Wednesday, October 3, 2012

ZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?

சர்வதேச விண்வெளி நிலையம் [International Space Station- ISS] 

 சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை  மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு  பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும். இதன் எடை 450 டன், பரிமாணம் [Size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து மைதானம் அளவிற்குப் பெரியது], 10 மீட்டர் உயரமுள்ளது.  மணிக்கு 27,700 கி.மீ. வேகத்தில் ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.  இதில் 6 பேர் வரை சுழற்ச்சி முறையில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.  இதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், மாற்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, நீர் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் கருவிகள் முதலானவற்றை அமெரிக்காவின் ஷட்டில், ரஷ்யாவின் சோயூஸ் உள்ளிட்ட பல விண்கலங்கள் சுமந்து செல்கின்றன.  இதை இரவில் வெறும் கண்ணாலேயே வானில் ஊர்ந்துசெல்லும் பிரகாசமான வெண்புள்ளியாகப்  பார்க்கமுடியும். ISS 2028 வரை செயல்படக்கூடும்.

ISS உள்ளே விண்வெளி வீரர்கள்:எங்களுக்கு தரை, கூரை சுற்றுச் சுவர் என்று எந்த பேதமும் கிடையாதுங்கோவ்..........!!


தொலைக்காட்சிகளில்  சர்வதேச விண்வெளி நிலையத்தைக் காட்டும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்திருப்போம்.  அங்குள்ள விண்வெளிவீரர்கள் எடையற்ற நிலையில் மிதந்து கொண்டு தங்கள் பணிகளை மேற்கொள்வது, காற்றில் நீச்சலடித்து இடம் பெயர்வது, அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், உணவுகள் அத்தனையும் காற்றில் மிதப்பது, காற்றில் ஊற்றப் பட்ட நீர் அவர்கள் அதைக் கவ்வி விழுங்கும் வரை முழு கோள வடிவில்  [Spherical shape] மிதந்து கொண்டே இருப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  இதெல்லாம் பார்த்து நம்மில் பலர் ஒரு முடிவுக்கு வந்திருப்போம் அது வானவெளியில் ISS இருக்கும் உயரத்தில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாது!!  அது உண்மையா?

ISS பூமியில் இருந்து, 400 கிமீ உயரத்தில் இயங்குகிறது, ஆனால் பூமியில் இருந்து நிலவு உள்ளதோ 384,400 கிமீ தூரத்தில்.  நிலவு பூமியின் ஈர்ப்பு விசையால்தான் அதைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.  அப்படியானால், நான்கு லட்சம் கிமீ தூரத்தில் உள்ள சந்திரன் மீது பூவி ஈர்ப்பு விசை செயல்படுகிறதென்றால், வெறும் 400 கிமீ தொலைவில் உள்ள ISS மற்றும் அதில் உள்ள விண்வெளி வீரர்கள் மீது புவிஈர்ப்பு விசை இல்லாமல் போகுமா? நிச்சயம் இருக்கவே செய்யும்!!  இத்தோடு விஷயம் முடியவில்லை.  15 கோடி கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று நாம் ஆரம்பப் பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம்.  நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எந்த ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு.  அதாவது, ஆப்பிளை பூமி ஈர்க்கிறதென்றாலே, அதே விசையோடு ஆப்பிளும் பூமியை ஈர்க்கிறதென்று அர்த்தம்.  பூமி சைஸ் ரொம்ப பெரிதாக இருப்பதால் ஆப்பிள் நகர்வது மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது.  அதைப் போலவே, சூரியன் பூமியை ஈர்க்கிறதென்றால் பூமியும் சூரியனை அதே விசையோடு ஈர்க்கிறதென்று அர்த்தம்.  அப்படின்னா 15 கோடி கிமீ தொலைவிலும் புவிஈர்ப்பு விசை இருக்கவே செய்கிறது!!  ஆனால் வெறும் 400 கிமீ தொலைவிலுள்ள ISS  -ல் அது இருப்பது போலத் தெரியவில்லையே!! என்ன ஆச்சு??!!


பூமியின் ஆரம்  [Radius ]  6371 கி.மீ ஆகும், ISS புவியின் மையத்தில் இருந்து 6371+400 கி.மீ தொலைவில் உள்ளது. நியூட்டனின் பொருளீர்ப்பு விசை சமன்பாட்டின் படி [Universal Law of Gravitation]  புவி ஈர்ப்பு முடுக்கம் g- யின் மதிப்பை தொலைவைப் பொறுத்து கணக்கிடலாம்.

இரு நிறைகளுக்கிடையே உள்ள பொருளீர்ப்பு விசையை [Gravitational Force] காட்டும் நியூட்டன் விதி.  M பூமியின் நிறை, m பொருளின் நிறை, r புவியின் மையத்தில் இருந்து பொருளின் தூரம், G மாறிலி.  இவ்விதி எந்த இரண்டு பொருளுக்கும் பொருந்தும், நிறைகள், தொலைவு ஆகியவற்றை உள்ளீடு செய்து அவற்றுக்கிடையே உள்ள பொருளீர்ப்பு விசையைக் கணக்கிடலாம்.
அவ்வாறு கணக்கிட்டுப் பார்க்கும்போது, g யின் மதிப்பில் புவியின் மேற்பரப்பிற்கும்  ISS -க்கும் இடையே வேறுபாடு அதிகம் இல்லை, வெறும் 10% மட்டுமே குறைவாக உள்ளது.  அதாவது பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் ISS -ல் 63 கிலோ எடையுடன் இருப்பார். மேலும் இந்தச் சமன்பாட்டின் படி தூரத்தைப் பொறுத்து [r] புவி ஈர்ப்பு விசை குறைந்துகொண்டே போகிறதே தவிர ஒரு போதும் பூஜ்ஜியம் ஆவது இல்லை. அப்படின்னா, டிவியில் அவங்க எடையே இல்லாமல் காற்றில் மிதப்பது மாதிரி காண்பிக்கிறாங்களே அது நிஜம் தானா?  சந்தேகமே வேண்டாம் நிஜம் தான்!!   எப்படி?!!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் [ஏதோ ரிப்பேர் செய்யுறாங்க போலிருக்கு!!]

தடையற்ற வீழ்ச்சி [Free fall]


எடையற்ற தன்மையை உணர்வதற்கு நீங்கள் எங்கும் போகத் தேவையில்லை, ஒரு உயரமான அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேலே லிப்டில் சென்று லிப்டின் கையிற்றை அறுத்துவிட்டால் போதும், கீழே பூமியைத் தொடும் வரை நீங்கள் எடையற்றத் தன்மையில் இருப்பீர்கள். [தயவு பண்ணி யாரும் இதை முயற்சி பண்ணிடாதீங்க!!].  இதை கலிலியோ முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்.  அதாவது, எந்த எடையுள்ள பொருளானாலும் சரி, உயரத்தில் இருந்து விடும்போது காற்றின் தடை இல்லாவிட்டால், ஒரே சமயத்தில் பூமியை வந்தடையும்.  [வேக அதிகரிப்பு இருக்கும், அந்த மற்றம் எல்லாப் பொருளுக்கும் சமமாக இருப்பதால் ஒரே நேரத்தில் தரையைத் தொடும்].  அதனால லிப்டின் கயிறை அறுத்து விட்டால்,  கையில் உள்ள பொருளை விட்டு விட்டாலும், லிப்ட் தரையில் மோதும் வரை அப்படியே மிதக்கும்.  நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எடையற்ற தன்மையை இவ்விதம் உணரும்.  இந்த நிலை தடையற்ற வீழ்ச்சி [Free fall] எனப்படும்.ஒரு எடைபார்க்கும் மெஷீன் மேல் ஏறி நின்றுகொண்டு லிப்டில் நீங்கள் சென்றால், லிப்ட் நின்று கொண்டிருந்தாலோ, லிப்டின் வேகம் சீராக இருந்தாலோ உங்கள் சரியான எடையை அது காண்பிக்கும். லிப்ட் மேலே புறப்படும்போது தங்கள் எடை கூடுதலாகவும், மேலிருந்து கீழே இறங்கும் போது சற்று குறைவாகவும் காண்பிக்கும். [லிப்டின் வேகம் சீரான பின்னர் மீண்டும் சரியான எடையைக் காண்பிக்கும்].  லிப்டின் வடத்தை அறுத்துவிட்டால், அது கீழே விழுந்து நொறுங்கும் வரை உங்கள் எடை மெஷீன் உங்கள் எடையை பூஜ்ஜியம் என்று காண்பிக்கும்!! இதுதான் எடையற்ற நிலை!!  ISS -ல் இதுதான் நடக்கிறது!!

