Saturday, December 28, 2013

டி. ராஜேந்தர்- காமடி !!

வணக்கம் மக்கள்ஸ்!!

டி. ராஜேந்தரோட பேரு விஜய டி. ராஜேந்தர்அப்படின்னாங்க, அப்புறம் அதையும் மாத்திட்டாருன்னாங்க, இன்னைய தேதிக்கு பேரு என்னன்னு தெரியலை, இப்போதைக்கு டி. ராஜேந்தர் அப்படின்னே வச்சிக்கலாம்.  மிமிக்கிரி கலைஞர்களுக்கு பஞ்சமில்லாமல் தீனி போடும் இருவரில் இவர்  ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.  [இன்னொருத்தர் வேற யாரு, நம்ம கேப்டன் தான்!!].  இவருடைய ஒரு தலை ராகம் பாடல்கள் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.  பாதுகாப்புக்காக ஒரு கட்சிக்கு ஓடி, பின்னர் வெளியில் வந்த இவர் மீண்டும் அதே கட்சியில் இணைந்துள்ளாராம்.  இது எத்தனையாவது தடைவையாக நடக்கிறது, இன்னும் எத்தனை தடவை நடக்கும் என்பதை கணக்கிடக் கூடிய கம்பியூட்டரை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.  இவரால் அறிமுகப் படுத்தப் பட்ட நாயகன் பிரிதிவிராஜ் இவருடனான தனது அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் பகிர்ந்துள்ளார்.  அவற்றில் இரண்டு நமக்கு கிடைத்துள்ளது, இரண்டையும் தவறாமல் பாருங்கள், வெவ்வேறு சுவை.  இதைப் பார்த்து சிரித்து வரும் வயிற்று வழிக்கு கம்பனி பொறுப்பல்ல........!!




20120303-175955 by Oruwebsitetamil


Sunday, December 22, 2013

ஸ்ரீநகர்-காஷ்மீர், என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்-படங்களுடன்.

அன்புள்ள மக்கள்ஸ்!!

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் பயணத்தின் முதல் பகுதியை முன்னர் வெளியிட்டோம்!!  [சுட்டி].  பயணத்தில் கண்ட மீதமுள்ள இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இரண்டாம் நாள் நாங்கள் சென்ற இடம் பெகல்காம்.   ஸ்ரீநகர் போய் இறங்கிய பின்னர் வழியெங்கும் நாங்கள் தேடியது ஆப்பிள் மரங்களைத்தான்.  பெகல்காம் செல்லும் வழியில் ஆப்பிள் தோட்டங்கள் மட்டுமல்ல, வால்நட், ஆப்ரிகாட் மரங்கள் மற்றும் குங்குமப்பூ விளைவிக்கப் படும் வயல் வெளிகளும் நிறைந்திருக்கின்றன.  குங்குமப்பூபறித்துக் கொண்டிருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னோம்.  ஊதா நிற வெல்வெட் போட்டு மூடியது போல இந்த வயல்கள் அழகாகதோன்றுகின்றன.  எங்கள் ஓட்டுனர் நிறுத்திய இடத்தில் பூக்களின் அடர்த்தி குறைவு... :(,   குங்குமப்பூ செடிகள் சில இன்ச் உயரம் மட்டுமே வளர்கின்றன, மேலும் உயரம் ஓரிரு இன்ச்கள் மட்டுமே.  இறங்கி உள்ளே சென்று படமெடுக்கலாம் என நினைத்தால், நீளமான மூங்கில் கம்பை கையில்வைத்திருந்த காவல் கார அன்பர் ஓடி வர, வெளியில் நின்றபடியே படமெடுத்துக் கொண்டோம்.


குங்குமப்பூ விளையும் வயல்கள், தூரத்தில் குங்குமப்பூ சேகரிக்கும் பணியாட்கள்.  பூக்களின் அடர்த்தி அதிகமான வயல்கள் அழகாக ஊதா நிறத்தில் இருக்கும்.................
பெகல்காம் நெருங்குகிறோம்................


வாழ்வில் முதன்முறையாக பனி தொப்பி அணிந்த இமயமலையை பெகல்காமில் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.  இங்கிருந்து வெவ்வேறு உயரத்தில் உள்ள மலைப்பாங்கான இடங்களுக்கு குதிரைகளில் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.  ஒரு நபருக்கு ஒரு குதிரை, அதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மணிக்கு 350 ரூபாய்.

பெகல்காமில் குதிரைப் பயணம்......
மலைப் பாதையில் குதிரைப் பயணம், வழியில் முதல் நிறுத்தம் ஒரு நீரோடை.  இந்த நீர் மிகத்தூய்மையானதாம்!!  கையை வைத்தால் ஃபிரிட்ஜில் Freezer ஐ defrost செய்தால் கொட்டும் நீரைப் போல இருந்தது.  அங்கே வசிக்கும் ஒரு அம்மா சாதரணமாக அதில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது!!

