Friday, December 21, 2012

ரூம் போட்டு தனியா உட்கார்ந்து யோசிச்சே ஞானியாக முடியுமா?

பல வருடங்களுக்கு முன்னர் சினிமா....... சினிமா.........  அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாங்க.  அந்த படத்தின் மையக் கருத்து இதுதான்:  சினிமாவில் அசகாய சூரனாக நடிப்பவன் நிஜ வாழ்விலும் அவ்வாறு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோவாயிட்டாலே அடுத்து முதலமைச்சர் நாற்காலிக்குத் தாவ வேண்டியது தான் பாக்கி என்று எல்லா பயலும் அலையுறான், சினிமா என்பது நிழல், நிஜமல்ல எனவே நம்பாதீங்க.

அன்னைக்கு அந்தப் படத்தில் சொன்னது இன்னைக்கும் பொருந்துது என்பதுதான் வேடிக்கையாக இருக்கு!!  ஆனால்,  இந்தப் படம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா என்றால் அதுதான் இல்லை.   நிஜ வாழ்விலும் ஹீரோவை நல்லவனாகவும் வில்லனை அயோக்கியனாகவுமே  கற்பனை பண்ணி பழகிப் போன நம்ம பன்னாடைங்க,  அதில் நடித்த நிழல்கள் ரவி தான் ஹீரோவா நடிச்சு மக்களை ஏமாத்தும் அயோக்கியன் என்று அவர் போகுமிடமெல்லாம் அவரைக் கரித்துக் கொட்ட ஆரம்பித்தனர்.  அட தேவுடா இப்படி ஆயிடிச்சேடா என்று படத்தை எடுத்தவர்கள் முக்காடு போட வேண்டியதாயிற்று.

இந்த மாதிரி முயற்சிகளில் ஒரு முரண் இருக்கு.  சினிமாவின் தீங்குகளைப் பற்றி எடுத்துக் கூற இன்னொரு திரைப் படத்தை எடுத்தது ஒரு முரண்.  ஆனாலும், சினிமாவுக்கு குடுக்க வேண்டியதை விட அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று சொன்ன வகையில் இதை விட்டு விடலாம்.  ஆனால், வேறு சில முரண்களை நம்மாளுங்க செய்வாங்க அது அப்படி ஈசியா விட்டு விட முடியாத அளவுக்கு கொடுமையானதா இருக்கும்.  புத்தகத்தை படிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் ஒருத்தன் புத்தகத்தைப் போட்டான்!!  அந்த புத்தகம் பயங்கர சேல்ஸ் ஆகி ரெகார்டு பண்ணியது!! இது மாதிரி ஏற்க முடியாத ஒரு முரணை நம்ம ஐயா Dr. பழனி கந்தசாமி பண்ணி காமடியாக்கிகிட்டு இருக்கார்!!

இவர் சமீபத்தில் சிந்தனைத் தெளிவு என ஒரு பதிவு போட்டிருந்தார், இதில் அவர் இவ்வாறு சொல்கிறார்:

 \\நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று வேறு யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை. நீங்களாக ஒரு தெளிவு பெற்று வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது உங்களால் சிந்தித்து ஒரு தீர்வு காண முடியும். 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிந்தனைத் தெளிவுதான். நன்றாக சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவு பெறுங்கள். \\

