சினிமாவை நுணுக்கமாக கவனித்து அதிலுள்ள விசேஷங்களைப் பற்றி பதிவு போட்டு, அதன் மூலம் மக்கள் சேவையில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் இன்றைக்கு அதே மாதிரி ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி அலசி ஆராயப் போகிறோம். அது சமீப காலங்களில் வெளி வந்த புத்தகம், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் நண்பன் ஆகிய மூன்று படங்களுக்குமிடையே ஒரு சம்பந்தம் இருக்கிறது, அது என்ன என்பது தான்.
சமீபத்தில் வெளிவந்த புத்தகம் படத்தில் இருந்து ஒரு காட்சி. என்னது அப்படி ஒரு படம் வந்துச்சான்னு கேட்கிறீங்களா? வேற வழியில்ல நம்புங்க, வந்துச்சு!! அதில் நம்ம மார்கண்டேயணி நதியா கூட ஒரு காலத்தில் அதிகம் டூயட் பாடிக் கொண்டிருந்த முன்னாள் சாக்கலேட் பாய் சுரேஷ் அரசியல்வாதியாக ஒரு ஜெயிலில் இருந்து வெளிவருவது போல ஒரு காட்சி.
அந்தக் கட்டிடத்தை உங்களால் எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? முடியவில்லையென்றால் அடுத்த ஐந்து படங்களைப் பாருங்கள்.
இவை சமீபத்தில் வெளிவந்து கார்த்தியின் பெயரை மேலும் கெடுத்த அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் இருந்து சில காட்சிகள். கார்த்தி சிறைக் காவல் அதிகாரி, அவரது பாசமிகு சித்தப்பூ அதே சிறையில் இருந்து வெளியே வரும் ஒரு குற்றவாளி!! இதன் பெயர் மத்திய சிறைச்சாலை என்று படத்தில் காணப் படுகிறது. இப்போதாவது இது எந்த இடம் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? உங்களில் சிலருக்கு முடியலாம்.
கைதிங்க இருக்கும் அறையில் இருந்து ஒரே ஒரு கேட் மட்டுமே இருக்கும் படி எந்த சிறையாவது அமைத்திருப்பார்களா?!! நீங்கள் யூகித்தது சரிதான். உண்மையில் இது சிறையல்ல, மாணவர்கள் ஹாஸ்டல். சரியாகச் சொல்லப் போனால் இது சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்கும் "விக்டோரியா ஹாஸ்டல்", திருவல்லிக் கேணியில் அமைந்துள்ளது.
இதை மாணவர்கள் விடுதியாகவே டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் காட்டியிருக்கிறார். இதோ, பாருங்கள், புரியும்!!
இந்த மூணு படத்திலும் சில காட்சிகள் இந்த விடுதியில் படமாக்கியிருக்காங்க இவை சமீபத்திய படங்கள். இதுதான் இந்த மூன்றுக்குமுள்ள ஒற்றுமை. ஹி ........ஹி ........ஹி ........
அதுசரி, இந்த விடுதியைப் பத்தி ஒரு பதிவா போட வேண்டிய அவசியமென்ன? பொறவென்னங்க ஒருத்தன் தான் தங்கியிருந்த விடுதியை படத்தில் அடிக்கடிப் பார்த்தா அதை தன நண்பர்களுக்குச் சொல்லி பெருமைப் பட்டுக்க ஆசைப் படமாட்டானா!! அதான்.
விடுதிக்கு நம்மைக் காண வரும் நண்பர்களில் சிலர் இதென்னது ஜெயில் மாதிரி இருக்கு என்று கேட்பதுண்டு. அப்போது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை. ஏனெனில் நாம பார்த்த சினிமாக்களில் உள்ள சிறைகள் அப்படி இருந்ததில்லை. அப்புறம் அந்தமான் போன பின்னர்தான் விளங்கியது. நம்ம டைரக்டர்கள் கண்ணிலும் விக்டோரியா விடுதி ஜெயிலாகவே தோன்றியிருப்பதில் வியப்பே இல்லை!!
என்னங்க இன்னைக்கு ஒரு மரண மொக்கை பதிவை படிச்ச திருப்தி உங்களுக்கு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன், சரிதானே!! அய்யய்யோ, உங்க முகம் எப்படியெல்லாமோ மாறுதே............. நான் எஸ்கேப்..............!!
நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட விதம் விதமான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன.
இவை எப்படி உருவாயின? இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் படைத்தான் என்றே
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் எண்ணி வந்தனர். 1859 ஆம் ஆண்டு ஒரு
ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப்
போட்டார். உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும்
இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார். அதாவது, கடவுள் ஒன்றும்
மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதக் குரங்கு போன்ற மற்ற
சிறிய விலங்கினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவானான் என்றார்.
150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி
நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக
விளங்கி வருகிறது.
இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பரிணாமக் கொள்கை வெறும் உயிரற்ற கல்லும் மண்ணுமாக இருந்த உலகில் முதல் உயிருள்ள செல் எவ்வாறு தோன்றியது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, ஒருசெல் உயிரி முதலில் இருந்தது, பின்னர் பலசெல் உயிரிகள் தோன்றின அவைற்றில் இருந்து பல்வேறு உயிரினங்கள் பரிணமித்துத் தோன்றின என்பதே பரிணாமக் கொள்கை. முதன் முதலாக ஒன்று அல்லது சில உயிர்களுக்கு கடவுள் மூச்சைக் கொடுத்து
உயிரை உண்டு பண்ணியிருக்கலாம் என்று டார்வின் சொன்னார். டார்வின் கடவுள்
இருப்பதை இதன் மூலம் ஒப்புக் கொண்டாலும், பின்னர் வந்த பரிணாம வாதிகள்
அதையும் நிராகரித்து படைப்பில் இருந்து கடவுளை மொத்தமாகவே நீக்கிவிட்டனர்.
இவ்வாறு 150 வருஷமா குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த பரிணாமக் கொள்கை அறிவியல்பூர்வமானதுதானா என்று நாம் இங்கே அலசப் போகிறோம். இதற்கு காரணமும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில் பொதுமக்களிடையே "பரிணாமக் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?" என்று வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப் படுவதை நீங்கள் பலமுறை செய்திகளில் படித்திருக்கலாம். நாய் போன்ற விலங்கொன்று தான் தண்ணீருக்குள் சென்று திமிங்கலமா மாறியது, டைனோசர்கள் தான் பறவைகளாக மாறியது என ஒரு அறிவியல் கொள்கை விநோதமாக இருக்கிறதே என்று மக்கள் நம்ப மறுப்பதால் தான் இவ்வாறு வாக்கெடுப்பு எடுக்கப் படுவதாக நீங்கள் நினைத்தால் அங்கே தான் தப்பு செய்கிறீர்கள்!! வினோதம் என்று பார்த்தால், குவாண்டம் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையும் பரிணாமக் கொள்கையை விட பலமடங்கு விநோதமானவை. நம் நடைமுறை வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் மண்டையை பீய்த்துக் கொள்ள வைக்கக் கூடிய கொள்கைகள் அவை. ஆனாலும், அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று யாரும் வாக்கெடுப்பு நடத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் பரிணாமக் கொள்கைக்கு அது நடக்கிறது. காரணம் என்ன? வேறொன்றுமில்லை, முன்னவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டவை, பரிணாமக் கொள்கை கற்பனையாகத் திரிக்கப் பட்டது, சல்லி ஆதாரம் கூட இதுவரையிலும் காட்டப் படாதது, கட்டுக் கதைகளையும், பொய்யையும் புனைசுருட்டுகளையும் வைத்தே 150 வருடங்களாக ஓட்டப் படும் ஒரே கற்பனை சினிமா இந்த பரிணாமக் கொள்கை. இதனால் தான், பெரும்பாலான மக்களுக்கு
டார்வினின் கொள்கையில் நம்பிக்கை இல்லை, அதில் நம்பிக்கை உள்ளதா என்று வாக்கெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.
பரிணாமத்தில் பல வகை உண்டு. அவையாவன:
Chemical Evolution: [வேதிப் பொருட்கள் இணைந்து உயிர் உருவானதாக கருதுதல்]. இதன்படி முதலில் தனிமங்கள் [ஹைட்ரஜென், கார்பன் போன்றவை] இருந்தன, அவை சேர்ந்து மூலக்கூறுகளாயின, பின்னர் DNA, புரோட்டீன் தோன்றி ஒரு செல் உயிர் தோன்றின என்று சொல்கின்றனர்.
Biological Evolution: [உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சி] இதன் பொருள், முதலில் தோன்றிய ஒரு செல் உயிர்களில் இருந்து பலசெல் உயிர்கள் என படிப்படியாக பரிணாமம் அடைந்து மீன்கள், தவளை, ஆமை, குரங்குகள் இறுதியாக மனிதன் என இன்றைக்கு நாம் காணும் அனைத்து உயிரினங்களும் தோன்றின என்பதாகும்.
Biological Evolution-னிலும் இரண்டு வகைகள் உண்டு அவை:
1. Micro Evolution & 2.Macro Evolution.
Micro Evolution: மைக்ரோ பரிணாமம் என்றால் ஒரு இனத்திற்குள்ளாக நடைபெறும் பரிணாமம். உதாரணத்திற்கு, நாய்களை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன. சிலது மிகச் சிறியதாக உள்ளது, சிலது கன்றுகுட்டி சைசுக்கு வளர்கின்றன. இது ஒரு இனத்தினுள் காணப்படும் மாறுபாடு.
