Monday, October 8, 2012

கார்டூனிஸ்ட் RK லக்ஷ்மனை நேரில் பார்த்த அனுபவம் [1996]

தான் படைத்த திருவாளர் பொதுஜனத்துடன் ஆர்.கே.லஷ்மன்!!

உங்களுக்குப் பிடித்த ஒரு கார்ட்டூனிஸ்டின் பெயரைச் சொல்லுங்கள் என்று  ஆங்கிலப் பத்திரிக்கை வாசிப்பவர்கள் யாரைக் கேட்டாலும் எல்லோரும் சொல்லக் கூடிய ஒரே பதில் ஆர்.கே. லக்ஷ்மன் ஆகத்தான் இருக்கும்!!  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை செய்திகளுக்காக அல்லாது இவரது கேலிச் சித்திரங்களுக்காகவே வாங்குவார்கள், இவர் உருவாக்கிய திருவாளர் பொதுஜனம் இந்தியா மட்டுமன்றி உலக அளவிலும் பெயரும் புகழும் பெற்றது!!   கேலி, நையாண்டியுடன் பற்றி எறியும் பிரச்சனைகளை படிப்பவர்களுக்கு கொண்டு செல்லும் வண்ணம் இவரது கார்ட்டூன்கள் அமைந்திருக்கும். முன்னாள் ஜனாதிபதி கலாம் அவரது "அக்கினிச் சிறகுகள்" புத்தகத்தில் தன்னை கேலி செய்து இவர் வரைந்த படத்தை வெளியிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் இடம்பெற்ற RK லக்ஷ்மன் கார்ட்டூன்.


அப்படிப் பட்ட ஒரு மனிதர் நம்மிடையே பேச வரப்போறார்ன்னு தெரிஞ்சா நமகெல்லாம் எப்படி திரில்லிங்கா இருக்கும்!!  அதுதான் எங்களுக்கும் நடந்தது.  வருடம் 1996, இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் பட்டமேற்ப்படிப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் ஆர்.கே. லக்ஷ்மன் இங்க வரப்போகிறார், சொற்பொழிவாற்றப் போகிறார் என்று தேதி நேரம் குறிப்பிடப் பட்ட செய்தி ஒரு டஜன் ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டுகளுக்கும் பறந்தது.  அவர் வரும் தேதி நெருங்க நெருங்க எல்லோரும் பரபரப்பனோம்.  சாதாரணமாக ஈ ஒட்டிக் கொண்டிருக்கும் மைய பேருரை அரங்கம், [CLT- Central Lecture Theatre] மாணவ  மாணவிகளால்  நிரம்பி  வழிந்தது.  ஆர்.கே. லக்ஷ்மன் சரியாக மாலை 5:30 க்கு உள்ளே அழைத்துவரப் பட்டார்.

புனேயிலுள்ள சிம்பையோசிஸ் கல்வி நிறுவனத்தின் [Symbiosis Institute]  முன் அமைக்கப் பட்டுள்ள திருவாளர் பொதுஜனத்தின் பத்தடி உயர வெண்கலச் சிலை.