நீச்சல்  குளத்தில் உள்ள டைவிங் போர்டில் இருந்து குதித்தால் தண்ணீரைத் தொடும் வரை நீங்கள் எடையற்ற நிலையில் தான் உள்ளீர்கள்.  [வேணுமின்னா அடுத்த முறை எடை பார்க்கும் மெஷீனை காலில் கட்டிக்கிட்டு குதிச்சுப் பாருங்க, தண்ணீரைத் தொடும்வரை அது பூஜ்ஜியத்தையே காண்பிக்கும்!!]  எந்த ஒரு பொருளையும் வீசியெறியும்போது, எந்த திசையில் என்ன வேகத்தில் எரிந்தாலும், கையில் இருந்து விலகிய பின்னர் தரையைத் தொடும் வரை எடையற்ற நிலையில் தான் உள்ளது. மேற்கண்ட அத்தனையும் தடையற்ற வீழ்ச்சி [Free fall] என்று சொல்கிறோம். 

நம் மீது எப்போதும் புவிஈர்ப்பு விசை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது, விசை செயல்பட்டாலும் நாம் எங்கும் நகர்வதில்லை, என்ன காரணம்?  நாம் எதன் மீது நிற்கிறோமோ அல்லது அமர்ந்திருக்கிறோமோ அது நம் உடலின் மீது சப்போர்ட் செய்து நம்மை தடுக்கிறது.  உதாரணத்திற்கு, எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நிற்கும் போது, புவிஈர்ப்பு விசை நம்மை கீழ் நோக்கி இழுக்கிறது அதை எந்திரத்தின் பலகை தடுக்கிறது, ஆகையால் அதன் ஸ்ப்ரிங் அழுத்தப் பட்டு எடையாகத் தெரிகிறது.  நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்போது நமது ஆசனப் பகுதியில் பலகையின் அழுத்தத்தை நாம் உணர்கிறோம்.  இவ்வாறு புவிஈர்ப்பு விசைக்கு எதிர்விசை நம் மீது எப்போதும் செயல்படுவதால் நம் மீது செயல்படும் நிகர விசை பூஜ்ஜியமாகி நாம் ஒரு இடத்தில் நிலையாக இருக்கிறோம்.  எதிர் விசையை இல்லாமல் வெறும் புவி ஈர்ப்பு விசை மட்டும் செயல்படும் நிலை ஏற்பட்டால் அதற்குப் பெயர் Free fall, அந்த நிலையில் நாம் எடையற்ற தன்மையை உணர்வோம். 


இந்த முறையில் ஏற்ப்படும் எடையற்ற தன்மையும் உண்மையிலேயே எந்த ஈர்ப்பு விசையும் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்று அங்கே ஒரு விண்வெளி மையத்தை அமைத்தால் அங்கு உணரப்படும் எடையற்ற தன்மையும் ஒரே மாதிரிதான் இருக்கும், அதனுள் இருப்பவர்களால் இந்த இரண்டு சூழ் நிலைகளில் எதில் இருக்கிறார்கள் என்று வித்தியாசம் காணவே முடியாது, இரண்டும் ஒரே மாதிரியே தான் இருக்கும்!!   [சிறு வேறுபாடு உண்டு, இப்போது நாம் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!!]


ISS -ல் எடையற்ற நிலை எப்படி ஏற்படுகிறது?


உயரமான இடத்தில இருந்து விட்டுட்டாலே போதும் நாம் எடையற்ற தன்மையை உணர ஆரம்பித்து விடுவோம் என்று மேலே பார்த்தோம்.  கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும் என்றும் பார்த்தோம்.  ISS  நானூறு கிமீ. உயரத்திற்கு கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி எரியப் படுகிறது.  அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களுக்கும் எடையற்றே இருப்பார்கள்.  விண்வெளி மையத்தை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும், அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தால் உயிர் தப்புமா? எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  விழனும் ஆனா விழக்கூடாது!! இதென்னடா கொடுமையா இருக்கு!! அது  எப்படி சாத்தியம்?  

பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்ப்பரப்பு சமதளமாக இருக்காது, ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும்போதும் நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.   உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.  இவை இரண்டையும் சேர்த்துப்  பார்த்தால்  ஒரு விஷயம் புலனாகிறது!!  அது, ஒரு பொருளை பக்க வட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒருபோதும் தரையைத் தொடாது!!    