குதிரைப் பயணம் தொடர்ந்தது, அங்கிருந்து மேலும் உயரமான இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.


மூன்றாவது நிறுத்தத்தை நோக்கி பயணம்.






இந்த இடத்திற்குத்தான் இறுதியில் வந்து சேர்ந்தோம். 
இது ஒரு மிகப்பரந்த புல்வெளி, பின்னணியில் பைன் மரங்களும், பனி படர்ந்த மலைகளும் சூழ்ந்திருக்கின்றன.



அங்கே ஒரு ஆள் முயலையும், ஆடு ஒன்றையும் படப்பிடிப்புக்கு [சினிமா சூட்டிங் இல்லீங்க, நீங்க எடுத்துக் கொள்ளும் படம்!!] வாடகைக்கு கொடுத்து, ஒரு படம் எடுத்துக் கொள்ள 10 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்!!  


மூன்றாவது நாள் நாங்கள் சென்ற இடம் குல்மார்க்.   அங்கே போய் இறங்கியதும் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய தோற்றம் இது!!
குல்மார்கில் பிரபலமானது, ரோப் காரில் கொண்டோலா [Gondola] என்ற உயரமான பகுதிக்குச் செல்வது தான்.  இரண்டு கட்டமாக நீங்கள் டிக்கட் பெறலாம்.  முதல் கட்டம் 400 ரூபாய், இரண்டாவது கட்டம் மேலும் உயரமான இடத்திற்குச் செல்கிறது, அதற்க்கு மேலும் 600 ரூபாய் கட்டணம்.  டிக்கட்டுகள் இணையத்திலேயே கிடைக்கிறது, அங்கே சென்று வாங்குவது மிகவும் சிரமம், மேலும் சிலசமயம் கிடைக்காமலும் போகலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கே சென்று விட வேண்டும், பனிக்கட்டியில் நடப்பதற்கான சிறப்பு காலணிகள், உடைகள் செல்லும் வழியில் வாடகைக்குக் கிடைக்கின்றன.

Gondola இரண்டாம் கட்டம்.  இங்கே பணியில் விழுந்து விளையாடலாம் என நினைத்தேன், ஆனால் கட்டுமானத்திற்கு போடப்பட்டுள்ள முறுக்குக் கம்பிகள் ஆங்காங்கே கூறாக நிற்பதைப் பாருங்கள்!!  எசகு பிசகாக ஏத்தினால் என்னாவது என்று தயங்கி கட்டுப் படுத்திக் கொண்டேன்.  இங்கே இருந்து இந்திய-பாகிஸ்தான்  எல்லைக்கு ஸ்கேட்டிங் அழைத்துச் செல்கிறோம் என்று சில நூறுகளைப் பிடுங்கிக் கொண்டு, சற்று தூரம் சென்ற பின்னர் இதே தான் எல்லை என்று காண்பித்து விட்டு திரும்ப அழைத்து வந்து விடும் கூத்தும் நடக்கிறது........

திரும்பும் வழியில் ஆப்பிள் மரங்கள்!! 
ஆப்பிள்  தோட்டத்தில் கடை............



நான்காம் நாள் படகு இல்லத்தில் தங்கினோம்.



Dal ஏரியில் படகு இல்லம்.  ஏரியைச் சுற்றி எக்கச் சக்கமாக இருக்கின்றன.  இங்கே ஒரு சமயல்காரர் இரவு உணவு சுவையாக தயாரித்து தந்தார்.  

படகு இல்லம் எதுவும் நகராது!!  இவற்றை உயர்த்தி மற்ற படகுகளைப் போலவே இயக்க முடியும் என்கிறார்கள்.  ஒரு வேலை முற்காலங்களில் அவ்வாறு இருந்திருக்குமோ என்னவோ!!  நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்த ஏரியில் உள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடுமாம், அதில் கிரிக்கெட் கூட ஆடுவார்களாம்...........!!

Dal ஏரியைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் படகுகள்.  அங்கே இவற்றை சிகாரா என்று அழைக்கிறார்கள்.  150 ரூபாய் கட்டணம், நீங்கள் ஏமாந்தால் 600 ரூபாய் என்பார்கள்.  இவற்றில் செல்லும் போது வழியில் வேறொரு படகில் வியாபாரிகள் உங்கள் அருகில் வந்து மரத்தாலான சாமான்கள், அணிகலன்களை கண்பித்து வியாபாரம் [Quick பிசினஸ்] செய்கிறார்கள்.  வேண்டாம் என்றால் விலகி அடுத்த வாடிக்கையாளரிடம் போகிறார்கள்.


