Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, September 2, 2013

டாக்டர்......... சுவரு அசையுது........!!

வணக்கம் மக்கள்ஸ்,
 இன்று Facebook கில் உலாத்திக் கொண்டிருக்கும் போது சில சுவராஸ்யமான விஷயங்கள் தென்பட்டன.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
 
இந்தப் படத்தைப் பாருங்கள், சுவர் அலை போல அசைகிறதா!! நன்றி: Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
நம்மாளுங்க ஹைக்கூ எழுதுவாங்க, [எழுதி படிக்கிறவங்களை சாகடிப்பாங்க என்பது வேறு விஷயம்].  ஒரே வரியை மூணு வரியாக மடக்கி மடக்கி எழுதினால் அது ஹைக்கூ என்ற ரீதியில் தான் பலர் எழுதுகின்றனர்.  [சிலர் நாலஞ்சு வரியும் கூட எழுதிட்டு இதுவும் ஹைக்கூன்னு கணக்கு கண்பிப்பாங்க!!]  ஹைக்கூ எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும்.  அந்த வகையில் அழகான சில ஹைக்கூக்கள் இதோ:
 
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..

* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
ஹைக்கூக்களுக்கு நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்


என்ன கற்பனை..........!!  
நன்றி:
Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
  இறுதியாக:  சரி தூக்கம் வருது, தூக்கம் பத்திய ஒரு டிப்.
காய்கறிகள்

காய்கறிகளில் ஊட்டசசத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கலாம். ஆனால் இரவில் நன்கு தூங்க நினைத்தால், ஒருசில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். உதாரணமாக, வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.
 மேலும் படிக்க: நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்
மீண்டும் சந்திப்போம்.............!! 
வணக்கம் மக்கள்ஸ்!!



Wednesday, August 28, 2013

மைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்!!

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம்.  [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம்.   நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு.  அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும்.  எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள்.  பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை.  நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள்.  அதை இங்கே தருகிறோம்.  அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!!  [என்னது கேட்க மாட்டீங்களா?!  அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!]  அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!

 ------------------------------------------------------------------------------------
 மைதா தயாரிப்பு முறை:

முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. 

         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது. 

               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். 

              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல. 
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.  [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!].  மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில்  பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.-  ஹி ....... ஹி ....... ஹி .......  உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள், 
தாது எண்ணெய்கள், 
சுவையூட்டிகள், 
 பதனப்பொருட்கள், 
வெள்ளை சீனி, 
சாக்கரின், 
அஜினோமோட்டோ 
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம்.  எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.  கீழே உள்ள படத்தை பாருங்க.

அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய்,  ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி?  விளங்கலையே?


 

Monday, November 19, 2012

மருத்துவர், மருந்துகள் இல்லா வைத்தியம், Healer பாஸ்கர் அவர்களின் மென்நூல், வீடியோக்கள் இலவசம்.

திரு பாஸ்கர் அவர்களைப் பற்றி நாம் முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தோம். சுட்டி.   மருந்தில்லா மருத்துவம் என்று இயற்கை வைத்தியத்தைச் சொல்வார்கள்.  அதாவது சமைக்காத காய்கறிகள், பழங்கள், பருப்புகளை மட்டுமே உண்டு, யோகா, சேற்றுக் குளியல், வாழையிலைக் குளியல் போன்ற சில முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.  "உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது இவர்களது தாரக மந்திரம்.   ஆனால், திரு பாஸ்கர்- இவரது மருத்துவமுறையில் மருந்து மட்டுமல்ல, வைத்தியரும் இல்லை!!  தனது 6 மணி நேர பேச்சை ஒருத்தர் கேட்டாலே போதும் என்கிறார், இந்த முறைக்கு செவிவழி தொடு சிகிச்சை என்று பெயரிட்டிருக்கிறார்.  நம் உடலுக்கே எல்லாமும் தெரியும், எந்த வித சிக்கல் வந்தாலும் அதைச் சரி செய்யும் வழிமுறை ஏற்கனவே உடலில் உள்ளது, அதை விட சிறந்த மருத்துவர் யாரும் இல்லை என்கிறார்.  [அதே சமயம், விபத்து ஏற்ப்பட்டலோ , கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப் பட்டாலோ, பாம்பு கடித்தாலோ நவீன வைத்தியம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதையும் கூறுகிறார்.]

தனது 6 மணி நேரப் பேச்சை கேட்க நேரில் வர இயலாதவர்களுக்கு அவற்றை வீடியோக்களாக யூ-டியூபில் போட்டு அவற்றை தனது தளத்தில் கொடுத்துள்ளார்.  மேலும் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் புத்தக வடிவத்திலும் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தின் மென் நூலை இலவசமாக வழங்குகிறார்.  அதை பெற, அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு நமது தகவல்களைத் தெரிவித்தால், அனுப்புகிறார்கள், ஆனால் பத்து நாட்கள் ஆகும்.  எனக்கு அந்த வகையில் கிடைத்த மென்நூலை பகிர்ந்துள்ளேன்,  பதிவிறக்க  சுட்டி.  [இதைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்!!]