ஆவலுடன் காத்திருக்கும் மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவருக்கும் சந்தோசம்!!  பேச ஆரம்பித்தார்.  அவர் பத்திரிகைத் துறையில் நுழைந்த நேரம் இந்தியா சுதந்திரம் வாங்கியிருந்தது.  அப்போதிருந்த தலைவர்கள் இந்தியாவை ஒரு உடோபியாவாக [Utopia], மாற்றப் போகிறோம் என்று பேசுவார்களாம்.  அதாவது, எல்லோருக்கும் எல்லாமும் செய்து தரப்படும்  சாலைகள், மருத்துவ வசதி, குடிநீர் மின்சாரம், கல்வி என அடிப்படை வசதிகள் அத்தனையும் எல்லோருக்கும் கிடைக்கும்வண்ணம் செய்யப் படும்.  வெள்ளையர்களால் அடிமைப் பட்டிருந்த நாட்டில் உருவான எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப் படும்.  இதையெல்லாம் கவனித்த இவருக்கு, மனசுக்குள் சிறிய கலக்கம்.  எல்லாம் இந்த மாதிரி ஆயிடிச்சுன்னா நாம எந்த பிரச்சினையை பத்திரிகையில் போட்டு அதை விற்க முடியும்?  எத்தனை நாளைக்குத்தான் அங்க அது நல்லா இருக்கு, இங்க இது நல்லா இருக்குன்னே செய்திகளையே போட்டுக்கிட்டு இருக்க முடியும்?  எதைத்தான் கிண்டல் செய்ய முடியும் அல்லது திருத்திக் கொள்ள சுட்டிக் காட்ட முடியும்?  பத்திரிக்கை சப்பென்று ஆகிவிடுமே??!! [இது போல நடந்த ஒரு வெளிநாட்டின் கதையையும் சொன்னார்!!  அதே நிலைமை இந்தியப் பத்திரிகைகளுக்கும் வந்து விடுமோ??!!] இப்படியெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு விசனம் வந்து விட்டதாம்.  ஆனால், அரசியல்வாதிகள் சொன்னபடி எதுவும் நடக்க வில்லை.  மெல்ல மெல்ல பிரச்சினைகளை கொளுத்திப் போட ஆரம்பித்தனர்.  ஒருத்தன் பசுவதை கூடாதுன்னானாம், இன்னொருத்தன் மதச் சார்ப்பின்மைன்னானாம், ஒருத்தன் ஹிந்தி வேனாம்னானாம், அப்புறம் நக்சலைட்டு தெலுங்கான திராவிட நாடு இப்படி ஒவ்வொரு பிரச்சினையா ஆரம்பிச்சு அன்றையில் இருந்து இன்றைய வரைக்கும் கார்ட்டூனிஸ்ட்ங்க பிசினஸ் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஜெ....ஜெ.... ன்னு ஜோரா நடந்துகிட்டு இருக்காம்!! 



தினமும் தன்னுடைய டேபிளுக்கு உள்நாடு வெளிநாடு என அத்தனை செய்தித் தாள்களும் வந்துவிடுமாம்.  தொலைக்காட்சி விஷயங்கள் எல்லாமும் பார்ப்பாராம்.  அவற்றிலிருந்து அடுத்த நாளைக்கான படம் என்ன தோன்றுகிறதோ அதை வரைந்து அனுப்புவாராம்.



தன்னுடைய கார்ட்டூன் கேரக்டர்  திருவாளர் பொதுஜனத்தைப் [The Common Man] பத்தியும்  சொன்னார்.  அவரது உடை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாக பார்க்க முடியாது!!  ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்து போட்டு உருவாக்கப் பட்டதாம்!!  ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டிருக்கலாம், ஒரு வங்காளி பீகாரியைப் போலல்லாமல் இருக்கலாம், ஆனால் மொத்த இந்திய பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.  அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால்  நடத்தப் படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் தவித்து நிற்ப்பதோடு,  வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டிருப்பது தான்.   இத்தனைக்கும் மக்கள் நூறு கோடி என்றால், ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் சில நூறு பேர்கள் மட்டுமே.  1954 ஆண்டு உருவாக்கப் பட்டதில் இருந்து அவர் படைத்த திருவாளர் பொதுஜனமும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசியதே இல்லை!!

 
திருவாளர் பொதுஜனம் சிலை அருகில் R K லஷ்மன், 
Worli Seaface, மும்பை.
இறுதியாக ஒரு உண்மையையும் போட்டு உடைத்தார். கார்டூன்களை வரைவது எனது தொழில் மட்டுமே, அதனால் நல்ல மாற்றம் வரவேண்டும் நாடு திருந்த வேண்டுமென்பதெல்லாம் எனக்கு நோக்கமே இல்லை, அதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப் படுவதும் இல்லை.  [கொஞ்சம் ஷக்காத்தான் இருந்தது!!] அதை கேட்டதும் அவரது நேர்மையை எங்களால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!  எல்லோரும் அவ்வப்போது கரவொலியோடு நிகழ்ச்சி முழுவதும் அவர் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம், . 

இறுதியாக மாணவர்கள் கேள்விகள்.  ஒரு மாணவர் கேட்டார், சார் உங்க அனுபவத்தில நீங்க விமர்சனமே பண்ண முடியலை என்று யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?  [In your experience, have you ever come across a politician, whom you found impossible to criticize?].  "இல்லவே இல்லை, அப்படி இருந்தா அவரு அரசியல்வாதியா இருக்கவே முடியாது" [Never, if that is the case he can not be a politician!!] என்று ஒரு போடு போட்டார், சிரிப்பாலும் கரகோஷத்தாலும் அரங்கமே அதிர்ந்தது!!

