Saturday, February 14, 2015

1992 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து செய்த மொள்ளமாறித் தனம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 தற்போது நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்னர் பல உலகக் கோப்பை போட்டிகள் நடந்திருந்தாலும், இன்று நாம் பார்க்கப் போவது 1992 போட்டிகளைப் பற்றித்தான்.  ஏன்?  காரணம் அந்த போட்டிகளை தற்போது போலவே நியூசிலாந்தும்-ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தின என்பதேயாகும்.

போட்டி துவங்கும் முன்னர் கோப்பையை யார் வெல்லுவார்கள் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள்.  நம் கவாஸ்கர், "பாகிஸ்தான் கோப்பையை வெல்லும்" என்று எதையோ வைத்து சொல்லிவிட்டார்.  ஆனால் ஆரம்ப ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி ஆடிய விதம் நம்பிக்கையூட்டும் விதமாக இல்லை.

முதல் ஐந்து மேட்சுகள் நடந்த பின்னரும் ஒரே ஒரு மேட்சில் மட்டுமே பாகிஸ்தான் வென்றிருந்தது, அதன் மூலம்  கிடைத்த 2 பாயிண்டுகள் மற்றும் மழை வந்ததால் இங்கிலாந்துடன் தோற்கவிருந்த ஒரு மேட்சில், பாடாவதி கிரிக்கெட் விதிகள் மூலம் கிடைத்த ஒரு பாயிண்டுடனும் சேர்த்து வெறும் மூன்று பாயிண்டுகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.  "தப்பா ஆருடம் சொல்லிட்டோமோ?" என்ற உறுத்தல் கவாஸ்கருக்கே உள்ளுக்குள் அவ்வப் போது எட்டிப் பார்த்திருக்கலாம்!!  ஆனாலும் தன்னுடைய ஆருடம் குறித்து அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.



லீக்கில் கடைசி ஆட்டம் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் மோத வேண்டும்.  அதுவரை நியூசிலாந்து ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தது.  நியூசிலாந்து சொந்த மண்ணில் விளையாடியதே இதற்குக் கரணம்.  முதலைக்கு நீரிலும், யானைக்கு நிலத்திலும் பலம் அல்லவா!!  பாகிஸ்தானுடனான எட்டாவது ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அடுத்து நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து விளையாட வேண்டும்.   அதைத் தவிர்க்க ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது.  அது, பாகிஸ்தானுடன் எட்டாவது லீக் ஆட்டத்தில் தோற்பது!!  இதை நியூசிலாந்து செய்யும் என்பதை கிரிக்கெட் நோக்கர்கள் யூகித்தே இருந்தனர்.  அந்த ஆட்டத்தில் தோற்கும்படி ஆடி மேட்சை கோட்டை விடுவீர்களா என்று நியூசிலாந்து கேப்டனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவ்வாறு செய்ய மாட்டோம் என்றே அவர் சொல்லி வைத்தார்.  ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.  மகா மட்டமான ஸ்கோருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.


பாகிஸ்தான் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.  இந்த மேட்சை வென்றதன் மூலம் அதன் பாயிண்டுகள் 7-லில் இருந்து 9 ஆக உயர்ந்ததால், நான்காம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் அது தகுதி பெற்றது.  ஒரு வேளை நியூசிலாந்து இந்த மேட்சில் வெற்றி பெற்றிருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ, இங்கிலாந்து அணியோ அரையிறுதிக்கு வந்திருக்கக் கூடும்!!  பாகிஸ்தான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நாடு திரும்பியிருக்கும்!!


நியூசிலாந்து நினைத்த படியே அரையிறுதி ஆட்டத்தை  சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுடன் ஆட வாய்ப்பு கிட்டியது.  மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் 166 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆயிருந்த போதும், இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற 263 ரன்கள் இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.  இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் மிக நன்றாக ஆடி சவாலில் ஜெயித்து இறுதியாட்டத்துக்குச் சென்றனர், கேப்டன் உட்பட நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.  அவர்களது கோணல் புத்தி அங்கே தோற்றது!!



இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது.  இனவெறிக் கொள்கையால், உலகக் கோப்பையில் இருந்து விலக்கப் பட்டிருந்த அந்த அணிக்கு இது முதல் பெரிய போட்டியாக இருந்தது.  ஆனாலும், அவர்கள் ஆட்டம் மற்ற அணிகளுக்குச் சவாலாகவே இருந்தது, நன்றாக ஆடி அரையிறுதி வரை வந்திருந்தனர்.  மழையின் காரணமாக அரையிறுதி ஆட்டம் 50 லிருந்து 45 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது.  இந்த உலகக் கோப்பையின் போது   முன்னரே நாம் சொன்ன சில பாடாவதி விதிகளை கண்டுபிடித்து அமல் படுத்தியிருந்தனர்.  ஏன் இவை பாடாவதி என்றால், இவ்விதிகளை மடையன் கூட இவற்றுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதற்கு இந்த போட்டியே சாட்சி.  ஆட்டம் நடக்கும் போதே எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்பதை கழுதை கூட ஒப்புக் கொள்ளாது.  முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 252 ரன்களைக் குவித்திருந்தது.  தென்னாப்பிரிக்கா 253 ரன்கள் பெற்றால் வெற்றி!!  ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது மழை காரணமாக 45 ஓவர்கள் 43 ஆகக் குறைக்கப் பட்டது, ஆனாலும் இலக்கு அதே 253 ரன்கள் தான் என்ற அறிவிப்பு கடைசி ஒரு பந்து இருக்கும் போது ஸ்கோர் போர்டில் வெளியானது.  எனவே வெற்றி பெற தென்னாப்பிரிக்கா ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது.  பைத்தியக் காரன் கூட இதை சரி என்று சொல்ல மாட்டான்.  ஆனாலும் அறிவாளிகள் அதேசரி என்று சாதித்தனர்.  தென்னாப்பிரிக்க அணியின் மட்டையாளரால் கடைசிப் பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயினர். இந்த அயோக்யத் தனம் மூலம் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றாலும் இறுதி ஆட்டத்தில் அதற்கான தண்டத்தை கட்ட வேண்டியிருந்தது.



இறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதினர்.   பாகிஸ்தான் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றனர்.  பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு இங்கிலாந்துடன் ஆடிய லீக் ஆட்டத்தில் மழையால் கிடைத்த ஒரு பாயிண்டும், நியூசிலாந்து விட்டு கொடுத்த மேட்சும் தவிர்க்க முடியாத இரண்டு அடிப்படைக் காரணங்களாகும்.   மொத்தத்தில், கவாஸ்கர் சொன்ன ஆருடம் எப்படியோ மெய்யானது!!  பின்னர் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து சிறப்பு விருந்து கொடுத்து கவுரவித்தனர் பாகிஸ்தானியர்!! 

கடைசியாக: இந்த ஆட்டத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் அணிகளின் மோதலில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, விக்கட் கீப்பர் கிரண் மோரேவுக்கும்- பாகிஸ்தானின் மியாண்டாடுக்கும் வாய்த் தகராறும் இந்த மேட்சில் நடந்தேறியது.  மியாண்டாட் இவர்களை நக்கல் செய்யும் வண்ணம் குதிக்க, அம்பயர்கள் வந்து நடத்தை மீற வேண்டாமென்று அறிவுருத்திச் சென்றனர்!!


Thursday, February 12, 2015

இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்: கேஜ்ரிவால் முடிவு சரிதானா?

