Thursday, January 3, 2013

ஹாக்கி வீரர் வடிவமைத்த வியத்தகு மின்விசிறி

வணக்கம் மக்காஸ்.   அதென்னடா வியத்தகு மின்விசிறி, போய்த்தான் பார்ப்போமேன்னு என்னோட கடைக்கு உள்ளே வந்த உங்க மனோ தைரியத்தையும், புதிய கண்டுபிடிப்புகள் மேல் உங்களுக்குள்ள ஆர்வத்தையும்  நான் ரொம்ப அப்பிரிஷியேட் பண்றேன்!!  முதலில் தலைப்பில் சொல்லப் பட்டுள்ள ஹாக்கி வீரர்  யாருன்னு உங்களுக்கு அறிமுகப் படுத்திடறேன்.  அவர் என் வீட்டு பாஸோட அண்ணா, என் மைத்துனர்.  கல்லூரியில் படிக்கும் போது பல்கலைக் கழக அளவில் ஹாக்கி  அணிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தேசிய அணியில் இடம் பிடிக்க டெல்லிவரை சென்றவர், ஆனால் அது கை கூடவில்லை.  விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் படிப்பை முடிக்கும் முன்னரே சென்னை AGS அலுவலகத்தில் வேலை கிடைத்து தற்போது வரை அங்கேயே பணி புரிந்து வருகிறார்.   இன்றும் அவர்கள் அலுவலக [TN - zone] அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்வது வழக்கம்.  ஒருமுறை அவ்வாறு ஹைதராபாதிற்கு விளையாடச் சென்றார்.  வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை ஒரு நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.  அந்த சமயம் இவருக்கு வழங்கப் பட்டது ஒரு அழகான தரமான மின்விசிறி.  அதை பார்சலோடு வாங்கி வந்தவர் வீட்டில் வைத்துவிட்டு மறந்தே போனார்.   அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவரது தாய் மாமா, [இவர் சிங்காரச் சென்னையின் புகழ்பெற்ற பேருந்து கழகத்தில் கண்டக்டர்!!] வீட்டிற்கு கேஷுவல் விசிட் அடித்தபோது இந்த மின்விசிறியைப் பார்த்திருக்கிறார்.

"டேய் மச்சி, என்னடா இது பார்சலு?"

"நான்   ஹைதராபாத் விளையாடப் போனப்போ ஸ்பான்சர் பண்ணியவங்க ஜெயிச்சதுக்காக குடுத்த கிஃப்ட் மாமு!!"

"அப்படியா, திறடா பார்ப்போம்!! ஆஹா, சூப்பர் ஃ பேன்டா. டேய் ஒரு ஸ்குரூ ட்ரைவர், டெஸ்டர் இருந்தா கொண்டுவா, இதை ஃ பிட் பண்ணி மாட்டலாம்'' என்று சொல்லி எல்லாத்தையும் பிரித்துப் போட்டார்.


மின்விசிறியின் பாகங்களை இருவரும் ஆராய்ந்தனர்.  அதன் இறக்கைகளைப் [Blades] பார்த்தபோது ஒரு விஷயம் விந்தையாகப் பட்டது.  இறக்கையும், அதனை மையத்தில் உள்ள மோட்டருடன் இணைக்க உதவும் 'T' வடிவப்  பகுதியும்  நேராக இல்லை.  T பகுதி சற்றே வளைந்த மாதிரி இருந்தது.  இது ஏன் என்று கண்டக்டருக்குப் புரியவில்லை.

"ஏன்டா மச்சி இந்த மாதிரி இருக்கு?"

"தெரியலையே மாமு, எங்கே இன்னும் இரண்டு இறக்கையை பாருங்க"

"டேய், எல்லாமே வலைஞ்சுதாண்டா இருக்கு!!"

"மூன்றையும் ஒன்னு மேல ஒண்ணா வச்சுதானே மாமு பார்சல் பண்ணுறான், நான் டிரெயினில் எடுத்துகிட்டு வந்தப்போ எங்கோ அடி பட்டு மூணுமே வளைஞ்சு போச்சு போல!!"

"சரிடா, இதை நேராக்கிடலாம்.  நீ  ஒன்னு பண்ணு, ஒரு கல்லையும், சுத்தியலையும் கொண்டாடா"

"மாமு, கல்ல வச்சி தட்டினா பெயிண்டு டேமேஜ் ஆயிடுமே, பார்க்கிறதுக்கு அசிங்கமா இருக்குமே?"

"அப்போ ஒரு கோணிப்பை இருந்தா குடு, அதுக்கு உள்ளே வச்சி மெதுவா தட்டி நிமிர்த்தி விடலாம்"

ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வழியாக அடித்து, தட்டி இறக்கையின் முழுப்பகுதியும் நேராக்கினார்கள்.  கோணலே எங்கும் இல்லை.  எல்லாம் பர்ஃபக்ட்!!