அவருக்காக ஒரு போர்டும், ஓவியர்கள் பயன்படுத்தும் பெரிய தாள்கள் சிலவும், ஒரு OHP பேனாவும் வைக்கப் பட்டிருந்தது.  தான் வரைந்த கார்ட்டூன்கள் சிலவற்றை வரைந்து காண்பித்தார்.  மேலும் அவர் கொண்டு வந்திருந்த சில பிரபலமான கார்ட்டூன்களையும் காண்பித்தார்.  நிகழ்ச்சியை முடிக்கும்போது, "இந்தியா முழுவதும் நான் எத்தனையோ இடங்களுக்கு, கல்வி நிறுவனங்களுகெல்லாம் சென்றிருக்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு எனக்கு எங்கும் வரவேற்ப்பு தந்ததில்லை, நன்றி என்று முடித்தார், கைதட்டல் அரங்கத்தை பிளந்தது.  

RK லக்ஷ்மன் அவர்களின் என்றென்றும் பசுமையான கார்டூன்கள் சில, You Said It ல் இருந்து!!

சென்செக்ஸ் கிடு கிடுன்னு ஏறுது, பங்கு சந்தையில காளை சீறிகிட்டு மேல பாஞ்சு போய் கிட்டு இருக்கு, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமா இருக்குன்னு நிபுணர்கள் சொல்லிட்டாங்க, எல்லாத்துக்கும் மேல  ஒரு கிரிக்கெட் மேட்சுல ஆஸ்திரேலியாவை தோற்கடிசிட்டோம்னு வேற சொல்லிட்டேன், அப்பவும் திருப்தியே இல்லாம ஏதோ முனகிகிட்டே இருக்கான், இவனுக்கு என்னதான் வேணும்கிறான்யா?
 
அடடே இவரா!!  எனக்கு நல்லாவே தெரியுமே!!  இவரைத் தெரியாதவங்க யாராவது இருக்க முடியுமா, ஏன்னா டூத் பேஸ்ட் விளம்பரத்தில ஆரம்பிச்சு, எல்லா நியூஸ் பேப்பர், வீதி வீதிக்கு வைக்கிற பேனர் வரைக்கும் எல்லா விளம்பரத்திலும் இவரு வர்றாரே!!  ஆனா, இவரு கிரிக்கெட்டும் ஆடுவாருன்னு எனக்கு அப்போ தெரியாது!!


கமிஷனர் சொல்றது நல்ல ஐடியா சார், சிட்டிக்குள்ள இருக்கும் டிராபிக்கை சரி பண்றது ரொம்ப கஷ்டம், பேசாம ஊருக்கு வெளியேபோக்குவரத்து நெரிசல் இல்லாத இடமா பாத்து சிட்டியவே நகத்திடலாம் சார், என்ன சொல்றீங்க?!!
இந்த இடத்துலதான் தீக்குளிக்கபோறேன்னு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே போலீசுக்கு போன் பண்ணி சொல்லிட்டு காத்துகிட்டு இருக்கேன், இன்னும் அவங்கள யாரையும் காணோம், அதான்.....சார் போலீஸ்காரங்க கிட்ட கொஞ்சம் சொல்லிடறீங்களா?  

என்னது, இது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா?  நான் எளிமையை விருபுறவன்யா, அந்த மாதிரி காஸ்ட்லியான ஹோட்டல்ல எல்லாம் தங்குறதில்லை, ஹோட்டல் முதலாளிய கூப்பிட்டு அஞ்சுல ரெண்டு ஸ்டாரை பிடுங்கிப் போடச் சொல்லு.
 
ஏன்டா நாதாரி, சம்பளக் கவரை மட்டும் டேபிளுக்கு மேலேயே குடுன்னு எத்தனை வாட்டி உனக்கு சொல்லியிருக்கேன் ......???

