Saturday, March 29, 2014

எருமை மாடு நாத்தீகத் தலைவரான கதை

வணக்கம் மக்கல்ஸ்!!

தகுஸ்தான் என்ற நாட்டில் ஒரு சிற்பி இருந்தாரு, சிலைகளை வடிப்பதில் வல்லவர்.  ஒருநாள் அவரிடம் ஒரு எருமை மாட்டின் சிலை வேண்டும் என்று ஒருத்தர் வந்தார்,  அதைக் கொண்டு போய் ஒரு பூங்காவில் வைக்க வேண்டும், மாணவர்கள் ஏறி விளையாட நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு என்ன விலை என்று சிற்பியிடம் கேட்டார்.   " ஒரு லட்சம் ஆகும்" என்றார் சிற்பி.   வந்தவர் ஐம்பதாயிரம் முன்பணம் கொடுத்துவிட்டு மீதியை சிலையைப் பெறும்போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று விடை பெற்றுச் சென்றார்.  சிற்பியும் அந்தப் பணத்தை வைத்து நல்ல கிரானைட் கல்லாக வாங்கி செவ்வனே என்று சிலையைச் செய்து முடித்தார். சிலை பிரமாதமாக வந்தது.

 

சிலையை வடிக்கச் சொன்னவரை தொடர்புகொண்டு, "சிலை தயார் வந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று தகவல் தெரிவித்தார் சிற்பி.  அதற்க்கு அவர், "ஐயா, அந்தச் சிலைக்கு வேண்டிய நிதியுதவி வசூல் சரியாகப் போகவில்லை, பணம் தருகிறேன் என்று சொன்னவர்கள் எல்லோரும் ரிவர்ஸ் கியர் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள், தயவு செய்து நீங்கள் வேறு யாருக்காவது விற்று விடுங்கள், நீங்கள் எனக்கு பணம் எதுவும் திருப்பித் தரத் தேவையில்லை" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்து  விட்டார்.

இதைக் கேட்டதும் சிற்பி சற்றே கதிகலங்கிப் போனார்.  இத்தனை நாள் உழைப்பு பாழாய்ப் போனதே என்று. அப்போது ஒரு பகுத்தறிவுவாதி அங்கே வந்தார்.   

பகுத்தறிவுவாதி என்றால் என்ன என்பதை நாம் இங்கே கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்.  யார் என்ன சொன்னாலும் கேட்கப் படாது, நீயே சிந்தி.... [ அய்யய்யோ,என்ன மூக்கை சிந்தப் போறீங்க..?!!  சிந்தி என்றால் சிந்தனைங்க......  நீங்க ஒன்னு!!]  அப்படி சிந்திச்சு உனக்கே சரின்னு பட்டால்  ஏத்துக்கொள். [ஒருவேளை சிந்திக்கிறவன் கேனை என்றால் அவன் எப்படி சரியா சிந்திப்பான்?!   இப்படியெல்லாம் புத்திசாலித் தனமா கொக்கி போடப் படாது.   தலைவன் சொன்னா அப்படியே ஏத்துக்கணும்.  ......  ஹி ...........ஹி ...........ஹி ...........   இப்பத்தானே, சொந்தமா சிந்தின்னு  சொன்னீங்க, அதுக்குள்ள தலைவன் சொன்னதை அப்படியே ஏத்துக்கணுமா?  குழப்புதே......  நாம்ம கொள்கையே அப்படித்தான்.   ...........ஹி ...........ஹி ...........  ]

நாம் ரொம்ப விலகிப்   போயிட்டோம். சரி, வந்த பகுத்தறிவு என்ன சொல்லிச்சு?  "ஐயா, எங்க தலைவருக்கு சிலை வைக்கணும்,  எவ்வளவு ஆகும் சொல்லுங்க?"

சிற்பி  சொன்னார், " ஒரு லட்சம்".

"இதெல்லாம் ஜுஜுபி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றதுக்கு ஊரைச் சுத்தி  இளிச்சவா பயலுவ நிறைய பேர்  இருக்கானுவ,  இந்தாங்க அட்வான்ஸ் ஐம்பதாயிரம், சிலையை முடிங்க வந்து மிச்சத்த குடுத்துட்டு வாங்கிகிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியது பகுத்தறிவு.

சிற்பி  அந்த சிலைக்குத் தேவையான கல்லுக்கு ஆர்டர் குடுக்க போனை எடுத்தார்.

அப்போது அவருடைய உதவியாளர் "ஒரு நிமிஷம்" என்றார்.

"என்ன?" என்றார் சிற்பி.

"ஐயா, ஒரு  யோசனை.  எதுக்கு வீணா பணத்தை செலவு  செய்யணும்,இருக்கிறதை வச்சே சமாளிக்கலாமே?" என்றார் உதவியாளர்.

"என்னடா சொல்றே, இருந்த பணத்தைஎல்லாம்தான் அந்த எருமை மாட்டுச் சிலை வடிப்பதற்க்கே போச்சேடா, வேறென்ன இருக்கு நம்மகிட்ட?" என்று புரியாமல் வினவினார் சிற்பி.

"அது தான் ஐயா இப்போ நம்ம பிரச்சினையை தீர்க்கப் போவுது!!""

"எப்படிடா?"  சிற்பிக்கு இன்னமும்  விளங்கவில்லை.

"அந்த எருமைச் சிலையை நிமிர்த்தி நிக்க வச்சு லைட்டா டிங்கரிங் பண்ணினா போதும்,   இப்ப வந்திருக்கிற ஆர்டரை முடிச்சிடலாம்,  போட்ட பணத்தை எடுத்திடலாம்,  என் யோசனை எப்பூடி..........ஹி ...ஹி ...ஹி ...." என  சிரித்தார்  உதவியாளர்.

"சபாஷ்டா.......உனக்கு உடம்பெல்லாம் மூளைடா"  என்று குதூகலித்தார் சிற்பி.  விரைந்து சிலையை மாற்றியமைத்து பகுத்தறிவுக்கு தெரியப் படுத்தினர். 



சிலையைப் பார்த்த பகுத்தறிவுக்கு ரொம்ப  சந்தோசம்,  நாடு முழுக்க 3,99,999  [நாலு லட்சத்துக்கு ஒன்னு தான் கம்மி!!] சிலைகள்  இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியா எதுவும்  இல்லை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தது பகுத்தறிவு.  குஷியோடு பணத்தை செட்டில் செய்துவிட்டு முப்பது ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து சிலையை நகர்த்திக் கொண்டு போனது. தகுஸ்தான் நாட்டின்  பிரதான கடற்கரையில் அந்த சிலை நிறுவப்பட்டது.


 


தகுஸ்தான் நாட்டின் பகுத்தறிவுக் கட்சியின் தலைவர் கீரைமணிக்கு  சிலை நன்றாக வந்ததில் ஏக மகிழ்ச்சி.  தலைவனின் பிறந்த நாளையே சிலை திறப்புக்கு தெரிவு செய்தார்.  தலைவன் பிறந்த நாள் அன்று திறந்தால் தான் தலைவன் சிலை பிரதிஷ்டை ஆகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். வாசனையுள்ள ரோஜா பூக்களால் தொடுக்கப் பட்ட பெரிய பெரிய மாலைகளோடு வந்து சேருங்கள் என்று வாழ்வில் ஒருபோதும் மூளையைப் பயன்படுத்தாத தொண்டர்களுக்கு உத்தரவு போட்டார்.  மாலை போட்டதும் தலைவனின் சிலை வலதுபுறமும் இடதுபுறமும் தலையைத் திருப்பி, மூச்சை இழுத்து தோளிலுள்ள பூக்களை முகர்ந்து பார்க்கும் என்பதில் கீரை மணிக்கு அசையாத நம்பிக்கை.   இது நான்கு லட்சமாவது சிலை என்று திறப்புவிழாவில் பூரித்தார் கீரைமணி.  இதை நிறுவ எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு பணம் வந்தது என்ற லிஸ்டையும் வாசித்தார்.  மொத்தம் பத்து லட்சம் செலவு என்று கணக்கு காண்பித்தார்.  இந்த பணத்தையெல்லாம் தகுஸ்தான் நாட்டின் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து வீணடிக்கலாம் என்ற பிற்போக்கு சிந்தனையை சாடி தனது உரையை முடித்தார் கீரைமணி.