நாங்கள் ஸ்ரீநகரில் வாங்கிய பொருட்களின் படங்கள்..............









உளர் பழங்கள், தேன் [விலை எல்லாம் நம்மூர் விலையேதான்!! எதுவும் சல்லிசு இல்லை!!]
குங்கமப்பூ.........
படங்களைஎல்லாம் பொறுமையாக பார்த்தமைக்கு நன்றி, மீண்டும் இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம், வணக்கம் மக்கள்ஸ்!!

Friday, December 13, 2013

ஸ்ரீநகர்-காஷ்மீர் டூர்..............

அன்புள்ள மக்கள்ஸ்!!

ரொம்ப வருடங்களாக போக ஆசைப் பட்ட  [அதே சமயம் போகத் தயங்கிய] இடம் காஷ்மீர்.  காரணம் தினம் தினமும் செய்தித் தாள்களில் அங்கே நடப்பதைப் பற்றி வரும் செய்திகள்தான். இன்னொன்னு தமிழன்னாலே ஹிந்தியில புலி என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச செய்தி, நாம வேற பச்சைத் தமிழன், அங்கே போய் மாட்டிக் கிட்டு முழிக்கிறதான்னு பயம்.  ஒரு வழியா ஒரு பேக்கேஜ் டூர் கிடைச்சது.  நாம அங்கே போய் இறங்கியதும் நம்மை காத்திருந்து அழைத்துச் சென்று ஐந்து நாட்கள் தங்க வைத்து, உணவும் கொடுத்து சுற்றிக் காண்பித்து திரும்ப வழியனுப்பும் வரைக்கும் அவங்க பொறுப்பு.  [ஹி ...............ஹி .........ஹி .........  நம்ம சாமர்த்தியம் வேற யாருக்கு வரும்னேன்].  சுற்றிப் பார்த்த இடங்களை படம் பிடித்து இங்க பதிவாக்கியுள்ளேன்.  வழ வழா கொழ கொழான்னு சொல்ல எதுவும் இல்லை.  நேரம் இருப்பவர்கள் படங்களை பார்த்து இரசிக்கவும்.  [என் கடைக்கு வந்ததற்கு உங்களுக்கு இதுதான் தண்டனை!!].


ஸ்ரீநகரில் நான்கு நாட்கள் தங்கினோம், ஒரு நாள் தங்கமணியின் உடல்நலக்குறைவால் வெளியில் செல்ல முடியவில்லை, படகு இல்லத்திலேயே கழிக்க வேண்டியிருந்தது.  நாங்கள் பார்த்த இடங்கள்:

நாள் 1: முகலாயர் தோட்டங்கள் [Mughal Garden]:  ஷாலிமார் பாக் மற்றும் நிஷாத் பாக்.

ஷாலிமார் பாக் நுழைவு வாயில் அருகே, இலை வடிவில் செடிகள்.  காஷ்மீரில் இந்த வடிவ இலைகளைக் கொண்ட ஒரு வகை மரமே எங்கும் உள்ளன, இந்த பூங்காவிலும் உள்ளன.

இந்த மரங்களின் இலைகளும் மேலே காட்டிய வடிவிலேயே உள்ளன.
உயர்ந்த மரங்கள், வழிந்தோடும் நீரூற்றுகள், பழைய கட்டிடக் கலைப்படி கட்டப் பட்ட அறைகள் சில என காணப் படுகின்றன. "சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்" [தேன் நிலவு] பாடல் படமாக்கப் பட்டது இங்கே தான்!!




ஷாலிமார் பாக் மிகவும் புகழ் வாய்ந்த முகலாயர் தோட்டம், சக்ரவர்த்தி ஜெஹாங்கீர் கி.பி. 1616-ஆம் ஆண்டு அவரது மனைவி நூர் ஜஹானுக்காக இதைக் கட்டினாராம்!!     ஷாலிமார் பாக்கின் உண்மையான பெயர் ஃபரா பக் ஷ் [Farah Bakhsh], அதன் அர்த்தம் குஷி  தோட்டமாம், இப்போ அதன் பெயர் 'Garden of Love' அன்பின் தோட்டம்!!

இது தான் டைனிங் ஹாலாம்!!

அடுத்து நிஷாத் பாக். நிஷாத் பாக்கை நூர் ஜஹானின் சகோதரர் அசஃப் கான் கட்டியிருக்கிறார்.  குளிர்காலத்தில் சினார்  (Maple) மரங்களும், கோடையில் மலர்களும் இப்பூங்காவை அலங்கரிக்குமாம்.

நிஷாத் பாக் நுழைவு வாயில்.




நிஷாத் பாக்கின் அடுக்கக்காய் மொத்தம் 12 தளங்கள் இருந்திருக்கிறது, மத்தியில் உள்ளது அருவிபோல நீர் கொட்டும் கால்வாய், இது இறுதியில் Dal ஏரியில் போய் 'சங்கமம்' ஆகிறது.