ஒரு உயரமான மலை உச்சியின் மேல் சென்று ஒரு பொருளை எறிந்தால் அது குறிப்பிட்ட தூரம் போய் விழும்.  வேகமாக எறிந்தால் முன்பை விட இன்னமும் கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் விழும்.  அப்படியே எறியும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அது பூமியையே சுற்றிக் கொண்டு நீங்கள் எறிந்த இடத்துக்கே வரும்.  இந்த நிலை ஏற்ப்பட்ட பின்னர் அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டே இருக்கும், ஒருபோதும் தரையைத் தொடாது.   இது நியூட்டனின் சிந்தனயில் உருவான ஒரு யோசனை!!  ஆனால் இது எப்படி சாத்தியப் படும் என்பதை அப்போது ஒருவரும் அறிந்திருக்க வில்லை. ஏனெனில், அவ்வளவு விசைக்கு எங்கே போவது என்பது ஒருபுறமிருந்தாலும், பூமியின் மேற்ப்பரப்பில் இவ்வளவு வேகத்தில் எறிந்தால் அது காற்றின் உராய்வால் ஏற்ப்படும் வெப்பத்தாலேயே எரிந்து சாம்பலாகிவிடும். தற்போது செயற்கைக் கோள்கள் ISS ஆகியவற்றை பூமியில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்கள் மேல் காற்று மிகக் குறைவாக உள்ள உயரத்திற்கு கொண்டு சென்று வினாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கிடை மட்டத்தில் எறியப் படுகிறது, அவை நியூட்டன் சொன்னபடியே பூமியைச் சுற்றி வருகின்றன!! நியூட்டன் மறைந்து முன்னூறு வருடங்கள் ஆன பின்னர்  அவருடைய இந்த விளக்கத்தை வைத்தே இன்றளவும் ஒவ்வொரு விண்கலமும் விண்ணில் செலுத்தப் படுகிறது!!  எப்பேர்பட்ட சிந்தனையாளர் அவர்!!புவியின் மேற்பரப்பில் நாம் [g=9.8 மீ/வி^2] எந்த ஒரு பொருளையும் கையில் இருந்து விட்டுவிட்டால் முதல் வினாடியில் 5 மீ தொலைவு கீழே விழுந்திருக்கும்.  பூமி கோள வடிவில் இருப்பதால், தூரம் செல்லச் செல்ல படத்தில் உள்ளவாறு நேர்கோட்டில் இருந்து விலகும்.  நேர்கோட்டில் இருந்து இதே 5 மீ விலக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கணக்கிட்டு விண்வெளி மையத்தை பூமியின் மேற்ப்பரப்புக்கு இணையாக [Horizontal direction]  ஒரு வினாடியில் அதே தூரம் செல்லுமாறு செய்து விட்டால்,  ஒரு வினாடியில் ISS கீழே விழுந்த தூரத்துக்கும், பூமி நேர்கோட்டில் இருந்து விலகிய தூரத்துக்கும் சரியாய்ப் போய்விடும். தற்போது ISS -க்கும் பூமிக்கும் உள்ள தொலைவு மாறாது!!  பூமியின் மேற்ப்பரப்பு 5 மீட்டர்  விலகுவதற்கு எட்டு கி.மீ தூரம் ஆகிறது.  எனவே Horizontal direction -ல் வினாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில்  ISS நகர்ந்தால் போதும், ஒரு வினாடியில் அது பூமியை நோக்கி விழும் 5 மீட்டர் தூரத்துக்கும், பூமி நேர்கோட்டில் இருந்து விலகிய 5 மீட்டர் தூரத்துக்கும் சரியாகப் போய்விடும், ISS க்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி குறையவே குறையாது!!எனவே, ISS மணிக்கு 27,700 கி.மீ வேகம் செல்லுமாறு ஏவப் பட்டுள்ளது.  இந்த வேகம் குறையுமா?  குறையாது, ஏனெனில் நியூட்டனின் முதல் விதிப்படி  புறவிசை [External Force ] எதுவும் செயல்படாத வரையில் நிலையாக உள்ள பொருளோ, சீரான வேகத்தில் இயங்கும் பொருளோ தத்தமது நிலைகளைமாற்றிக் கொள்ளாது.  எந்த ஒரு கட்டத்திலும் புவிஈர்ப்புவிசை இந்த வேகத்திற்கு செங்குத்தான திசையிலேயே செயல்படுவதால் அது ISS  வேகத்தின் திசையை மாற்றுமே தவிர அதை கூட்டவோ குறைக்கவோ செய்யாது. வேறெந்த புரவிசையும் ISS மீது செயல்படாததால் அதன் வேகம் ஒருபோதும் மாறாது. [ஆனாலும் விண்வெளியில் சிறிது காற்று உள்ளதால் வேக இழப்பு இருக்கவே செய்கிறது, அந்த இழைப்பை அவ்வப்போது சிறிய ராக்கெட் பூஸ்டர்கள் மூலம் ISS-ஐ உந்தித் தள்ளி  சரி கட்டுகிறார்கள்.]  இன்னொரு கேள்வி, மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் ISS செல்கிறதே, அதை உள்ளே இருப்பவர்களால் உணர முடியாதா?  முடியவே முடியாது.  நீங்கள் விமானத்தில் செல்லும்போது அது மணிக்கு 400 கிமீ வேகத்தில் சென்றாலும், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களுக்கு சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திருப்பது போலவேதான் இருக்கும், அதன் வேகம் அதிகரிக்கும் போதும், குறையும் போதும் மட்டுமே வித்தியாசத்தை உணர முடியும்.  [விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் மட்டுமே  சீட் பெல்ட்டை கட்ட வேண்டியிருக்கும்!!] அதே மாதிரி சீரன வேகம் மணிக்கு அது எத்தனை ஆயிரம் கிமீ ஆக இருந்தாலும்  உள்ளே இருப்பவர்களால் அதை உணரவே முடியாது. வீட்டில் உட்கார்ந்திருப்பது போலவேதான் இருக்கும்.மனிதன் செலுத்தும் செயற்கை கோள்கள் மட்டுமல்ல, சந்திரன் பூமியைச் சுற்றுவது, மற்ற கோள்களின் சந்திரன்கள் அவற்றைச் சுற்றுவது, கோள்கள் சூரியனைச் சுற்றுவது எல்லாம் இதே அடிப்படையில் தான் நடக்கின்றன.   ஒரு வித்தியாசம் அந்தந்த கோள்களின் நிறை/சூரியனின் நிறை மாறுபடுவதாலும், கோள்கள்/சூரியனில் இருந்து சுற்றுவட்டப் பாதையின் தூரத்தைப் பொருத்தும்  இந்த வேகமும், ஒரு முழுச் சுற்றை சுற்றி  முடிக்க ஆகும் காலமும் அதற்கேற்றவாறு மாறும்.  [நன்கு கவனிக்க, கோள்களின் நிறை, சுற்று வட்டப் பாதையின் அளவைப் பொறுத்து மட்டும் தான் வேகமும் காலமும் மாறும், ஏவப் பட்ட பொருளைப் பொறுத்து அல்ல!!  உதாரணத்திற்கு சந்திரனின் பாதையில் ஒரு கிலோ கல் மட்டும் பூமியைச் சுற்றுவதனாலும் சந்திரன் சுற்றும் அதே [மணிக்கு 3700 கி.மீ.] வேகத்திலும், ஒரு முறை சுற்றி வர அதே 27 நாட்களும்தான் பிடிக்கும்!!]

எடையற்ற நிலையை உணர லிப்ட் கயிறை அறுத்தல் [உசிரு போய் விடும்] அல்லது ஷட்டிலில் ஏறி விண்வெளிக்குச் செல்லுதல் [நடக்கிற காரியமா இது!!] அல்லாது வேறு நடைமுறைக்கு ஏற்ற வழி ஏதேனும் இருக்கிறதா?

 

 இருக்கிறது.  இரண்டு லட்சம் செலவாகும், பரவாயில்லையா?


Zero G விமானம்.
மேலெழும்பும் நிலை.....


Zero G விமானத்தில் ஸ்டீபன் ஹாகிங்!! சும்மா ஒரு தடவை பார்க்கலாம்னு போனவர் நிறுத்தாம எட்டு தடவை ZeroG க்கு ஓட்டச் சொல்லி பார்த்திருக்காருன்னா  பாருய்யா!! [வலப்பக்கம் இருப்பவர்தான் இந்த விமான நிறுவன ஓனர் !! ]

யோவ்.....அதென்னா ஆப்பிளு..!!  ஏன்னா, ஆப்பிளுக்கு பேர்போன நியூட்டனின் சேர்ல இவர் இப்ப உட்கார்ந்திருக்காரு இல்லியா அதான்...............!!

விமானம் பரவளையப் பாதையில் மேலே உள்ளவாறு செல்லும்.  இதுபோல 15 முதல் நாற்ப்பது முறை மேலும் கீழுமாக விமானம் பறந்து செல்லும். முகட்டை அடையும்போது ஒவ்வொரு முறையும் ஒரு விதமான எடையை உணரும் வண்ணம் விமானத்தை செலுத்துவார்கள்.  எடையற்ற தன்மை மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், நிலவு ஆகியவற்றில் நிலவும் ஈர்ப்பு விசையையும் உணரும் வண்ணம் விமானம் செலுத்தப் படும்.

ஜீரோ G விமானம் எப்படி செயல்படுகிறது?


