பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது ஒருமுறை காம்யவனம் என்னும் வனப் பகுதியில் வசித்து வந்தனர். அங்கு ஒரு முறை கொடிய வறட்சி ஏற்பட்டது. அவ்வாறு இருக்கையில் ஒருநாள் மதியம் கடும் வெயில் நேரம், திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் கடும் தாகம் ஏற்ப்பட்டது. தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த குளங்கள் அத்தனையும் வற்றிப் போன நிலை. யுதிஷ்டிர மஹாராஜா எங்கேயாவது குடிக்க தெளிந்த நீர் கிடைக்குமா எனத் தேடித் பார்த்து கொண்டு வரும்படி தனது தம்பி பீமனை ஒரு பானையுடன் அனுப்பினார். பீமசேனன் பானையை தூக்கிக்கொண்டு, நடந்தான். ஒரு இடத்தை நோக்கி பறவைகள் செல்வதும் திரும்புவதையும் வானத்தில் பார்த்து அதை நோக்கி நகர்ந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் கம கம என வாசனையடிக்கும் தெளிந்த நீரைக் கொண்ட அழகான ஒரு ஏரியைக் கண்டான். ரொம்ப நேரம் நடத்து வந்த களைப்பை போக்கிக் கொள்ள முதலில் தண்ணீரைப் பருகலாம் என நினைத்து ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் கை வைக்கப் போனான். அப்போது, அங்கே ஒரு யக்ஷன் தோன்றினான்.
"நில், நீரைப் பருகும் முன்னர் என் கேள்விகளுக்குப் பதில் சொல், மீறினால் நீ உயிரிழப்பாய்" என்று இடியைப் போல அவன் குரல் வந்தது.
யக்ஷனின் எச்சரிக்கையை உதாசீனப் படுத்திய பீமன் தனது இரண்டு கைகளாலும் நீரை அள்ளினான். பருகும் முன்னர் அப்படியே நினைவிழந்து வீழ்ந்தான். பீமனை அனுப்பி வெகுநேரமாகியும் திரும்பாததால் கவலையுற்ற யுதிஷ்டிரர் என்னவாயிற்று எனப் பார்த்து வர தனது அடுத்த தம்பியான வில்வித்தை வீரன் அர்ஜுனனை அனுப்பினார். அவனும் அவ்வாறே அதே ஏரியை அடைந்தான், அங்கே மயங்கிக் கிடந்த தனது அண்ணனைப் பார்த்தான். சரி முதலில் தாகத்தை தீர்ப்போம், அப்புறம் பார்ப்போம் என முயன்ற அவனுக்கும் யக்ஷன் தோன்றி தனது கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லச் சொன்னான். அதை பீமனைப் போலவே உதாசீனப் படுத்திய அவனுக்கும் அதே கதி ஏற்ப்பட்டது, தொடர்ந்து நகுலன் சகாதேவன் என நால்வரும் அனுப்பப் பட்டு ஒருவரும் திரும்பாத நிலை. என்னதான் ஆயிற்று எனப் பார்க்க, யுதிஷ்டிர மகாராஜா தானே புறப்பட்டு ஏரிக்கரையை அடைந்தார் .
அங்கே கிடந்த தனது நான்கு சகோதரர்களையும் கண்டார். ஆயினும், முதலில் சிறிது நீரைப் பருகி தெம்பை வரவழைத்துக் கொண்டு அவர்களைக் கவனிப்போம் என ஏரியில் இறங்கி நீரில் கை வைக்கப் போனார். அப்போது அதே யக்ஷன் தோன்றி, "நீரைப் பருகும் முன்னர் எனது கேள்விகளுக்குச் சரியான பதில் சொல், மீறினால் உன் தம்பிகளுக்கு நேர்ந்த அதே கதி உனக்கும் நேரும்" என்றான். யுதிஷ்டிர மகாராஜா, "நீ உன் கேள்விகளைக் கேட்கலாம்" என்று பொறுமையாகச் சொன்னார்.
யக்ஷன்: சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்வது யார்?
யுதிஷ்டிரர்: எல்லா காரணத்துக்கும் காரணமான, தனக்கென்று ஒரு காரணமில்லாத இறைவன்தான் சூரியனை கிழக்கில் உதிக்கும்படிச் செய்கிறார்.
யக்ஷன்: பூமியினும் கனமானது எது? வானினும் உயர்ந்தது எது? ஒளியை விட வேகமாகச் செல்வது எது? புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விட அதிகமானது எது?
யுதிஷ்டிரர்: ஒருவனின் தாய் பூமியை விட கனமானவள், ஒருவனின் தந்தை வானினும் உயர்ந்தவர், ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது மனம், மனதில் எழும் எண்ணங்கள் புற்களின் இதழ்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதல்.