நிஷாத் பாக் ஒட்டி அமைந்துள்ள டால் ஏரி Dal Lake] .  இது ஜெமினி ஓஹோ எந்தன் பேபின்னு பாட்டு பாடுவாரே அதே ஏரி தான். நிஷாத் பாக்கின் 12 தளங்களில் மூன்றை இந்த ஏரியோடு  சேர்த்து விட்டு, நநிஷாத் பாக் - டால் ஏரி இரண்டுக்கும் நடுவில் ஏரியைச் சுற்றி கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் சாலையை  அமைத்துள்ளனர். 





Sunday, December 8, 2013

‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகளுக்கு பதில்கள்...............

வணக்கம் மக்கள்ஸ்!!

நண்பர் காமக்கிழத்தன் அவர்கள்

ஒரு ‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகள்!

என்ற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.  தன்னை கூமுட்டை என்று சொல்லிக் கொண்டுள்ளார், அதை தன்னடக்கம் என்று தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.  நாம் இங்கு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர இருக்கிறோம்,  நாம் தரும் பதில்களால் அவரோ அவரைப் போன்ற நாத்தீகர்களோ மனம்   மாறினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனாலும் அவ்வாறு நடக்கும் என்று நாம் அதிகம் நம்பவில்லை.  இந்தப் பதிவின் நோக்கம், இறை நம்பிக்கையாளர்கள் நாத்தீகர்களின் போலி வாதங்களை கண்டுகொள்ள மட்டுமே.  கேள்விகளை சுருக்கமாகத் தருகிறோம், விரிவாகப் படிக்க மேற்கண்ட பதிவிற்குச் செல்லலாம்.

கேள்வி 1: கடவுள் ஒருத்தர் தானா? அல்லது \\பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியால்..... யுகயுகங்களாக நடந்த பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!\\

மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள்.  அவனுடைய இருப்புக்கு வேறு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  அவன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய அனுபவத்தில் கண்ட விஷயங்களை வைத்து வரையறுக்க முடியாது.  ஏனெனில் நமது லாஜிக் அனைத்தும் நாம் காணும் ஜட வஸ்த்துக்களை வைத்து வருபவை, இறைவன் ஜடத்துக்கு அப்பாற்பட்டவன்.  உதாரணத்துக்கு பேருந்தில் செல்பவரின் கடிகாரம், சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும், காரணம் நமது அனுபவத்தில் அவ்வாறு நாம் எதையும் கண்டதில்லை, ஆனால் இது உண்மை என்று சோதனைப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இறைவன் அப்படின்னு ஒருத்தன் இருக்கின்றானா, அவன் ஒருவனா அல்லது பலரா, அவனுடைய குணாதிசயங்கள் என்ன? - இதற்கான  விடைகளை ஒருத்தர் தேடித்தான் கண்டறிய வேண்டும்.  சரியான விடை எங்கே கிடைக்கும் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒருவருடைய புத்திசாலித் தனத்தைப் பொருத்தது.


கேள்வி 2: [பெரிய கேள்வி கேட்க வருவது சுருக்கமாக இதைத்தான்] எல்லாத்தையும் கடவுள் படைச்சான் என்றால் கடவுளை படைச்சது யாரு ?

கடவுள் என்ற வார்த்தைக்கு விளக்கம் அகராதியில் உண்டு.  எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரணமுமில்லாதவன்.  அவனுக்கு ஒப்பனவர்களோ, மிக்கார்களோ யாரும் இருக்க இயலாது.  அவ்வாறு அவனை ஒருத்தர் படைக்கிறார் என்றால் அவர் கடவுளுக்கும் மேலே என்று அர்த்தம், அப்படிப் பார்த்தால் மேலே சொன்ன பொருள் படி அவர் கடவுளே அல்ல என்றாகிவிடும்.  எனவே, ஒரு வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் கேள்வி எழுப்பிவிட்டு அதை தன்னுடைய புத்திசாலித்தனம் என்று எண்ணி புளகாங்கிதம் அடைவதில் நாத்திக அன்பர்களுக்கு ஈடு இனை யாரும் இல்லை.