கையில் இருந்து எதை தூக்கிப் போட்டாலும் தரையைத் தொடும் வரை எடையற்ற நிலையில் இருக்குன்னு பார்த்தோம்.  குழந்தையை தூக்கி கொஞ்சாதவங்க யாரும் இருக்கவே மாட்டங்க.   சில சமயம் குழந்தையை அப்படியே மேலே தூக்கிப் போடுவோம், அது அப்படியே அரை வினாடி குதூகலத்தோடு நம் தலைக்கு மேலே கையையும் காலையும் வீசியவாறு கொள்...என சிரித்து கீழே இறங்கும், அப்படியே பத்திரமாக கைகளில் தாங்கிக் கொள்வோம்.  குழந்தையை தூக்கி மேலே போடும்போது நார்மலாக இருப்பதை விட கொஞ்சம் கூடுதலான பலம் கொடுப்போம், அது அப்படியே கையை விட்டு விலகி மிதக்கும், அப்புறம் திரும்பவும் நம் கையில் வந்தடையும்போது கொஞ்சம்  பலத்தைக் கொடுத்துதான் அதை நிறுத்துவோம்.  இதேதாங்க Zero G விமானங்களில் நடக்குது.  நீங்க மேலே பார்க்கும் படத்தில் மஞ்சள் நிறமுள்ள நிலைகளில் உங்கள் எடையை விட இருமடங்கு அதிகமாகும்படி விமானம் வேகமாக மேலெழும்பும், நீல நிறப் பட்டையில் உச்சியை அடையும் போது முப்பது வினாடிகளுக்கு எடையற்ற தன்மையை உணர்வீர்கள், மீண்டும் கீழே இறக்கும்போது உங்கள் எடை மீண்டும் இரட்டிப்பாக உணர்வீர்கள்.  இது போல நாற்ப்பது முறை வரை செய்வார்கள்.  ஒவ்வொரு முறையும் ZeroG, சந்திரன், செவ்வாய் என வெவ்வேறு ஈர்ப்பு விசைகளை உணரும்படி விமானம் செலுத்தப் படும்.

54 comments :

 1. Replies
  1. உடனடியா படிச்சிட்டு கமன்டு போட்டதுக்கு நன்றி, சுவனப் பிரியன்.......!!

   Delete
 2. யாரோ ரொம்ப நேரம் செலவழிச்சு கட்டுரை எழுதுறாங்கனு நெனைக்கிறேன். நீங்கள் தானா? இல்லை உங்க துணைவியரானு எனக்குத் தெரியலை. நெறையாபேர் விக்கில வெட்டி ஒட்டியே பிழைப்பை ஓட்டும் இந்தக் காலத்தில், உங்க உழைப்பை உண்மையிலேயே பாராட்டனும், ஜெயவேல்.

  உங்கள மாரி ஆண்மீகவாதியெல்லாம் இப்படி அறிவியலில் இறங்கினால் நான் எல்லாம் அதை சரிக்கட்ட ஆண்மீகத்தில் இறங்க வேண்டியதுதான் போல! ;-))))

  நான் த ம மதிப்பெண் எல்லாம் எப்போவாவதுதான் கொடுப்பேன். உங்க உழைப்பைப் பார்க்கும்போது கட்டாயம் கொடுக்கனும்னு தோனுது. :)

  ReplyDelete
  Replies
  1. என்னோட உழைப்பை புரிந்து கொண்டதற்கு நன்றி வருண்......... விஷயத்தை எளிமைப் படுத்துவதற்க்குத்தான் மிகச் சிரமமாய் இருக்கு!!

   Delete
 3. ஐயோ,ஐயோ, யாராவது உதவிக்கு வாங்களேன், என் தலை கழுத்தில் நிற்க மாட்டேன் என்கிறதே?

  மேலோட்டமா படிச்சதுக்கே இப்படிப் பண்ணுதே, ஆழமாப் படிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்? எங்க மேல ஏன் இப்படி கொலைவெறி?

  உண்மையில் அருமையான பதிவு. நிறைய உழைத்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. @பழனி.கந்தசாமி

   சார், பதிவை எழுதும் போதே உங்களை மனசுல வச்சுதான் எழுதறேன்!! நீங்க நினைக்கும் மாதிரி கஷ்டமா எதுவும் இல்ல, கணக்கீடுகள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை, சின்னதா ரெண்டு லாஜிக் தான், பக்கத்து வீடுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பசங்களை கூப்பிட்டு படிச்சு சொல்லுடான்னு கேட்டீங்கன்னா சொல்லிவாங்க, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், வருகைக்கு நன்றி!!

   Delete
 4. விளக்கமாகவும், எளியநடையில் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்ன பிசாசு, ரெண்டு நாளா கடைப் பக்கம் ஆளை காணும்!!

   Delete
  2. முந்தைய இடுகையோடு எனக்கு உடன்பாடு இல்லை. ஆதலால் கருத்திடாமல் போய்விட்டேன்.

   Delete
  3. கட்டுரை கொஞ்சம் புதிதாக சேர்த்து இருக்கிங்க. இப்பத்தான் படிச்சேன்.

   Delete
  4. பிசாசு, மாற்றம் ஒன்றே மாறாதது, இது யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, நம் பதிவுக்கு இது நிச்சயம் பொருந்தும். இந்தப் பதிவு மட்டுமல்ல, பழைய பதிவுகளையும் பாருங்க, நிறைய மாறுதல் இருக்கும். ஒவ்வொரு பதிவையும் நூறு தடவையாவது மாற்றி இருப்பேன். எக்கச் சக்கமாய்ச் சேர்த்தும் இருப்பேன்!!

   Delete
 5. Awesome post. Hats off to you ! Sorry for typing in English. :)

  ReplyDelete
 6. @ இக்பால் செல்வன்

  Even my Transliteration is not working now!! What you are conveying is more precious than the language it is conveyed. That is so pleasing to me!! Thanks for your kind words of appreciation.

  ReplyDelete
 7. வாவ்வ்வ்வ்வ்.. சூப்பர் ஜெயதேவ்... உங்க உழைப்பு உண்மையிலேயே பாரட்டதக்கது..

  அறிவியல் சார்ந்த விஷயங்களை எவ்வளவு அழகா எளிமைபடுத்தி கொடுத்திருக்கீங்க... படிக்க படிக்க எங்கும் சளிக்கவில்லை. வாழ்த்துகள் ஜெயதேவ்.. கலக்குங்க!

  ReplyDelete
 8. நல்லதொரு அறிவியல் பதிவு ஜெயதேவ்..

  //அடுத்த முறை எடை பார்க்கும் மெஷீனை காலில் கட்டிக்கிட்டு குதிச்சுப் பாருங்க, தண்ணீரைத் தொடும்வரை அது பூஜ்ஜியத்தையே காண்பிக்கும்!! //

  சரி சரி உங்க பதிவில் உள்ள கருத்தை ஒத்துக்குறேன்..( அவ்வ்வ்.. இந்த விளையாட்டுக்கு நா வரல..)

  ஸ்டீபன் ஹாகிங் புகைப்படங்களுக்கு நன்றி.

  பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 9. @ ஆமினா
  @ இந்திரா

  உங்களை என்னோட கடைக்கு இன்னைக்கு வர வச்சதே பெரிய வெற்றிதான்!! கந்தசாமி ஐயா தலை சுத்துதுன்னு சொன்னதும் எனக்கு கொஞ்சம் பேஜாரா போச்சு!! நீங்க எளிமையா புரியும்படி இருக்குன்னு சொல்வது சந்தோஷமா இருக்கு!! வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 10. செம சார்,அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்! (நீங்கள் அறிவியல் ஆசிரியரா? )ஜீரோ ஜி பற்றி தெளிவாக சொன்னீர்கள். ஒரு கேள்வி "எதிர்ப்பு விசை இன்றி ஈர்ப்பு விசை மட்டும் செயல்படும் போது Free Fall ஏற்படுகிறது இது தான் ஜீரோ ஜீ அப்படித்தானே?,அப்புறம் எது க்கு அதுக்கு Zero Gravity னு பேரிட்டு இருக்கிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. @ விஜயன்

   Zero Gravity என்பதன் சுருக்கம் தான் Zero G!!