புத்தக மூட்டையை சுமக்கிறதப் பார்த்தா நாம் ஏதோ பையனை கொடுமைப் படுத்துற மாதிரி இருக்கு. அதனால இந்தப் பையனை வேலைக்கு வச்சிட்டேன்.
சார் சந்திரனுக்கு போறதுக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களே புடிசிகிட்டு வந்திருக்கேன், திருவாளர் பொதுஜனம், வெளிச்சம், தண்ணீர், உணவு, வீடு என்று அத்தனையும் இல்லைன்னாலும் சமாளிப்பான்...!!
விஞ்ஞானம், தொழில் நுட்பத்தில் நாம் அளப்பரிய முன்னேற்றம் கண்டுள்ளோம்.

சும்மா தொன தொனன்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்காம, குனுஞ்சு கீழே கிடக்கும்கல்லை எடுத்து போற வர்ற வண்டிங்க மேல அடி.  எதுக்கு போராட்டம்னு எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் பாத்துக்கலாம்.

இங்க வெள்ளமும் அடிக்கல, வறட்சியும் தாக்கல சார், கேவலமான ஆட்சி அடிச்சுதான் நாங்க இந்த கதியாயிட்டோம் சார்!!


ஜனத்தொகையை கட்டுப் படுத்த முடியாதுன்னா போகட்டும், ஸ்கூட்டரையாவது பெரிய சைசுல விட்டாங்கன்னா பரவாயில்லை!!

ஜப்பான், சைனா, ரஷ்யா காரனுங்க சொன்னது எதுவும் பன்னல சார், நானா சாதாரணமாத்தான் விவசாயம் பண்ணினேன், அது கிளிக் ஆயிடுச்சு, அமோக விளைச்சல்!!

பிரதமர் பதவிக்கு வந்து தன்னலமில்லாம நாட்டுக்காக உழைச்சு ஓடா தேய முடியலையேன்னு ஒருத்தன் எவ்வளவு வருத்தத்துல இருக்கான் பாருங்க!!

நான் நல்லா செக் பண்ணி பார்த்துட்டேன், இவருக்கு உடம்புல எந்த பிரச்சினையும் இல்ல, ஊழல் குற்றச் சாட்டு வரதுக்கு முன்னாடி ஒடம்புக்கு ஒத்துக்காத மாதிரி ஒரு ஃபீலிங், அது எல்லோருக்கும் ஆவரதுதான், இவருக்கும் ஆகிக் கிட்டு இருக்கு, பயப்படறதுக்கு ஒன்னும் இல்லை.

தேர்தலில் ஜெயிக்கிற வரைக்கும் ஜெயிப்போமான்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தாரு, இப்போ ஜெயிச்சதுக்கப்புறம் குடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேத்தப் போறேன்னு விசனம் பிடிச்சிப் போயி உட்கார்ந்திருக்காரு.

50 கோடி பேருக்கு மூணு வேலையும் இலவச உணவு!!  இது வெறும் வாக்குறுதி தான் சார், நிறைவேத்த முடியாதுன்னு அவங்களுக்கே தெரியும், நீங்க பாட்டுக்குபேசுங்க............!!

இத வச்சுதான் சார் அவன் கடன் வாங்கியிருக்கான், கடனை மொத்தமா கட்டும் வரைக்கும் இதை இங்கேயே கட்டி வச்சிருப்போம்!!

இப்ப நான் வாங்க மாட்டேன்பா.......  இது ஊழல் ஒழிப்பு வாரம்!!


என்னது, வெள்ளச் சேதாரம் 15 கோடியா?  பரவாயில்லையே, எங்க ஊர்ல இருக்கும் எல்லாம் சேர்த்தா கூட அம்பது ரூபாவுக்கு மேல தேறாதுன்னுல்ல நினைச்சேன்!!

யோவ், நீ எங்க கட்சியில சேர்ந்துட்டீரு, அது மேட்டரே இல்ல, நீ எந்த கோஷ்டியில சேரப் போறேன்னு சொல்லு, அதுதான் முக்கியம்!!

இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு கடும் வறட்சிதான் இருக்கும்னு வானிலை முன்னறிவிப்புல சொன்னானுங்கன்னு உங்களை இங்க வறட்சியைப் பார்வையிட கூட்டியாந்துட்டோம் சார். சாரி!!

