Saturday, February 14, 2015

1992 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து செய்த மொள்ளமாறித் தனம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 தற்போது நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்னர் பல உலகக் கோப்பை போட்டிகள் நடந்திருந்தாலும், இன்று நாம் பார்க்கப் போவது 1992 போட்டிகளைப் பற்றித்தான்.  ஏன்?  காரணம் அந்த போட்டிகளை தற்போது போலவே நியூசிலாந்தும்-ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தின என்பதேயாகும்.

போட்டி துவங்கும் முன்னர் கோப்பையை யார் வெல்லுவார்கள் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள்.  நம் கவாஸ்கர், "பாகிஸ்தான் கோப்பையை வெல்லும்" என்று எதையோ வைத்து சொல்லிவிட்டார்.  ஆனால் ஆரம்ப ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி ஆடிய விதம் நம்பிக்கையூட்டும் விதமாக இல்லை.

முதல் ஐந்து மேட்சுகள் நடந்த பின்னரும் ஒரே ஒரு மேட்சில் மட்டுமே பாகிஸ்தான் வென்றிருந்தது, அதன் மூலம்  கிடைத்த 2 பாயிண்டுகள் மற்றும் மழை வந்ததால் இங்கிலாந்துடன் தோற்கவிருந்த ஒரு மேட்சில், பாடாவதி கிரிக்கெட் விதிகள் மூலம் கிடைத்த ஒரு பாயிண்டுடனும் சேர்த்து வெறும் மூன்று பாயிண்டுகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.  "தப்பா ஆருடம் சொல்லிட்டோமோ?" என்ற உறுத்தல் கவாஸ்கருக்கே உள்ளுக்குள் அவ்வப் போது எட்டிப் பார்த்திருக்கலாம்!!  ஆனாலும் தன்னுடைய ஆருடம் குறித்து அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.



லீக்கில் கடைசி ஆட்டம் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் மோத வேண்டும்.  அதுவரை நியூசிலாந்து ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தது.  நியூசிலாந்து சொந்த மண்ணில் விளையாடியதே இதற்குக் கரணம்.  முதலைக்கு நீரிலும், யானைக்கு நிலத்திலும் பலம் அல்லவா!!  பாகிஸ்தானுடனான எட்டாவது ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அடுத்து நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து விளையாட வேண்டும்.   அதைத் தவிர்க்க ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது.  அது, பாகிஸ்தானுடன் எட்டாவது லீக் ஆட்டத்தில் தோற்பது!!  இதை நியூசிலாந்து செய்யும் என்பதை கிரிக்கெட் நோக்கர்கள் யூகித்தே இருந்தனர்.  அந்த ஆட்டத்தில் தோற்கும்படி ஆடி மேட்சை கோட்டை விடுவீர்களா என்று நியூசிலாந்து கேப்டனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவ்வாறு செய்ய மாட்டோம் என்றே அவர் சொல்லி வைத்தார்.  ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.  மகா மட்டமான ஸ்கோருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.


பாகிஸ்தான் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.  இந்த மேட்சை வென்றதன் மூலம் அதன் பாயிண்டுகள் 7-லில் இருந்து 9 ஆக உயர்ந்ததால், நான்காம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் அது தகுதி பெற்றது.  ஒரு வேளை நியூசிலாந்து இந்த மேட்சில் வெற்றி பெற்றிருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ, இங்கிலாந்து அணியோ அரையிறுதிக்கு வந்திருக்கக் கூடும்!!  பாகிஸ்தான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நாடு திரும்பியிருக்கும்!!


நியூசிலாந்து நினைத்த படியே அரையிறுதி ஆட்டத்தை  சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுடன் ஆட வாய்ப்பு கிட்டியது.  மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் 166 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆயிருந்த போதும், இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற 263 ரன்கள் இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.  இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் மிக நன்றாக ஆடி சவாலில் ஜெயித்து இறுதியாட்டத்துக்குச் சென்றனர், கேப்டன் உட்பட நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.  அவர்களது கோணல் புத்தி அங்கே தோற்றது!!



இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது.  இனவெறிக் கொள்கையால், உலகக் கோப்பையில் இருந்து விலக்கப் பட்டிருந்த அந்த அணிக்கு இது முதல் பெரிய போட்டியாக இருந்தது.  ஆனாலும், அவர்கள் ஆட்டம் மற்ற அணிகளுக்குச் சவாலாகவே இருந்தது, நன்றாக ஆடி அரையிறுதி வரை வந்திருந்தனர்.  மழையின் காரணமாக அரையிறுதி ஆட்டம் 50 லிருந்து 45 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது.  இந்த உலகக் கோப்பையின் போது   முன்னரே நாம் சொன்ன சில பாடாவதி விதிகளை கண்டுபிடித்து அமல் படுத்தியிருந்தனர்.  ஏன் இவை பாடாவதி என்றால், இவ்விதிகளை மடையன் கூட இவற்றுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதற்கு இந்த போட்டியே சாட்சி.  ஆட்டம் நடக்கும் போதே எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்பதை கழுதை கூட ஒப்புக் கொள்ளாது.  முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 252 ரன்களைக் குவித்திருந்தது.  தென்னாப்பிரிக்கா 253 ரன்கள் பெற்றால் வெற்றி!!  ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது மழை காரணமாக 45 ஓவர்கள் 43 ஆகக் குறைக்கப் பட்டது, ஆனாலும் இலக்கு அதே 253 ரன்கள் தான் என்ற அறிவிப்பு கடைசி ஒரு பந்து இருக்கும் போது ஸ்கோர் போர்டில் வெளியானது.  எனவே வெற்றி பெற தென்னாப்பிரிக்கா ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது.  பைத்தியக் காரன் கூட இதை சரி என்று சொல்ல மாட்டான்.  ஆனாலும் அறிவாளிகள் அதேசரி என்று சாதித்தனர்.  தென்னாப்பிரிக்க அணியின் மட்டையாளரால் கடைசிப் பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயினர். இந்த அயோக்யத் தனம் மூலம் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றாலும் இறுதி ஆட்டத்தில் அதற்கான தண்டத்தை கட்ட வேண்டியிருந்தது.



இறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதினர்.   பாகிஸ்தான் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றனர்.  பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு இங்கிலாந்துடன் ஆடிய லீக் ஆட்டத்தில் மழையால் கிடைத்த ஒரு பாயிண்டும், நியூசிலாந்து விட்டு கொடுத்த மேட்சும் தவிர்க்க முடியாத இரண்டு அடிப்படைக் காரணங்களாகும்.   மொத்தத்தில், கவாஸ்கர் சொன்ன ஆருடம் எப்படியோ மெய்யானது!!  பின்னர் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து சிறப்பு விருந்து கொடுத்து கவுரவித்தனர் பாகிஸ்தானியர்!! 

கடைசியாக: இந்த ஆட்டத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் அணிகளின் மோதலில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, விக்கட் கீப்பர் கிரண் மோரேவுக்கும்- பாகிஸ்தானின் மியாண்டாடுக்கும் வாய்த் தகராறும் இந்த மேட்சில் நடந்தேறியது.  மியாண்டாட் இவர்களை நக்கல் செய்யும் வண்ணம் குதிக்க, அம்பயர்கள் வந்து நடத்தை மீற வேண்டாமென்று அறிவுருத்திச் சென்றனர்!!


4 comments:

  1. கிரிக்கெட் வாரியம் போல அனைத்து விபரங்களும் கொடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. 1992 உலகக் கோப்பையை அருமையாக அலசி இருகிறீர்கள்.பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் இருந்தது பாகிஸ்தான் இந்தியாவிடம் 120 ரன்கள் கூட எடுக்க வில்லை என்று நினைவு. டக் வொர்த் லூயிஸ் முறை யாருக்கும் புரியாத ஒரு முறை.

    இந்த உலகக் கோப்பை முதல் ஆட்டம் முடிந்துவிட்டது வழக்கம்போல் கோட்டை விட்டது இங்கிலாந்து.

    ReplyDelete
  3. ஒவ்வொரு முறையும் நியூசிலாந்து அணியை நினைத்தால் பாவமாக இருக்கும்...

    ReplyDelete
  4. 1.Please correct your blogger template as the formatting has gone for a toss. Padiththathil manathi
    thotathu and Photoon are not at all formatted apprproiately.

    2. Never heard that New zeland lost it for avoding semi final chance in Australia. In fact, even if they won , they would have played in New Zealand only. Only for Final they need to come to Australia.

    ReplyDelete