கு நிகராக [ஏன் மேலாக என்று கூடச் சொல்லலாம்] இருந்த தலைவர்களை , குழியில் தள்ளிவிட்டு திமுக வை தனதாக்கிக் கொண்டார்.  பின்னர் அதை தன்னுடைய குடும்பச் சொத்தாக்கியும் விட்டார்.

இருந்த போதிலும் அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் திறமைசாலிகளாகவே இருந்தனர்.  துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் கட்சித் தலைமையை எதிர்த்து கேள்வியெழுப்பும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது.

பல முறை ஆட்சியை இழந்த போதிலும் பழையவர்களே அமைச்சர்கள் ஆனார்கள்.  குண்டக்க மண்டக்க என்று தூக்கியடிப்பது குறைவாகவே இருந்தது.

அதே போலவே, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெற்றோரும் பண்ரூட்டி, நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன் என ஜாம்பவான்களாகவே இருந்தனர். 
கருணாநிதி, எம்ஜிஆர் இருவருக்கும் இருந்த ஒற்றுமை இவர்கள் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள் அத்தனையும் இவர்கள் இருவருக்காக மட்டுமே விழுந்தவை.

இவர்களிடத்தில் இருந்த இன்னொரு ஒற்றுமை, இவர்களுக்குப் பின்னர் யார் கட்சியை நடத்துவதற்காக ஒரு வழுவான தலைமையை உருவாக்காமல் போனதுதான்.


உதாரணத்துக்கு அண்ணாதுரை காலத்தில் இருந்து கருணாநிதி, எம்ஜிஆர் என அனைவரது மந்திரி சபைகளிலும் நம்பர் இரண்டு இடத்தில் இருந்த நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் வேளச்சேரியில் தனித்து நின்று அவருடன் போட்டியிட்ட எஸ்.வி. சேகரை விட குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட்டையும் இழந்திருந்தார். 


என்னதான் இருந்தாலும், கருணாநிதி, எம்ஜிஆர் இருவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் சாமர்த்தியசாலிகள், திறம்பட செயல்படுபவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இருவருமே தங்களது அமைச்சர்களை யாரையும் நாயைப் போலவோ, தலையில் உள்ள கேசத்திற்கு இணையாகவோ நினைக்காமல் மனிதர்களாகவே மதித்தார்கள்,அமைச்சர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகளாக இருக்கவில்லை, கருத்து சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தார்கள், காலில் விழுந்தால் தான் வாழமுடியும் என்ற நிலை அப்போது இல்லை, இப்போதும் திமுகாவில் இல்லை.

மொத்தத்தில் தாங்கள் தனித்து பெரிய தலைவர்கள் ஆக முடியாவிட்டாலும் தன்மானத்துடன் அவர்களால் அமைச்சர்களாக இருக்க முடிந்தது.  ம்ம்............  அது ஒரு கனாக்காலம்.

4 comments:

  1. உண்மைதான் நண்பரே அருமையாக விவரித்தீர்கள் தன்மானம் என்பது இப்பொழுது அங்கு கிடையாது.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. என்னமோ சொல்லவந்து சொல்லாமல் அப்படியே விட்டு நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிச்சென்றிருப்பதுபோல் இருக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. தலைவர் முகநூலில் தொடர்ந்து கம்பு சுற்றி கம்பு சுற்றி களைத்துப் போய் இருப்பதால் இது போன்ற பாதி வழியில் நிற்கும் பயணத்தை நம்மைப் போன்ற பயணிகள் கண்டு கொள்ளக்கூடாது. இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாமே?

      Delete
  3. பெரியார் பெயரைச் சொல்லக்கூட இவர்களுக்கு அருகதை இல்லை :)

    ReplyDelete