அதன் பின்னர் ஊரில் இருக்கும் காக்கா எல்லாம் வந்து மாதக் கணக்கில் அந்த சிலை மீதே கக்கா போனது.  அதைப் பார்க்கும் போது தலைவனின் தலையில் பாலையும் தயிரையும் கலந்து ஊற்றி அபிஷேகம் நடப்பது போல கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  எப்போதாவது ஒருநாள் நகர சுத்தீகரிப்பு தொழிலாளி ஒருத்தர் வந்து தனது வேலைக்கு வைத்திருக்கும் துடைப்பம், பிரஷ், பினாயில் போன்ற உபகரணங்களை வைத்தே சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்.  சிலையின் முகத்தினை பிரஷால் துடைக்கும்போது மட்டும் தலைவர் சிலை, உவ்வே........ என்று குமட்டுவதை அவர் அவ்வப்போது கவனிக்கத் தவறவில்லை.


இந்த நிகழ்வு பற்றி "எல்லாம் தெரிந்த எல்லப்பன் " பதிவர் திரு.மிதிமாறன் அவர்களிடம் வாசகர்கள் கேள்விகளைக் கேட்டனர்.  [எப்பேர்பட்ட சூரனுக்கும் ஒன்றிரண்டு துறைகளைப் பற்றி மட்டுமே பதிலளிக்க முடியும், ஆனால் இந்த எல்லப்பனால் ஆட்டுப் புளுக்கையில் இருந்து அமரிக்கா வரைக்கும் எதைப் பற்றி கேட்டாலும் பதில்களை  வாரி வாரி வழங்க முடியும்.]

கேள்வி:  கோவில் சிலை வெறும் கல்லு, அதற்க்கு மாலை மரியாதை செலுத்துவது மூடத்தனம் என்றால் உங்க தலைவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் பகுத்தறிவா?

மிதிமாறன் பதில்:  "சாதாரண சிலைக்கு மாலை போட்டா அது கல்லு மாதிரிதான் நிக்கும், அதுக்கு ஒன்னும் விளங்காது.  மனிதனா வாழ்ந்து மண்டையைப் போட்ட ஒருத்தருக்கு தாராளமா சிலையை வைக்கலாம், தப்பேயில்லை.  ஏன்னா அந்த சிலைக்கு  போடுவது ரோஜா மாலை என்பதும், அது வாசனையானது என்பதும் நன்றாகவே தெரியும்,  மாலையை நுகர்ந்து பார்க்கும் அகமகிழும், இது தான்டா பகுத்தறிவு"

என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார் எல்லாம் பகுத்து அறிந்த தெரிந்த அறிவாளி.

இவ்வாறாக வருடத்தில் ஒருநாள் ரோஜா மாலைகளால் சூட்டப் பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு மற்ற நாட்களில் காக்காவின் கக்கா அபிஷேகத்தை வாங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது அந்த எருமை மாட்டுச் சிலை.




Friday, March 28, 2014

பொதுவாக எந்த விஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது

பொதுவாக எந்தவிஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது-














Wednesday, March 26, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்? -திருப்பூர் ஜோதிஜிக்குப் பதில்........

வணக்கம் மக்கள்ஸ்!!

வாழ்க்கையில் நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறோம், சிலவற்றை  நாமே தீர்கிறோம், அதே சமயம் பல பிரச்சினைகளுக்கு இது சாத்தியமாக இருப்பதில்லை.  ஒரு வாராமா  நெஞ்சில வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால், "காலம் தாமதிக்காமல் போய் நல்ல டாக்டரா பாரு" என்று தான் சொல்கிறோமே தவிர நாமே மருந்து கடைக்குப் போய் ஏதாவது ரெண்டு மாத்திரைகளை வாங்கி உள்ளே தள்ளிவிட்டால் சரியாகிவிடும் என விட்டு விடுவதில்லை.  வீடு கட்ட நிலம் வாங்க வேண்டுமென்றால் இடத்துக்குரிய ஆவணங்களை ஒரு தேர்ந்த வழக்கறிஞரிடம் காட்டி அவரது கருத்தை கேட்டறிந்தே முடிவெடுக்கிறோம்.  இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அது நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை, நமக்குத் தெரியாத நாம் அறிந்திராத விஷயங்கள் எண்ணற்றவை உண்டு, மேலும் ஒரு துறை பற்றிய தகவல்களைப் பெற வேண்டுமானால் அந்தத் துறையில் தேர்ந்த வல்லுனர்களை அணுக வேண்டும்.



இதை நாம் எல்லா இடத்திலும் பின்பற்றித்தான் வருகிறோம்.  ஆனால் ஆன்மிகம், இறைவன் என்று வந்து விட்டால் மட்டும் நாம் மனதுக்குள் நினைப்பது இவைதான்:  ஆன்மிகம் குறித்து எனக்கே எல்லாம் தெரியும், வேறு யாரையும் நான் யோசனை கேட்க வேண்டியதில்லை,  வேண்டுமென்றால் மற்ற எல்லோரும் என்னிடம் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.  இப்படியெல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை, நாம் ஒவ்வொருவருமே நினைக்கிறோம்,  அதன் விளைவு பின்வரும் கேள்விகள் எழுகின்றன!!  இவற்றை திரு.ஜோதிஜி, திருப்பூர் தனது ஆன்மீகம் என்பது யாதெனில்?  என்ற பதிவில் கேட்டிருக்கிறார்.  ஜோதிஜி அடக்கமானவர் என்றாலும், மனித இயல்பு வேறு ஆயிற்றே!!


ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 



மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 



கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 



மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, இறைவன் என்று ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கான விடையை அறிவியல் கூட இன்னமும் கூறா விட்டாலும்,  தாங்களாகவே "கடவுள் இல்லை" என்று முந்திரி கொட்டையாக  நாத்தீகர்கள் வழங்கிய நாட்டமை தீர்ப்பிற்கும் அடிப்படை நாம் மேலே சொன்ன அதே காரணங்கள் தான்!!

இன்னும் சிலர், இந்த நினைப்பை தம்மோடு நிறுத்திக் கொள்வதில்லை, மற்றவர்களிடமும் போய், "நீ யாரிடமும் ஆன்மிகம் குறித்து எதையும் கேட்கத் தேவையில்லை, நீயே ரூம் போட்டு யோசி, எல்லாம் புரிந்துவிடும்"  என்று போதிக்க ஆரம்பித்து விடுவதும் நடக்கிறது.  அப்படியே ஒருவேளை எனக்கே எல்லாம் தெரியும் என்றால் "நான் யோசித்தாலே எல்லாம் புரியும்" என்பது மட்டும் ஏன் எனக்குத் தெரியாமல் போனது?!!   அதை இன்னொருவர் வந்து எனக்கு சொல்லி புரிய  வைக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?  அது மட்டுமல்ல, இன்னொருவருக்கு நாம் யோசனை சொல்லும் போதே அவருக்கு அந்த விஷயம் குறித்து தெரியவில்லை என்று நாமே ஒப்புக் கொள்கிறோம் என்று தானே அர்த்தம்.  பின்னர், உனக்கே எல்லாம் தெரியும் என்பது எப்படி சரியாகும்?  இவையெல்லாம் லாஜிக் ஓட்டைகள்.  சரி இப்போது ஜோதிஜியின் கேள்விகளுக்கு வருவோம்.

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

ஏன் முடியாது?  நிச்சயம் முடியும், ஆடு, மாடுகள் அப்படித்தான் வாழ்கின்றன, மேலும் 99.99% மனிதன் அப்படித்தான் வாழ்ந்து முடிக்கிறான்.