Macro Evolution: ஒரு உயிரினம் பரிணாமமடைந்து வேறொன்றாக மாறுவதாகச் சொல்வது. இதில் மிகவும் பிரபலமானது மனிதக் குரங்கு மனிதனாக மாறியதாகச் சொல்லப்படும் கதை. இதோடு நில்லாமல், நிலத்தில் திரிந்து கொண்டிருந்த கரடியைப் போல மாமிச உண்ணி ஏதோ ஒன்றுதான் திமிங்கலமாக மாறியது என்பது போன்ற அதிரடியான பல கோட்பாடுகளும் இதனுள் அடக்கம்!!
இத்தனை விதமான பரிணாமக் கோட்பாடுகள் இருந்தாலும், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகபரிசோதனைகளுக்கு உட்படுத்தப் ப ட்டு பின்னர் ஏற்கப் பட்டவைதானா என்பதே அலசுவதே நமது இந்தப் பதிவின் நோக்கமாகும்.
விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?
ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.
முதலில் Observation: முதலில் கல்லும் மண்ணும் தான் இருந்தது, அதிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உயிர்கள் தோன்றின. இதற்க்கு ஏதாவது சான்றாக உள்ளதா என நாம் தற்போது வாழும் உலகைப் பார்க்கவேண்டும். எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா? பாதி தவளை-பாதி மீன்? பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்? இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!! எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைந்த உயிரினங்கள் என்று எதுவும் இல்லை.
அப்படியானால் பரிணாமம் எப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்? முன்னொருகாலத்தில்!! அப்போ அதற்க்கு ஆதாரம் என்ன? கற்படிவம் எனப்படும் Fossils. பல்லாயிரம்/மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உடல்கள் Fossil களாக பூமிக்கடியில் பாதுக்காக்கப் பட்டுள்ளன. இதைக் குறித்த படிப்பிற்கு பெயர் Paleontology எனப்படும்.
உலகில் இவ்வகையான கற்ப்படிவங்கள் [Fossils] 20 கோடி சேகரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் பாக்டீரியாக்கள், புழுக்கள், பூக்கள் எல்லாமும் அடங்கும்.
10 கோடி முதுகெலும்பற்ற உயிரினங்கள். நத்தை, நட்சத்திர மீன் போன்றவை.
10 லட்சம் பூச்சியினங்கள்.
5 லட்சம் மீன்கள்
2 லட்சம் பறவைகள்.
1 லட்சம் டைனசோர்கள்
4000 திமிங்கலம்.
1000 வவ்வால்கள்.
இந்த எண்ணிக்கைகளில் சேகரிக்கப் பட்ட இத்தனை கற்படிவங்களை ஆராய்ந்த பின்னரும் கிடைத்த முடிவுகள் ஒன்று கூட பரிணாமத்துக்கு ஆதரவாக இல்லை. எந்த
உயிரினத்தை எடுத்தாலும் அவை முழுமையாக வளர்ச்சியடைந்த வடிவமைப்பையே பெற்றுள்ளன, இரண்டுங் கெட்டான் நிலையில்
[Intermediary] எந்த கற்படிவமும் இல்லை. மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை. மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.
எதை வச்சு டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனச் சொன்னார்? இதுக்கு அவர் பெரிய ஆராய்ச்சிகள் எதையும் செய்திருக்கவில்லை. மனிதனையும், மனிதக் குரங்கையும் பார்த்தார் தோற்றம் கிட்டத் தட்ட மனிதளைப் போலவே ஒரே மாதிரியாக இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என அடிச்சு விட்டார். மேலும், இதைப் போல ஒரு உயிரினம் இன்னொன்றாக பரிணாமம் அடைந்தது என்பதில் பெரிய லாஜிக்கல் ஓட்டை உள்ளது. உதாரணத்திற்க்கு, மனிதக் குரங்கு மனிதனாக மாறியதை எடுத்துக் கொள்வோம்.
Ape [ஆரம்பம் குரங்கு] ------ Ape-Man [மனிதனுக்கும், குரங்குக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள உயிரினம்] ------------- Man [இறுதியாக மனிதன்].
டார்வின் ஏன் பரிணாம வளர்ச்சி யடைகிறது என்பதற்கு Survival of the Fittest என்ற ஒரு விளக்கத்தைச் சொன்னார். அதாவது கால சூழ்நிலைகளில் ஏற்ப்படும் மாற்றத்தை தாங்கி நிற்கும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே வாழும். அப்படிப் பார்த்தால் மேலே Ape என்ற இனம் Ape -man என்ற நிலைக்கு மாறக் காரணமே, மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ள Ape வடிவம் லாயக்கற்றது, அதனால்தானே?! அப்படியானால் Ape -man என்ற இரண்டுங் கெட்டன் நிலை Ape ஐ விடச் சிறந்ததாகவே இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வாழத் தகுதி குறைந்த Ape இருக்கிறது, முழுமையாக மாறிய மனிதனும் இருக்கிறான், ஆனால் Ape ஐ விட அதிக வாழும் தகுதி படைத்த Ape -Man மட்டும் ஏன் இல்லை??!! என்ன கொடுமை டார்வின் இது?
இப்படியெல்லாம் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்டதும், பரிணாமவாதிகள் உட்கார்ந்து ரூம்போட்டு யோசித்தனர். நல்லா கவனிங்க, இவனுங்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இன்னமும் செய்யவில்லை, கதை எப்படி கட்டுவது என்று தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!! ஒரு வழியா முடிவு பண்ணி, இன்னொரு கப்சாவை அவிழ்த்து விட்டனர். குரங்கு மனிதனாக ஆகவில்லை, குரங்கும், மனிதனும் ஒரே பொது முன்னோரில் இருந்து தோன்றினர் என்று தோசையை திருப்பிப் போட்டனர்!! அது யாரப்பா இருவருக்கும் பொதுவான முன்னோர் உயிரினம் எனக்கேட்டால், "அதான் அழிந்து போன இனத்தில ஒன்னு" என்றனர். அதற்க்கும் எந்த ஆதாரமும் எதிலும் கிடையாது!!
மேலும் கிடைத்த கற்படிவங்களில் தோன்றும் வடிவங்கள், கொசு, தலை பிரட்டை தவளை என எதைஎடுத்தாலும் இன்றைக்கு அவை எவ்வாறு உள்ளனவோ அதே மாதிரிதான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் இருக்கின்றனவே அன்றி பரிணாமம் அடைந்து மாறுபட்டதாக இல்லை.
ஆக மொத்தத்தில், எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த கற்படிவங்களை பார்த்தாலும் அவற்றுக்கு முன்னோர்கள் இவைதான் என்பது போல எவையும் இதுவரை இல்லை, எனவே எந்த உயிரினமும் படிப்படியாக பரிணாமம் அடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதற்குப் பின்னரும் இன்று வரை எந்த மாற்றமும் அடைந்ததாகவும் சான்றுகள் இல்லை. பரிணாமம் நிகழ்ந்தது என நிரூபிக்க இவையிரண்டும் முக்கியம், ஆனால் எந்த சான்றுகளும் இவற்றுக்கு ஆதரவாக இல்லை.
