வணக்கம் மக்கள்ஸ்!!
நண்பர் காமக்கிழத்தன் அவர்கள்
என்ற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். தன்னை கூமுட்டை என்று சொல்லிக் கொண்டுள்ளார், அதை தன்னடக்கம் என்று தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் இங்கு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர இருக்கிறோம், நாம் தரும் பதில்களால் அவரோ அவரைப் போன்ற நாத்தீகர்களோ மனம் மாறினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனாலும் அவ்வாறு நடக்கும் என்று நாம் அதிகம் நம்பவில்லை. இந்தப் பதிவின் நோக்கம், இறை நம்பிக்கையாளர்கள் நாத்தீகர்களின் போலி வாதங்களை கண்டுகொள்ள மட்டுமே. கேள்விகளை சுருக்கமாகத் தருகிறோம், விரிவாகப் படிக்க மேற்கண்ட பதிவிற்குச் செல்லலாம்.
கேள்வி 1: கடவுள் ஒருத்தர் தானா?
அல்லது \\பல
கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியால்.....
யுகயுகங்களாக நடந்த பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே
மிஞ்சினாரா?!\\
மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும். அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது. இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும். அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள். அவனுடைய இருப்புக்கு வேறு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய அனுபவத்தில் கண்ட விஷயங்களை வைத்து வரையறுக்க முடியாது. ஏனெனில் நமது லாஜிக் அனைத்தும் நாம் காணும் ஜட வஸ்த்துக்களை வைத்து வருபவை, இறைவன் ஜடத்துக்கு அப்பாற்பட்டவன். உதாரணத்துக்கு பேருந்தில் செல்பவரின் கடிகாரம், சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும், காரணம் நமது அனுபவத்தில் அவ்வாறு நாம் எதையும் கண்டதில்லை, ஆனால் இது உண்மை என்று சோதனைப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இறைவன் அப்படின்னு ஒருத்தன் இருக்கின்றானா, அவன் ஒருவனா அல்லது பலரா, அவனுடைய குணாதிசயங்கள் என்ன? - இதற்கான விடைகளை ஒருத்தர் தேடித்தான் கண்டறிய வேண்டும். சரியான விடை எங்கே கிடைக்கும் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒருவருடைய புத்திசாலித் தனத்தைப் பொருத்தது.
கேள்வி 2: [பெரிய கேள்வி கேட்க வருவது சுருக்கமாக இதைத்தான்] எல்லாத்தையும் கடவுள் படைச்சான் என்றால் கடவுளை படைச்சது யாரு ?
கடவுள் என்ற வார்த்தைக்கு விளக்கம் அகராதியில் உண்டு. எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரணமுமில்லாதவன். அவனுக்கு ஒப்பனவர்களோ, மிக்கார்களோ யாரும் இருக்க இயலாது. அவ்வாறு அவனை ஒருத்தர் படைக்கிறார் என்றால் அவர் கடவுளுக்கும் மேலே என்று அர்த்தம், அப்படிப் பார்த்தால் மேலே சொன்ன பொருள் படி அவர் கடவுளே அல்ல என்றாகிவிடும். எனவே, ஒரு வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் கேள்வி எழுப்பிவிட்டு அதை தன்னுடைய புத்திசாலித்தனம் என்று எண்ணி புளகாங்கிதம் அடைவதில் நாத்திக அன்பர்களுக்கு ஈடு இனை யாரும் இல்லை.