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

 
அடையாளங்கள் சம்பிரதாயங்கள் இல்லாமல் உலகில் எதுவுமே  நடப்பதில்லை.   பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சீருடை எதற்கு?  ஏன் ஒரு வக்கீல் கோவணம் கட்டிக் கொண்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது?  போலீசுக்கு காக்கிச் சட்டை எதற்கு?  நர்ஸ் ஏன் வெள்ளை நிற உடை அணிய வேண்டும்?  அடையாளங்களே கூடாது என்று சொல்லும் நாத்தீகர்கள் கூட கறுப்புச் சொக்காயைப் போட்டுக் கொண்டு கூட்டமாக நிற்ப்பது எதற்கு? ஒரு ஆண் சேலை கட்டிக் கொண்டு போனால் தான் என்ன?  இந்தக் கேள்விகள்  எதற்காவது பதில் தர முடியுமா?   ஆக அடையாளங்கள் என்பவை தவிர்க்க இயலாதவை.
 
"உனக்கு ஏன்டா குடுமி, உனக்கு ஏன்டா பூணூல், உனக்கு ஏன்டா தொப்பி, லுங்கி" என்று எங்க கூட்டத்துக்கு கேள்விதான் கேட்கத் தெரியும், பதிலுக்கு "உங்களுக்கு எதுக்கு கறுப்புச் சொக்கா, வெயிலில் போனா குளு குளுன்னு இருக்குமுன்னா?"- ன்னு பதிலுக்கு கேள்வி கேட்டுடாதீங்க தம்பி, ஏன்னா எங்களுக்கு கேட்க மட்டும் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது!!

ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழா என்றால் கூட அங்கே சம்பிரதாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பட்டம் வாங்குபவர்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து சென்று எங்கு நின்று வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்து பட்டம் பெற்று வெளியே வரும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்று அதற்கு முதல் நாளே தனி பயிற்சியளிக்கப் படும்.  செனட் தலைவர், "இந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதை நீங்கள் அமோதிக்கிறீர்களா" என்று செனட் குழுவைப் பார்த்து கேட்பார், "ஆம் அமோதிக்கிறோம்"  என்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  இதெல்லாம் அங்கே உட்கார்ந்து பார்க்கும் போது கோமாளித் தனமாகத் தோன்றும்.  ஆனாலும் சம்பிரதாயங்களை நீக்க முடியுமா?  



நம் நாட்டில் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்கும் போதும் சம்பிரதாயங்கள் இருக்கத் தானே செய்கிறது?  சம்பிரதாயங்கள் கூடாது என்று சொல்லும் நாத்தீகன்,  மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல் என சம்பிரதாயம் எதுவும் இல்லாமல், நேராக பெண்ணை அவள் வீட்டிலிருந்து அழைத்துப் போய் குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவாரா என்ன?
ஆக எந்த செயலிலும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சம்பிரதாயங்கள் சடங்குகள் இருக்கத்தான் செய்கின்றன, இவற்றைத் தவிர்க்க இயலாது. 


கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 


இங்கதான் நாம் பதிவின் ஆரம்பித்தில் சொன்ன விஷயங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது. 
முதலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.   எல்லா பிரச்சினைகளுக்கும் வல்லுனர்களை நாடிய நீங்கள் இதற்கும் வல்லுனர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை நாடி கேள்விகள் கேட்டு பதிலை அறிந்து கொள்ள வேண்டும்.


மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

நாத்தீகனை எடுத்துக் கொண்டால் பிரியாணியும் அதற்க்கு தயிர் பச்சடியும் நன்றாக இருக்கும் இதற்கும் மேல் வேறு எதுவும் இல்லை என்பான். [இதை நான் சொல்லலீங்க, கண்ணதாசன் சொல்லியிருக்கார்!!].  நாட்டிலுள்ள ஒவ்வொரு கள்ளச் சாமியாருடைய சீடர்களுக்கும் அந்தந்த  சாமியார் தான் கடவுள்.  அதற்கும் மேல் எதையாச்சும் சொன்னால் நம்மை அவரது சீடர்கள் காலி செய்து விடுவார்கள்.  இதைத் தவிர்த்து ஊர் ஊருக்கு ஒரு சாமி மீசை அரிவாளோட நின்னுகிட்டு இருக்கும்.  இவற்றில் எந்த கும்பலோட அளவுகோளைச் சொல்வது?  எனவே இன்னொரு மனிதன் என்ன அளவுகோல் வைத்திருக்கிறான் என்று ஆராய்வதில் பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையான ஆன்மீகத்திற்கு என்றென்றைக்குமான அளவுகோல் என்ன என்று கேட்பதே சரியான கேள்வியாக இருக்கும் என்பது எனது கருத்து!!

Thursday, March 13, 2014

இது குதிர்வேலன் மோதல்-சினிமா விமர்சனமல்ல!!

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில "இது கதிர்வேலன் காதல்" படம் தியேட்டருக்குப் போயி பார்த்தோம்.  ["அத சொல்லனுமாக்கும், தியேட்டருக்குப் போயி பாக்காம கிரிக்கெட் கிரௌன்டில போயா பார்க்க முடியும்?"   என்று நீங்க கேட்பது எனக்குப் புரிகிறது!!].  படம் பார்த்துகிட்டே இருந்தோம், ஓரு சீன்ல சந்தானத்துக்கு ஹீரோ கட்டிங் ஊத்தி குடுக்குறாரு.  உடனே நான், "அடேய்....  இதே சீனை OK.........OK......... படத்தில கூட பார்ததோமேடா?  இடம் கூட அதே மாதிரியே இருக்கே?!!"  என கத்தினேன்.




அதுக்கு எங்க பையன் சொன்னான், அட அதுமட்டுமில்லேப்பா...........


அம்மா கூட அதே அம்மா..........




அதே சந்தானம் ஃ பிரண்டு................




அவன் கூட நடிக்குதே அந்தப்  பொண்ணு மட்டும் மாத்திட்டாங்க, மிச்சம் எல்லாம் அதே தான்பா...........!!  என்று அத்தனையும் அடுக்கித் தள்ளினான.



 அட ஆமான்யா.............!!


முன்பெல்லாம் பாக்கியராஜ் படங்களில் அவர் போட்டிருப்பது போலவே பெரிய சைசு கண்ணாடியை அவரோட ஐஞ்சு வயசு மகன் உட்பட படத்தில் வரும் கதாநாயகி, அவருடைய தோழிகள், உறவினர், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை பேருக்கும் வாங்கி மாட்டி விட்டுவிடுவார்.  அதே வேலையை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் கதா நாயகன்!!

அண்ணா, நமக்குத்தான் எக்ஸ்பிரஷன் வராது, கூலிங் கிளாஸ் வேணும்.............

ஆனா படத்துல பாட்டுக்கு கூட ஆடும் துணை நடிக நடிகைகளுக்கும் அது தேவையா!!



அதேன்னேமோ தெரியல, ஒரு பாட்டு முதல்வன் படத்தை ஞாபகப் படுத்தியது!



முதல்வனில் அழகான இராட்சசியே .............

காதல விட பெத்தவங்கதான் முக்கியம்................  இதென்ன காதலுக்கு மரியாதையா?


எம்ஜிஆர் படமா........??  ரெண்டு ஹீரோயின்கள், கடைசியில் ஒருத்தர் காதலி, இன்னொரு அம்மணி தங்கச்சி. [அது கனவு சீனில் இவரோட கட்டிப் பிடிச்சு உருண்டு பொரண்டிருக்கும், அதெல்லாம் கணக்கில வைக்கப் படாது........கடைசி சீன்ல அதுவாவே அண்ணா.........அப்படின்னு கத்திகிட்டே ஓடி வந்து இன்னொரு தடவையும் கட்டிப் பிடிக்கும்].

ரஜினி படமா........?  ஒரு பணக்காரன் வீட்டிற்கு இவரு வேலைக்காரனா இருப்பாரு, கொஞ்ச காலம் கழிச்சு அந்த சொத்துக்கு உண்மையான வாரிசே இவருதான்னு தெரியவரும்.

