Monday, December 17, 2012

ஓட்டு வாங்குவதில் முறியடிக்க முடியாத சாதனை படைத்த மாணவர்

அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன்.  [இப்ப வரைக்கும் நீ படிச்சதே அவ்வளவு தானே...... அப்படின்னு யாரோ சொல்றது என் காதில விழுது!!  இருக்கட்டும்.... இருக்கட்டும்.]  எங்க கணக்கு ஆசிரியர் வகுப்பில்  ஒரு நாள் ஒரு கதை சொன்னார்.  இதை எதுக்காக சொன்னார்னு கடைசியா சொல்றேன், சஸ்பென்ஸ் போயிடுமே!!



அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது [அய்யய்யோ, ஃ பிளாஷ் பேக்குக்குள்ள இன்னொரு ஃ பிளாஷ் பேக்கா........  சாரி.......  இதுக்கு மேல போகாது!!]  நடந்த சுவராஷ்யமான சம்பவம்.  அவர்களது கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒருத்தர்.  பணக்கார வீட்டுப் பையன், சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு பணத்தை வாரியிரைப்பவர்.   அவனைச் சுற்றி எப்போதும் ஆமாம் சாமி போட்டு வாங்கித் தின்னும் பெரிய கூட்டமே இருக்கும்.   கேரக்டர் கொஞ்சம் வீக்.  கொஞ்சம் ஊதாரி மாதிரின்னு சொல்லலாம்.  எங்க ஆசிரியர் உட்பட மாணவர்கள் பலருக்கு அவரைப் பிடிக்காதாம்.  ஒருமுறை கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் வந்தது.  அதில் இவருக்கு போட்டியிட விருப்பம்.  இதை தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.  கூட இருந்த மாணவர்கள், நீங்க தேர்தலில் நில்லுங்க, உங்க பின்னாடி இந்த கல்லூரியே இருக்கு, தேர்தல் வேலையை நாங்க பாத்துக்கறோம், உங்களை எதிர்க்கறவன் நிச்சயம் மண்ணைக் கவ்வுவான்  என்று உசுப்பேத்தி விட்டு தேர்தலில் நிற்க வைத்து விட்டனர். 

கல்லூரித் தேர்தலில் வழக்கமாய் நடப்பது போல எல்லா பிரசாரமும் நடந்தது. தன்னைச் சுற்றி இருந்த ஆதரவைப் பார்த்த அந்த மாணவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.  நம்மை அடிக்க எவனும் இல்லைடா என்ற போதை தலைக்கேறியது.  தேர்தல் நாள் வந்தது.  ஓட்டுப் போடும் சமயத்தில் இந்த மாணவருக்கு திடீரென ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது.  நமக்குத்தான் நூற்றுக் கணக்கில் இத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்களே, ஒருத்தன் விடாமல் நமக்குத்தான் ஓட்டுப் போடப் போகிறார்கள், நம்மை எதிர்ப்பவனுக்கு ஐஞ்சோ பத்தோ ஓட்டு தான் விழப் போகிறது.  ஜெயிக்கப் போவது நாம் தான், நம் ஓட்டை நம் ஓட்டை நமக்கே போடாமல் இன்னொருத்தனுக்கு போட்டால் தான் என்ன? இப்படியெல்லாம் மமதையாக நினைத்து தன்னுடைய ஓட்டை தனக்கு எதிர்த்து நிற்கும் மாணவனுக்குப் போட்டு விட்டார்.

ஓட்டு போட்ட அன்றைக்கு மாலை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தார்.  வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை போட்டு உடைத்தார்.  "டேய் உங்களுக்கெல்லாம் ஒரு மேட்டர் தெரியுமாடா?  இன்னைக்கு, என் ஒட்டையே நான் எனக்குப் போடலைடா"   என்றார்.   ஆனால் அதை யாரும் நம்பவில்லை.  அவர் எவ்வளவு சொல்லியும்  "அதெப்படிடா உன் ஓட்டை உனக்குப் போடாம போயிருப்பே, ரீல் விடாதே, எந்த மடையனாச்சும் இதைச் செய்வானா?" என்று இதை நம்ப மறுத்தனர்.