   \\(நீங்கள் அறிவியல் ஆசிரியரா? )\\ ஆகணும்னு ஆசைப் பட்டவன் !!

   Delete
  2. ஜீரோ ஜி, பூச்சிய புவியீர்ப்பு ,"எதிர்ப்பு விசை இன்றி ஈர்ப்பு விசை மட்டும் செயல்படும் போது Free Fall ஏற்படுகிறது புவியீர்ப்பு மட்டும் செயல்படும் இந்நிலையை ஜீரோ ஜி என்று ஏன் பெயரிட்டனர் என்பதே என் கேள்வி! //பதிவுல இயற்பியல் ஆசிரியராகிவிட்டீர்//

   Delete
  3. இந்த நிலைக்கும், உண்மையிலேயே பொருளீர்ப்பு ஈர்ப்பு விசையே [Gravitational Force] இல்லாத நிலைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்று தான். A person subjected to these situations can not distinguish between these two conditions, both will look alike, absolutely there won't be any difference. அதனால் தான் ZeroG என்று பெயரிட்டனர். உண்மையில் இதை மைக்ரோ கிராவிட்டி என்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் இந்த நிலையில் [Free Fall] உள்ள விசை பூஜ்ஜியம் இல்லை, பத்துலட்சத்தில் ஒரு பங்கு விசை இருக்கும் அதாவது உங்கள் கையில் ஒரு டன் எடையை தூக்கி வைத்தால் அது ஒரு கிராம் போல உங்களுக்குத் தோன்றும். இதை கிட்டத் தட்ட ZeroG என்றே எடுத்துக் கொள்ளலாம்.

   //பதிவுல இயற்பியல் ஆசிரியராகிவிட்டீர்// என்னிடம் இருப்பதை நான் பகிர்ந்து கொள்கிறேன், மற்றபடி அந்த மாதிரி நினைபெல்லாம் எனக்கில்லை அந்தத் தகுதியும் இல்லை.

   Delete
 11. மிகவும் சிறப்பான தகவல்களை அறிய வைத்தமைக்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. @ திண்டுக்கல் தனபாலன்

   உங்க ஓட்டு மட்டும்தான் எனக்கு கியரன்டீயா கிடைக்குது!! வருகைக்கு & ஆதரவுக்கு நன்றி நண்பரே!!

   Delete
 12. ஈர்ப்பு என்பது நாம் பூமியின்(கோளின்) மையத்தை நோக்கி நகருகையில் ஏற்படும் முடுக்கமே அன்றி வேறில்லை.எடை இல்லை என்று
  சொல்வதை விட நீங்கள் ஈர்ப்பு இல்லை என்று சொன்னால் சரியாக
  இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. @ சமுத்ரா

   \\எடை இல்லை என்று சொல்வதை விட நீங்கள் ஈர்ப்பு இல்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.\\ நியூட்டனின் Universal Law of Gravitation இரண்டு நிறைகளுக்கிடையே உள்ள தூரத்தைப் பொறுத்து அவற்றுக்கிடையே என்ன விசை என்று சொல்கிறது. அதன்படிப் பார்த்தால், உட்கார்ந்திருத்தல், Free Fall, International Space Station என எந்த ஒரு கட்டத்திலும் உங்கள் மீது புவி ஈர்ப்பு விசை செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாமல் போக வேண்டுமென்றால் r Infinity ஆனால் மட்டுமே முடியும். மேற்ச்சொன்ன எந்த ஒரு நிலையிலும் r Infinity இல்லை, அப்புறம் எப்படி ஈர்ப்பு இல்லை என்று சொல்ல முடியும்??!! அறுந்து போன லிப்டில் கீழே விழுவதற்கு காரணமே ஈர்ப்பு விசையால் தானே? ISS மீதும் தொடர்ந்து ஈர்ப்பு விசை செயல்பட்டுக் கொண்டே தானே இருக்கிறது, இல்லாவிட்டால் அது நேராக 27,700 கிமீ/மணி வேகத்தில் பிச்சிகிட்டு போயிருக்குமே?

   ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைப் படி,எந்த ஒரு இயற்பியல் பரிசோதனையை வைத்தும் Free fall க்கும் Zero Gravity க்கும் வித்தியாசம் காணவே முடியாது. அதைத்தான் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். வருகைக்கு நன்றி சமுத்ரா!!

   Delete
  2. @ சமுத்ரா

   \\ஈர்ப்பு என்பது நாம் பூமியின்(கோளின்) மையத்தை நோக்கி நகருகையில் ஏற்படும் முடுக்கமே அன்றி வேறில்லை.\\ இது முற்றிலும் தவறு. முடுக்கமடைந்தால் மட்டுமே ஈர்ப்பு இருக்கிறது என்பது இல்லை. ஒரு பொருளின் மீது பல விசைகள் ஒரே சமயத்தில் செயல்பட்டு அவை ஒன்றையொன்று cancel செய்து நிகர விசை பூஜ்ஜியம் என்னும் போதும் முடுக்கம் இருக்காதுதான், அதற்காக அவ்விசைகள் அப்பொருள் மீது செயல்படவே இல்லையென்று சொல்லிவிட முடியுமா? உதாரணத்துக்கு நீங்கள் சேரில் உட்கார்ந்திருக்கும்போதும் உங்கள் மீது புவி ஈர்ப்பு விசை இருக்கவே செய்கிறது, சேரின் மேல் நோக்கிய எதிர் விசையால் இரண்டும் சமமாகி நிகர விசை பூஜ்ஜியமாவதால் நீங்கள் நகரவில்லை, அதானால் ஈர்ப்பே இல்லை என்று அர்த்தமல்ல.

   Delete
  3. @JayaDev Das, //இது முற்றிலும் தவறு. முடுக்கமடைந்தால் மட்டுமே ஈர்ப்பு இருக்கிறது என்பது இல்லை.//
   ஒரு பொருள் முடுக்கம் அடையவில்லையெனில், அதன் மேல் விசை செயல்படவில்லை என்றே பொருள். ஏனெனில் விசை என்பது, பொருளின் நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கமாகும். அதனால் இந்த இடத்தில் சமுத்ரா சொல்வது சரியே. ஒரு பொருள் நகர வேண்டுமெனில், அதன் மேல் ஒரு விசை செயல்பட வேண்டும். அந்த விசையைக் கணக்கிட, முடுக்கம் தேவையே. இந்த விவாதத்தில் அது ஈர்ப்பு விசை அவ்வளவே !

   // உதாரணத்துக்கு நீங்கள் சேரில் உட்கார்ந்திருக்கும்போதும் ...// இதற்கு இப்படி விளக்கம் கொடுப்பதே சிறந்ததாக இருக்கும். அப்பொழுது தான், எல்லோராலும் எளிதில் விளங்கிக்கொள்ள இயலும். நியூட்டனின் முதல் விதிப்படி புறவிசை [External Force ] எதுவும் செயல்படாத வரையில் நிலையாக உள்ள பொருளோ, சீரான வேகத்தில் இயங்கும் பொருளோ தத்தமது நிலைகளை மாற்றிக் கொள்ளாது.