அடுத்து அவர்கள் இணைய தளத்தில் உள்ள வீடியோக்களை நீங்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.  ஒருவேளை அதை உங்கள் கணினியில் சேமித்து வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.  எனவே அவற்றை எவ்வாறு பதிவிறக்குவது என்பது பற்றி பார்ப்போம்.


இதற்க்கு Firefox இணைய உலவி தேவைப் படும்.  முதலில் Firefox ஐப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்  பின்னர் அதனைத் திறந்து,
Tools  ---->  Add-ons  ---->Get Add-ons செல்லவும்.  அதில் கிடைக்கும் Search box ல் Flashgot என்று உள்ளீடு செய்து Enter தட்டவும்.  அதில் Flashgot என்ற Add-on ஐத் தேடிப் பிடித்து Install பொத்தானைச் சொடுக்கவும்.  இது Flashgot Add-on ஐ நிறுவும், முடிந்த  பின்னர், Restart செய்யவா என்ற செய்தி வந்ததும்  Restart மீது சொடுக்கவும். இது உலவியை மூடி பின்னர் திறக்கும்.

தற்போது வீடியோக்கள் உள்ள பக்கத்திற்க்குச் சென்று உங்களுக்குத் தேவையான வீயோவை இயக்கவும்.  அது இயங்க ஆரம்பித்ததும் உலவியின் Address Bar க்கு சற்று இடது புறத்தில் ஒரு Icon தோன்றும்.  [கீழே உள்ள படத்தில் சிகப்பு வட்டத்திற்குள் உள்ளதுபோல.]  அதன் மேல் மவுசை கொண்டு சென்றால்   நீங்கள் இயக்கிய வீடியோக்கள் அனைத்தின் பெயருடன் அது எவ்வளவு இடைத்தை வன்தட்டில் பிடிக்கும் என்ற விபரத்தோடு தோன்றும்.  நான் முதல் இரண்டு காணொளிகளை இயக்கினேன், படத்தில் உள்ளது போல 146 MB , 147 MB அளவில் இரண்டு File -கள் தோன்றுகிறது.  அதை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தால் [இடது Click செய்தால்] உங்கள் கணினியில் .flv வடிவில் காணொளிகள் சேமிக்கப் படும்.  இவற்றை VLC பிளேயர் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம்.  


உங்கள் File வன்தட்டில் எங்கே சேமிக்கப் படுகிறது என்பதை அறிய வேண்டுமானால்   Tools  ---->Downloads சென்று மவுஸ் வலது கிளிக் செய்து open containing Folder தேர்ந்தெடுக்கவும்.   Flashgot ,  YouTube மட்டுமல்லாது பல வெவ்வேறு தளங்களில் விதம் விதமான காணொளிகளையும் பதிவிறக்க வல்லது.

Thursday, November 8, 2012

ஆங்கில மருத்துவ முறைகளுக்கு சவால் விட வந்துட்டாரய்யா ஒரு தமிழர்!!

என் அலுவலக நண்பர், அவர் ஒரு கன்னடர், ஒரு நாள் என்னிடம் பரபரப்பாக ஓடி வந்தார்.  [அவர் எப்பவுமே அப்படித்தாங்க!!].  என்கிட்ட ஓடி வந்ததுக்கு ஒரு காரணமிருக்கு, ஏன்னா தமிழ் நல்லா தெரிஞ்சவன் என்பதோடு பிரியமான நண்பன் என்ற முறையில் அவர் என்னிடம் வந்தார்.   தான் ஒரு அற்புதமான தமிழ் வைத்தியர் ஒருவரை பற்றி கேள்விப் பட்டதாகவும், அவர் பேசிய வீடியோக்கள் சிலவும் எனக்குத் தந்தார்.  பின்னர் அவை எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்று YouTube லும் பகிர்ந்தார்.  அந்தத் தமிழ் வைத்தியர் பெயர் Healer  பாஸ்கர்.  தற்போது இவரை என் கன்னட நண்பர் வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார் இவர் சொல்வது ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்ற வேண்டியவை என்றும் சொல்கிறார்.  முடிந்தால் இவரை பெங்களூருக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்று திட்டமும் வைத்துள்ளார்.  

இவற்றில் சிலவற்றை நானும் பார்த்தேன்.  குழந்தைகளுக்கு தடுப்பூசி என்று போடுகிறார்களே, அது மருந்து இல்லையாம், எதற்கு தடுப்பூசி போடுகிறார்களோ அந்த நோயை உருவாக்கும் கிருமிகளாம்.  குழந்தை உடல் அதை எதிர்த்து போராடி அந்தக் கிருமிகளுக்கான எதிர்ப்பு  மருந்தை/சக்தியை உடலில் உற்பத்தி செய்து வாழ்நாளில் மீண்டும் எப்போது வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறதாம்.  வயது ஆக ஆக இந்த திறனை நமது உடல் இழக்கிறதாம்.  நம் உடலை குழந்தையின் உடலைப் போலவே மாற்றவேண்டும், மீண்டும் அந்தத் திறனை கொண்டு வரவேண்டும் என்கிறார்.