வாக்கு என்னும் நாள் வந்தது.  வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியாயின.  அந்த மாணவர் வாங்கிய வாக்கு எண்ணிக்கை தான் எல்லோரையும் வியக்க வைத்தது!!  யாரும் கனவிலும் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஓட்டுகளை அவர் பெற்றிருந்தார்!!  அவர் தனக்கே தன்னுடைய ஓட்டைப் போடவில்லை என்பதையும் அது நிரூபித்தது!! அவர் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை '0'!!  ஆமாங்க, ஒரு பய கூட அந்தாளுக்கு ஓட்டு போடவேயில்லை!!  அடப் பாவிங்களா இத்தனை நாளா என் பின்னாடி சுத்திகிட்டு என்னை உசுப்பேத்தி விட்டுகிட்டு இருந்த அத்தனை பேரும் டுபக்கூருங்க தானாடா.........   என்று அன்றைக்கு அவர் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டார்!!

அதுசரி, இந்தக் கதையை எதுக்கு எங்க ஆசிரியர் சொன்னார்னு உங்களுக்கு நான் சொல்லவேயில்லையே!!  அன்றைக்கு அவர் அவர் திரிகோணமிதி  [Trigonometry] நடத்திக் கொண்டிருந்தார்.  ஒரு மாணவனிடம் ஒரு கேள்வியை கேட்டார், அதற்க்கு அவன் கூமுட்டைத் தனமா ஒரு பதிலைச் சொன்னான்.  ஆசிரியர் வகுப்பைப் பார்த்து இந்த பதில் சரிதான் என்று உங்களில் சொல்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார்.  சிலர் உயர்த்தினார்கள், இந்தப் பதிலைச் சொன்ன மாணவன் உயர்த்தலாமா வேண்டாமா என்று பம்மிக் கொண்டிருந்தான், இதைப் பார்த்ததும்சிரித்துவிட்ட ஆசிரியர் மேற்கண்ட கதையைச் சொன்னார்!!

எனவே, பதிவு போடும் மக்காஸ், உங்களுக்கு ஆஹா.....  ஓஹோ........ என்று பின்னூட்டங்கள் 'நண்பர்களிடம்' இருந்து வந்தால், கொஞ்சம் நிதானமாவே  இருங்க, அதில் உண்மையும் இருக்கலாம், சில சமயம் just  உங்களை திருப்திபடுத்துவதற்காகக் கூட இருக்கலாம்!! Take them with a pinch of salt!!

8 comments:

  1. //Take them with a pinch of salt!!//

    மிகவும் சரி. பிடித்த சொலவடைகளில் இதுவும் ஒன்று - டேக் இட் வித் எ பின்ச் ஆஃப் சால்ட்!!

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
  2. ஜெயிச்சிகிட்டே இருக்கிறதா நினைக்கற போலிக்கு உண்மை வெளிச்சத்தில பிரகாசமா தெரியும் அதன் தோல்வி!

    ReplyDelete
  3. திருப்தி படுத்த மட்டுமல்ல, உண்மையும் கூட.. நானும் ஆசிரியர் தான்.. ஹ..ஹா...

    ReplyDelete
  4. //சில சமயம் just உங்களை திருப்திபடுத்துவதற்காகக் கூட இருக்கலாம்!! Take them with a pinch of salt!!//

    சிலசமயம் உங்களுக்கு குழி பறிக்கிறதுக்காகவும் இருக்கலாம். என்னுடைய பின்னூட்டங்கள் எல்லாம் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். எதுக்கும் ஜாக்கிரதையாகவே இருந்துக்குங்க.

    ReplyDelete
  5. ஆகா!சூப்பர்,(ஒரு சிட்டிகை உப்பு வேண்டுமா!:))

    ReplyDelete
  6. //அதில் உண்மையும் இருக்கலாம், சில சமயம் just உங்களை திருப்திபடுத்துவதற்காகக் கூட இருக்கலாம்!! Take them with a pinch of salt!!//


    super thala

    n story also nice

    ReplyDelete