   Delete
  4. @ ramkaran

   \\ஒரு பொருள் முடுக்கம் அடையவில்லையெனில், அதன் மேல் விசை செயல்படவில்லை என்றே பொருள்.\\

   ஒரு பொருளின் மேல் விசை எதுவும் செயல் படாத போது மட்டுமல்ல, நிகர விசை பூஜ்ஜியமாக இருக்கும்போதும் அதன் நிலையில் [அசையாமல் இருத்தல்/சீரான வேகத்தில் சென்றுகொண்டிருத்தல்] மாற்றம் எதுவும் வராது. Eg., ஒரு பொருளின் மீது ஒரே சமயத்தில் x திசையிலும், அதற்க்கு எதிராக -x திசையிலும் சமமாக F விசை செயல்பட்டாலும் பொருளின் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. சொல்லப் போனால் நியூட்டனின் மூன்றாம் விதியில் F=ma யில் வரும் F இந்த நிகர விசையையே [Resultant Force] குறிக்கிறது. கருத்துக்கு நன்றி ராம்கரன்.

   Delete
 13. ஜெயதேவதாஸ்,

  ஒரு கருத்தை 'முற்றிலும்' தவறு என்று யாராலும் சொல்ல இயலாது.அது ஐன்ஸ்டீனே என்றாலும்!நீங்கள் சொல்வது over confidence போலத் தெரிகிறது. அறிவியலில் இது வேலைக்கு ஆகாது..அறிவியலை எழுதுபவருக்கும் ஆகாது.

  சரி.அதை விட்டுவிடுவோம்.ஈர்ப்பு என்பது ஒரு விசை அல்ல. விசை என்ற கருத்தை
  அணு அறிவியலிலும் சார்பியலிலும் எப்போதோ கைவிட்டு விட்டார்கள்.நீங்கள் அதையே (நியூட்டோனியன் மெகானிக்ஸ் )சொல்லிக் கொண்டிருப்பது தான் உறுத்துகிறது.நாம்
  ஈர்ப்பை உணர்வது பூமி நம்மை சதா இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதால் அல்ல.
  There is no such Newtonian force F =GM1M2 /R2 என்பது ஒரு சௌகரியமான 'மாடல்' மட்டுமே.

  பூமியின் மையத்தை நோக்கிய நம் FREE FALL தடுக்கப்படுவதாலேயே அதை நாம் அதை ஈர்ப்பாக உணர்கிறோம்.ஒரு பொருளை இயக்கும் போது அது இயக்கத்தில் இருக்கவே விரும்புகிறது. அந்த
  இயக்கத்துக்கு அது மிகக் குறைந்த தடை கொண்ட பாதையைத் தேர்ந்தெடுக்கிறது.
  (ஒளி உட்பட) அந்த பாதை வழியே பொருள் நேர்கோட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்.
  நிறை மிக்க ஒரு பொருள் இடையில் வரும் போது அது காலவெளியை கண்டபடி வளைத்து
  பொருளுக்கு ஒரு சுலபமான 'குறுக்கு' வழியை உண்டாக்கித் தருகிறது.சரி. இந்த வழியாவே
  போவோம்! என்று பொருள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. ஹைவேயில் தேமே என்று
  சென்று கொண்டிருக்கும் காரோட்டி ஒருவரை வழியில் உள்ள 'டாஸ்மாக்' திசைதிருப்பி
  கவனத்தைக் கலைப்பது போல!

  இப்படி ஒரு மெகா நிறையால் கவரப்படும் பொருளுக்கு இரண்டு சாத்தியங்கள் நிகழலாம்.
  அதன் வேகம் அது நிறையில் இருந்து உள்ள தூரம் ஆகியவற்றைப் பொறுத்து அது
  ஒரு safe distance இல் பொருளை சதா பிரதக்ஷணம் செய்யலாம்.அப்போது பொருள்
  'தொடர்ந்து' விழுகிறது ! அதே சமயம் நிறையை மிக அருகில் நெருங்கும் போது அது
  படுவேகமாக முடுக்கப்படுகிறது.அல்லது நிறையின் மிக அருகே காலம் மட்டுப்படுவதால்
  முடுக்கப்படுவது போல தோன்றுகிறது!!!! அதாவது ஒவ்வொரு நொடியிலும் பொருள்
  வேகம் பிடிக்கிறது என்று சொல்லலாம். இல்லை காலமே நிறையின் மிக அருகில் நெருங்கும் போது (m /S2)கொஞ்சம் நீட்டிக்கிறது என்றும்
  சொல்லலாம்.இதை தான் நாம் ஈர்ப்பு என்கிறோம். பொருள் கிரகத்தை சுற்றும் போது ஈர்ப்பு உணரப்படுவதில்லை.

  நிலாவும் நம் சர்வதேச விண்வெளி ஆய்வு
  மையம் போல ஈர்ப்பு இன்றி இருக்க வேண்டும். ஆனால் அதன் ஈர்ப்பு,, அது(நிலா) தானே
  காலவெளியை வளைப்பதால் உருவாகிறது. நாம் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும்
  போது நம் மீது ஈர்ப்பு இல்லை. நாற்காலி வெறுமனே நாம் கீழே விழுவதை தடை
  செய்து கொண்டிருக்கிறது அவ்வளவே! WE ARE ALL FALLING TOWARDS THE CENTER OF EARTH !
  நாமெல்லாம் சதா வெளிப் பயணிகள் (space travelers )...பஸ் ஒன்று முடுக்கப்படும்
  போது மட்டும் நாம் முன்னே/பின்னே சாய்கிறோம். மற்ற படி அல்ல! எனவே பஸ் நம்மை
  இழுக்கிறது என்று சொன்னால் அது தப்பு.எனவே உங்கள் வாசகர்களுக்கு updated information
  தரவும்...இதுதான் சரி என்று நான் சொல்ல வரவில்லை. இப்போதைக்கு இது தான்
  ஏற்றுக் கொள்ளப்பட்ட picture ...நாளை வேறு யாராவது வேறு ஒரு மாடலை கொண்டு வரலாம்.

  சிலர் ஈர்ப்பு என்பதை பூமியின் தரை தொடர்ந்து மேலே முடுக்கப்படுவது என்றும் சொல்வார்கள். சார்பியலின் படி ஆப்பிள் கீழே வந்தால் என்ன? பூமி மேலே வந்தால்
  என்ன?

  மேலும் ஒரு கல்லை மேலே வீசும் போது அதை
  பூமி தடுத்து கீழே இழுக்கிறது என்பது சரியல்ல.
  அதற்கு காலவெளிப் பள்ளத்தைத் தாண்ட
  நாம் போதுமான ஆற்றல் கொடுக்கவில்லை என்று தான் அர்த்தம்.ஏனென்றால் மேலே போவதை விட கீழே விழுவது தான் தற்கு short cut !பூமியின் அருகே அதை விட பெரிய கிரகத்தை கொண்டு வந்தால் பொருட்கள் மேலே விழ ஆரம்பிக்கும்

  ReplyDelete
  Replies
  1. @சமுத்ரா, அவர் ”ஈர்ப்பை” விசை என்று சொல்லவில்லை. ஒரு பொருளை கீழ் (பூமியை) நோக்கி இழுக்கும் விசையை, அவர் "ஈர்ப்பு விசை" என்று பெயரிடுவதாக கொள்ளலாமே! விசை என்பது, பொருளின் நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கமாகும். இங்கு முடுக்கம் என்பது, புவியீர்ப்பு முடுக்கம் என்பதால், இந்த விசையை புவியீர்ப்பு விசை என்று சொல்வது தவறாகாது. F=ma, here m=mass, a=acceleration. In this case a=g, i.e. acceleration due to gravity, so F=mg, we can say this F as gravitational force. Nothing wrong !