யக்ஷன்: உலகிலேயே மிகச் சிறந்த தர்மம் எது? சகிப்புத் தன்மைகளிலேயே மிகவும் சிறந்தது எது?
யுதிஷ்டிரர்: கருணையே மிகச் சிறந்த தர்மம். இன்ப-துன்பம், லாப-நஷ்டம், பிறப்பு-இறப்பு போன்ற இரட்டை நிலைகளைத் தாங்கிக் கொள்வதுதான் சகிப்புத் தன்மைகளிலேயே மிகச் சிறந்ததாகும்.
யக்ஷன்: மனிதனின் வெல்ல முடியாத எதிரி யார்? அவர்களின் தீராத வியாதி என்ன? யார் புனிதமானவர், யார் புனிதமற்றவர்?
யுதிஷ்டிரர்: கோபமே மனிதனின் வெல்ல முடியாத எதிரி. பேராசையே தீராத வியாதி. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவரே புனிதர், தனது புலன்களை கட்டுப் படுத்தாத கொடூரனே புனிதமற்றவன்.
யக்ஷன்: யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? மிகப் பெரும் விந்தை எது? உண்மையான பின்பற்றத் தக்க வழி எது? எது செய்தி?
யுதிஷ்டிரர்: எவன் ஒருத்தனுக்கு கடன் இல்லையோ, எவன் ஒருவன் வெளியூரில் வசிக்கவில்லையோ, எவன் ஒருவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உண்ண முடிகிறதோ அவனே மகிழ்ச்சியானவன்.
தினமும் சாவு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், வாழும் ஒவ்வொருவரும் தான் மட்டும் ஒருபோதும் சாகமாட்டோம் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இதுதான் உலகிலேயே மிகப் பெரும் விந்தையாகும்.
வாழ்வில் உண்மையான பின்பற்றத் தக்க வழியைக் கண்டுபிடிக்க வாத-விவாதம் உதவாது. நீதி நூல்களும் எக்கச் சக்கம். முனிவர்களின் கருத்துகளும் ஆளாளுக்கு மாறுபடுகிறது. தர்மத்தின் உண்மை மிக ஆழமானது. சான்றோர்கள் பின்பற்றும் வழியே சாலச் சிறந்தது, நாமும் அத்தகைய மகாஜனங்களின் அடியைப் பின்பற்ற வேண்டும்.
உயிரினங்கள் அனைத்தையும் காலம் தீச்சட்டியில் போட்டு, மாயை, பொய் கவர்ச்சி ஆகியவற்றால் சிக்கவைத்து வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மாதங்கள், பருவங்கள் ஆகிய மாற்றங்கள், கரண்டியால் புரட்டுவதாகும். சூரியன் என்ற அடுப்பு, இரவு பகல் ஆகியவற்றை எரிபொருளாக கபளீகாரம் செய்து நம்மை சமைக்கிறது. இது ஒன்று மட்டும் தான் மொத்தத்தில் செய்தியாகும்.
யக்ஷன்: அரசே!! உமது பதில்களால் யாம் திருப்தியடைந்தோம். தற்போது உமது தம்பிகளில் ஒருவரை மட்டும் நீர் மீட்டு அழைத்துச் செல்லலாம். செப்பும், யார் வேண்டும் என்று!!
யுதிஷ்டிரர்: கரிய நிறம் கொண்ட என் தம்பி நகுலன் உயிரோடு வேண்டும்.
யக்ஷன்:[இதைக் கேட்டு ஒரு நிமிஷம் திகைத்துப் போகிறார்!!]. உமது தேர்வு என்னை வியக்க வைக்கிறது. ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைக் கேட்டிருக்கலாம் அல்லது வில் வித்தையில் யாருக்கும் சளைக்காத அர்ஜுனனைக் கேட்டிருக்கலாம், நகுலனை ஏன் தேர்தெடுத்தீர்?
யுதிஷ்டிரர்: எங்கள் தந்தைக்கு இரு மனைவியர், குந்தி, மாத்ரி. என் அன்னை பெயர் சொல்ல நான் இருக்கிறேன், எங்கள் சிற்றன்னை பெயர் சொல்ல அவள் வயிற்றில் பிறந்த ஒருவர் வாழ வேண்டும், அதற்காகத்தான் நகுலனை கேட்டேன்.
யக்ஷன்: தர்மத்தின் வழி தவறாத உம் நடத்தையை யாம் மெச்சினோம், இதோ உங்கள் தம்பியர் அனைவரையும் திரும்பத் தருகிறோம், அழைத்துச் செல்லும்!!
அந்த யக்ஷன் வேறு யாருமல்ல. தர்மராஜா எனப்படும் எமதர்மனே தான்!!