ஷங்கர் படங்களில் கதையா?  வேறென்ன நாட்டில் சட்டத்தை ஏமாத்தி பணம் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து ஹீரோ காலி பண்ணுவார்.  அநியாயமா சேர்த்த பணத்தையெல்லாம் என்னென்னமோ ஜகஜால வேலையெல்லாம் பண்ணி ஏழைகளுக்கு போய்ச் சேருமாறு பண்ணிவிடுவார்.    இவர் பட ஹீரோக்களுக்கு சட்டத்தை மதிக்காதவங்கன்னாலே ஆகாது!!   [அங்க யாருப்பா இவரு வருஷா வருஷம் வரி பாக்கியில்லாம கட்டிட்டாரான்னு கமண்டு அடிக்கிறது?  சும்மா இருக்க மாட்டீங்களா?]

இந்த வரிசயில, ஒரு பொண்ணு, அவரை சந்தானத்து உதவியோட கரெக்டு பண்ணு, கூட ஒரு அம்மா...............  இது தான் ஓகே ....ஓகே..............வா...........??!!  [வடிவேலு பாணியில்]  ஐயோ..........ஐயோ.............. 


Wednesday, March 5, 2014

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா? -தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு பதில்

வணக்கம் மக்கள்ஸ்!!!

அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் விடுதி அறிவிப்பு பலகையில் ஒரு தகவல்.  அது கீழ்க் கண்டவாறு இருந்தது:

Who are you?
Where are you coming from before birth?
Where will you go after death?
Who is God?  what is your relationship with Him?
What is your duty in Life?

To answer to these questions please attend a lecture @ Ganesh Temple!!

சுவராஸ்யமான தலைப்பு, ஞானிகள் பலர் இந்த கேள்விகளுக்கு பதில் தேடிகிட்டு இருக்காங்கன்னு பல இடங்களில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது, செத்த பின்னாடி என்ன ஆகும் என்பது போல கேள்விகளை பற்றி நாமும் யோசித்ததுண்டு!! சரி யாரு பேசுறாங்கன்னு பார்த்தா ஒரு இஸ்லாமியரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது!!  பேசும் இடம் கல்லூரி வளாகத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோவில்!! கொஞ்சம் குழப்பத்துடனே தான் அங்கே சென்றேன், பின்னர் தான் புரிந்தது நடப்பது பகவத் கீதை உபன்யாசம், சொற்பொழிவாற்றியவர் பகவத் கீதையை பயின்ற பின்னர் அதன் பால் ஈர்க்கப் பட்டு கிருஷ்ணா பக்தரான ஒரு இஸ்லாமியர்!!

அதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெவ்வேறு பக்தர்கள் வந்து கீதை பற்றி பேசுவார்கள், இறுதியில் சுவையான பிரசாதமும் உண்டு.   என்னுடைய ஈடுபாடு வார வாரம் அதிகமானது, இதை நண்பர்கள் கவனிக்கத் தவறவில்லை!!  இச்சூழ்நிலையில் ஒரு நாள் தி.நகருக்கு சக மாணவருடன் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன்.  அவருக்கு ஒரு கால் சற்றே வலுவற்றது.  பேருந்தில் ஏறிய பின்னர் ஒரு இடம் உட்காரக் கிடைத்தது.  அதில் அவர் என்னை அமரச் சொன்னார், ஆனால் நான் மறுத்தேன், அவர் இரண்டு முறை பிடிவாதமாய் சொல்லியும் நான் ஏற்காமல் அவரையே அமர வைத்தேன்.  வேண்டா வெறுப்பாய் வாயில் ஏதோ முனகிக் கொண்டே உட்கார்ந்தார்.  அவர் முகத்தில் எதற்காக வெறுப்பு?  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  இறங்கிய பின்னர் கல்லூரியில் நுழைவாயிலில் அவருடைய மிதிவண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே இரட்டையராய் செல்ல வேண்டும்.  அவர் பின்னால் உட்காருங்கள் நான் மிதிக்கிறேன் என்றார், அதற்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை, நான் தான்  ஓட்டுவேன், நீங்கள் அமர்ந்து வாருங்கள் என்றேன்.  இப்போது அவர் முகத்தில்  கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.  நீங்கள் செய்வது கொஞ்சமும் சரியில்லை என்றார்.  எனக்கோ மேலும் குழப்பம்.  என்ன என்று புரியாமல் கேட்டேன்.  அதற்கு அவர் "என்னை வைத்து நீங்கள் சொர்க்கம் போகப் பார்க்கிறீர்களா?" என்று  வெடித்தார்.  இதைக் கேட்டதும்  எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.   என்ன சொல்கிறீர்கள் என வினவினேன்.  பேருந்தில் நீங்கள் என்னையே அமர  வைத்தீர்கள், இங்கும் என்னை உட்கார வைத்து சைக்கிளை நானே செலுத்துவேன் என்கிறீர்கள்.  உங்கள் எண்ணம் எனக்குத்  தெரியும், இந்த மாதிரி புண்ணியத்தை வாழ்நாள் முழுவதும் சேர்த்து செத்த பின் சொர்க்கம் போகலாம் என்று தானே செய்கிறீர்கள்? இது சரியில்லை என்று பொரிந்து தள்ளினார்.  அன்று அவரது ஆத்திரத்துக்கு காரணம் புரிந்தாலும், அவர்  சொல்வதெல்லாம் விந்தையாகப் பட்டது!!  இப்படியெல்லாம் கூட பிளான் பண்ணி சொர்க்கத்து போக முடியுமா?  என்ற கேள்வியும் எனக்குள் அன்று எழுந்தது.   எனது உண்மையான நோக்கம் கால் வலுவற்றவரை நாம் சித்தரவதை செய்யலாமா என்ற எண்ணம் மட்டுமே, அதை அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை, போகட்டும் என்று அந்த நிகழ்வை அதற்கும் மேல் பெரிது படுத்தாமல் விட்டு விட்டேன்.

இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, திருமணமான புதிதில் நான் அவ்வப்போது ஜப மாலையில் கிருஷ்ணா நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன்.  இதைக் கவனித்த எனது மாமனார் ஒருமுறை, "நீ  சொர்க்கத்துக்கு போவதற்கு இவ்வளவு பாடு படுகிறாயா?" என்று நக்கலாக கேட்டார்.  இது மட்டுமல்ல பதிவுலகிலும் சில அன்பர்கள் அதே  குற்றச் சாட்டை வைத்தனர்.  சிலர் நீ மன அமைதி தேடித்தானே கோவில் செல்கிறாய், அதை வீட்டிலேயே தியானம் செய்து பெறலாமே?- என்றும் கேட்க ஆரம்பித்தனர்.  ஆனாலும் எனக்கு ஒவ்வொரு முறையும் சொர்க்கம், Peace of Mind என்று எதற்காக இவர்கள் சொல்கிறார்கள், ஆன்மீகத்துக்கும்  இவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.  அதற்கு காரணம் என் பின்புலமே.  அப்பா கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும் என்ற வகையில் அமைந்தது எனது மாணவ பருவம்.  [அப்பா கஷ்டம் எனக்கு அப்போது தெரியாது!!].  வாழ்வில் கஷ்டத்தைப் பார்க்காமல், கல்வியிலும் தோல்வி என்பதே என்னவென்று தெரியாது வளர்ந்தேன்.  நினைச்சதெல்லாம் நடந்தது ஆனாலும் வாழ்வில் இனம் புரியாத வெறுமையே மிஞ்சியது.  இந்த வெறுமை பலருக்கு வயதன பின்னர் வரலாம், சிலருக்கு இளமையிலேயே வரலாம், எனக்கு பின்னது நடந்தது.  பள்ளியில் படிக்கும்போதே ஒரு சிந்தனை அடிக்கடி என்னைத் தாக்கும்.   "தாய் தந்தை, சகோதரிகள் மற்றும் எந்த உறவுகளும் நிலையானது அல்ல, மரணம் நம்மை நிச்சயம் ஒரு நாள் அவர்களிடமிருந்து நம்மை பிரிக்கப் போகிறது, இது தவிர்க்க முடியாதது" என்ற உண்மை  ஒரு நாள் என்னைச் சுட்டது.  அப்படியானால் வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் தான் உண்டா என்ற கேள்வி எழ விடையை பல வழிகளில் தேட ஆரம்பித்தேன்.  தினமணியில் வரும் ஆன்மீக பகுதி சற்று ஆறுதல் தந்தது.  இறைவனின் நாமத்தை ஜபம் செய்வது கலி யுகத்தின் ஒரே ஆன்மீக வழி என்பது பல்வேறு கட்டங்களில் தினமணியில் படித்திருந்தேன்.  ஆனாலும் மனம் மட்டும்  நிலைகொள்ளாத படியே  இருந்தது.