ஆனாலும் பரிணாம வாதிகள் அசரவில்லை. ஒவ்வொரு பித்தலாட்டமாக அரங்கேற்ற ஆரம்பித்தனர். அதிலில் முதலில் வருவதுதான் பாதி குரங்கு, பாதி மனிதன் மண்டையோடு கதை. [The Piltdown Man Hoax சுட்டி] 1912 ஆண்டு ஹிண்டன் மற்றும் சார்லஸ் டாசன் என்று இரண்டு பேர் இங்கிலாந்தில் பில்ட்டவுன் என்னுமிடத்தில் 5 லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மண்டையோட்டு படிவம் கிடைத்ததாகவும் அதன் தாடை குரங்கைப் போலவும், கடைவாய்ப் பற்கள், மண்டையோடு மனிதனைப் போல இருப்பதாகவும் கதைகட்டி நம்பவைத்தனர். இது குரங்குக்கும் மனிதனுக்கும் சேர்த்த பொதுவான மூதாதையர் இனம் என்றும், பரிணாமம் நடந்தது என்பதற்கான சான்று என்றும் கூறி, இப்படிவம் உலகின் பல முன்னணி அருங்காட்சியகங்களில் வைக்கப் பட்டது. இதைப் பார்வையிட்ட பெரிய பெரிய விஞ்ஞானிகள் கண்களுக்கும் எதுவும் தவறாகப் புலப்படவில்லை, கோடிக் கணக்கான அப்பாவி மக்களும் உண்மை என்றே நம்பினார். அடுத்த 40 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 500 Ph.D ஆய்வுக்கட்டுரைகள் இதை வைத்தே கயிறு திரிக்கப் பட்டன. இறுதியாக பிரிட்டிஷ் அருங் காட்சியகம் ஒன்றில் இப்படிவம் வைக்கப் பட்டது. 1949 ஆண்டு, கென்னத் ஓக்லி என்ற படிவ ஆய்வாளர், படிவங்களின் வயதைக் கண்டுபிடிக்கும் ஃபுளோரைடு பரிசோதனை என்னும் புதிய முறையை உருவாக்கியிருந்தார், அவர் தனது முறையை இதற்க்கு பயன்படுத்த எண்ணி இப்படிவத்தை ஆராய்ந்த போதுதான் இது போலி என்று தெரிய வந்தது. இதன் தாடை சமீபத்திய உராங்குட்டான் குரங்கினுடையது என்றும், மண்டையோடு சில நூறு வருடங்களுக்கு முன்னர் வந்த மனிதனுடையதே என்றும் தெரியவந்ததது. மேலும், இதன் தாடையை ரம்பம் போட்டு அறுத்த கோடுகள் கூட தெரிந்தது. இரண்டையும் ஒட்டி இத்தனை வருடங்களும் ஏமாற்றி இருக்கிறார்கள் அந்தப் புண்ணியவான்கள். [Popular Science சுட்டி]
இவர்கள் செய்த அடுத்த பித்தலாட்டம், ஆப்பிரிக்க காங்கோ காடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்த ஒடா பெங்கா [OTA BENGA] என்ற ஒரு மனிதனை பிடித்து வற்புறுத்தி கை கால்களுக்கு விலங்கிட்டு கூண்டில் ஒரு மிருகத்தை அடைப்பது போல அடைத்து அமரிக்காவுக்குக் கொண்டு சென்று பல வருடங்கள் Zoo வில் மற்ற மிருகங்களைப் போலவே வைத்து கொடுமைப் படுத்தியதாகும். அங்கே ஒரு உறங்குட்டான் குரங்கை தன்னோடு வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு போஸ் குடுக்க வேண்டுமென்று துன்புறுத்தப் பட்டிருக்கிறார். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டாலும் தனது கூட்டத்தோடு சேர்க்கப் படமாட்டார் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். [சுட்டி] தாங்கள் எடுத்துக் கொண்ட போலிக் கொள்கையை உண்மையாக்க எல்லா அயோக்கியத் தனகளையும் செய்யத் துணிந்தவர்கள் இந்த பரிணாம வாதிகள் எனபதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இதற்க்கடுத்தார் போல வருவது பித்தாலாடத்துக்கே பெயர் பெற்ற நம்ம சீனாக் காரனுங்க செய்த வேலை. இவனுங்க ஒரு டைனோசரின் படிவத்தை எடுத்து அதை பறவை போல செய்து பார்த்துக்கோங்க டைனோசர்தான் பறவைகளாக மாறியது என்று ஏமாற்றினார். இந்தப் படிவம் ஆராயப் பட்டு போலி என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும், இதற்க்கு செவிசாய்க்காத நேஷனல் ஜியோகிராபிக் சேனல் இதை உண்மை என்றே ஒளிபரப்பியது.
அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் இன்னொரு கொள்கையும் வலம் வந்து கொண்டிருந்தது. உறுப்பை பயன்படுத்தும் விதத்தில் அது எவ்வாறு பரிணாமம் அடையும் என்பது குறித்த கொள்கை இது. உதாரணத்திற்க்கு ஒட்டகச் சிவிங்கி, அது மான் மாதிரி ஒரு இனம், அதன் கழுத்து முதலில் குட்டையாத்தான் இருந்துச்சு. இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கீழே இருந்த இலைகள் தீர்ந்து போச்சு, அதனால மரத்தின் மேலேயுள்ள இலைகளைப் பறிக்க எம்பி எம்பி கழுத்து நீண்டு பல தலைமுறைகளுக்குப் பின்னர் இப்போது உள்ள நிலையை அடைந்தன என்று ஒரு கதையுண்டு. இது ஒரு உறுப்பை அதிகமாக உபயோகிப்பதால் வந்த வினை. ஆனால், இது உண்மையா? ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளம், அவ்வளவு உயரத்துக்கு இரத்தத்தை ஏற்றுவதற்கு இதயம் அதீத அழுத்தத்தை செலுத்தும். [280/180mm Hg]. ஆனால் அது தண்ணீர் குடிக்க குனிய வேண்டியிருக்கும். அப்போது இதே அழுத்தத்தோடு இரத்தம் போனால் இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதறிவிடும். அப்போது குறைந்த அழுத்தமே இருக்க வேண்டும், இதை இரத்தக் குழாய்கள் விரிவடைதல், இரத்தம் தலைக்குச் செல்லாமல் திசை திருப்புதல் போன்ற அமைப்புகள் மூலம் சரி செய்யப் படுகிறது. குனிந்திருக்கும் தலை மேலே எழும்பும் பொது அதே குறைந்த அழுத்தம் இருக்குமானால் மயக்கம் போட்டு விழுந்து சாக வேண்டி வரும், அப்போது இரத்தத்தை தடுத்த அதே தகவமைப்பு இரத்தத்தை வழங்கி காக்கிறது. இந்த மாதிரி ஒரு தகவமைப்பு குட்டையாக உள்ள மான்கள் போன்ற என்ற ஒரு உயிரினத்துக்கும் இல்லை. அப்புறம் எப்படி ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும் அது வந்தது? ஒரு வேலை கழுத்து நீளும் பரிணாமம் நிகழும் போது அத்தகவமைப்பு இல்லாமல் இருந்து, பின்னர் உருவாக வேண்டுமென்றால் உருவாகும் காலம் வரை அது கீழே குனியவே முடியாதே?!! தண்ணீரே குடிக்காமல் செத்திருக்குமே?
அதே மாதிரி ஒரு உறுப்பை உபயோகப் படுத்தாவிட்டாலும் அது வீக் ஆகி காலப் போக்கில் காணாமல் போய்விடும். இதற்க்கு உதராணமாக அவர்கள் காட்டுவது மனிதனுக்கு உள்ள குடல் வால்!! முதலில் மனிதனும் வாலோடதான் சுத்திகிட்டு இருந்தான், அப்புறம் காலப் போக்கில் அவன் அதை சரியாப் பயன்படுத்தவில்லை, அதனால் அது அது காணமல் போய் உடம்புக்குள் இன்றைக்கு இருக்கும் குடல்வாலாக மாறிவிட்டது என்றும் கதை சொல்கிறார்கள். [ நாங்க சொல்லுவோம், நீங்க தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்ட மட்டும்தான் வேண்டும்!! அதற்கும் படிவம், அது இதுன்னு ஆதாரமெல்லாம் கேட்கப் படாது!! ஆதாரம் கேட்க இதென்ன அறிவியலா?].
அதுசரி, முதலில் வால் வரவேண்டியதற்க்கான அவசியம் என்ன என்று ஒரு கேள்வி
எழுகிறது. ஏதோ தேவை இருப்பதால் தானே வால் பரிணாமத்தில் [அவங்க கணக்குப் படி] உருவானது, பின்னர் அது எப்படி தேவையில்லாமல் போகும்? உண்மையில் குடல்வால் பச்சைக் காய்கறிகள் பழங்களை செரிப்பதில் உடலுக்கு
உதவி புரிகிறது, இப்போது நாம் அவற்றை அவ்வளவாக உண்ணாததால் அது பயனற்றது,
நீக்கினாலும் பிரச்சினையில்லை என நினைத்தார்கள். உண்மையில் குடல்வால்
நீக்கப் படுபவர்கள் பல உடல்நலக் கோளாறுக்கு ஆளாவது தற்போது கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது. எனவே உடலுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் இருக்கிறது
ஆனால் நமக்கு அது தெரியவில்லை. அவ்வாறு தெரியாமல் போவதால் அது தேவையே இல்லாதது என்று அர்த்தமாகாது.
மேலே சொன்ன, இது மாதிரியான உதாரணங்களில் பெரிய ஓட்டை இருக்கிறது. இனபெருக்க செல்களில் உள்ள ஜீன்கள் தான் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்தும் வேலையைச் செய்கின்றன. ஆனால், அவற்றில் உங்கள் உடல் உறுப்புகளை எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் எதை குறைவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் பதியப் படுவதில்லை, எனவே அத்தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் பட வாய்ப்பேயில்லை. டார்வினும் உபயோகம் குறைந்த உடலுறுப்பு அந்த உயிரினத்திடம் இருந்து காலப்
போக்கில் காணமல் போய்விடும் என்ற சிந்தனையைத்தான் கொண்டிருந்தார். ஆனால்
இது ஜெனட்டிகலாக சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீதேவி ஜப்பானுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை வெட்டியிருக்கலாம், ஆனாலும் அவருடைய மகள் 16 வயதினிலே ஸ்ரீதேவியை அச்சில் வார்த்த மாதிரியே தான் பிறந்துள்ளார்.
பெரிய மூக்கு வச்சிருந்த ஸ்ரீதேவி...........
ஜப்பானுக்குப் போயி ஆபரே ஷன் பண்ணிய விஷயம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படவில்லை.
அவங்க பொண்ணு எங்கம்மா மூக்கு இப்படித்தான் இருந்துச்சுன்னு நிரூபிச்சுட்டாங்க!! இது எப்படி இருக்கு!!