தனியார் மயமாக்காதே.......தனியார் மயம்  ஒழிக....... [ஏய் மச்சி, தனியார் மயம்...ஒழிக.ஒழிக..ன்னு நம்மளை கத்தச் சொல்றானுங்களே, தனியார் மயம்..அப்படின்னா என்னடா......??.] 

அமைச்சர் பதவியிலிருந்து உங்கள தூக்கிட்டாங்களாமே, வீட்டுக்கு போக ஆட்டோ கூப்பிடட்டுமா சார்...??



கரை படிந்தவங்களை அமைச்சரவையில இருந்து நீக்கனும்னு நீங்க நினச்சா, மொத்த அமைச்சரைவையுமே கலைச்சிட்டு, புது அமைச்சரைவையைத் தேர்ந்தெடுத்தா தான் உண்டு சார்.  அப்படியே செய்தாலும், மறுபடியும் அதே பிரச்சினைதான் சார்!!





நாங்க ஏதோ உங்களை மட்டும் புறக்கனிச்சிட்டோம்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நாங்க எல்லா தொகுதியையும் இதே மாதிரி சமமாவேதான் நடத்துறோம், போய்ப் பார்த்தீங்கன்னா தெரியும்.

நாங்க பஞ்சத்தில எல்லாம் அடிபடலே சார், எப்பவுமே இப்படியேதான் இருக்கோம்!!



நாம ரொம்ப திறம்பட ஆட்சி செய்தோம், மக்களுக்காக அவ்வளவு உழைச்சோம்.  இருந்தாலும் எலக்ஷன்ல மண்ணை கவ்விட்டோம், இதெல்லாம் வச்சு யோசிச்சா, நம்ம மேல எந்த தப்பும் இல்ல, இந்த ஜனங்களுக்குத்தான் ஏதோ ஆயிடிச்சுன்னு நினைக்கிறேன்.........


கவலை பட ஒண்ணுமில்ல சார், இதெல்லாம் எதிர்கட்சிக் காரனுங்க செஞ்ச சதி சார். நாம வரதுக்கு முன்னாடி இங்க வந்த அவங்க,  உங்களுக்கு தண்ணீர் இல்ல, சாப்பாடு இல்ல, வேலைவெட்டி இல்லை அப்படின்னு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு போயிட்டாங்க சார்.  எதிர்க் கட்சிக் காரங்க வந்திட்டு போறதுக்கு முன்னாடி இவங்க எல்லாம் சந்தோஷமாத்தான் சார் இருந்தாங்க........



இப்பல்லாம் பிளாட்பாரத்தை விட இங்க தூங்கறது எவ்வளவோ சேஃப் சார்!!

முதலில் மாட்டு வண்டியில வந்தாங்க, அப்புறம் ஜீப், கார்னு வந்தாங்க, இப்போ ஹெலிகாப்டர்ல வர்றாங்க...!!  ம்ம்ம்... நிஜமாவே நாடு ரொம்ப முன்னேறியிருக்குப்பா...!!

உங்க கஷ்ட நஷ்டத்தை எல்லாம் நீங்க சொல்லித்தானா எனக்குத் தெரியனும்?  நானும் உங்களை மாதிரி நிலையில இருந்துதான் அரசியலுக்கு வந்திருக்கேன் ....!!

அமைச்சரோட பேரனாம், அவர் பேர்ல இருபது கோடி ரூபா சொத்து இருக்காம், அம்பது ஏக்கர் நஞ்சை, புஞ்சை இருக்காம்...!!

நான் எதுக்கு வெளிநாட்டுப் பயணம் போறேன் தெரியுமா?  நம்ம நாட்டு நிலவரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்....!!

உங்க கிட்ட இருந்து அவர் காசு பணம் எதுவும் கேட்கல சார், நீங்க கையில் வச்சிருக்கீங்களே பாட்டில் தண்ணீர், அதத் தரமுடியுமான்னு கேட்கிறார்....  ரொம்ப வறட்சி பாதிக்கப் பட்ட பகுதி சார்....


நம்ம கிட்ட கம்பியூட்டர் இல்லேப்பா, இருந்திருந்தா மெயில் அனுப்புனா போதும், சாப்பாடு இங்கேயே வரும்.


ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மன் என்னும் R K லக்ஷ்மன் 1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர், இவரது தந்தை திரு  கிருஷ்ணசாமி ஐயர் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர்.  இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர் அதில் இருவர் பெண்கள்.  புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் R K நாராயண் இவரது அண்ணன்.  பள்ளிப் படிப்பை முடித்தவுடன மும்பை JJ School of Arts, ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப் பித்திருக்கிறார். ஆனால் உன் திறமை இங்கு பயன்படாதுன்னு சொல்லி அவர்கள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர்.  பின்னர், மைசூரில் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை தொடர்ந்திருக்கிறார். தான் கல்லூரியில் படித்த நாளில் இருந்தே உள்ளூர் பத்திரிகைகளுக்கு கார்ட்டூன்களை வரைய ஆரம்பித்தாவர் பின்னர் தனது அண்ணன்  R K நாராயண் ஹிந்து பத்திரிகைக்கு எழுதும் கதைகளுக்கும் படங்களை வரைந்து கொடுக்க ஆரம்பித்தார்.



R.K.லக்ஷ்மன்  1954 ஆம் ஆண்டு ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்துக்காக உருவாக்கிய பையன் Gusty Gattu.  2006 ஆம் ஆண்டு வரை இந்தப் படத்தை அந்நிறுவனம் தங்கள் விளம்பரங்களிலும், தயாரிப்புகள் மீதும் பயன்படுத்தி வந்தது!!
 
சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் கோடை விடுமுறைகால தற்காலிகப்  பணியிலும் இருந்திருக்கிறார்  பின்னர் மும்பையில் இருந்து வெளியாகும் தி ஃபிரீ பிரஸ் ஜர்னலுக்கு [The Free Press Journal] அரசியல் கேலிச்சித்திரம் வரையும் முழு நேரப் பணியில் சேர்ந்திருக்கிறார். அங்கே சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இவருக்கு அலுவலகத் தோழர்!!  பின்னர் டைம்ஸ் ஆஃப்  இந்தியா நாளிதழில் சேர்ந்து அங்கேயே ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார்.  இவர் பெற்ற பல விருதுகளில் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன்,  பத்ம விபூஷன் விருதுகளும் அடக்கம்.

இவருக்கு முதல் திருமணம் கமலா அம்மையாருடன் நடந்தது, இவர் பாரத நாட்டியம் தெரிந்த நடிகை, அது விவாகரத்தில் முடிய அதன் பின்னர் மறுமணம் புரிந்தார். அவர் பெயரும் கமலா அம்மையார் தான், குழந்தைகள் புத்தகம் எழுதுபவர் !!  லக்ஷ்மனை 2003 ஆண் ஆண்டு பக்கவாதம் தாக்கி அவரது இடதுபுறம் செயலிழக்க வைத்தது. அதிலிருந்து மீண்டு வந்தார்.  ஆனால், 2010 ஆண்டு மீண்டும் உடநலம் நலிவுற, புனேயில் இருந்து மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனைக்கு  விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.  அவரது நலனுக்காக நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

20 comments:

  1. நல்ல தகவல்கள்..பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்....

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு.பாராட்டுகள்!

    http://s-pasupathy.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி ஐயா!! தாங்கள் Emeritus Professor என்று அறிகிறேன். தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, தொடர்ந்து வாருங்கள்!!

      Delete
    2. உங்கள் அருமைப் பதிவை என் முகநூலில் யாவரும் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன். ஒரு நல்ல பதிவுக்கு எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதை யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும்!

      மீண்டும் என் பாராட்டுகள்!

      பசுபதி
      என் தொழில் தொடர்புள்ள வலைத்தளம்
      http://www.comm.utoronto.ca/~pas/

      Delete
  3. அருமை. பல வருஷம் ஆனாலும் நினைவோடு எழுதிருக்கீங்க.

    நீங்க IIT-லா படிச்சீங்க? பெரிய ஆளு தான்

    ReplyDelete
    Replies
    1. இல்லியே, இந்திய தொழில் நுட்பக் கழகத்துல தான் படிச்சேன்!! அதுக்கு ஆங்கிலத்துல என்ன பேருன்னு தெரியாதே!!

      Delete
  4. லக்ஷ்மண் பற்றிய நல்ல தொகுப்பு..