டெல்லியில் 67/70 என இடங்களை வென்று கேஜ்ரிவால் பதவியிழந்த பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் முதல்வராகிறார்.  சென்ற முறை வென்ற பின்னர், சாமான்யனின் கட்சி என்ற பெயருக்கேற்ப, அரசு வழங்கவிருந்த சவுகர்யங்களைப் புறக்கணித்து விட்டு பதவியேற்பு விழாவுக்கு மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயிலில் பயணித்தும், மக்கள் தங்கும் சாதாரண அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தங்கியும் தன்னை மற்ற அரசியல் வாதிகளில் இருந்து வேறுபட்டவராகக் காண்பித்துக் கொண்டார்.  அதே பாணியில் தற்போதும் தனக்கு வழங்கவிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.


இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது, "அடேங்கப்பா கேஜ்ரிவால் என்ன ஒரு எளிமையான மனிதர், பதவி அந்தஸ்து வந்தும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புகிறாரே!" என்று அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் நமக்கு ஏற்படுவது நிஜம் தான்.

நம்மூரில் தன்னுடைய காருக்கு முன்னும் பின்னும் நூறு கார்கள் தொடர, எந்திரத் துப்பாக்கி தாங்கிய கறுப்புப் பூனைகளின் பாதுகாப்போடு திரியும்  அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமாகத் தெரியக் கூடும்.  ஆனாலும், அவரது முடிவு சரிதானா?  சரியல்ல என்றே நான் சொல்லுவேன்.  மேலும் அலசுவோம்.

நம்மூர் மேலாண்மை பாடங்களில் எளிமைக்கு ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வார்கள்.   அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்வது ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் யாரையாவது தான்.  [கவுண்டமணியின் "பஞ்சுமிட்டாய் விற்கிறவன், கூடை பின்னுறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கிறான்" என்ற டயலாக் நினைவுக்கு வரக் கூடும், ஆனால் இவர்கள் நிஜ தொழிலதிபர்கள்!!].  அவ்வளவு பணமிருந்தாலும், அவர் அலுவலக கேண்டீன் வந்தால் அவரது தருணம் வரும்வரை மற்றவர்களோடு வரிசையில் காத்திருந்து,  அவரது உணவைப் பெற்று கொண்டு மற்ற ஊழியர்கள் போலவே உண்டு செல்வாராம்.  சிலர் தங்களது உடைகளைக் கூட தாங்களே துவைத்து, சலவையும் செய்து கொள்வார்களாம்.  [முடிவெட்டிக் கொள்வதை மட்டும் வேறு யாருக்காவது விட்டுக் கொடுப்பார்கள் போல!!].  இவர்கள் எளிமையானவர்களாம்.  என்னைக் கேட்டால் இது மடத்தனம் என்பேன்.

சாதாரண தொழிலார்கள் ஆயிரம் பேர் கிடைக்கலாம், ஆனால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் புத்திசாலி கிடைப்பது அபூர்வம். அவருடைய பொறுப்புகள் அதிகம், ஆகையால் அவரது நேரம் முக்கியம்.  எனவே, இவர் உணவுக்காகக் காத்திருக்காமல், தனது அறைக்கே உணவை வரவழைத்து உண்ணலாம், உடைகளை அயர்ன் செய்வதை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்.  அதைவிடுத்து எளிமை என்ற பெயரில் இந்த மாதிரி நேரத்தை வீணடிப்பது கூமுட்டைத் தனம் என்பதே நிஜம்.



எனவே, தவிர்க்க வேண்டியது தேவையில்லாத ஆடம்பரத்தை, அடிப்படை அத்தியாவசியங்களை அல்ல.  டெல்லியின் முதல்வரும் ஒரு மனிதர் தான்.  ஆனால் சாமான்ய மனிதர் அல்ல, இரண்டரை கோடி மக்களின் பிரதிநிதி.  அவருக்கு வேண்டியவர்களும் இருக்கலாம், எதிரிகளும் இருக்கலாம்.   யார் எங்கே இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?  முதல்வர் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டியது நியாயம்தான் என்றாலும், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.  அவ்வாறு இருந்தால் தானே அவர் கனவு காணும் அரசியல் மாற்றத்தைச் செயல்படுத்த முடியும்?  எனவே முறைப்படி அவருக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பை ஏற்பதே சரியாக இருக்கும் என்பது எமது கருத்து.