ஒரு உடலுறுப்பு பயன்படுத்தப் படவில்லை
என்பது அடுத்த தலைமுறையை எந்தவிதத்திலும் பாதிப்பதேயில்லை. இதை நிரூபிக்க, 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஆகஸ்ட் வைஸ்மன் August Weismann என்ற விஞ்ஞானி, வெள்ளை எலிகள் மீது சில பரிசோதனைகளைச் செய்தார். ஏனெனில் இவற்றின் இனப்பெருக்க வேகம் அதிகம், ஆகையால் குறுகிய காலத்திலேயே பல தலைமுறைகளைக் காணமுடியும். வெள்ளை எலிகளைப் பிடித்து கிட்டத்தட்ட 20 தலைமுறைகளுக்கு அவற்றின் வால்களை வெட்டித் தள்ளினார். ஆனாலும், இவ்வாறு உருவான எலிகளில் வால் இல்லாமலோ அல்லது சிறிய வாலுடனோ ஒரு எலி கூட பிறக்கவில்லை. முதல் தலைமுறை எலிகளைப் போலவே நீண்ட வாலுடனேயே அனைத்தும் பிறந்தன!! எனவே உறுப்புகளை பயன்படுத்தாமல் விடுவது/மூலி செய்வது [mutation] பின்வரும் தலைமுறைகளில் உறுப்புகளை இழக்கச் செய்யும் என்ற கொள்கை தோற்கடிக்கப் பட்டது. உடலில் உள்ள செல்களில் ஏற்ப்படும் மாற்றம் பற்றிய தகவல் இனப்பெருக்க செல்களில் உள்ள DNA வை எவ்விதத்திலும் பாதிக்காது, எனவே அடுத்த தலைமுறைக்கு அத்தகவல் கடத்தப் படாது!! எனவே இந்த முறையில் எந்த பரிணாமமும் நடக்காது.
அதை அடுத்து Survival of the Fittest [வலியவனே வாழ்வான்] என்ற ஒரு கொள்கையை தனது பரிணாமத்திற்கு ஆதரவாக டார்வின் கொண்டுவந்தார். பெண்ணினத்துடன் யார் இணைவது என்பதை மான் முதல், சிங்கம், புலி, காண்டாமிருகம், யானை வரை, சண்டையிட்டு யார் ஜெயிகிறார்கள் என்பதை வைத்தே அவை தீர்மானிக்கின்றன. இதை பல இயற்கைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த முறையில் பரிணாமம் நடக்குமா? ஒரு புதிய இனம் உருவாகுமா? நடக்காது. ரெண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானைக்கு அடித்துக் கொண்டாலும் இறுதியில் ஜெயிக்கப் போவது ஒரு யானைதானே!! எனவே பிறக்கப் போகும் குட்டி சிறந்த குணங்களுடன் இருக்கலாம் ஆனால் அதுவே பரிணாமம் ஆகி புதுசா வேற ஒரு ஜீவன் உருவாகாது!!
ஒருவகை உயிரினத்தில் சைசில் சிறியது பெரியதாக இருந்தாலும் இனம் அதே இனம்தான், அதை பரிணாமம் என்று சொல்ல முடியாது.
புலி + சிங்கம்
கழுதை + வரிக்குதிரை
சிங்கம் + புலி
குதிரை + வரிக்குதிரை.
மேற்கண்ட கலப்பினத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளை பரிணாமம் எனக் கூற முடியாது. ஏனெனில் பெற்றோருக்கு இல்லாத ஒரு பண்பு அடுத்த தலை முறையில் தோன்றாது. சிங்கமும் புலியும் இணையலாம் அதே சிங்கமும் வரிக்குதிரையும் இணைய முடியுமா? முடியாது.
The Bohemian Girl -லாரல் & ஹார்டி நடித்த இந்தப் படத்தை பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் அழைத்துச் சென்று காண்பித்தனர். அதை மீண்டும் ஒரு முறை எப்படியாவது பார்க்க நினைத்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட இணையத்தில் எவ்வளவோ தேடியும் கிடைக்காத படம் இப்போது சிக்கியது. உங்களுடன் பகிர நினைத்தேன். பார்த்து மகிழுங்கள்!!
முதலில் இணையத்தில் வரும் படங்களை அப்படியே காணலாமே எதற்காக பதிவிறக்கம் [Download ] செய்ய வேண்டும் என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்!! இது நல்ல கேள்விதான். இதற்க்கு பல காரணங்கள் இருக்கிறது.
முதலில், சில படங்கள் ஒலி, ஒளி நல்ல தரத்துடனேயே கிடைத்தாலும் அவை தொடர்ச்சியாக ஓடுவதில்லை. ஒவ்வொரு பத்து வினாடிக்கும் நின்று... நின்று... திரையின் மையத்தில் காத்திருக்கச் சொல்லும் வட்ட சின்னம் சுழன்று நம்மை வெறுப்பேத்தும்.
கணினியின் திரை சிறியது, சிலர் மட்டுமே காண முடியும், நீங்கள் படத்தை தொலைக்காட்சியின் பெரிய திரையில் பலர் அமர்ந்து சவுகரியமாகப் படத்தைக் காண விரும்பலாம்.
சில சமயம் படத்தின் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே ஓடும், அதற்க்கப்புறம் VEOH பிளேயரை நீங்க நிறுவினால் தான் மீதியைக் காணலாம் என்று கடுப்படிப்பார்கள்.
ஒரு முறை பார்த்த படத்தை நீங்கள் மேலும் பலமுறை பார்க்க நினைக்கலாம். அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கு வேறொரு நாள் போட்டுக் காட்டலாம்.
ஒருவேளை, இன்றைக்கு பார்க்கும் திரைப்படம் சில தினங்களுக்குப் பிறகு நீக்கப் படலாம். அப்போது நீங்கள் பார்க்க நினைத்தாலும் முடியாது, பதிவிறக்கம் செய்திருந்தால் பின்னர் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
iPhone, iPad போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களில் [Electronic Gadgets] நீங்கள் படத்தை பதிவேற்ற [UPLOAD] நினைக்கலாம்.
இது போன்ற பல தேவைகளுக்காக நாம் பதிவிறக்கத்தை நாட வேண்டியிருக்கிறது. இதற்க்கு பல மென்பொருட்களை நண்பர்கள் பரிந்துரை செய்துள்ளனர் அனால் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது. மேலும் பதிவிறக்கம், செய்தவுடன் அந்த கோப்பு [File] நேரடியாக மற்ற மின்னணு சாதங்களில் பயன்படுத்தும் வண்ணம் இராது, எனவே பதிவிறக்கம் நடைபெறும்போதே கோப்பின் வகையையும் [Extension] மாற்ற சில இணைய தளங்கள் உதவுகின்றன, ஆனால் பெரும்பாலும் அவை யாவும் நம்பகமாக இல்லை. பல சமயம், இரண்டு மூன்று மணி நேர காத்திருத்தலுக்குப் பிறகு பெப்பே..... காட்டிவிடுகின்றன.
சரி தற்போது பதிவிறக்கம் செய்ய என்ன வேண்டுமென்று பார்ப்போம். வேறொன்றும் தேவையில்லை Firefox இணைய உலாவி [Browser] இருந்தாலே போதும்[விண்டோஸ்/Linux/Mac எதுவானாலும் சரி]. இந்த தளத்திற்குச் சென்று FlashGot என்னும் Add -ON ஐ நிறுவிக் கொள்ள வேண்டும்.
Firefox உலவியில் இருந்து FlashGot இணைய பக்கதிற்குச் சென்று மேலே வட்டமிடப்பட்டுள்ள INSTALL மீது Click செய்தால் போதும் இந்த ADD ON உங்கள் உலவியில் நிறுவப் படும். நிறுவவா என்று கேட்கும் போது "ஆம்" என உங்களது சம்மதம் கேட்பது, Agree to Terms & Conditions போல சில சடங்குகள் இருக்கலாம்!! இது உங்கள் Browser -ல் நிறுவப் படுவதாகும், எனவே Administrator கடவுச் சொல் தேவைப் படாது!!
FlashGot நிறுவிய பின்னர் Browser ஐ Restart செய்ய வேண்டும் [கணினியை அல்ல].
பின்னர், நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய காணொளி உள்ள இணையப் பக்கதிற்குச் சென்று காணோளியை Start பொத்தான் மேல் சொடுக்கி ஓட விட வேண்டும்.
காணொளி ஆரம்பித்தவுடன், Browser -ன் Address Bar -க்கு சற்று இடதுபுறம் [மேலே உள்ள படத்தில் சிவப்பு வட்டம்] FlashGot படச்சுருள் போன்ற சின்னம் தோன்றும். அதன் மீது mouse ஐ வைத்து RightClick செய்தால், அந்த வலைப்பக்கத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் எல்லா படங்களின் தகவல்களும் அவற்றின் அளவுடன் [Storage size ] வரிசையாகத் தோன்றும். [பச்சை வட்டம்]. உங்களுக்குத் தேவையான படத்தின் மீது Left click செய்தால் படம் Download ஆரம்பிக்கும். [எச்சரிக்கை: அதன் மீது நேரடியாக Left click செய்தால் எல்லா வீடியோக்களுக்கும் பதிவிறக்கம் ஆரம்பமாகும். இன்னொன்று, படத்தின் ஆரம்பத்திலிருந்து ஓடவிடாமல் நடுவில் இருந்து ஓடவிட்டால் அந்த இடத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் ஆகும். எனவே முழுப் படத்தையும் வேண்டுவோர் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே இயங்க வைக்கவும்.].