நாம் உண்ணும் உணவை பல பிரிவுகளாகப் பிரிக்கிறார்.

1. உயிருள்ள உணவு.  -பச்சைக் காய்கறிகள் பழங்கள்.
2.உயிரூட்டப் பட்ட உணவு.- முளைவிட்ட தானியங்கள், பயறுகள்.
3. செத்த உணவு. -சமைக்கப் பட்டது.
4. லாபமும் இல்லாத நஷ்டமும் இல்லாத உணவு - மாமிச உணவுகள்.
5. உடலைக் கெடுப்பவை. -டீ , காபி, சாராயம், பாண் பராக், புகையிலை போன்றவை.

இவற்றில் முதல் இரண்டும் லாபமாம், மூன்றாவது குறைந்த லாபம், நான்காவது பூஜ்யம் 5 வது நஷ்டமாம்.  லாபம்-உடலுக்கு நல்லது!!

இன்னும் இது போல பல சுவராஷ்யமான தகவல்களை இவர் கூறுகின்றார், காசா, பணமா சும்மா பாருங்க, முடிஞ்சதை ஏற்றுக் கொள்ளுங்கள்!!

நண்பர்களே, கீழே இரண்டு காணொளிகள் பாஸ்கர் அவர்களின் தொலைகாட்சி பேட்டிகள், அடுத்த மூன்று என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள்.  பாருங்கள், இவரை நேரிலும் சந்திக்கலாம், காணொளிகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லலாம்.  இது மட்டுமல்லாது YouTube-ல் Healer பாஸ்கர் என்று தேடினால் மேலும் பல காணொளிகள் கிடைக்கின்றன பார்த்து பயன் பெறுங்கள்.  



Jaya TV

Makkal TV
 

என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள்.

வீடியோ-1


வீடியோ-2


வீடியோ-3


மேலும் சில வீடியோக்கள்:

உணவுகள், எத்தனை வகை, அவற்றை எப்படி உன்ன வேண்டும்? சுட்டி

மேலும், தொடர் வீடியோ  சுட்டிகள் 

Wednesday, November 7, 2012

ரத்த அழுத்தம் சில தகவல்கள்............

கீழே இருக்கும் படங்களைப் பாருங்க  எல்லா படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..............  முடிஞ்சா கண்டுபுடிங்க!! 









பாத்துடீங்களா?  படங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னன்னு கண்டுபுடிச்சீங்களா?  முடியலையா!!  சரி நானே சொல்லிடறேன்.  எல்லா படத்திலும் இரத்த அழுத்தத்தை கையில் முழங்கைக்கு சற்று மேலே தான் அளக்கிறார்கள்.  ஹி ...........ஹி ...........ஹி ...........ஹி ...........  அது சரி ஏன் அந்த இடத்தையே மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?  ஊசியை கையில் போடுறாங்க, இடுப்பில் குத்துறாங்க, ஏன் இரத்த அழுத்தத்தை காலில் அல்லது  கழுத்தில் அளக்கக் கூடாது?  இதுக்குப் பின்னாடி இயற்பியல் இருக்கிறது!!   [ஆஹா..........  வந்துட்டான்யா........வந்துட்டான்!!]

வெவ்வேறு வடிவங்கள் [Shapes], அளவுகள்[Sizes] கொண்ட  களன்களை ஒன்றாக இணைத்து, அதில் திரவத்தை நிரப்பும்போது, திரவத்தின் மட்டம் எல்லா களன்களிலும் ஒரே உயரத்தில் இருக்கும்.
நமது உடலில் இரத்த அழுத்தம் கால் முதல் தலைவரை உயர்ந்துகொண்டே போகிறது.  காலில் அதிகமாகவும் தலையை நோக்கி செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்லும்.  ஆகையால் கண்ட கண்ட இடங்களில் இரத்த அழுத்தத்தை அளக்க முடியாது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அளக்க வேண்டும்.  ஏன் கையைத் தேர்ந்தெடுத்தார்கள்?  அந்த உயரத்தில் உடலின் எந்த உறுப்பு இருக்கு அப்படின்னு கொஞ்சம் யோசிங்களேன்!!  இன்னும் தெரியலையா?  இதயமுங்க...... இதயம்!!  இதயத்தில் என்ன இரத்த அழுத்தம் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா அதே உயரத்தில் இருக்கும் கையில் தானே அளக்கனும் அதான்!!



வால்நட் பருப்புகள் இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும், குறைந்த இரத்த அழுத்தம் இருக்கிறவங்க, இதைத் தொட்டுடாதீங்க!!
உயர் இரத்த அழுத்தம் அப்படின்னா என்ன, வராம தடுப்பது எப்படி, வந்தா சமாளிப்பது எப்படி, அதற்க்கான உணவு முறைகள் உடற்ப் பயிற்சிகள் என பல நண்பர்கள் விரிவா எழுதியிருக்காங்க.  அவற்றில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் சில இதோ:


 இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

 உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தம் [பாட்டி வைத்தியம்]

இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்றுவன்