அதைத் தொடர்ந்து ஒரு திரைப் படப் பாடகரின் அர்த்தமுள்ள....... தொடர் புத்தகங்களின் பகுதிகள் சிலது கிடைக்க அவற்றை படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் அவையோ அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை.  அதன் பின்னர் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் சேர அட்மிஷன்   கிடைத்தது.   ஒருவேளையாக கல்லூரியில் சேர்ந்தாயிற்று, ஆனால் இன்னொரு புறம் விரக்தி........விரக்தி........விரக்தி.....  அந்த சமயத்தில் தான் மேலே சொன்ன தகவல் பலகையில் பகவத் கீதை உபன்யாசம் பற்றி செய்தி வந்தது.  தேடலுக்கான பதில் அங்கே கிடைத்தது, மனம் நிம்மதியானது.  அன்று ஆரம்பித்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றும் தொடர்கிறது!!  நமக்குள் எழுந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் போகையில் அது கீதையில் கிடைக்கிறது என கண்டுணர்ந்து நாம் கீதையை பின்பற்றுகிறோம் அவ்வளவே.  சொர்க்கம், நரகம் நமது செயல்திட்டதில் இல்லவேயில்லை!!

இணையத்திற்குள் வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்கள்  தெளிவாக ஆரம்பித்தன.   சில மத போதகர்கள், "நீ என் மதத்திற்கு வந்தால் சொர்க்கம் உனக்கு கியாரண்டி இல்லா விட்டால் உனக்கு மீளா நரகம் நிச்சயம்" என்றும், வேறு சிலர், "கடவுள் சொல் படி வாழ்ந்து விட்டால், செத்த பின்னர் சொர்க்கம் என்ற ஒரு இடத்திற்குப் போவோம் அங்கே 40 கன்னிப் பெண்களும், குடிக்கக் குடிக்க தீராத சோம  பான பீப்பாய்களும் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன, ஒருவேளை இதை நீ ஏற்க்கா விட்டால், உன்னை நரகத்தில் நிரந்தரமாக தள்ளி விட்டு  பூட்டு போட்டு விடுவார்கள், நீ எக்காலத்திலும் மீள முடியாத துன்பத்தில் அங்கேயே உழலுவாய், ஒருபோதும் வெளியில் வரவே முடியாது"  என்றெல்லாம் பல மேடைகளிலும், இணைய தளங்களிலும் நடக்கும் பிரசாரமே இறை வழிபாட்டில் ஈடுபடுவது சொர்க்கம் செல்வதற்கே என்ற தோற்றத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது மெல்லப் புரிய வந்தது!!  துன்பங்களில் இருந்து விடுபட வழி தேடும்போது இறைவனை நாடுகிறோம், ஆனால் அது துவக்கம் மட்டுமே, ஆனால் அதற்கும் மேலே, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவன் மீது வைக்கும் அன்பே பக்தி!!

சரி தற்போது திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுடைய கேள்விக்கு வருவோம்.  செல்லப் பிராணிகள் சொர்க்கம் செல்லுமா?  [இதற்க்கு பதில் தனக்குக் கிடைக்க வில்லை என்கிறார்!!].  இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகர என்று தெரியவில்லை.  சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம். இறை நம்பிக்கை உடையவர்கள் ஏதாவது இறைநூலில் இருந்தே விடையைத் தேட வேண்டும்.   நாம் இங்கு தரவிருக்கும் பதில்கள் அனைத்தும் சனாதன தர்மத்தின் வேத இலக்கியங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கும்.  [இந்து மதம் என்பது சரியான சொல்லாக்கம் அல்ல, சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள்  மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில்  மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில்  வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]

கேள்வி 1:  சொர்க்கம் நரகம் என்பது உள்ளதா?

பதில்:  ஆம், இருக்கிறது.  ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல, பல!!  [கீழே குறிப்பு 1-ஐ  பார்க்கவும்]

 கேள்வி 2:  சொர்க்கம்/நரகம் நிரந்தரமானதா?

 பதில்: இல்லை, தற்காலிகமானதே. [கீழே குறிப்பு 2-ஐ  பார்க்கவும்]

 கேள்வி 3: பிராணிகள் சொர்க்கம்/நரகம் செல்லுமா?

பதில்: சொர்க்கம்/நரகம்  எது கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பது நமது செயல்களால் விளையும் கர்ம பலன்களே.   மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை.  அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்.[கீழே குறிப்பு 3-ஐ  பார்க்கவும்]

கேள்வி 4: சொர்க்கம்/நரகம் தற்காலிகமானது என்றால், வாழ்வின் குறிக்கோள் தான் என்ன?


பதில்: இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும்.  இறைவன் மீது பிரியம் வந்துவிட்டால் எந்நேரமும் அவனையே நினைத்திருப்போம்.  கலி யுகத்தில் அதற்க்கான வழி  [நமது அதிர்ஷ்டம் எழிய வழி!!] அவனது திருநாமங்களை எந்நேரமும் உச்சரித்து வருவதே. அவ்வாறு செய்து வந்தால் 14 லோகங்களில் மேலும் கீழுமாக பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து வெளியில் வந்து என்னை அடைவாய் என பகவான் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், பக்தன் அதை பொருட்டாக நினைப்பதில்லை.  நான் உனது சேவகன், உன்னை நேசிப்பதையன்றி வேறொன்றும்  தேவையில்லை என்ற நிலையே மிக உன்னதமான நிலை.
[கீழே குறிப்பு 4-ஐ  பார்க்கவும்].

முதலாளி ஒருவன் மட்டுமே மற்ற எல்லோரும் தொழிலாளிகளே!!


குறிப்பு 1:


பிரபஞ்சத்தில் மொத்தம் 14 லோகங்கள் [Planetary Systems] உள்ளன. அவையாவன:

1) சத்ய லோகம்
2) தப  லோகம்
3) ஜன  லோகம்
4) மஹர்  லோகம்
5) ஸ்வர்  லோகம்
6) புவர்  லோகம்
7) பூலோகம் [இங்கதாங்க நாம் இருக்கோம்!!]
8) அதல  லோகம்
9)  விதல லோகம்
10)  சுதல லோகம்
11) தலாதல  லோகம்
12) மகத  லோகம்
13) ரசாத்தள  லோகம்
14) பாதாள லோகம்



குறிப்பு 2:


இந்த பதினான்கு லோகங்களில் நாம் மத்தியில் பூலோகத்தில் உள்ளோம்.  சத்ய லோகத்தில் சுகபோகம் இருப்பதிலேயே அதிகம், அங்கிருந்து கீழே வர வர குறைந்து கொண்டே வரும், பூலோகம் மையப் பகுதி,இன்ப துன்பம் இரண்டுமே மிதமான இடம்.  அதற்கும் கீழே உள்ள அனைத்தும் நரக லோகங்கள்.  பூலோகத்தில் செய்யும் செயல்களின் பாவ புண்ணிய கணக்குப் படி மேலுள்ள லோகங்களுக்கோ, கீழேயுள்ள நரகங்களுக்கோ அனுப்பப் படுவோம்.  ஆனாலும் இரண்டுமே நிரந்தரமில்லை.  சொர்க்க லோகங்களுக்குச் செல்பவனும் புண்ணிய கணக்கு தீர்ந்த பின்னர் கீழே வருவான், நரக லோகங்களுக்கு போனவனும் தண்டனையை அனுபவித்த பின்னர் மேலே வருவான். 

"te tam bhuktva svarga-lokam visalam
ksine punye martya-lokam vishanti
 evam trayi-dharmam anuprapanna
gatagatam kama-kama labhante"  



"Lord Sri Krishna said: When they have thus enjoyed vast heavenly sense pleasures and the results of their pious activities are exhausted, they return to this mortal planet (earth) again. Thus those who seek sense enjoyments by adhering to the principles of the three Vedas achieve only repeated birth and death."