    ஆனாலும் கார்ட்டூன்களின் எண்ணிக்கையை இன்னும் செதுக்கியிருக்கலாம்..ரொம்பப்பப்பப்பப நீளம். :))

    ReplyDelete
    Replies
    1. @ அறிவன்

      அதனாலதான் அவற்றை இறுதியில் வைத்தேன் சார், விருப்பமானவரை படிக்கட்டும்னு!!

      Delete
  5. கார்ட்டூனிஸ்டுகளுக்கு அரசாண்மை பற்றிய ஆர்வம் இருக்க வேண்டியதில்லை என்பதை நம்ப சிரமப்பட வேண்டியதிருக்கிறது. !!!!!

    ReplyDelete
    Replies
    1. @ அறிவன்

      அவருக்கு அரசாண்மை பற்றிய ஆர்வம் இருந்திருக்கிறது, ஆனால், அது சரியாக வேண்டும் என்பதைப் பற்றி ஐ டோன்ட் கேர் நிலையில் இருந்திருக்கிறார். நீங்கள் ஒரு விஷயத்தை பார்த்தால் இது விளங்கும். இப்போது நாட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் பார்த்து சேவை செய்வது போல இருக்கும். ஆனாலும், மனதுக்குள், நிறைய பேருக்கு நிறைய வியாதி வந்தால்தான் நாம் சம்பாத்தியம் பார்க்க முடியும் என்ற எண்ணமும் இருக்கும். விபத்துல கை கால் போயிடிச்சு, நெஞ்சு வழியால ஒருத்தன் துடிகிறான் என்ற பட்டமெல்லாம் உறவினர்களுக்கு மட்டுமே, ஆனால் மருத்துவரைப் பொருத்தவரைக்கும் இன்னைக்கு நாம் நரி முகத்துல விளிச்சிட்டோம், செம வருமானம் என்ற எண்ணம் தான் இருக்கும். ஒரு வேலை நாட்டில் வியாதியே வராத அதிசய மருந்தை நான் கண்டு பிடிச்சிட்டேன்னு ஒருத்தர் சொன்னா, அந்தாளை இவங்க எல்லோரும் சேர்ந்து கதையையே முடிச்சிட மாட்டாங்களா!! அதே தான் இவருக்கும் இருந்திருக்கிறது, அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதை நாம் பாராட்ட வேண்டும்.

      Delete
    2. \\பட்டமெல்லாம்\\பதட்டமெல்லாம்

      Delete
  6. லக்ஷ்மண் நலனுக்காக நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.


    லக்ஷ்மண் பற்றி நிறைவான அருமையான தொகுப்புகள் .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. R(are)K(artoonist).Lakshman.
    யார் மனதையும் புண்படுத்தாத
    கேலி சித்திரங்களை வரைந்தவர்
    பாமர மக்களின் நிலையையும்
    அரசியல்வாதிகளின்
    மெத்தன போக்கையும்
    வெளிச்சம்போட்டு காட்டியவர்
    அவரின் கேலி சித்திரங்களோடு
    வழங்கப்பட்ட பதிவு அருமை
    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. @Pattabi Raman

      நிச்சயம் அவர் ஒரு போதும் இந்திய பொது ஜனத்தின் மனதைப் புண் படுத்தியிருக்க மாட்டார், ஆனால் ஊழல் அரசியல்வியாதிகள் கொஞ்சம் கடுப்பாகியிருப்பார்கள்!! கருத்துக்கும் கவிதைக்கும் நன்றி சார்!!

      Delete
    2. அந்தக்கால அரசியல்வியாதிகள்
      அவரின் நகைசுவையை ரசித்தார்கள்
      ஆனால் தற்கால அரசியல்வியாதிகள்
      அவரை கைது செய்து
      சிறையில் அடைத்திருப்பார்கள்.

      Delete
  8. RK லக்ஷ்மனன் அவர்களை பார்த்த உணர்ச்சிமயமான நிகழ்வுகளை எங்களோடு பகிர்ந்து எங்களுக்கும் பார்த்த ஒரு சந்தோசத்தை கொடுத்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல கார்டூன்கள் அவற்றிக்கான தமிழ் விளக்கம் அருமை. கார்டூன் கேரக்டருக்கு சிலை அறியாத சுவாரசியமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலாகுமாரன்............!!

      Delete