கடவுள் என்ற ஒருத்தன் ஏன் இருக்க வேண்டும்?  ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது.  இரண்டு பொம்மைகள் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றன என வைத்துக் கொள்வோம்.  சிறு குழந்தைகள் அந்தப் பொம்மைகள் தானாக ஆடுகின்றன என நினைக்கலாம்.  ஆனால் கொஞ்சம் விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அதை யாரோ ஆட்டுவிக்கிறார்கள், தானாக ஆடாது என்று.  இங்கே நாம் ஜடப் பொருட்களைப் பார்க்கிறோம், அவற்றின் பண்புகளையும் பார்க்கிறோம்.  அவற்றில் முக்கியமான ஒன்று ஜடத்துக்கு சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் இல்லை.  சூரியனோ, சந்திரனோ, பூமியோ எதற்குமே சிந்திக்கத் தெரியாது. கல்லும் மண்ணும் கூட அப்படித்தான்.  அவை தானாக ஒன்று கூடி ஒரு கணினியாகவோ, புகைப் படக் கருவியாகவோ மாறாது, ஒரு ஜீவன் வந்து கைவைத்தால் தான் அவை அவ்வாறு மாறும்.  அவ்வளவு ஏன் மண்ணில் ஒரு காலடித் தடம் கூட தானாக உருவாகாது, காலடியைப் பார்த்தால் அங்கே யாரோ நடந்து போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்வோமே அன்றி தானாக உருவாயிற்று என்று யாரும் சொல்வது இல்லை.  அப்படியானால் நவீன கேமராக்கலையே மிஞ்சும் மனிதனின் கண், கம்பியூட்டரை விட அதிசயமான மூளை, நூறு வருடம் ஓயாமல் உழைக்கும் பம்பான இருதயம் இத்யாதி.......இத்யாதி போன்றவை தானாக உருவாகியிருக்குமா?  அவ்வாறு உருவாகியிருக்கும் என்ற சரக்கை நாம் வாங்கத் தயாராக இல்லை.  ஜடம் அவ்வாறு மாறும் பின்னணியில் ஒரு புத்திசாலி இருக்கிறான் என்று நாம் தீர்மானிக்கிறோம்.  நாத்தீகர்களும் ஒரு இடத்தில் போய் முடிக்கிறீர்கள், நாங்களும் முடிக்கிறோம் நீங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரியாத ஜடத்தில், நாங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரிந்த ஒருவனிடம் அவ்வளவுதான் வேறுபாடு.

\\கேள்வி: 3

‘கடவுள் இருக்கிறார்’ என்பது அனுமானம். எல்லாம் அவரே என்பதும் அனுமானம்தான். இதற்கு மாறாக..........

‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத்  தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக் கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை [அறிவியல் பூர்வமாக ஒரு நாள் நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத் தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.


இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?\\  முழுக்க முழுக்க கற்பனை!!  கற்பனைக்கு வானமே எல்லை.



 கேள்வி: 4

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள். படைப்புத் தொழிலை அவர் எப்போது தொடங்கினார் என்பது அவதாரங்களுக்கும் மகான்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும்! சொல்வார்களா?


 ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கும், இறைவனுக்கும் ஜீவனுக்கும் அவை இரண்டுமே இல்லை.  ஆரம்பமும் இல்லாம, முடிவும் இல்லாம எப்பவும் இருப்பதா?  அதெப்படி?  தற்போதைய அனுபவத்தை வைத்து இதை புரிந்து கொள்வது இயலாத காரியம்.

 கேள்வி: 5

தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும் எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. அப்புறம் எதற்குக் காத்தல் தொழில்?

ஒரு வீட்டை நீங்கள் கட்டிவிட்டீர்கள், அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்?  கொஞ்சம் கொஞ்சமாக குட்டிச் சுவராகும்.  எனவே அதைப் பராமரிக்க வேண்டும்.

கேள்வி 6. கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு? 

இருட்டு என்று ஒன்று உள்ளதா?  குளிர் என்ற ஒன்று உள்ளதா?  இப்படியெல்லாம் எதுவும் இல்லை.  வெளிச்சம் என்ற ஒன்று தான் உண்மை, அது இல்லாவிட்டால் அது இருட்டு.   எது இருக்கிறது என்றால் வெளிச்சம் மட்டுமே, இருட்டு என்று தனியாக எதுவும் இல்லை.  அதே போல குளிர் என்று ஒன்று தனியாக இல்லை, வெப்பம் என்பது மட்டுமே இருக்கிறது,  வெப்பம் இல்லாவிட்டால் அது குளிர்.  குளிர் என்று தனியான ஒன்று இல்லை.  அதே மாதிரி, இறைவன் என்பவன் மட்டுமே நிஜம், அதர்மம் என்பது இறைவனை மறத்தல் மட்டுமே.


கேள்வி: 7

விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?


 நீங்க சொல்லும் யோசனையைக் கேட்டு செயல்படும் துரதிர்ஷ்டவசமான நிலையில் கடவுள் இல்லை, எப்போ எதைச் செய்யனும்னு அவனுக்குத் தெரியும்.



Sunday, November 24, 2013

இப்பதிவைப் படித்தால் மண்டை குளிர்ச்சியடையும்; வழுக்கைத் தலையிலும் முடி முளைக்கும்!!!