FlashGot மூலம் காணொளிகள் மட்டுமல்ல, பாடல்கள் .mp3 கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும். பதிவிறக்கத்தைக் காண Tools சென்று Downloads மீது சொடுக்கவும். Download ஆகும் கோப்பின் மீது RightClick செய்து Open containing Folder மீது Left Click சொடுக்கினால் பதிவிறக்கம் ஆகும் Folder திறக்கும். பதிவிறக்கம் முடிந்தவுடன், அதிலிருந்து உங்கள் கோப்பை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட முறையில், FlashGot ஐப் பயன்படுத்தி இணையத்தில் இருந்து YouTube மட்டுமல்லாது வேறெந்த மாதிரியான Player -ல் இருந்தும் Video/Audio கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும். மேலும், சில சமயம், சில மணி நேரங்கள் ஓடும் படங்கள் வெறும் 5 நிமிட முன்னோட்டம் மட்டுமே காண முடியும், அவற்றையும் கூட இம்முறையில் பதிவிறக்க முடியும்.
சரி, பதிவிறக்கம் முடிந்தது. தற்போது இது .flv, .mp4 போன்ற கோப்புகளாக இருக்கக் கூடும். இவற்றை கணனியில் VLC Player போன்ற மென்பொருட்கள் மூலம் காணமுடியும், ஆனால் நம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண முடியாது. இவற்றை நமது மின்னணு கருவிக்கு பொருந்தும் கோப்பாக மாற்றவேண்டும். இதற்க்கு, Any Video Converter என்ற கட்டணமில்லா கட்டற்ற மென்பொருள் [Open Source] உதவுகிறது. [சுட்டி] இதை நிறுவி இயக்க Windows Xp அல்லது அதற்க்கு மேம்பட்ட Windows இயங்குதளம் வேண்டும்.
இதன் இணைய தளத்திற்க்குச் சென்று மேலே [பச்சை வட்டம்] காட்டியுள்ள படி, Free Download மீது சொடுக்கி பதிவிறக்கி, உங்களது Windows இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள வேண்டும். பின்னர், இதனை Open செய்து நீங்கள் முன்னர் பதிவிறக்கம் செய்துள்ள கோப்பு உள்ள Folder-ல் நுழைந்து, மாற்ற வேண்டிய கோப்பைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேறு எந்த Format வேண்டுமோ அதற்க்கு மாற்றிக் கொள்ளலாம். Customised AVI Movie (*.avi) க்கு மாற்றிக் கொண்டால் பெரும்பாலான மின்னணு கருவிகளில் படம் ஓடும். நீங்கள் ஒரே சமயத்தில் பல கோப்புகளை இணைத்து ஒன்றன் பின்னர் ஒன்றாக Format மாற்றச் செய்து, இறுதியாக அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளவும் முடியும். இந்த கோப்பை Pen Drive/CD/DVD- யில் சேமித்து, உங்கள் தொலைகாட்சியுடன் இணைக்கப் பட்டுள்ள DVD Player மூலமாகப் பார்க்கலாம். மொபைல், iPad, iPhone போன்ற மற்ற கருவிகளுக்குத் தேவையான Format களுக்கும் இதிலிருந்து மாற்ற முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
Any Video Converter முகப்பு.
வலது மூலையில் உள்ள Apple என பச்சை நிறத்தில் உள்ள பொத்தானை கிளிக் செய்து வரும் dropdown menu வின் இறுதியில் சென்றால் Customised AVI Movie (*.avi) ஆப்ஷன் உள்ளது.
பல வீடியோக்களை மாற்றினாலும் இறுதியில் வேண்டுமென்றால் ஒன்றாக இணைக்க முடியும்.
இந்த வழிமுறையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம்.
மேற்கண்ட கானொளியில் YouTube பற்றி புரியவில்லை என்றால் விட்டு விடலாம்.
இந்த இணைய தளத்திற்குச் சென்று , நாம் மேலே சொன்னவற்றை செயல்படுத்திப் பாருங்களேன்!!
மேலே நீங்கள் படத்தில் காண்பது ஒரு மோட்டார். இது ஒரு மின்சார மோட்டரைப் போன்றது. இதில்,
Propeller- உந்தித் தள்ள உதவும் துடுப்பு [படத்தில் Filament] Universal Joint- இது Propeller-ஐ, மோட்டருடன் இணைக்க L வடிவ இணைப்பு, Rotor-சுழலும் பகுதி Stator -இது Rotor சுழல உதவும் நிலையான பகுதி Drive Shaft with Bushings- சுழலும் பகுதியைத் தாங்கி நிற்கும் அச்சாணி, அடி விழாமல் பாதுகாக்கும் புஷ் அமைப்புடன்.
என அத்தனையும் உண்டு.
இதன் சுழற்சி வேகம் கொஞ்சம் ஜாஸ்தி!! அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் தடவை வரை சுழல வல்லது!! அவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரு முழு சுற்றில் கால் பகுதி முடிவதற்குள் இது சுழலுவதை நிறுத்த முடியும், பின்னர் எதிர்புறம் அதே வேகத்தில் உடனடியாகச் சுழலவும் முடியும். இதன் மூலம் மோட்டார் இணைக்கப் பட்டுள்ள பொருள் செல்லும் திசையை மற்ற முடியும். இந்த மோட்டார் H + அயனிகளை [ஒரு ஹைட்ரஜன் அணுக்கரு அதாவது புரோட்டான்கள்!!] எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்குகிறது. இதன் செயல்திறன் [Efficiency] 99% -க்கும் மேல், 100% -க்கும் அருகில்!!
இந்த மோட்டார்களின் சைஸ் தான் கொஞ்சம் சிறியது!! நமது தலைமுடியின் தடிமனுக்குள் [Diameter] 80 லட்சம் மோட்டார்களை அடக்கிவிட முடியும்!! அடடே அப்படினா நேனோ டெக்னாலஜி [Nano Technology] மாதிரி இருக்கேன்னு உங்களுக்கு பொறி தடுகிறதா!! நீங்கள் நினைத்தது சரிதான்!!
அதுசரி இந்த மோட்டார்கள் எங்கே பயன்படுத்தப் படுகின்றன? ஆரம்பத்தில் கல்லும் மண்ணுமாக இருந்த பூமியில் எளிய வடிவமைப்பைக் கொண்ட பாட்டீரியாக்கள் முதலில் தோன்றின என்று பரிணாம வாதிகள் சொல்கிறார்களே, அவற்றின் உடலில் தான் இவை காணப் படுகின்றன!! உண்மையில் அவற்றின் உடலமைப்பு எளிதல்ல என்பதற்கு இது ஒன்றே மிகச் சிறந்த உதாரணம். பாக்டீரியாக்கள் நீந்திச் செல்ல இம்மோட்டர்கள் உதவுகின்றன.
கடைசியாக உள்ள படத்தில் நூலிழை போல உள்ள Flagellum பாக்டீரியா நீந்திச் செல்ல உதவுகிறது. சில பாக்டீரியாக்களுக்கு இது ஒன்று மட்டுமே இருக்கும், ஆனால் பல Flagellum களைக் கொண்ட பாக்டீரியாக்களும் உண்டு. இவற்றை ஒருங்கிணைந்து செயல்பட வைத்து பாக்டீரியாக்கள் தங்கள் இயக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.
இந்த மோட்டார் உருவாக மொத்தம் 40 வகை புரோட்டீன்கள் தேவைப்படும், அவற்றில் ஒன்று குறைந்தாலும் இந்த மோட்டார் இயங்காது, பாக்டீரியா நகராது, அவ்வாறு நகராமல் அதனால் உயிர் வாழ முடியாது. எனவே இவை அத்தனையும் ஒரே சமயத்தில் தேவை என்பதால், பரிணாமம் நடந்திருக்க வாய்ப்பில்லை, ஒரே சமயத்தில் இது உருவானது என்று மைக்கேல் பேஹே [Michael Behe] என்ற உயிரியல் விஞ்ஞானி வாதிடுகிறார். மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity] என்ற சொற்றொடரையும் இவர் அறிமுகப் படுத்தியுள்ளார். இதற்க்கு உதாரணமாக ஒரு எலிப்பொறியை இவர் காட்டுகிறார்.
ஒரு எலிப்பொறி அதன் பணியைச் செய்ய மேலே உள்ள படத்தில் உள்ள ஐந்து பாகங்களும் இருந்தால் மட்டுமே முடியும், அதில் ஒன்று இல்லையென்றாலும் அது பயன்படாது. இதற்குப் பெயர் மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity. மேலே சொன்ன மோட்டார் அதுபோல ஒரு அமைப்பு என்கிறார். இதற்க்கு எதிவாதம் செய்பவர்கள், ஏன் முடியாது வெறும் கட்டையை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தலாம், அதன் ஸ்ப்ரிங் சேர்ந்தால் கிளிப் போல பிடித்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று அதை மறுக்கிறார்கள். மேலே சொன்ன மோட்டரைப் போலவே அச்சு அசலாக விஷத்தைச் செலுத்தும் சிரிஞ்சு போன்ற ஒரு அமைப்பை சில பாக்டீரியங்கள் பெற்றுள்ளதைக் கட்டி, இதோ பாருங்கள் இது மேலே சொன்ன மோட்டாரில் உள்ளதைப் போல வெறும் 20 புரதங்ககள் மட்டுமே உள்ளன, ஆனாலும் அதற்கும் ஒரு பயன் உள்ளதே என்று ஆதாரம் காட்டுகின்றனர். இதை கீழே உள்ள கானொளியில் பார்க்கலாம்.
