Thursday, February 12, 2015

இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்: கேஜ்ரிவால் முடிவு சரிதானா?

டெல்லியில் 67/70 என இடங்களை வென்று கேஜ்ரிவால் பதவியிழந்த பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் முதல்வராகிறார்.  சென்ற முறை வென்ற பின்னர், சாமான்யனின் கட்சி என்ற பெயருக்கேற்ப, அரசு வழங்கவிருந்த சவுகர்யங்களைப் புறக்கணித்து விட்டு பதவியேற்பு விழாவுக்கு மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயிலில் பயணித்தும், மக்கள் தங்கும் சாதாரண அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தங்கியும் தன்னை மற்ற அரசியல் வாதிகளில் இருந்து வேறுபட்டவராகக் காண்பித்துக் கொண்டார்.  அதே பாணியில் தற்போதும் தனக்கு வழங்கவிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.


இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது, "அடேங்கப்பா கேஜ்ரிவால் என்ன ஒரு எளிமையான மனிதர், பதவி அந்தஸ்து வந்தும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புகிறாரே!" என்று அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் நமக்கு ஏற்படுவது நிஜம் தான்.

நம்மூரில் தன்னுடைய காருக்கு முன்னும் பின்னும் நூறு கார்கள் தொடர, எந்திரத் துப்பாக்கி தாங்கிய கறுப்புப் பூனைகளின் பாதுகாப்போடு திரியும்  அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமாகத் தெரியக் கூடும்.  ஆனாலும், அவரது முடிவு சரிதானா?  சரியல்ல என்றே நான் சொல்லுவேன்.  மேலும் அலசுவோம்.

நம்மூர் மேலாண்மை பாடங்களில் எளிமைக்கு ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வார்கள்.   அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்வது ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் யாரையாவது தான்.  [கவுண்டமணியின் "பஞ்சுமிட்டாய் விற்கிறவன், கூடை பின்னுறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கிறான்" என்ற டயலாக் நினைவுக்கு வரக் கூடும், ஆனால் இவர்கள் நிஜ தொழிலதிபர்கள்!!].  அவ்வளவு பணமிருந்தாலும், அவர் அலுவலக கேண்டீன் வந்தால் அவரது தருணம் வரும்வரை மற்றவர்களோடு வரிசையில் காத்திருந்து,  அவரது உணவைப் பெற்று கொண்டு மற்ற ஊழியர்கள் போலவே உண்டு செல்வாராம்.  சிலர் தங்களது உடைகளைக் கூட தாங்களே துவைத்து, சலவையும் செய்து கொள்வார்களாம்.  [முடிவெட்டிக் கொள்வதை மட்டும் வேறு யாருக்காவது விட்டுக் கொடுப்பார்கள் போல!!].  இவர்கள் எளிமையானவர்களாம்.  என்னைக் கேட்டால் இது மடத்தனம் என்பேன்.

சாதாரண தொழிலார்கள் ஆயிரம் பேர் கிடைக்கலாம், ஆனால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் புத்திசாலி கிடைப்பது அபூர்வம். அவருடைய பொறுப்புகள் அதிகம், ஆகையால் அவரது நேரம் முக்கியம்.  எனவே, இவர் உணவுக்காகக் காத்திருக்காமல், தனது அறைக்கே உணவை வரவழைத்து உண்ணலாம், உடைகளை அயர்ன் செய்வதை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்.  அதைவிடுத்து எளிமை என்ற பெயரில் இந்த மாதிரி நேரத்தை வீணடிப்பது கூமுட்டைத் தனம் என்பதே நிஜம்.



எனவே, தவிர்க்க வேண்டியது தேவையில்லாத ஆடம்பரத்தை, அடிப்படை அத்தியாவசியங்களை அல்ல.  டெல்லியின் முதல்வரும் ஒரு மனிதர் தான்.  ஆனால் சாமான்ய மனிதர் அல்ல, இரண்டரை கோடி மக்களின் பிரதிநிதி.  அவருக்கு வேண்டியவர்களும் இருக்கலாம், எதிரிகளும் இருக்கலாம்.   யார் எங்கே இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?  முதல்வர் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டியது நியாயம்தான் என்றாலும், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.  அவ்வாறு இருந்தால் தானே அவர் கனவு காணும் அரசியல் மாற்றத்தைச் செயல்படுத்த முடியும்?  எனவே முறைப்படி அவருக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பை ஏற்பதே சரியாக இருக்கும் என்பது எமது கருத்து.

எனவே கேஜ்ரிவால் அவர்களே, ஆடம்பரம் வேண்டாம் என்ற உங்கள் நோக்கம் உள்ளுக்குள் நிச்சயம் இருக்கட்டும், அதற்காக இந்த மெட்ரோ இரயிலில் பிரயாணம், குடிசையில் வாழ்க்கை, முட்டு சந்தில் மக்களோடு சந்திப்பு போன்ற ஷோ காட்டும் கோமாளி வேலைகளை விடுத்து, இன்னொரு ஆட்டோக்காரர் பளார் என்று உங்களை அறைவதற்கு முன்னர் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள, "ஊழலுக்கு ஒரு மாற்று" என்ற இமேஜை காப்பாற்ற முயலுங்கள்.