வணக்கம் மக்கள்ஸ்!!

[இது முடி உதிர்தல் சம்பந்தப் பட்ட பதிவு அல்ல!!]

சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் மகனின் முதலாம் பிறந்தநாள்.  அலுவலக நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க எண்ணினேன், ஆனால் அவர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நினைத்தேன்.  பிறந்த நாள் விழா அன்று காலை ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒரு துண்டு சீட்டில் மாலை வீட்டிற்க்கு வந்து சிறப்பிக்குமாறு எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.  பரிசு வாங்க நேரமிருக்காது என்று மனசுக்குள் நினைப்பு!! ஆனால் அது பொய்யாகியது,மாலை நான் எதிர் பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது!! பார்த்தால் வந்தவர்கள் அனைவரும் பரிசோடு வந்திருந்தனர்!!  சிலர் வெள்ளி பொருட்கள், சிலர் விளையாட்டு பொம்மைகள், முக்கியமாக கார்கள், சிலர் வீட்டில் மாட்டி வைக்கும் படங்கள் என அசத்தி விட்டனர். 

 

விழா, விருந்து எல்லாம் முடிந்த பின்னர் சென்னையில் இருந்து வந்திருந்த தங்கமணியின் சகோதரரும் அவரது நண்பர்களும்பரிசுப் பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்தார்கள்.  அவற்றில் இருந்த விதம் விதமான பொம்மை கார்களை இயக்கிப் பார்த்தனர். அதில் ஒரு பொம்மை, சுவிட்சை போட்டவுடன் முன்னோக்கி சென்றது, பின்னர் நின்றது, இனிமையான இசையுடன் கார் கதவு தானாகத் திறந்தது, பின்னர் கதவு தானாக மூடிக் கொண்டது, பின்னர் வேறு திசையை நோக்கி வளைந்து சென்றது.  இது எங்களில் யாருக்கும் அதிசயமாகத் தெரியவில்லை, ஒரே ஒருத்தரைத் தவிர.  அவர் மட்டும் வைத்த கண் வாங்காமல் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், கண்களில் ஒரு மிரட்சி, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து அதில் லயித்திருந்தார்!!  பின்னர் அவரது முதுகில் தட்டி, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?"  என்று கேட்ட போது, "ஒன்றுமில்லை, இத்தனை விதமாகவும் இயங்கும்படி எப்படிச் செய்திருப்பானோ என எண்ணி எண்ணி வியக்கிறேன்" என்றார்.  மற்றவர்கள் யாருக்கும் அதிசயமாகத் தோன்றாது அது அவருக்கு மட்டும் ஏன் அதிசயமாகத் தோன்றியது? காரணமில்லாமலில்லை!!  அவர் ஒரு கார் மெக்கானிக்.  ஒரு காரில் A -Z பிரித்து திரும்ப சேர்க்கத் தெரிந்தவர், எது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்தவர்.  அதிலுள்ள சங்கதிகள் தெரிந்தபடியால் இந்த பொம்மை கார் இயங்கும் விதம் அவருக்கு அதிசயமாகத் தெரிந்தது.  நாங்கள் அது குறித்து எதுவும் தெரியாதவர்கள், ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!! இதுதான் வித்தியாசம்.

 

அதுசரி எதற்கு இந்த கதை?  காரணம் இருக்கிறது.   இந்த உலகையும் நம்மையும் படைத்து, காத்து அழிக்கும் வேலையை செய்து வரும் அதிகாரம் படைத்த ஒருத்தன் [இறைவன்] இருக்கிறான் என்று ஒரு சாராரும், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று மறு சாராரும் பட்டி மன்றம் போட்டு வாதிட்டு வருகிறோம்.  இதில் எந்த கட்சியில் ஒருத்தர் இணைகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது?


உலகில் நம்மைச் சுற்றி அத்தனை அதிசயங்கள் இருந்தாலும் பலர் அதை கண்டுகொள்வதே இல்லை, மேலே சொன்ன மெக்கானிக் மாதிரி அதை அதிசயமாகப் பார்ப்பவர்கள் வெகு சிலரே.  அந்த சிலருக்கு இறைவன் இருக்கிறான் என்ற சந்தேகம் ஒருபோதும் வருவதில்லை.  ஆனால், பாதி அறிந்து மீதி அறியாத அன்பர்கள் எல்லோருக்கும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை ஒருபோதும் உணரவே முடியாது.