   Delete
  2. நீங்க சொல்ல வருவது, புவிஈர்ப்பு என்பதை விசை என்று சொல்லாமல், காலவெளியில் ஏற்ப்படும் மாற்றம் என்று சொல்லி இந்த மொத்தப் பதிவையும் அதே வகையில் மாற்றி படிப்பவர்களுக்கு புரியவைக்கச் சொல்கிறீர்கள்!! நிறை தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை வலைக்கிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த மாடல் எப்போது தேவைப்படும் என்று யோசித்தீர்களா? ஐன்ஸ்டீன் இந்தக் கோட் பாட்டை முன் வைத்தார். ஆனால் நிறை காலவெளியை வளைப்பதை எளிதாக நிரூபிக்க முடியவில்லை. காரணம், பூமி, ஜுபிடர் போன்ற கோள்களின் நிறையே அதை நிரூபிக்கப் போதாது. சூரியனைப் போல பெரிய எடை வேண்டும், அதற்காக சூரிய கிரகணத்துக்கு காத்திருந்து, அதன் பின்னால் இருந்து வரும் ஒளி வளைக்கப் படுவதை காட்டி, இதோ பாருங்கள் நிரூபணம் என்றார்கள். அப்படியிருக்கும்போது, வெறும் 450 டன் எடையுள்ள ISS பூமியால் ஈர்க்கப் படுவதை கணக்கிட அந்தக் கோட்பாடு உதவுமா? அதை வைத்து விளக்க முடியுமா? தெரியவில்லை. செயற்கை கோள்களை ஏவுதல், அதன் சுற்றுப் பாதையை நிர்ணயித்தல், அது சுற்றி வரும் நேரத்தை நிர்ணயித்தல் போன்றவற்றை பூமி காலவெளியை வளைக்கும் மாடலை வைத்துதான் செய்கிறார்கள் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். இந்தப் பதிவில் சொல்ல வந்ததை அந்தக் கோட்பாட்டை கொண்டு புரிய வைக்க வேண்டும்!! என்னால் இயலாது, மேலும் காலவெளி வளைப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாததைப் பற்றி எழுத நான் விரும்பவும் இல்லை. இயன்றால் தாங்கள் இதே தலைப்பில் நீங்கள் சொன்ன வண்ணம் ஒரு பதிவு போடுங்கள், படித்து அறிந்து கொள்கிறேன்.

   இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் மூன்றை, துகள்களின் பரிமாற்றமே விசை என்ற மாடலை வைத்து விளக்கியிருக்கிறார்கள். மேலும், பெருவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் நான்கு அடிப்படை விசைகளும் ஒரே விசையாகவே இருந்தன, பின்னர் கிராவிட்டி பிரிந்தது என்கிறார்கள். அப்படியானால் மற்ற மூன்று விசைகளுக்கும் பொருந்திய மாடல் இதற்கும் பொருந்த வேண்டும். இயற்கையில் எதுவும் Symmetry ஆகவே இருப்பதால், புவிஈர்ப்பு விசைக்கும் இதே மாடல் பொருந்தும் என எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, அதற்க்கான துகள் Graviton என்றும் சொல்லப் பட்டுள்ளது. நாளைக்கே அது தான் சரியான மாடல் என்றால் என்ன செய்வீர்கள்? சமுத்ரா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புது மாடல் வந்திருக்கிற என்பதற்க்காகவே அதற்க்கு மாற வேண்டும் என்று கட்டாயம் எதுவுமில்லை. தற்போதைய தேவையை பழைய மாடலே பூர்த்தி செய்யும் பட்சத்தில் புதிய மாடலுக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களை விளக்க முன்னூறு வருஷத்து பழைய மாடலே போதும், அதுதான் என்னாலும் முடியும். நன்றி சமுத்ரா.

   Delete
  3. @ சமுத்ரா

   \\எனவே உங்கள் வாசகர்களுக்கு updated information தரவும்...\\ தங்கள் பின்னூட்டமே அதைச் செய்யும் என நினைக்கிறேன்.

   Delete
 14. You are right..


  இன்னும் பல விஷயங்களுக்கு நியூட்டனின் விதிகளையே உபயோகிக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்..ஏனென்றால் அது Straight forward ! சூரியன் ஒளியை வளைக்கும் என்று சொன்னதும் நியூட்டன் தான்.கிரகண சோதனை, அது நியூட்டன் சொன்ன அளவில் வளைக்குமா அல்லது அதற்கு இரண்டு மடங்காக ஐன்ஸ்டீன் சொன்னபடி வளைக்குமா என்று அறியவே நடத்தப்பட்டது. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் ஒரு loop ஐயே தருகின்றன.உதாரணமாக ஒரு பொருள் வெளியை வளைக்கிறது.பிறகு வளைந்த வெளி பொருளை கட்டுப்படுத்துகிறது. மீண்டும் பொருள் வெளியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே போல ஆற்றலுக்கு நிறை இருக்கிறது ...அந்த
  நிறையால் மேலும் ஆற்றல் கிடைக்கிறது. அந்த ஆற்றலால் மீண்டும் ஒரு நிறை கிடைக்கிறது.இந்த infinite ஆற்றல்-நிறை loop ஆல் தான் சூரியன் ஒளியை நியூட்டன் விதிகள் கணித்தபடி இல்லாமல் அதற்கு இரண்டு மடங்கு வளைக்கிறது.F= GM1M2/R2 என்பதில் எந்த வளையங்களும் இல்லை.... நேரடியானது. எனவே சுலபமானது. மேலும் எந்த ஒரு மாடலையும் தவறு என்று நாம் சொல்ல முடியாது. updated மாடல் அவ்வளவே! இன்னும் நாம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் முதல் பதிப்பையே உபயோகிக்கலாம். வெப் சைட்டுகள் திறக்கும். ஆனால் லேட்டஸ்ட் பதிப்பு இருக்கும் போது பழையதை சில நேரங்களில் கைவிடுவதில் தவறு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. @ சமுத்ரா

   புரிதலுக்கு நன்றி சமுத்ரா....!!

   Delete
 15. அருமையான விளக்க்ம். நன்றி ஜெயதேவ் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஹாய் சந்தானம், வினவு தளத்தில நாம மீட் பண்ணியிருக்கோம், அதே சந்தானம்தானே!! எப்படி இருக்கீங்க?

   Delete
  2. மெய்யாலுமே அவனே தான் சார் நான். நான் நலமே. நீங்கள்?

   \\ஆகணும்னு ஆசைப் பட்டவன்\\

   ஆசியர் என்பது உத்தியோகத்தில் மட்டுல் இல்லையல்லவா. தற்போதிருக்கும் ஆசிரியர்களை விடவும் தங்களது விளக்கங்களை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள். நன்றி!

   Delete
 16. "நான் விளங்கி கொண்டதையே விளக்க முடியும்"...உங்கள் கருத்தில் உடன் படுகிறேன். இன்றைக்கு இப்படி எந்த ஆசிரியரும் விளக்கி சொல்வதில்லை. உதாரணத்திற்கு குழந்தைக்கு கணக்கிற்கு நாம் புரிந்து கொண்ட எளிய வழியில் சொல்லி கொடுப்பது பிடிக்கிறது டீச்சர் சொல்லிக் கொடுப்பது புரியவில்லை என்றே சொல்லும். அப்போதைய டீச்சிங்கிற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

  ReplyDelete
 17. அருமையான விளக்கம்.என்ன தான் இருந்தாலும் இன்னொரு முறை படிக்கனும் என்று தோனுகிறது.

  ReplyDelete
 18. @ வடுவூர் குமார்

  எத்தனை தடவை வேண்டுமானாலும் படிங்க, அதற்க்கு தடை ஏது!! முதல் வருகைக்கு நன்றி வடவூர் குமார்!!