 ஆக ஈரேழு பதினான்கு லோகங்களுக்குள் எங்கே போனாலும் பிறப்பு, வயோதிகம், நோய்நொடி, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து தப்பவே இயலாது.

From the highest planet in the material world down to the lowest, all are places of misery wherein repeated birth and death take place. But one who attains to My abode, O son of Kuntī, never takes birth again. [B.G. 8.16]

குறிப்பு 3:

          jalaja nava-laksani sthavara laksa-vimsati
          krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
          trimsal-laksani pasavah catur-laksani manusah

நீரில் 9 லட்சம் உயரினங்கள், 20 லட்சம் மரங்கள் செடி வகைகள், 11 லட்சம் வகை பூச்சிகள்,  10 லட்சம் வகை பறவைகள், முப்பது லட்சம் விலங்கு வகைகள் மற்றும் 4 லட்சம் வகை மனிதர்கள் என 84 லட்சம் வகை உயரினங்கள் உண்டு.[பத்ம புராணம்]

சனாதன தர்ம நூல்களின் படி தாவரங்கள்,  விலங்குகள்,பறவைகள், விலங்குகள் மனிதன் என எல்லோருக்கும் உயிர் உள்ளது, ஆன்மா உண்டு.  ஆனாலும்  சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே வழக்கப் பட்டிருக்கிறது.  இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு.  மனித பிறவி என்பது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.  கோடான கோடி பிறவிகள் மற்ற ஜீவன்களாகப் பிறந்து மடிந்த பின்னரே மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு அமைகிறது.  [மற்ற உயிரினங்களும் பின்னர் மனிதனாகும் வாய்ப்பு உண்டு!!].  மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு பவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை.  ஏனெனில் அவற்றுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவில்லை.  அவற்றின் உள்ளுணர்வின் உந்துதலாலேயே அவை செயல்படுகின்றன.  NGC, Animal Planet போன்ற தொலைக் காட்சி நிகழ்சிகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்.  ஆகாரம், தூக்கம், ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளல் மற்றும் இனப்பெருக்கம் - எந்த மிருகத்தை எடுத்துக் கொண்டாலும் கூர்ந்து கவனித்தால் இந்த நான்கு செயல்களைத் தவிர வேறு எதிலும் அவை ஈடுபடுவதில்லை.   மனிதனைப் பிறந்து ஆறறிவு படைத்து நீயும் அவ்வாறே வாழ்ந்து மடியாதே என்று சனாதன தர்மம் கூறுகிறது.

āhāra-nidrā-bhaya-maithunaṁ ca
sāmānyam etat paśubhir narāṇām
dharmo hi teṣām adhiko viśeṣo
dharmeṇa hīnāḥ paśubhiḥ samānāḥ


Eating, sleeping, sex, and defense—these four principles are common to both human beings and animals. The distinction between human life and animal life is that a man can search after God but an animal cannot. That is the difference. Therefore a man without that urge for searching after God is no better than an animal.-From Hitopadesha.

குறிப்பு 4:

 

man-mana bhava mad-bhakto
mam evaishyasi yuktvaivam

Engage your mind always in thinking of Me, become My devotee, offer obeisances to Me and worship Me. Being completely absorbed in Me, surely you will come to Me. [பகவத் கீதை 9.34]

 

 

[ஸ்ரீமத் பாகவதம் 12.3.51] மகாராஜா பரீக்ஷிதிடம்  சுகமுனி கூறுகிறார்:

kaler dosha-nidhe rajann
kirtanad eva krishnasya

 கலியுகத்தில் தோஷங்கள் கடலென இருந்தாலும், இந்த யுகதிற்க்கென்று மற்ற யுகங்களில் இல்லாத ஒரு சிறப்பியல்பும் உண்டு.  அது,  ஸ்ரீ கிருஷ்ணனின் நாமங்களை சொல்லி வந்தாலே போதும் இந்த எளிய வழியாலேயே பௌதீக விலங்கிலிருந்து விடுபட்டு இறைவனை அடையலாம். 

 

 


Monday, March 3, 2014

தமிழ் திரையுலகை கலக்கிய பெண் இயக்குனர்கள்!!

வணக்கம் மக்கள்ஸ்!!

பெண்கள் என்றாலே மிகவும் திறமைசாலிகள் என்பதும், அவர்கள் கால் பதித்து சாதிக்காத துறையே இல்லை எனலாம்.  அந்த வகையில் தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் கலக்கிய [கதி கலங்கடித்த?!] பெண் சிங்கங்களைப் பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


நாம் நடிப்பை பற்றி சொல்லப் போகிறோம் என்று மண்டையில்  களிமண் கம்மியானவர்கள் சிலர் நினைக்கக் கூடும்.  ஆனா அவங்களுக்குத் தெரியாது நம்ம ரூட்டே தனின்னு!!  நாம பார்க்கப் போவது இயக்குனர்களை!!  அதில் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ஸ்ரீப்ரியா அம்மா தான்!! 


அவரு எடுத்தாங்க பாருங்க ஒரு படம், பேரு சாந்தி முகூர்த்தம்!!  இந்த படம் வந்தப்போ பீம்சிங், பாலசந்தர், பாரதிராஜா போன்றோர் சூரியன் முன்னாடி மெழுகுவர்த்தி மாதிரி ஆகிப் போனாங்கன்னு ஊரே பேசிக்கிட்டுது.  படம் பார்க்க வந்தவங்க எல்லோரும் பாதியிலேயே பின்னங்கால் பிடரியில அடிக்க வீட்டுக்கு ஓடிகிட்டு இருந்தாங்க. ஒருத்தரை இழுத்துப் பிடிச்சு கேட்டா, "படமாய்யா இது, பாடம்யா.  பாதிப் படமே போதும், கண்ணெல்லாம் நெறஞ்சு போச்சு, மீதியை பார்த்தால் தாங்காது " என்று ஓடிக்கொண்டே பதிலளித்தார்.  வாழ்க்கையில நான் இனிமே சினிமாவே பார்க்க மாட்டேன்னு பலர் பக்கத்திலிருப்பவர் தலையில் அடித்து சத்தியம் பண்ணினர்.  ஏன்னா இந்த படத்தை பார்த்த கண்ணால இன்னொரு படம் பார்க்கலாமா என்பதால் தான்.  அப்பேற்பட்ட கலக்கல் இயக்குனர் அம்மா.  அவர் ஏன் தொடர்ந்து இயக்கவில்லை என்று கேள்வி எழலாம், வேறொன்றுமில்லை மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்கள் பொழச்சு போகட்டும் என்பதால் தான்.

ஆண்டவா, நான் எடுக்கப் போற படத்தை பார்க்க வர்றவங்களை நீதாம்பா காப்பாத்தணும்...........
அடுத்து நமக்கு ஞாபகம் வருவது ஜெயசித்ரா அம்மா.  அவங்க தன்னையே கதாநாயகியா வச்சு புதியராகம்னு ஒரு படம் எடுத்து விட்டாங்க.  படம் பார்க்க ஈ, காக்கா கூட வரல.  இந்த படத்தைப் பார்க்க காசெல்லாம் கூட குடுக்கிறேன்னு சொன்னாங்க ஆனா யாருக்கும் பார்க்கிற துணிச்சல் வரல.  பொறுத்துப் பொறுத்து பார்த்து தியேட்டர் பக்கம் போற நாலஞ்சு பேர புடிச்சுகிட்டு போய் சேர்ல கட்டி வச்சு படத்தை ஓட்ட ஆரம்பிச்சாங்க, இந்த விஷயம் தெரிஞ்சதும் பயலுக ரூட்டை வேற பக்கம் மாத்தி வண்டிய ஓட்டிகிட்டு போக ஆரம்ச்ச கதையும் நடந்தது.  இவங்க அடுத்து தன மகனை ஹீரோவா வச்சு "நானே எனக்குள் இல்லை"  [யங்கப்பா......... இப்படி ஒரு தலைப்பை யோசிச்சதுக்கே ஆஸ்கார் குடுக்கணும் போலிருக்கேப்பா!!]  அப்படின்னு ஒரு படத்தை எடுக்க நினைச்சாங்க, ஆனா நமக்குத்தான் குடுப்பினை இல்லை படம் பாதியிலேயே நின்னு போச்சு.