அதுசரி, எதை வைத்து இறைவன் இருக்கிறான் என்று சொல்ல முடியும்?  உலகில் நாம் இரண்டு விதமான சங்கதிகளைப் பார்க்கிறோம், ஒன்று உயிருள்ளது, எறும்பிலிருந்து யானை வரை, இன்னொன்று உயிரற்றது [ஜடம்] கல்லில் இருந்து மலை வரை.  எப்போதெல்லாம் ஜடம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன், உயிர் இருந்தே தீரும். உதாரணத்துக்கு பாழடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று சொன்னால் நம்புவதில் தவறில்லை. அதே சமயம் அழகாக வண்ணம் பூசப் பட்டு வரவேற்பறை முதல், சமையல் கட்டு, குளியலறை வரை எல்லாம் மிக நேர்த்தியாக உள்ளது, ஹாலில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டுள்ளன, படுக்கையறையில் கட்டில் தலையணை படுக்கை விரிப்பு எல்லாம் சுத்தமாக நேர்த்தியாக உள்ளன என்றால் அதன் பின்னணியில் மனிதர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.  இல்லையில்லை அந்த வீட்டில் பத்து வருடமாக யாரும் உள்ளே செல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது.  இதைப் போலவே எங்கெல்லாம் ஜடத்தில் ஒரு ஒழுங்கமைவைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன் நிச்சயம் இருக்கும்.


வீட்டைப் பராமரிக்கும் ஜீவனைப் போலவே தினமும் சூரியனை கிழக்கில் உதிக்க வைக்கவும், பூமி சுழலவும், காலநிலை மாறி மாறி வரவும் பூமியில் வசிக்கும் அத்தனை ஜீவன்களுக்கும் உணவு கிடைக்கவும் செய்யப் பட்டுள்ள ஒழுங்கமைவுக்குப் பின்னணியிலும் ஒரு ஜீவன் கண்டிப்பாக இருந்தே தீருவார்.  இது தான் ஒரு ஆத்தீகனின் முடிவு.


நாத்திக நண்பர்களே, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதில் சரியான முடிவு எது என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் உண்மையில் உங்களுக்கு இருந்தால் விஷயம் தெரிந்தவர்களை அணுக வேண்டும், அதை விடுத்து ஏமாந்த இளிச்சவா நண்பனை அழைத்து வந்து எடக்கு முடக்காக கேள்வியைக் கேட்டு அதைப் பதிவாகப் போட்டுவிட்டு, அதன் கமண்டு பாக்சையும் மூடி வைத்துவிட்டு, ஐயய்யோ எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டானே என்று ஒப்பாரி வைப்பதில் பிரயோஜனமேயில்லை. ஆகையால் கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்கு பதில் தரக் கூட வழி வைக்காமல் நம்மை விட அறிவாளி எவன்டா என்ற இறுமாப்பில் உழல வேண்டாம்.

உங்கள் கூமுட்டை கேள்விகள் அத்தனையும் பலமுறை நையப்புடைக்கப் பட்டு தோற்கடிக்கப் பட்டவை. புதுசு எதுவும் இல்லை.


இறைவன் இருக்கிறானா எனபதை அறிந்து கொள்ள நாத்தீகர்களுக்கும் ஆத்தீகர்க்களுமிடையே நடந்த விவாதம்.

 http://www.youtube.com/watch?v=Xx0Y-4QeCu4

http://www.youtube.com/watch?v=VoAZmIaAxCw

முதல் வீடியோவின் லிங்க்:

http://www.youtube.com/watch?v=Y6VQwxmPzzA

இதன் தொடர்ச்சியாக உள்ள வீடியோக்களையும் பாருங்கள், உங்கள் நாத்தீக கேடராக்ட் திரை விலகும் உண்மை புரியும்.

Sunday, November 10, 2013

புது தில்லி பயணம் - தங்க சுற்றி பார்க்க டிப்ஸ்

வணக்கம் மக்கள்ஸ்!!

சென்ற வாரம் ஸ்ரீநகர் [காஷ்மீர்] செல்லும் வழியில் புது டில்லியில் ஒரு நாள் தங்கினோம், அங்கே சுற்றிப் பார்த்த போது எடுத்த சில படங்களை இங்கே பகிர்கிறோம். புது தில்லி பகுதியில் எங்கு சென்றாலும் தூய்மை, பசுமை, போக்கு வரத்து நெரிசல் இல்லாத சாலைகள், ஆனால் பழைய தில்லி........  ம்ஹூம்........

புதுதில்லி விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பகர் கஞ்ச் செல்லும் போது.  சாதாரணமாக டாக்சியில் சென்றால் ஒரு மணி நேரம் ஆகுமாம், மெட்ரோவில் 20 நிமிடங்களில் சென்று விடலாம்.  டெல்லியின் பல முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மெட்ரோ இணைப்பு உள்ளது.  விமான நிலையத்திற்கு மட்டும் 150 ரூபாய்.  A/C செய்யப்பட்டுள்ளது, சில சமயம் Tunnel உள்ளேயும், சில சமயம் வெளியிலும் மெட்ரோ ரயில் பயணிக்கிறது, சுகமான பயணம்!!  ஜாலிக்காகவாவது ஒரு முறை இதில் பயணம் செய்யலாம்.