  ReplyDelete
 19. hats off to your hardwork jayadev. it gave lot of new information though i had read all the equations mentioned in my 11th class :)
  Keepup your good work
  ~Raja

  ReplyDelete
 20. Seldom bloggers write like this...Very impressed. Your explanation is easy to follow and understand. Only one suggestion-please show the English words for some of the scientific in parenthesis just clarity. This way the message will reach more persons.
  Thyagarajan

  ReplyDelete
 21. Interesting to read. we expect more like this related to science. Sorry for writing in English
  Thanks
  M.Vijayan

  ReplyDelete
 22. || கீழே பூமியைத் தொடும் வரை நீங்கள் எடையற்றத் தன்மையில் இருப்பீர்கள். ||

  இது எப்படி?

  லிஃப்டுக்குள் இருக்கும் மனிதருக்கும் ஒரு நிறை(மாஸ்) இருக்கிறதல்லவா? லிஃப்டின் முடுக்கு விசை அதன் நிறை+மனிதரின் நிறை இரண்டின் மீது செயல்படும் எடை(வெய்ட்)யை மீறி இருப்பதால் லிஃப்ட் மேலே செல்கிறது.

  லிப்ஃடின் கயிறு அறுந்தால் ஈர்ப்பு விசை லிப்ஃட் மற்றும் உள்ளிருக்கும் மனிதர் இரண்டின் மீதும் செயல்படும் அல்லவா?

  லிஃப்ட் வேண்டுமானால் ப்ஃரீ ஃபால் ஆகலாம்,உள்ளிருக்கும் மனிதருக்கும் அது பொருந்துமா?

  ReplyDelete
 23. @அறிவன்

  \\லிப்ஃடின் கயிறு அறுந்தால் ஈர்ப்பு விசை லிப்ஃட் மற்றும் உள்ளிருக்கும் மனிதர் இரண்டின் மீதும் செயல்படும் அல்லவா?\\

  மிகச் சரியான பாயிண்டை பிடிச்சிருக்கீங்க!! இந்த பாயின்டை வச்சுதான் எடையற்ற தன்மையே ஏற்படுகிறது !! இதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தாதான் விஷயம் புரியும். இப்போ நீங்க நிலையாக இருக்கும் ஒரு லிப்டில் நிற்கிறீங்கன்னு வச்சுக்கோங்க, ஒரு ஆப்பிளை கையில் இருந்து தவற விட்டால் அது தரையில் போய் விழும். அதே சமயம் லிப்ட் கயிறு அறுந்து போனதாக வைத்துக் கொள்வோம், அப்போ நீங்க சொன்ன மாதிரி லிப்டுக்குள்ள உள்ள எல்லாவற்றின் மேலும் புவி ஈர்ப்பு விசை செயல் படுவதால் நீங்களும், அந்த ஆப்பிளும் பூமியை நோக்கி விழ ஆரம்பிக்கிறீங்க. புவி ஈர்ப்பு விசையால் ஒவ்வொரு கணமும் மொத்த லிப்ட்+அதில் உள்ள எல்லாம் சேர்த்து ஒரே மாதிரி முடுக்கமடைகிறது [Acceleration]. இதில என்ன பியூட்டின்னா, இந்த முடுக்கம் பொருளின் எடையைப் பொறுத்து வேறுபடுவதில்லை, எல்லா பொருளுக்கும் ஒரே முடுக்கம்தான். இதன் பொருள், t வினாடிகள் கழித்து அப்பிளின் வேகம் என்னவோ அதே தான் உங்க வேகமாகவும் இருக்கும். இரண்டு பொருள் சம வேகத்தில் போச்சுன்னா அந்த இரண்டைப் பொறுத்த வரை நிலையாக நிற்ப்பது போலத்தான் இருக்கும். [அதனால்தான் பூமி வினாடிக்கு 20 கி .மீ . வேகத்தில் பயணித்தாலும், நம்மைப் பொறுத்தவரை அது தெரிவதே இல்லை.] ஆகையால் கீழே விழுந்து கொண்டிருக்கும் லிப்டில் நீங்கள் ஒரு ஆப்பிளை கையிலிருந்து தவறவிட்டால் அது அப்படியே அங்கேயே நிற்ப்பது போலத் தோன்றும். இது எடையற்ற நிலை. ஆப்பிள் மட்டுமல்ல, உங்கள் உடல் உறுப்புகள், லிப்டுக்குள் உள்ள ஒவ்வொரு அணுவும் எடையற்ற நிலையில் இருக்கும். இதற்கும், உண்மையிலேயே எந்த வித ஈர்ப்பு விசையும் இல்லாத ஒரு இடத்துக்குச் சென்றால் அங்குள்ள எடையற்ற நிலைக்கும் எந்த பேதமும் இருக்காது. இரண்டையும் காட்டி இதுவா அதுவா என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியாது!!

  \\லிஃப்ட் வேண்டுமானால் ப்ஃரீ ஃபால் ஆகலாம்,உள்ளிருக்கும் மனிதருக்கும் அது பொருந்துமா?\\ நம் மீதும் புவி ஈர்ப்பு விசை செயல் படுத்தே!! அதனால் முடுக்கமும் ஏற்ப்படுகிறதே !! இப்போ நீங்க LIC பில்டிங் மேலேயிருந்து குதிச்சா கீழே விழத்தானே செய்யுறீங்க!!

  ReplyDelete
  Replies
  1. @அறிவன்


   நிலையாக உள்ள பொருள் பூமியை நோக்கி விழும்போது அதன் வேகம் அதிகரிக்கும், t வினாடிகளுக்குப் பின்னர் வேகம்= g*t [this acceleration is same, it is independent of the mass]. வேகம், t மாற மாற அதிகரிக்கும், உண்மைதான், ஆனால் ஒவ்வொரு அணுவுக்கும் அதே அளவு அதிகரிக்கும், அதனால் எல்லாவற்றின் வேகமும் எந்த ஒரு கணமும் சமாமாகவே இருக்கும். இரண்டு பொருட்களுக்கிடையே வேகத்தில் பேதமில்லாத பட்சத்தில் அவை நிலையாக இருப்பது போலவே தோன்றும். லிப்ட் அறுந்து கீழே விழும்போது அது எடையற்ற நிலையாக தோன்றுகிறது. நீங்கள் கையில் இருந்து எதையாவது தவற விட்டால் அது எங்கும் போகாது, அங்கேயே மிதக்கும்.

   Delete
  2. @அறிவன்

   Please see these Videos

   http://www.youtube.com/watch?v=_mCC-68LyZM&feature=fvwrel
   http://www.youtube.com/watch?v=d57C2drB_wc&feature=relmfu

   Delete
 24. வணக்கம் சார்.


  1000000000 லைக்ஸ்!!!! பதிவு ரொம்ப அருமை!
  விளக்கமாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் எளியநடையில் பதிவை தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  ---
  tm 5

  ---


  நேரம் இருப்பின் # கடைக்கும் கொஞ்சம் வாங்க!


  www.sudarvizhi.com

  ReplyDelete
 25. @ JD தாஸ் ...
  நான் [ DME 1981 Batch HIET ] படிக்கும் காலத்தில் இதுபோல சுலபமாக இயற்பியலை விளக்கியிருந்தால் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன் ..ம்... காலம் கடந்துவிட்டது.
  Zero G விளக்கம் அருமை
  சகோ சமுத்ரா மற்றும் ராம்கரன் ஆகியோரின் விளக்கங்களும் சரியே .

  ReplyDelete
 26. @Nasar

  மிக்க நன்றி நாசர், தொடர்ந்து வாருங்கள்!!

  ReplyDelete
 27. Samaiya eluthirukinga thala keep writing

  ReplyDelete
 28. @venkatesan.ru

  மிக்க நன்றி நண்பரே!!

  ReplyDelete