கடவுள் என்ற ஒருத்தன் ஏன் இருக்க வேண்டும்? ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது. இரண்டு பொம்மைகள் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றன என வைத்துக் கொள்வோம். சிறு குழந்தைகள் அந்தப் பொம்மைகள் தானாக ஆடுகின்றன என நினைக்கலாம். ஆனால் கொஞ்சம் விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அதை யாரோ ஆட்டுவிக்கிறார்கள், தானாக ஆடாது என்று. இங்கே நாம் ஜடப் பொருட்களைப் பார்க்கிறோம், அவற்றின் பண்புகளையும் பார்க்கிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று ஜடத்துக்கு சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் இல்லை. சூரியனோ, சந்திரனோ, பூமியோ எதற்குமே சிந்திக்கத் தெரியாது. கல்லும் மண்ணும் கூட அப்படித்தான். அவை தானாக ஒன்று கூடி ஒரு கணினியாகவோ, புகைப் படக் கருவியாகவோ மாறாது, ஒரு ஜீவன் வந்து கைவைத்தால் தான் அவை அவ்வாறு மாறும். அவ்வளவு ஏன் மண்ணில் ஒரு காலடித் தடம் கூட தானாக உருவாகாது, காலடியைப் பார்த்தால் அங்கே யாரோ நடந்து போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்வோமே அன்றி தானாக உருவாயிற்று என்று யாரும் சொல்வது இல்லை. அப்படியானால் நவீன கேமராக்கலையே மிஞ்சும் மனிதனின் கண், கம்பியூட்டரை விட அதிசயமான மூளை, நூறு வருடம் ஓயாமல் உழைக்கும் பம்பான இருதயம் இத்யாதி.......இத்யாதி போன்றவை தானாக உருவாகியிருக்குமா? அவ்வாறு உருவாகியிருக்கும் என்ற சரக்கை நாம் வாங்கத் தயாராக இல்லை. ஜடம் அவ்வாறு மாறும் பின்னணியில் ஒரு புத்திசாலி இருக்கிறான் என்று நாம் தீர்மானிக்கிறோம். நாத்தீகர்களும் ஒரு இடத்தில் போய் முடிக்கிறீர்கள், நாங்களும் முடிக்கிறோம் நீங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரியாத ஜடத்தில், நாங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரிந்த ஒருவனிடம் அவ்வளவுதான் வேறுபாடு.
\\
கேள்வி: 3
‘கடவுள் இருக்கிறார்’ என்பது அனுமானம். எல்லாம் அவரே என்பதும் அனுமானம்தான். இதற்கு மாறாக..........
‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை
உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்;
தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்
கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல
காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை [அறிவியல் பூர்வமாக ஒரு நாள்
நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத்
தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.
இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?\\ முழுக்க முழுக்க கற்பனை!! கற்பனைக்கு வானமே எல்லை.
கேள்வி: 4
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள்
என்பார்கள். படைப்புத் தொழிலை அவர் எப்போது தொடங்கினார் என்பது
அவதாரங்களுக்கும் மகான்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும்! சொல்வார்களா?
ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கும், இறைவனுக்கும் ஜீவனுக்கும் அவை இரண்டுமே இல்லை. ஆரம்பமும் இல்லாம, முடிவும் இல்லாம எப்பவும் இருப்பதா? அதெப்படி? தற்போதைய அனுபவத்தை வைத்து இதை புரிந்து கொள்வது இயலாத காரியம்.
கேள்வி: 5
தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும்
எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. அப்புறம் எதற்குக் காத்தல்
தொழில்?
ஒரு வீட்டை நீங்கள் கட்டிவிட்டீர்கள், அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக குட்டிச் சுவராகும். எனவே அதைப் பராமரிக்க வேண்டும்.
கேள்வி 6. கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு?
இருட்டு
என்று ஒன்று உள்ளதா? குளிர் என்ற ஒன்று உள்ளதா? இப்படியெல்லாம் எதுவும்
இல்லை. வெளிச்சம் என்ற ஒன்று தான் உண்மை, அது இல்லாவிட்டால் அது
இருட்டு. எது இருக்கிறது என்றால் வெளிச்சம் மட்டுமே, இருட்டு என்று
தனியாக எதுவும் இல்லை. அதே போல குளிர் என்று ஒன்று தனியாக இல்லை, வெப்பம்
என்பது மட்டுமே இருக்கிறது, வெப்பம் இல்லாவிட்டால் அது குளிர். குளிர்
என்று தனியான ஒன்று இல்லை. அதே மாதிரி, இறைவன் என்பவன் மட்டுமே நிஜம்,
அதர்மம் என்பது இறைவனை மறத்தல் மட்டுமே.
கேள்வி: 7
விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத்
தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?
நீங்க சொல்லும் யோசனையைக் கேட்டு செயல்படும் துரதிர்ஷ்டவசமான நிலையில் கடவுள் இல்லை, எப்போ எதைச் செய்யனும்னு அவனுக்குத் தெரியும்.