பிர்லா மந்திர்.  [பெருமாள் கோவில்!!]


ஜந்தர் மந்தர்: ஜந்தர் மந்தர் வானவியல் சம்பந்தப் பட்ட கட்டிடக் கலை, 1724-ல் மகாராஜா ஜெயசிங் -என்ற மன்னனால் கட்டப் பட்டது.

ஜந்தர் மந்தர் உள்ளே
இதுவும் ஜந்தர் மாந்தரில் உள்ள கட்டிடம் தான், அடுத்த படம் இதன் உள்ளே எடுக்கப் பட்டது.
மேலே உள்ள கட்டிடத்தின் உட்புறம். 
முன்னாள் பாரதப் பிரதமர்கள் இந்திரா, ராஜீவ் வசித்த அரசு வீடு, தற்போது நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டுள்ளது.  வீட்டின் உள்ளே அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய கட்டங்களில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள், அவர்களைப் பற்றி முக்கிய செய்திகள் கொண்ட செய்தித் தாள் பிரதிகள், அவர்களுடைய முக்கிய அறைகள், நூலகங்கள் என பல சங்கதிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.  ராஜீவ் பைலட்டாக சென்ற போது அவர் ட்ரிப் கையொப்பமிட்ட ஷிப்ட் ரெஜிஸ்டர் ஒன்றும் உள்ளது.  இந்த வீட்டின் வாசலில் தான் இந்திரா சுட்டுக் கொல்லப் பட்டார்.  அப்போது அவர் நடந்து சென்ற சில மீட்டர் தூரம் கண்ணாடியால் பாதுக்காக்கப் பட்டு வருகிறது.  அவர் சுடப் பட்டு விழுந்த இடம் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டும், அதன் முன்னர் ஒரு விளக்கு வைத்தும் காவலர்களால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
ராஜீவ் -சோனியா திருமணத்தின் போது .....

இந்திரா வீட்டின் வெளிப்புறம்........ 


பார்லிமென்ட் கட்டிடம் முன்பு.

 ஜனாதிபதி மாளிகை முன்னர்.
அதே இடத்தில் விளக்கு.........
குதுப்மினார்..........
குதுப் மினார்- பின்புறத்தில் இருந்து........
குதுப்மினார் உள்ளே உள்ள ஒரு வரலாற்று சின்னம் .........




தாமரை வடிவ வழிபாட்டுத் தளம் [Lotus Temple]..........எந்தவித சப்தமும் இல்லாமல் இரு...... இதுதான் இவர்கள் தத்துவமாம்..........!!
வெளியில் வரும்போது சட்டென திரும்பிப் பார்க்கையில் கண்ட காட்சி, அவசரம் அவசரமாக கேமராவை கொண்டு வா என கத்தி உடனடியாக படம் பிடித்தேன், முதல் படம் சரியாக வரவில்லை இது இரண்டாவது படம்.........
காந்தியடிகளின் சமாதியின் முன்பாக.........  அணையா விளக்கு ஆர்பாட்டமில்லாமல்................  மற்ற இடங்களைப் போல் அல்லாது அமைதியாக உள்ளது.   அதிக மக்களும் இல்லை,  பராமரிப்பும் மிக எளிமையாகவே உள்ளது.


இறுதியாக செங்கோட்டைக்குச் செல்லும்போது மணி ஏழு ஆகி விட்டது, பேருந்துக் காரர், "வேண்டுமானால் இறங்கி பார்த்துவிட்டு நீங்களாகவே ரூம் போய்ச் சேருங்கள்" என்றார்.   வேண்டாம்டா சாமி இன்னொரு முறை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டோம்........!!.

தில்லியில் எங்கு தங்கலாம்?

IRCTC இணைய தளத்தில் Ginger என்னும் தாங்கும் விடுதி உள்ளது, இது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. வசதிகள் அருமை, செலவும் குறைவு.  பட்ஜெட் விடுதிகள் வேண்டுமென்றால் அரகாஷன் சாலையில் பல உள்ளன.  அவற்றில் ஒன்றின் முகவரி கார்டு கீழே............





டெல்லியை சுற்றிப் பார்க்க பேருந்து சீட்டுகளுக்கு [நியாயமான விலையில் ].........இவர்களிடம் டேக்சியும்கிடைக்கிறது, ஃ போன் செய்தாலே போதும்.
இவர்களிடம் டேக்ஸி கட்டணம் மற்ற எல்லோரையும் விட குறைவு.  பயண டிக்கட்டுகள், தங்கும் விடுதிகள், பேக்கேஜ் டூர்கள் இன்னும் பலவற்றுக்கும்...........