வேற ஏம்ப்பா........  இதெல்லாம் ஒரு புரோகிராம்னு பாத்துகிட்டு இருக்கியே உனக்கு உருப்படியா வேலை இல்லியா?  !!


இதையடுத்து சுஹாசினி அக்கா.........    "இந்திரா"ன்னு ஒரு படமெடுத்தாங்க.  தியேட்டர்களில் படம் ஆரம்பச்சதில் இருந்து, முடியிற வரைக்கும் ஜே......ஜேன்னு........ கூட்டம்.  எங்கே?  வெளியில தம்மடிக்கிற இடத்திலும், தியேட்டர் டீஸ்டாலிலும்.  ஒரு பய தியேட்டருக்குள்ளே வரலயே.  இவர் இராவணன் படத்துக்கு எழுதிய வசனங்கள் பராசக்தி, மனோகரா படங்களையே பின்னுக்குத் தள்ளியது வரலாறு.    வேண்டாதவன் யாராச்சும் இருந்தா ஒரு ரூமுக்குள் கட்டிப் போட்டு வைத்து  இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியா வரும் வரும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள், சீக்கிரம் திருந்தி வழிக்கு வருவான்.   அக்கா சினிமா விமர்சனங்கள் டாப்பு........!!  இவர் கணிப்புப் படி பி.வாசு இயக்கியதிலேயே மிகச் சிறந்த படம் எது தெரியுமா?  குசேலனாம்!!  [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ...........ஐயோ...........



அடுத்து மூணு படம்.  அய்யய்யோ தனித்தனியா மூணு படம் இல்லீகோவ்......படத்தின் பேரே 3!!    தனுஷை புதிய கோணத்தில் காட்டி எடுக்கப் பட்ட படமிது.   தனுஷ் நூத்திபத்தாவது தடவையா லூசாவே நடிச்ச படம்.  பார்த்தவனையெல்லாம் போதும்டா சாமி ஆளை விடுங்க என்றாக்கிது!!

அடுத்து...............!!  ஹி ..............ஹி ..............ஹி ..............  என்னமோ சடையான்னு ஒரு படமாம்.  வரும்..........  ஆனா........  வராது........!!  அப்படின்னே மூணு வருஷமா இழுத்தடிச்சிகிட்டு இருக்கும் படம்.  இயக்குனர் ஒரு பெண் சிங்கம் தான்!!  வரலாறு திருத்தப் படுமா, இல்லை மீண்டும் நிகழுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்!!



Saturday, March 1, 2014

1, 2, 3...........எண்கள் நிஜத்தில் உள்ளனவா?

வணக்கம் மக்கள்ஸ்!!

ஒரு கற்பனை, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் ஸ்கோர் போர்டே இருக்காது, அதாவது எத்தனை ரன்கள், விக்கட்டுகள் என்று எதுவும் ஒரு போதும் காட்டப் பட மாட்டாது, என வைத்துக் கொள்வோம்.  நம்மில் எத்தனை பேர் அந்த ஆட்டங்களை பார்த்து ரசிப்போம்?!!  ஆட்டத்தை ரசிக்கிறோம் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை சுவராஸ்யமக்குவது எது? 9 விக்கட்டுகள் விழுந்த பின்னர் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 15 ரன்கள் வேண்டும், தோனி என்ன செய்யப் போகிறார் என்று மூச்சை கையில் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது 6, 4, 6 என மூன்றே பந்துகளில் ரன்கள் வர வர அதில் நமக்குக் கிடைக்கும் த்ரில் வெறுமனே பந்து வீச்சும், மட்டையாட்டமும் உள்ள ஒரு போட்டியில் கிடைக்குமா?  பந்து வேச்சாளர்கள், மட்டையாளர்கள், ஃ பீல்டிங் செய்பவர்கள் பற்றி ஆட்ட நேரம் முழுவதும் தொலைக்காட்சித் திரையில்  காட்டப் படும் விதம் விதமான புள்ளி விவரங்கள் தானே நம் கவனத்தை  எங்கும் சிதறாமல் விடாமல் ஆட்டத்தின் மேலேயே கட்டிப் போடுகிறது?!  இது கிரிகெட்டிற்கு மட்டுமல்ல டென்னிஸ், கால்பந்து, ஓட்டம் என எல்லா விளையாட்டிற்கும் பொருந்தும்.  ஏன் சீட்டாட்டம் கேரமுக்கும் கூடப் பொருந்தும்.  நடால்-ஜோகோவிச் ஆடும் விம்பிள்டன் ஆட்டம் ஸ்கோர் இல்லாமல் போனால் அது இனிப்பில்லாத தேனாகிப் போகாதா?!!


எண்கள் நம் வாழ்வில் இல்லாத இடமேது?  படிக்கும் போது வகுப்பில் நமது ரேன்க், பரீட்சையில் நாம் வாங்கும் மதிப்பெண்கள் எனத் துவங்கி நாம் வாங்கும் சம்பளம் வரை எண்கள் முக்கியம்!!   நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் 15.0 13. g/dL எனப் பார்க்கும் போது நிம்மதி, இரத்த அழுத்தம் 120/80 என்றால் சரி, அதுவே 150 என்றால் பதறிப் போவோம்!!  கொழுப்பு 450 என்றால் பக்கத்தில் இருப்பவருக்கே ஹார்ட் அட்டாக் வந்துவிடும்!!


எண்கள் இத்தோடு நின்று போவதில்லை,  நியூமராலாஜி என்ற புதிய விஞ்ஞானத் துறையை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்து, தொலைகாட்சி, ஊடகங்களில் அதைப் பற்றி பேசிப் பேசி நமது பெயரோடு கடைசியில் ஒரு x அல்லது z சேர்த்து விட்டால் ஓஹோ...... என்று ஆகிவிடுவோம் என்று புளுகு மூட்டையை விற்று கல்லா கட்டவும் ஆரம்பித்துள்ளனர் என்பதும் தமாஷ்!!

அறிவியலில், தொழில்நுட்பத்தில், பொறியியலில், வியாபாரத்தில் என எல்லா இடங்களிலும் எண்கள் இல்லா விட்டால் ஏதேனும் நகருமா?  இப்படி நம் வாழ்வில் எல்லா துறைகளிலும் நீக்கமற எங்கும் நிறைந்து நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் எண்களைப் பற்றித்தான் ஒரு ஷாக்கடிக்கும் தகவல் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அது எனக்குத் தான் புதுசே தவிர அது குறித்த சர்ச்சை ஆரம்பித்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது!!  அரதப் பழசு!!  அது சரி, என்ன சர்ச்சை?  எண்கள் (Numbers) அப்படின்னா இது தான் என்று வரையறுக்க வேண்டும்.  இது தான் போட்டி, சரியான போட்டி.  ஆனால், இதில் இதுவரை ஒருத்தரும் ஜெயிக்கவில்லை என்பது தான் வியப்பு!! இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக தத்துவஞானிகள் இந்த முயற்சியில் இறங்கி தோற்றுப் போய் விட்டனர் இன்னமும் ஒரு முடிவை எட்ட வில்லை.  [வேண்டுமானால் நீங்களும் கூகுலாரிடம் போய் "Philosophy of numbers"  "what are Numbers" என்று போட்டு தேடிப் பாருங்கள்!!]

சரி இப்போ இன்னமும் கொஞ்சம் விரிவா பார்ப்போம்.  உங்களிடம்

1    2    3   4...........

இவை என்ன என்று கேட்டால், நீங்கள் நகைப்பீர்கள்!!  என்ன இது கூடத் தெரியாதா இவை தான் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்னும் நம்பர்கள் என்று தடாலடியாகப் பதில் சொல்வீர்கள்.  உண்மையில் இவை தான் ஒன்னு ரெண்டு மூன்றா?  அப்படியானால், 

I    II     III   IV..................