அட ஒரு சிரின்ஞ்சா கூடத்தான் இருக்கட்டுமே தானா எப்படிய்யா வரும்!! எப்படியோ, எதை நம்புவது, எதை விடுவது என்பதே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
Irreducible Complexity பற்றிய மைக்கேல் பேஹே அவர்களின் டார்வினின் கறுப்புப் பெட்டி என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது, அதைத் பதிவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.
"ஒரு அற்புதமான நடிகர், தமிழ் திரையுலகிற்க்குக் கிடைத்த பொக்கிஷம்" உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப் படும் திரு.கமல்ஹாசன் அவர்களைப் பற்றி ஒரு வரி சொல் என்றால் நான் இதைத்தான் சொல்வேன்!! திரைப் படங்களில் நடிக்கும் போது ஓவ்வொரு படத்திலும், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை முன்னர் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது, அவருக்கு அடுத்து அந்தத் திறமையைப் பெற்ற ஒரே கலைஞன் திரு.கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே.
இவரது தற்போதைய படம் விஸ்வரூபம், படத்துக்கு சொந்தக்காரன் நான், அது எப்போ எப்படி வெளியிடனும்னு நான்தான் முடிவு செய்வேன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். ஆனா, அவரே நம்பாத விதி வேற மாதிரி செயல் பட ஆரம்பித்தது. படத்தை இவர் எடுத்திருக்கலாம், ஆனா ரிலீசை பலர் பல விதமாக முடிவு செய்து விட்டனர். ஒருபுறம் அரசு 144 போட்டு இழுத்தடித்தது. இவரு கேசை போட்டு ஜெயித்தாலும் ஆத்தாவின் அரசு, அடுத்த நாள் காலை வரை கூட விடக்கூடாதுன்னு நட்ட நடு இராத்திரியில உயர் நீதி மன்ற ஜட்ஜ் வீட்டுக்குப் போய் தூங்கிகிட்டு இருந்தவரை எழுப்பி தடையுத்தரவு வாங்கி மக்கள் நலனைக் காப்பதில் தன்னுடைய எல்லையில்லா கடமையுணர்ச்சியை நிரூபித்து, ரிலீசை மேலும் இழுத்தடித்தது. ஒரு வழியா சம்பந்தப் பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை எல்லாத்தையும் முடித்து படத்தை பிப்ரவரி 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகுதுன்னு பார்த்தா, அதற்க்கு முதல் நாளே சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் தெருத் தெருவுக்கு உயர்தர டிஜிட்டல் DVD -க்களை, எடிட் செய்யாத முழுப்படம் என்று கூவிக் கூவி அஞ்சுக்கும் பத்துக்கும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். போதாது என்று பல புண்ணியவான்கள் இணைய தளங்களிலும் இந்தப் படத்தை நல்ல தரத்துடன் லீக் செய்து விட்டனர் !! தியேட்டரில் ரிலீசுக்கு முதல் நாளே காணலாம் என்ற உறுதிமொழியை நம்பி DTH -ல் படம் பார்க்க 1000 ரூபாய் கட்டியவர்கள், இன்னமும் படம் வராமல் காத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரன் அஞ்சோ பத்தோ கொடுத்து படத்தை பார்ப்பதைக் கண்டால் நொந்து தான் போயிருப்பார்கள்!
ஏதோ பிரச்சினை வரும், அப்படி இப்படின்னு அது பெரிசானாலும் அதுவே விளம்பரமாவும் ஆயிடும், படம் எதிர் பார்த்தபடியே ரிலீஸ் ஆயிடும் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்ட உலக நாயகனுக்கு, எங்க பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கிறது என்று இஸ்லாமியர்கள் காட்டிவிட்டனர். இந்த சமயத்தில், நாட்டை விட்டே போய்விடுவேன் என்று இவர் பேட்டிகளில் சொன்னபோது மனம் ஒரு புறம் கணக்கவே செய்தது. ஆனாலும், திரைப்படங்களில் தத்ரூபமாக இவர் நடித்ததைப் பார்த்துப் பார்த்து நிஜத்திலும் இவர் எதையாவது சீரியசாகச் சொன்னாலும் அல்லது கண்ணீரின் விளிம்பிற்கே சென்றாலும் இதுவும் நடிப்போ என்ற சந்தேகமும் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது!!
இவரைப் பற்றிய பிம்பம் லேசாக சரிய ஆரம்பித்தது இவர் நடித்த நாயகன் திரைப் படம் ஆங்கிலத்தில் வந்த The God Father என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிய வந்தபோதுதான். கதை மட்டுமல்ல, பல காட்சிகளையும் கூட அப்படியே சுட்டிருந்தார்கள். உதாரணத்துக்கு நாயகன் ஒரு காட்சியில் வில்லனை மார்பில் பெரிய சுத்தியலால் அடிக்கும் சீனில், ஒரு தண்ணீர் குழாயை உடைத்து விடுவார், தண்ணீர் Fountain போல உயரமாக எழும்பும், அந்தக் காட்சி அப்படியே The God Father படத்தில் வரும். முதலில் ஏதோ இது ஒரு படம் தான், அதுவும் மணி ரத்னம் எடுத்த படம் என நினைத்தால், இவரது டஜனுக்கும் மேலான படங்கள் உலகப் படங்களில் இருந்து காப்பியடிக்கப் பட்டவை என்றும் அவற்றில் பலவற்றில் கதை என்று இவரது பெயரையே போட்டிருக்கிறார் என்றும் சமீபத்தில் தான் தெரிய வந்தது.பதிவர் கருந்தேள் அவர்கள் தனது பதிவுகளில் இவரைப் பற்றி அழகாக தோலுரித்துக் காட்டியிருந்தார். அதன்படிப் பார்த்தால், உலகப் படங்களின் கதைகளை சுடும் வேலையை இவர் ராஜபார்வையில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார்.
"உலக நாயகன்" என்றால் தமிழ்ப் படத்தை உலக அளவில் எடுத்துச் செல்பவர் என நாம் தவறாக நினைத்திருந்தோம், உண்மையில் இதன் அர்த்தம் உலகப் படங்களின் கதைகளை கள்ளத் தனமாக உருவி, ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு படமெடுத்து கலைச் சேவை செய்பவர் என்பதே!!
இவரை பலகாலம் நிறைய பேர் ஆஸ்கார் நாயகன் என்று அழைத்துக் கொண்டிருந்தனர். எதை வைத்து என்று இன்னமும் யாருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்!! ஆனால், சத்தமே போடாமல் இரண்டு ஆஸ்கார்களை தட்டி வந்த தமிழன் AR ரஹ்மானை இவரால் மனதாரப் பாராட்ட முடியவில்லையே?!! "இளையராஜாவுக்கு அப்புறம் இவர்தான் சிறந்த இசையமைப்பாளர்" என்று இவர் ஒருத்தர் பெயரை முன்மொழிந்தாரே..!! அதை என்னவென்று சொல்வது??!!
இவர் எல்லோருக்கும் கைக்குழந்தையாம். நான் சிவாஜியின் மடியில் உட்கார வைக்கப் பட்டு வளர்க்கப் பட்டவன், எம்ஜியாரால் தோளின் மேல் தூக்கிவிடப் பட்டவன் [அது மாதிரி ஒரு படத்துல சீன் வருதாம்!!], கருணாநிதி கைகளில் ஏந்தி அரவணைக்கப் பட்டகுழந்தை என்று 58 வயசாகியும் யாரை எடுத்தாலும் அவர்களுக்கெல்லாம் தான் ஒரு குழந்தை என்றே சித்தரித்துக் கொள்கிறார். ஆக மொத்தத்தில், ஆத்தாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் இவரு பச்சிளங் குழந்தை தான்!!போதாததுக்கு ரஜினிகாந்த்தும் சேர்ந்துகிட்டு, "கலைத்தாய் எல்லாக் குழந்தைகளையும் நடக்க விட்டுட்டா, ஒரே ஒரு குழந்தையை மட்டும் இடுப்பில் தூக்கி மார்பில் அனைச்சுகிட்டா, அந்த குழந்தைதான் உலக நாயகன்" என்றெல்லாம் உவமை சொல்லி புல்லரிக்க வைக்கிறார்!!
என்ன கொடுமை ரஜினி சார்..... இது!!
தான் சமூகப் பொறுப்புள்ளவன், சமுதாயத்துக்கு எனது கடமையைச் செய்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்கிறார். அப்படி இவருக்கு யார் கடமையைக் கொடுத்தாங்கன்னுதான் விளங்க மாட்டேங்குது. அப்படியெல்லாம் கடமையுணர்ச்சி இருக்கும் ஆள், முன்னாள் முதல்வரின் பாராட்டு விழாக்கள் எல்லாவற்றிலும் பங்கெடுத்திருந்தாலும் அதில் ஒன்றிலாவது குடி குடியைக் கெடுக்கும் என்றும்அதை தடுக்க வேண்டும் என்று பேசியிருப்பாரா? நான் உங்கள் கரங்களில் தவழ்ந்த குழந்தை என்று சோப்பு தானே போட்டார்? அப்புறம் எங்கேயிருக்கிறது சமுதாயக் கடமை உணர்ச்சி?
தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்கிறார். அப்படி மீறிப் பேசுபவர்களைப் பற்றி இவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கே போடக் கூட முடியாத அளவுக்கு காட்டமான கெட்ட வார்த்தைகளால் சாடியிருக்கிறார். சரி, இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடுத்தவர் பேசக் கூடாதுதான். அதே மாதிரி, இவரும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கலாமே? அவ்வாறு இராமல், மக்கள் நெடுங்காலமாக கொண்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி மேடை போட்டு பேசலாமா? உதாரணத்திற்க்கு, திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்கிறார். அது உண்மையாகவே இருக்கட்டும், அதை ஊரறிய மைக் போட்டு கூறத்தான் வேண்டுமா?என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஒருபோதும் வற்ப்புறுத்தியதில்லை, அதனால் அவள் ரொம்ப நல்லவள் - என்று தற்போது தன்னுடன் வசிக்கும் நடிகையைப் பற்றி கூறுகிறார். காலங் காலமாக திருமண பந்தத்தில் வாழ்ந்து வரும் மக்கள் என்ன முட்டாள்களா? இவரது பேச்சு அந்த நம்பிக்கையில் விழும் அடியல்லவா? இது மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்ல முடியுமா? சினிமாக்காரர்கள் போடும் சட்டை, பேன்ட், புடவை ரவிக்கை தானே பின்னர் ஃபேஷனாக உருவாகிறது? பாட்ஷா படம் வெளியானபோது காக்கி, சட்டையும் பேண்டையும் போட்டு கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் எண்ணற்றோர் உள்ளனரே?
அடுத்து இவர் நாத்தீகர் என்று சொல்லிக் கொள்கிறார். "கடவுள் இல்லை எனச் சொல்லவில்லை, ஆனால் இருந்தால் பரவாயில்லை" என்று தான் சொன்னேன் என்கிறார். இந்த மாதிரி விஷக் கருத்துக்களை பேசி மக்கள் மனதில் நஞ்சை வார்க்கலாமா? இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அல்லவா? இவரது பேச்சுக்கள் அந்த நம்பிக்கையை நசுக்குவதாக இல்லையா? நடிகன் நடிப்போடு தனது வேலையை நிறுத்திக் கொள்ளாமல், இந்த மாதிரி சமுதாய விஷயங்களில் எதற்காக மூக்கை நுழைக்க வேண்டும்? இதெல்லாம் இவரது கருத்து சுதந்திரம் என்றால், பெண்களை திருமணம் செய்து அம்போ என விட்டவர்களைப் பற்றியும், திருமணம் செய்யாமலேயே பெண்ணுடன் வாழ்பவர்களைப் பற்றியும் மற்றவர்கள் பேசவும் அதே கருத்து சுதந்திரம் உள்ளது. அங்கே வந்து, இதைப் பேச உரிமையில்லை என்று யாரும் சொல்ல முடியாது.
நண்பர்களே, இந்த இணைய தளத்தில் பல 'பழைய' திரைப்படங்கள் உள்ளன பார்த்து மகிழுங்கள். இங்கு சென்ற பின்னர் படங்கள் இல்லையென மத்தியில் செய்தி வந்தால், இடது ஓரத்தில் உள்ள படத்தின் போஸ்டர் மீது கிளிக் செய்து பாருங்கள், உங்கள் அதிர்ஷ்டம் படம் வந்தாலும் வரும். படத்தை விளம்பரம் ரெட்டையா வந்து மறைச்சாலும், கீழேயுள்ள Play மீது சொடுக்கவும், சில வினாடிகள் பொறுத்து படம் வந்ததும் விளம்பரம் மறைஞ்சிடும் [or Fullscreen போடுங்க]. இதே இணைய பக்கத்தில் New Tamil Movies என்றும் ஒரு லிங்க் உள்ளது, அது என்ன என்று யாரவது விளக்கினால் நலம்.
சென்ற பதிவில் சமூகத்தைப் பீடித்துள்ள கள்ளச் சாமியார்கள்/சாமியாரிணிகள் தொகுப்பை வெளியிட்டோம். எவ்வாறு அவர்கள் நமக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டத் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் கிளறாமல், பகவத் கீதையின் மூலமாகவே காட்டியிருந்தோம். அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கார்பொரேட் முறையில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தால் அது எங்கோ போய்விடும் அது நமக்குத் தேவையில்லை, அவர்கள் நமக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்க முடியாது என்பதோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம்.
அதற்க்கு அடுத்த கட்டமாக, வாழ்வில் அனைத்து நெறிமுறைகளையும் கடைப் பிடித்து வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏற்கத் தக்கவர்களா? அது தான் இல்லை. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான அதி சங்கரர் சிவபெருமானின் அவதாரமாவார். அவர் போதித்தது அத்வைதம் என்ற கொள்கையாகும். இன்றைக்கு உலாத்திக் கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் எல்லோரும் இவரது கொள்கையின் சாயலைத்தான் எடுத்து தங்களுக்குப் பூசிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். பலருக்கும் ஏற்ப்புடையதாகத் தோன்றும் இவை, "உண்மையல்ல, சாத்திரத்தில் சொல்லப் படாத ஒன்றை பொய்ப் பிரச்சாரம் செய்தேன்" என்று அவரே சொன்னால் வியப்பாகத்தானே இருக்கும்!!
பிரஞம் பிரம்மம்
அயமாத்மா பிரம்மம்
தத் துவம் அசி
அஹம் பிரம்மாஸ்மி
பிரம்மம் தூய உணர்வு
ஆத்மாவே பிரம்மம்
நீதான் அந்த உணர்வு
நானே பிரம்மம்.
இதைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், "பிரம்ம சத்ய ஜகன் மித்ய" என்பதாகும். உதாரணத்திற்க்கு சிலர் சிவன்தான் கடவுள் என்பர் சிலர் விஷ்ணு தான் என்பர். ஆனால் ஆதிசங்கரர் பிரம்மம் தான் எல்லாமும் என்றார். அதற்க்கு உருவம், இன்னபிற பண்புகள் எதுவும் இல்லை, பிரம்மம் என்பது,"கோபம், அன்பு, வருத்தம், மகிழ்ச்சி போன்றவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் [Personality] இல்லை" என்றார். மொத்தத்தில் பிரம்மம் என்றால் எந்த விதத்திலும் வர்ணிக்கவே முடியாதது!! [இந்த வர்ணனை எப்படி இருக்கு!!] மேலும், பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை என்றார். அதாவது பிரம்மம் என்பதே இறுதியில் நிலைத்திருக்கும், இந்த படைப்பு அனைத்தும் மாயை, நிஜத்தில் இல்லவே இல்லை". ஜீவன்களுக்கு தான் என்ற எண்ணம் மாயையில் சிக்குண்டு இருப்பதால் தான் வருகிறது, முக்தியடைந்தால் நாம் அந்த பிரம்மமே, வேறல்ல என்பதை உணர்ந்து விடுவோம் என்றார். "அப்படியானால், முதற்க்கண் நாம் உருவானது எப்படி?" என்ற கேள்விக்கு, பிரம்மம் மாயையின் பிடியில் சிக்கும்போது ஜீவன்களாகிறது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இவருக்கு அடுத்து 11-ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் தோன்றிய ஸ்ரீஇராமானுஜர் இந்த விளக்கத்தை எதிர்த்து கேள்விகளை எழுப்பலானார். "பிரம்மம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது, அதற்க்கு மிஞ்சியது எதுவுமே இல்லை என்றால், அது எப்படி மாயையின் கட்டுப் பாட்டிற்குள் வர முடியும், அப்படி வரும் என்றால் மாயை பிரம்மத்தை விட மேலானது என்று ஆகிவிடுமே? மேலும், பிரம்மம் என்பது பகுக்க முடியாதது எனில், இங்கே இருக்கும் கணக்கிலடங்கா ஜீவன்களாக பகுக்கப் பட்டது எப்படி? " என்று கிடிக்கிப் பிடி போட்டார். இந்தியாவைச் சுற்றி மேற்கொண்ட பயணங்களில் பல்வேறு விதத்தில் ஆதி சங்கரரின் கொள்கைகளை ஸ்ரீஇராமானுஜர் தோற்கடித்து, இறைவன் உருவம் கொண்டவன், அவனுக்கு எண்ணற்ற கல்யாண [Auspicious] குணங்கள் உண்டு. ஜீவன் ஒருபோதும் பரப் பிரம்மனான பகவானுடன் ஐக்கியமாக முடியாது, சேவகனாகத்தான் நிலைத்திருக்க முடியும், இந்த படைப்பு மாயை இல்லை, நிஜம்தான் ஆனால் நிலையற்றது, காலத்தால் அழிந்து போகக் கூடியது என்று சாஸ்திரங்கள் மூலமாக ஆதரப் பூர்வமாக நிலை நிறுத்தினார். இவரை அடுத்து வந்த ஸ்ரீ மத்வாச்சார்யாரும் ஆதி சங்கரரின் கொள்கைகளைத் தவிடுபொடியாக்கினார்.
தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழும், மேற்க்கண்டவாறு இரண்டு ஆச்சார்யர்கள் தவறு என்று ஆதாரப் பூர்வமாக நிரூப்பிக்கும்படியான ஒரு கொள்கையை எதற்காக சிவனின் அவதாரமான ஆதி சங்கரர் போதிக்க வேண்டும்?
மேற்கண்ட கேள்விக்கு பதிலைத் தேடும் முன்னர் ஆதி சங்கரர் எந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில், எதற்காகத் தோன்றினார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கி.மு. 243 வாக்கில் அசோகரின் ஆட்சியின் ஆதரவோடு இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமாவார். இதை வைணவக் கவி, ஜெயதேவ் [நான் இல்லீங்க!!] தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.
nindasi yajna-vidher ahaha
sruti-jatam
sadaya-hridaya
darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya
jagadisa hare
யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே, ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்.
யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும். ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப் படும் போது இது நடவாது. மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார். உயிர்ப்பலி வேண்டாம் என்றார். அதை எதிர்த்தவர்கள், வேதங்களை மேற்க்கொள் காட்டி "இது அனுமதிக்கப் பட்டுள்ளது" என்றார்கள். அதற்க்கு புத்தர், "வேதங்களை நான் நிராகரிக்கிறேன்" என்றார். இதன் விளைவாக இந்தியாவில் புத்தரின் கொள்கைகள் எங்கும் வியாபித்தது, வேதங்களைப் பின்பற்றுவது நின்று போனது. கடவுள் என்று ஒன்று இல்லை, இறுதியில் சூன்யமே எல்லாம் என்று போதித்தார்.
இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார். ஆதி சங்கரராக வந்தார். புத்தர் எல்லாம் சூன்யம் என்றார். இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார். அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார். அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார். இவ்வாறு தான் செய்யப் போவதை பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார்.
தேவி, கலியுகத்தில் பிராமணன் வடிவத்தில் நான் அவதரித்து சாத்திரங்களில் சொல்லப் படாத, புத்தமதத்தைப் போலவே தோன்றும், மாயாவாதம் என்னும் ஒரு போலி கொள்கையைப் பரப்புவேன். [asat-sastram இந்தப் பதத்தில் asat என்றால் sat [சத்யம்-உண்மை] என்பதற்கு எதிர்ப் பதமாகும். அதாவது அவர் சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளதற்கு எதிராக போதித்தார் என்று பொருள்.] (Padma Purana 6.236.7)
மாயாவாதம் என்னும் இந்த சக்திவாய்ந்த கொள்கை வேதங்களைப் போலவே தோன்றினாலும், அது உண்மையல்ல. தேவி, உலகில் நான் செய்யப் போகும் பொய்ப் பிரச்சாரம் இதுவாகும். (Padma Purana 6.236.11)
வாழ்நாள் முழுவதும் பிரம்மம் மட்டுமே உண்மை என்று போதித்த ஆதிசங்கரர் உலகை விட்டுப் புறப்படும் முன்னர் இறுதியாகச் சொன்னது இந்த பாடலைத்தான்:
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
சம்பிராப்தே சந்நிகிதே காலே
ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ரியகரனே
"முட்டாள்களே, மூடர்களே கோவிந்தனை வழிபடுங்கள்........ கோவிந்தனை வழிபடுங்கள்........ கோவிந்தனையே வழிபடுங்கள்......... உங்களுடைய இலக்கணம், வார்த்தை ஜாலங்கள் எதுவும் சாகும் தருவாயில் உங்களை வந்து காப்பாற்றாது.
இது மட்டுமன்றி, பூரி ஜகன்னாதரைப் பற்றியும், நரசிம்மரைப் பற்றியும் அழகிய பாடல்களை ஆதி சங்கரர் வடித்துள்ளார், வடிவம் இறைவனுக்கு இல்லை என்றால் ஏன் இப்படி இறைவனின் வடிவில் உருகிப் போகும் பாடல்களை அவர் எழுத வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.
ஆதிசங்கரர் போதித்த கொள்கைகள் அந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற மட்டுமே, அது இன்றைக்கு நமக்கு ஏற்ப்புடையதல்ல. எனவே பின்பற்றவேண்டிய அவசியமும் இல்லை. சங்கர மடத்தில் உண்மையில் துறவை பின்பற்றும் சன்னியாசிகளுக்கு மரியாதை செலுத்தலாம், எனினும் பின்பற்றத் தேவையில்லை.
இதை விளக்கும் ஒரு அழகிய கதையும் உண்டு. ஒரு ஊரில், ஒரு விலங்குகளுக்கான [வெர்டினரி] மருத்துவர் இருந்தார். அவருக்கு ஒரு உதவியாளனும் சம்பளத்திற்கு இருந்தான். மருத்துவர் விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதை கவனமாக பார்ப்பான், அவருக்கு சிகிச்க்சையின் போது எடுபிடி வேலைகளையும் செய்வான்.
ஒருமுறை அவர் ஒரு குதிரைக்கு வைத்தியம் பார்க்கச் சென்றார். குதிரையின் கழுத்து வீக்கமாக இருப்பதாகவும், அது எதையும் விழுங்காமல் தவிக்கிறது என்றும் குறையின் சொந்தக்காரர் தெரிவித்தார். மருத்துவர் குதிரையின் வாயைப் திறந்து உள்ளே நோக்கினார். பின்னர் ஒரு மரச் சுத்தியலை கொண்டு வரச் சொன்னார். அதைக் கொண்டு குதிரையின் கழுத்தில் அடித்தார். கட்டி காணாமல் போனது, குதிரையும் சற்று நேரத்தில் வழக்கம் போல எல்லாம் உண்ண ஆரம்பித்தது. வேறெந்த பிரச்சினையும் இல்லை.
கொஞ்ச நாள் இவ்வாறு இருந்த உதவியாளன் திடீரென ஒரு நாள் காணாமல் போனான். போகும் முன்னர் அவ்வூர் தச்சரிடம் ஒரு பெரிய மரச் சுத்தியலை வாங்கிப் போனான் என்று மட்டும் தகவல் கிடைத்தது, பின்னர் கொஞ்ச நாட்கள் அவனைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. சில மாதங்களுக்குப் பின்னர், சுற்று புறமுள்ள ஊர்கள் பலவற்றில் இருந்து மருத்துவருக்கு அவனது உதவியாளனைப் பற்றிய புகார்கள் குவிய ஆரம்பித்தன. "ஐயா, உங்கள் உதவியாளன் எனக்கும் தற்போது வைத்தியம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு வந்தான், உங்களிடம் பணியாற்றியவன் என்ற நம்பிக்கையில் இவனை அனுமதித்தோம். எங்களுடைய ஆடு, மாடு, குதிரை, பன்னி எல்லாவற்றுக்கும் எந்த பிரச்சினை என்றாலும், இவன் மரச்சுத்தியலைக் கொண்டு பிரச்சினை உள்ள பாகத்தில் அடிக்கிறான், அவ்வாறு அடித்து பல ஜீவன்களைக் கொன்றும் விட்டான், அவனை தயவு செய்து கண்டியுங்கள்" என்று பலரும் புலம்பினார். விட்டால் நம் பெயரை மேலும் கெடுத்து விடுவான் என்று பயந்த மருத்துவர், தனது உதவியாளனை தேடிப் பிடித்தார்.
"ஏன் இப்படிச் செய்கிறாய்" என்று கேட்டார்.
"ஐயா, நீங்கள் குதிரையின் கழுத்தில் வீக்கம் என்று வந்த போது மரச் சுத்தியலால் அடித்தீர்களே, அது சரியாகவும் ஆனதே, நானும் அதையேதான் செய்கிறேன். எந்த விலங்குக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், மரச் சுத்தியலால் அடிக்கிறேன், ஆனால் என்னவோ தெரியவில்லை, சரியாக மாட்டேன்கிறது" என்றான்.
"அட மடையா, அந்தக் குதிரை, தர்பூசணி பழத்தை பெரிய துண்டாக விழுங்கி விட்டிருந்தது, தொண்டையில் சிக்கி கொண்டது, சுத்தியலால் அடித்து கரைத்தேன் சரியாகப் போனது. அது அந்த குதிரைக்கு, அந்த சமயத்திற்கு மட்டுமே எடுபடும் சிகிச்சை. நீ அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எதற்க்கெடுத்தாலும் அதையே பயன்படுத்தலாமா?" என்று கேட்டு, இனி செய்ய வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினார்.
மக்காஸ், ஆதி சங்கரர் அன்றைக்குச் சொன்னதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு காரணம் இருந்தது, அதையே இப்போதும் நாம் பின்பற்றினால் மேற்சொன்ன கதையில் வரும் உதவியாளன் கதையாகி விடும், எனவே தவிர்ப்போமே!! ஆதி சங்கரர் போதித்த பஜ கோவிந்தம், ஜகன்னாதாஷ்டகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவரது அத்வைதக் கொள்கைகள் நிராகரிக்கப் பட வேண்டியவையே.