தற்போது இறக்கைகளை மோட்டார் உள்ள மையப் பகுதியோடு இணைக்க வேண்டும்.  இவர்கள் தான் கில்லாடிகளாச்சே இணைத்தார்கள்.  அடுத்து மேலே சீலிங்கில் தூக்கி மாட்டி மின் இணைப்பையும் கொடுத்தனர்.



"ஸ் ..........  அப்பாடா.....  எல்லாம் முடிஞ்சதுடா, மச்சி, எங்கே ஸ்விட்சைப் போடு"

"நீங்க கீழே இறங்குங்க மாமு, நான் போடறேன்"

அவர் ஸ்டூலில் இருந்து கீழே இறங்கினார்.  ஹாக்கி வீரர்  வேகம் 1-ல்  வைத்து  ஸ்விட்சைப் போட்டார்.   மின்விசிறி அற்புதமாக ஓடியது.  எந்தக் குறையும் இல்லை.  ஆனால்...........!!   மின்விசிறியில் இருந்து காற்று மட்டும் வரவில்லை[?!].  தப்பு.........  தப்பு.......  காற்று வீசிக் கொண்டு இருக்கலாம், ஆனால் கீழே நிற்ப்பவர்  உணரத்தக்க அளவுக்கு காற்று  வரவில்லை.

"மாமு, என்னது காத்து வர்றா மாதிரியே ஃ பீல் ஆவலியே?!!"

"டேய், மாங்கா.....  ஸ்பீடை 1-ல வச்சிட்டு  புயல் மாதிரி காத்து வரும்னு பார்க்கிறியா?  கொஞ்சம் ஜாஸ்தி பண்ணுடா, காத்து வரும்"

"அட ஆமாம், சரி 2-ல் வைப்போமோ....... " என்று ஹாக்கி வீரர் ஸ்விட்சைத் திருப்பினார்.  விசிறியின் வேகம் கூடியது.  காத்து வந்துச்சா?  இப்பவும் ம்ஹூம்.  ஒன்னும் வித்தியாசமே தெரியவில்லை.  3, 4, 5........  எல்லாம் வச்சாச்சு!! அதுக்கு மேல வைக்க முடியாது!!   மின்விசிறி வேகமா ஓடுது.  ஆனா, காற்று மட்டும் கீழே வரவேயில்லை!!  இவ்வளவு வேகமா ஓடும் மின்விசிறியில் இருந்து ஏன் காற்று வீசவில்லை என்று இருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.   ரொம்ப நேரம் முயன்று பார்த்துவிட்டு  எதுவும் பலனளிக்காமல்  தங்களுக்குத்  தெரிந்த ஒரு  எலக்டிரீஷியனை அழைத்து வந்து காண்பித்தனர்.  அவருக்கும் முதலில் எதுவும் புரியவில்லை.  என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.  முழு கதையையும் மாமனும் மச்சானும் சொன்னார்கள்.

அதைக் கேட்டுவிட்டு, "ஏன்யா ஃ பேன் செய்தவன் என்ன பைத்தியக்காரனா?  அதன் இறக்கை சற்றே வளைந்திருந்தால் தானே காற்றை அதனால் தள்ள முடியும், நீங்கள் நேராக்கிவிட்டீர்கள், தற்போது அது கற்றை எந்த தொந்தரவும் செய்யாமல் ஜோராக ஓடுகிறது, என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடடா, இவ்வளவு கேனையாக இருந்துவிட்டோமே என்று,  மின்விசிறியைக் கலட்டி  மீண்டும் குத்து மதிப்பாக "T " பகுதியை மட்டும் வளைத்தார்கள்.  திரும்பவும் இணைத்து ஓட்டிப் பார்த்தார்கள்.  ஆனால் மின்விசிறி மசியவில்லை.  "பெப்பே..."  காட்டியது.  கடைசியில் சலித்துப் போய் ஏமாற்றத்துடன்  அதை மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டனர்!! பழைய இரும்புக்காரனுக்காக அது இன்னமும் அங்கேயே தூங்கிக் கொண்டிருக்கிறது!!

நீதி:   நம்மிடம் நிறைய குறைகள் இருக்கலாம்.  ஆனால் அவை எல்லாம் நீங்கி  நான் எல்லா விதத்திலும் 100% Perfect ஆக இருக்க வேண்டுமென்று நாம் முயற்சி செய்கிறோம்.  அது தவறு.  குறைகளை நினைத்து வருந்தாமல், நம்மைப் படைத்தவன் ஒரு நோக்கத்தோடுதான் அக்குறைகளை நம்மிடம் வைத்துள்ளான் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்!!

[இப்படியெல்லாம் நீதி சொல்றேன்னு  கிளம்பிட்டானுவளே!!]


3 comments:

  1. நல்ல பதிவு நண்பா..

    ReplyDelete
  2. அடிபட்டாத்தானே தெளிவு வரும்?!

    ReplyDelete
  3. சரிய தப்புன்னு நினச்சதால வந்த தப்பு.அழகா சொல்லிட்டீங்க பாஸ்

    ReplyDelete