எனவே கேஜ்ரிவால் அவர்களே, ஆடம்பரம் வேண்டாம் என்ற உங்கள் நோக்கம் உள்ளுக்குள் நிச்சயம் இருக்கட்டும், அதற்காக இந்த மெட்ரோ இரயிலில் பிரயாணம், குடிசையில் வாழ்க்கை, முட்டு சந்தில் மக்களோடு சந்திப்பு போன்ற ஷோ காட்டும் கோமாளி வேலைகளை விடுத்து, இன்னொரு ஆட்டோக்காரர் பளார் என்று உங்களை அறைவதற்கு முன்னர் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள, "ஊழலுக்கு ஒரு மாற்று" என்ற இமேஜை காப்பாற்ற முயலுங்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஜொலிக்குமா?

இன்று உலகக் கோப்பை துவக்க விழா ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் நடக்கவிருப்பதாக செய்தித் தாட்களில் படித்தேன்.  சென்ற முறை கோப்பையை வென்ற இந்திய அணி இம்முறையும் உச்சத்தைத் தொடுமா?

பதில் தொடாது.  பயிற்சி ஆட்டங்களில்  நம்மவர்கள் சொதப்பிக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இதற்க்கு வேறு காரணங்களும் உண்டு.  சென்ற உலகக் கோப்பை நடந்தது இந்தியாவில், சொந்த மண்ணில்.  இந்திய ஆடுகளத்திற்க்கும், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.  இந்திய பிட்சுகள், Flat பிட்சுகள், ஆனால் தற்போது ஆட்டம் நடக்கவிருக்கும் பிட்சுகள் உயிருள்ளவை.  அதாவது பந்து ஆடுகளத்தில் பட்டு கன்னா  பின்னாவென்று திரும்பும்.  பந்து வீச்சாளர்களுக்குத் திருவிழாதான்.  அவற்றை சொந்த மண்ணாகக் கொண்ட மட்டையாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான், வெளுத்துக் கட்டுவார்கள்.  நம்மாட்கள் மண்ணைக் கவ்வுவார்கள்.

அதுசரி,  உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு கிடைக்கும் தொகை இங்கே ஐ பி எல்லில் ஒரே ஆளே ஒரு சீசனில் சம்பாதித்து விடுவார்.  எவனுக்குக் கவலை!!  விசனம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் , ஆடுபவர்களுக்கல்ல!!

Monday, February 9, 2015

2015 பிப்ரவரி 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருமா?




இந்த 2015 பிப்ரவரியில் 4 ஞாயிறு 4 திங்கள் 4 செவ்வாய் 4புதன் 4 வியாழன் 4 வெள்ளி 4 சனிக் கிழமைகள் வருதாம்.! இது 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருதாம்.! இதை சீனாவில் பணப்பை வருடம் என்பார்களாம்..
இந்த செய்தியை 5 க்ரூப்புகளில் 11 நிமிடங்களுக்குள் நாம் பங்கிட்டு கொண்டால் 4 நாட்களுக்குள் நமக்கு பணம் கொட்டுமாம்.. இப்படி ஒரு அபத்தமான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது..
நம்ம ஆட்களும் அதை வைரல் ஃபீவராக பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.! அட அப்பாவிகளா.! இந்த பிப்ரவரி 1ம் தேதி ஞாயிறு, 28ம் தேதி சனிக் கிழமை.. இது மாதிரி வர எதுக்குப்பா 823 வருஷம் காத்திருக்கணும்..! வெறும் 6 வருடம் போதுமே.!
2009 & 2003 ஆம் ஆண்டு காலண்டரை பார்க்கவும்..! முகனூல் காலத்திலும் மூட நம்பிக்கைகளை வலைத்தளங்களில் இது போல பரப்புவது நாம் தான்.. இனியாவது இது போல ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்ப வேண்டாமே.

‪#‎கோடி_பெரியார்_வேணும்_போல‬