ஆஹா..!! என்னாமா எழுதியிருக்காரு, மெய் சிலிர்க்குதே, இதில் என்ன முரண் என்று நீங்கள் கேட்கலாம். முதலில் "வாத்தியாரே தேவையில்லை" என்று வாழ்நாளில் பெரும்பகுதி வாத்தியார் தொழிலில் இருந்த ஒருத்தர் சொல்வது முரண்.  இதைக் கூட விட்டு விடலாம், இவர் சொல்வதை இவரே நம்பவில்லை என்பது தான் கொடுமை. அதற்க்கு இவர் போட்ட இந்த பதிவே சாட்சி.  வெளியில் இருந்து யாரும் நமக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது என்று இவர் இந்தப் பதிவில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்  வாத்தியார் வேண்டாமென்று சொல்ல வந்த இவர், இதை சொல்லிக் கொடுப்பதன் மூலம் வாத்தியார் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். நமக்கே எல்லாம் தெரியும் என்றால், "நாமே சிந்தித்து தீர்வை எட்ட முடியும்" என்ற செய்தியும் நமக்கே இன்னொருத்தர் வந்து சொல்லாமலேயே தெரிந்திருக்க வேண்டும். இவர் "நீங்களே சிந்தியுங்க" என்று சொல்லி பதிவும் போட்டிருக்கத் தேவையில்லையே!!  ஆக இவர் சொன்னதை இவரே நம்பவில்லை.  அடுத்தவங்க கிட்ட போயி அறிவுரை கேட்காதே என்பதே அறிவுரை தானே!!  இது தான் முரண் என்பது!!  

இத்தோடு நில்லாமல் நாம் கற்கும் பல நூல்களும் அவற்றில் இருந்து பெரும் அறிவும் உதவாது, குழப்பும் என்று சொல்கிறார்.  இதோ:


\\பல நூல்களைக் கற்கிறோம். பலருடன் கலந்து பழகுகிறோம். அறிஞர்களின் பேச்சைக் கேட்கிறோம். மதத் தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்கிறோம். இவைகளினால் நம் மூளையில் ஏகப்பட்ட செய்திகள் சேர்ந்திருக்கின்றன.

இத்தனை செய்திகளையும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை வாழ உபயோகப்படுத்துகிறோம். ஆனாலும் ஒரு வகைக் குழப்பத்தோடுதான் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள். ஏன் என்றால், நாம் செய்வது சரிதானா இல்லையா என்ற குழப்பம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது.\\

இவர் சொல்படி பார்த்தா பகவத் கீதை, திருக்குறள் இதெல்லாம் படிச்சு நமக்கு ஒன்னும் கிடைக்காது, வேஸ்டு!! 

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம், வாழ்வில் குழப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?  இவர் சொல்வது போல தனியா ரூம் போட்டு முகட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து யோசிச்சாலே போதுமா? அப்படின்னா பகவத் கீதை மாதிரி நூல் எதற்கு, ஸ்ரீ ராமானுஜர், சங்கராச்சாரியார் போன்ற மஹான்கள் எதற்கு?  நமக்கு இந்த மாதிரி கொள்கைகள் எற்ப்புடையதாக இல்லை. நாம் பகவத்கீதை காட்டிய பாதை நமது பாதை என்று ஏற்றுக் கொண்டு விட்டதால், அதில் இது குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.


அர்ஜுனனின் குழப்பத்தில் தான் பகவத் கீதையே ஆரம்பிக்கிறது. தன்னை எதிர்த்துப் போரிட வந்துள்ள தன்னுடைய பாட்டனார், ஒன்று விட்ட சகோதர்கள், அவர்களின் மகன்கள் போன்ற நெருங்கிய சொந்தங்களைப் பார்த்து அர்ஜுனன் புத்தி தடுமாறுகிறான், இவர்களை கொன்று குவிக்கும் போரில் ஈடுபடத்தான் வேண்டுமா, பேசாமல் பிச்சை எடுத்து வாழலாமே என்று பல்வேறு விதமாகச் சிந்தித்து குழம்பிப் போகிறான்.  அந்த குழப்பத்தில் இருந்து மீண்டு வர அவன் தனியே உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தானா?  இல்லை.  வாழ்வில் குழப்பம் நம்மை மொத்தமாக மூழ்கடிக்கும்போது அதிலிருந்து தப்பி கரையேற முக்கியமாக நாம் செய்ய வேண்டியது நமது வழிகாட்டியாக ஒரு குருவைத் தேர்ந்தெடுப்பது தான்.  அதைத்தான் அர்ஜுனன் முதலில் செய்தான்.  ஸ்ரீ கிருஷ்ணனரைப் பார்த்து, 