7 comments:

  1. அருமை நண்பரே சொல்ல வேண்டிய விடயத்தை அழகாக எடுத்துக்காட்டியது பாராட்டுக்குறியது உண்மைதான் அவருடைய உயிர் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டியதே,,,, எந்தப் புற்றுக்குள் எந்தப்பாம்பு இருக்கும் 80 தெரியாதே,,,, அவர் ஆடம்பரத்தை குறைக்கட்டும் அதாவது 13 ½ லட்ச ரூபாய்க்கு கோட்டு ஸூட்டு போடாமல் கதர் வேஷ்டி சட்டை போட்டு செலவுகளை குறைக்கட்டும்.

    ஒபாமா, ஒஷாமா போன்றவர்களை அழைத்து அரசு விழாவுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யாமல் ஒச்சாண்டியையும், பிட்டாண்டியையும் வைத்து விழா நடத்தட்டும் காரணம் இவர்கள்தான் உண்மையான இந்தியர்கள் செலவும் குறைவு இல்லாயா ? நண்பரே....
    அருமையான பதிவு வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. இன்னமும் மேற்குவங்க முதல்வர்களும், கேரள முதல்வர்களும் எளிமையுடன்தான் இருக்கின்றனர். மேற்குவங்க முதல்வராக ஜோதிபாசு இருந்தபோது சென்னையில் நடைபெற்ற அவர்களின் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த அவர் வரிசையில் நின்று டீ வாங்கிக் குடித்த காட்சியைப் பத்திரிகையில் பார்த்த நினைவு இருக்கிறது. கர்நாடக முதல்வராக இருந்த வீரப்ப மொய்லிகூட ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவே வலம் வருவார். இவர்கள் போல் கேஜ்ரிவாலும் இருக்கலாமே.
    ஆடம்பரத்தைத் தவிர்க்கலாமே தவிர பாதுகாப்பை அல்ல.

    ReplyDelete
  3. உண்மைதான்! பாதுகாப்பு விஷயங்களில் கவனக்குறைபாடு கூடாதுதான்! கெஜ்ரிவால் யோசிக்க வேண்டும்! மேலாண்மை பாடக் கதை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  4. ஆடம்பரமா இருக்கமாட்டேன் என்று சொல்வதே ஒரு விளம்பரம் தான.. இத போய் ரொம்பா ஆர்வமா அலசிருக்கிங்க.. போன தடவ அவர் என்ன கடைசி வர ரயிலயா போனாரு.. ஒரு ரெண்டு நாளு போனாரு அப்புறம் என்ன ஆச்சு... முதல்ல ஆடம்பர மாளிகை வேண்டாம்ன்னு சொன்னார் அப்புறம் என்ன பண்ணார்.. நம்ம மக்கள் ரெம்ப பாவங்க.. எந்த ஒரு விஷ்யத்தும் ஒரு தடவ மட்டும் கேப்பாங்க அத பத்தி பேசுவாங்க அப்புறம் அடுத்து என்ன நடக்குதுன்னு கண்டுக்க மாட்டாங்க...

    ReplyDelete
  5. carthickeyanதான் சரியாக பாயின்டை பிடிச்சிருக்காரு.

    கெஜ்ரிவால் பதவியில் இல்லாமல் இருந்த போதும் அவருக்கு செக்யுரிட்டி தரப்பட்டது. பதவிக்கு வந்ததும் அவரு எனக்கு போலிஸ் பாதுகாப்பு வேணாம்னு வெளியில சீன் போடுவாரு.ஆனா போலிஸ்காரங்க பாதுகாப்பு கொடுத்தபடி இருப்பாங்க. அம்புடுதான். 1/3 எம்எல்ஏக்கள் கிரிமினல்கள், அப்புறம் அவரு மட்டும் எப்படி இருக்க போறாரு? முழுசும் நல்லவனா இருந்தா இந்தியாவுல வார்டு கவுன்சிலர்கூட ஆக முடியாது!

    ReplyDelete
  6. கேஜரிவால் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்துக்கு எனக்கு நினைவுக்கு வரும் குறள்,

    செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
    செய்யாமை யாலும் கெடும்.

    உலகக்கோப்பை அரை இறுதியைக் கூட நெருங்குவோமா என்பது சந்தேகம்தான்! உ.கோ வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்காமலிருந்தால் அதுவே பெரிய வெற்றி என்று கொண்டாடிக்கொள்ள வேண்டியதுதான்!

    ReplyDelete
  7. காந்தி பிடிவாதமாக பாதுகாப்பை மறுத்ததால் உயிர் துறக்க நேர்ந்தது. எளிமை இயல்பானதாக இருக்கவேண்டும்.சரியான பார்வை

    ReplyDelete