BG 2.7: நான் தற்போது என்னுடைய கடமை என்னவென்று தெரியாமல் முற்றிலும் குழம்பிய நிலையில் இருக்கிறேன், என்னுடைய கோழைத் தனத்தால் முற்றிலும் என்னையிளந்த நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டேன்.  இந்த நிலையில், எனக்கு மிகவும் உகந்தது எது என்று உறுதியாக எடுத்துரைக்கும்படி  உன்னைக் கேட்கிறேன்.  நான் இப்போது உனது சீடன், உன்னைச் சரணடைந்து விட்ட ஆன்மா, அருள்கூர்ந்து எனக்கு போதிக்கவும்.

இது தான் நாம் வாழ்வில் குழப்பத்தில் சிக்கினால் மீள்வதற்கான வழி.  புதை குழிக்குள் மாட்டிக் கொண்டவனால் தானாக தப்பி வெளியே வர இயலாது.  அவன் அவ்வாறு தப்புவதற்கு எந்த அளவுக்கு முயல்கிறானோ அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆழத்திற்க்குத்தான் செல்வானே தவிர தப்பி வெளியே வர இயலாது.  அதே சமயம், வெளியில் இருந்து ஒருத்தர் ஒரு கயிற்றைத் தூக்கிப் போட்டால் அதைப் பிடித்து நிச்சயமாக தப்பி வெளியேற முடியும்.

எனவே வாழ்வில் குழப்பம் ஏற்ப்பட்டால் தனியே உட்கார்ந்து சிந்திப்பது உதவாது, நல்ல ஆன்மீக வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து அவர் வழிகாட்டுதலில் நடந்தால் மட்டுமே கரையேற முடியும்.


 

9 comments :

 1. எனக்கு குழப்பம் வந்தா நல்லா தூங்கிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. குடுத்து வச்சவங்கம்மா நீங்க, குழப்பம் தூக்கத்தைக் கெடுக்கும்னு தான் இதுவரைக்கும் கேள்விப் பட்டிருக்கிறேன்!!

   Delete
 2. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று வேறு யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை. நீங்களாக ஒரு தெளிவு பெற்று வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது உங்களால் சிந்தித்து ஒரு தீர்வு காண முடியும்.

  அருமையான பதிவு நண்பா, சில வரிகள் வியக்க வைக்கிறது கலக்கலாக எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள். எனது குழப்பங்களை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவேன், இல்லை என்றால் தனிமையில் இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ, இப்படி சேம்சைடு கோல் போட்டுட்டியே ஆகாஷ்!!

   Delete
 3. எப்படியெல்லாம் எனக்கு விளம்பரம் பண்ணறாங்க! நன்றி ஜெயதேவ் தாஸ்.

  ReplyDelete
 4. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete
 5. எல்லாவற்றையும் நாமே சுயமாக கற்க வேண்டும் என்பது தேவையற்றது. அதற்கான நேரமும், வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நெருப்பு சுடும் என்பதை நாமே தீயில் கையை விட்டு தெரிந்து கொள்வதைவிட பிறரின் அனுபவத்திலிருந்து எளிதாக கற்றுக்கொள்ள முடியுமே!. சில பிரச்சினைகளுக்கு நமது அனுபவ ரீதியான தீர்வை விட, ஏற்கனவே அனுபவம் பெற்ற பிறரின் ரெடிமேட் தீர்வு எளிதாகவும், சரியானதாகவும் இருக்கும். சிறந்த சிந்தனை!

  ReplyDelete
 6. ஒரு ஞானியே போதும்!

  ReplyDelete
 7. வாழ்வில் குழப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆன்மீகத்தையும் நாடலாம்.

  ReplyDelete