  ௪ [தமிழன்டா !!]

இவையெல்லாம் என்ன?  இவையும் ஒன்னு ரெண்டு மூணு நாலு என்பீர்கள் தானே?   அப்படியானால் எது நிஜமான ஒன்னு ரெண்டு மூணு?!!  சரி இவை தான் எண்கள் என்றே வைத்துக் கொள்வோம்.  இப்போ

2< 3

என்றால் அது உண்மையாகுமா?  ஏனெனில் பார்ப்பதற்கு 2 தான் 3 ஐ பெரியதாகத் தோன்றுகிறது, ஆகையால்  3 ஐக் காட்டிலும் 2 பெரியது என்று சொல்ல முடியுமா?!!  முடியாதல்லவா!!   இது ஒரு புறமிருக்கட்டும்.

பத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், 2-ஐ அடிப்படையாகக் கொண்ட Binary முறையில் 1 க்கு அப்புறம் வருவது 2 அல்ல, 10  !!    1+1+1=11   !!  அது மட்டுமல்ல, ஆரம்பத்தில் 1,2,3.......என்று சொல்லாமல் 1,3,4,  என்று கூட எழுதியிருந்தால் இன்றைக்கு 1+1=3 என்று தான் சொல்லிக் கொண்டிருந்திருப்போம்!!      

எனவே, அடிப்படையில் 1,2,3..........  அல்லது  I, II, III ........என்று எழுதுபவை அத்தனையும் உண்மையில் எண்கள் அல்ல, எண்களுக்கான குறியீடுகள் மட்டுமே. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு தாளில் ஆப்பிள் படம் அச்சாகியிருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.
 



படத்தில் உள்ளது நிஜமான  ஆப்பிள் அல்ல, வெறும் குறியீடு மட்டுமே, அதை சாப்பிட முடியாது, நிஜமான ஆப்பிள் வேறு.   அதைப் போல 1,2, 3 ......போன்றவை குறியீடுகள் மட்டுமே.   உதாரணத்துக்கு ஒரு மாங்காய் இருக்கிறது, அதனுடன் இன்னொற்றைச் சேர்த்தால் இரண்டாகும்.  ஆனால், 1+1=2 என்று சொல்ல முடியுமா?  மாங்காய் உதாரணத்தில் நிஜமான மாங்காய் இரண்டை கொண்டு வந்து சேர்த்துப் பார்த்து இரண்டு மாங்காய் ஆகிறதா சரி பார்க்க முடியும், ஆனால் 1+1=2 என்பதைச் சரிபார்க்க முதலில் ஒன்று என்ற எண் இரண்டைக் கொண்டுவர வேண்டும்.  அது எங்கே இருந்து கொண்டு வர முடியும்?!!  எனவே, உண்மையில் எண்கள்  எனப்படும் ஒன்னு ரெண்டு மூன்று என்றால் அர்த்தம் தான் என்ன?  இந்த வரையறையைக் கொடுக்க முடியாமல் தான் இரண்டாயிரத்துக்கும் மேலான வருடங்களாக தத்துவஞானிகள்  தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

எண்கள் குறித்து மூன்று முக்கிய கொள்கைகள் நிலவுகின்றன.  [இன்னும் எத்தனை இருக்கோ தெரியலீங்கோவ்.......!!].  அது குறித்த காணொளி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.  அந்த கொள்கைகள் இவை தான்.



1.  பிலாட்டோனிஸம் [Platonism]  2.  Nominalism  மற்றும்  3.  Fictionalism 

பிலாட்டோனிஸம்:  டேபிள், சேர் போன்றவை போல நம்பர்களும் இருக்கின்றன ஆனால் அவை காலம்-இடம் இவற்றிற்கெல்லாம்  அப்பாற் பட்டவை,  கோட்பாட்டளவில் மட்டுமே இருக்கின்றன.  அதாவது வெயில் காலத்தில் தமிழகத்தில் மாம்பழம் பார்க்கலாம், செப்டம்பரில் காஷ்மீரில் ஆப்பிளைப் பார்க்கலாம் என்பது போல இந்த நம்பர்களை இந்த சமயத்தில் இந்த இடத்தில் இருக்கும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போதும் காட்ட முடியாது.  நம்பர்கள் இருக்கின்றன ஆனால் அவை புலனாகாதவை [Abstract Objects].

Nominalism:  இதன் படி நம்பர்கள் நிஜத்தில் இருப்பவை, அவற்றை பொருட்களோடு சேர்த்து வைத்து பொருள் படுத்திக் கொள்ளலாம்.  அதாவது என்னுடை ஒரு கையில் எட்டு ஆரஞ்சு இருக்கிறது, இன்னொரு கையில் பத்து ஆரஞ்சு இருக்கிறது எனில் மொத்தத்தில் என்னிடம் என்ன இருக்கிறது என்றால் [அங்க யாருப்பா  பெரிசா ரெண்டு கை இருக்குதுன்னு சொல்றது?!!  சும்மா இருங்கப்பா!!]  பதினெட்டு ஆரஞ்சு இருக்கிறது என்று தொடர்பு படுத்தி அர்த்தம் பண்ணிக்கலாம்.  ஆனால் இங்கே ஒரு சிக்கல்.  இந்த முறையில் கற்பனை எண் i   [Squre root of -1:  மைனஸ் ஒன்றின் வர்க்க மூலம்] அப்படின்னா என்னன்னு காட்ட முடியாது,  ஆனால் அது இல்லாட்டி எலக்டிரிகல் என்ஜினீயரிங் துறையையே மூட வேண்டி வரும்.  கோவிலை பத்து முறை சுத்தினேன் என்றால் அர்த்தம் இருக்கு, ஆனால் Square root (-1) தடவை சுத்தினேன் என்று சொல்ல முடியுமா?   அதே மாதிரி வட்டத்தின் விட்டத்திற்கும், சுற்றளவுக்கும் உள்ள விகிதாச்சாரமான பை [Pi =22/7]  என்ற எண்ணை எதனோடும் சேர்த்துக் காட்ட முடியாது.  3 ஆப்பிள், நாலு ஆப்பிள் எனலாம்,  அது மாதிரி இது தான் Pi ஆப்பிள் என்று காட்ட முடியாது [ஆப்பிள் பை வேண்டுமானால் இருக்கலாம்].  ஏன்னா, பை யின் மதிப்பை கணக்கிட்டால்

3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679 ...

என ஆயிரம், இலட்சம், கோடி இலக்கங்களுக்கும் மேல் எல்லையற்று போய்க் கொண்டே இருக்கும்.  நம் சக்திக்கேற்றவாறு எத்தனை இலக்கங்கள் வேண்டுமானாலும் கணக்கிடலாம் ஆனாலும் முடிவே இல்லை.  நாலு பென்சில், இரண்டு ஆப்பிள் என்பது போல எந்தப் பொருளை காட்டி இதுதான் பை அளவு என்று சொல்ல முடியும்?!

ஆனால் பிளட்டோனிசத்தில் இந்தப் பிரச்சினையே இல்லை, ஏன்னா அங்கதான் நம்பர்கள் இருக்கு ஆனால் அவை புலனாகாதவை என்று சொல்லியாச்சே!!  இவையும் அதே மாதிரி  புலனாகாதவைன்னு சொல்லிட்டுப் போயிடலாம் !!


3.  Fictionalism:   இந்த கொள்கைப் படி நிஜத்தில் நம்பர்ன்னு ஒன்னு இல்லவே இல்லை!!   "அடப்பாவி, அப்புறம் எப்படிடா விஞ்ஞானிகள் கண்டுபுடிச்ச கம்பியூட்டர் செல்போன், ராக்கெட்டு எல்லாம்  வேலை செய்யுது" என்று கேட்டால், "ஆமாம், மதப் புத்தகங்களில் வரும் அற்புதங்கள் பற்றிய கதைகளைப் படித்து சமுதாயத்தில் ஒழுக்கம் மேம்பட்டு மகிழ்ச்சி நிலவினால் வரவேற்கலாம், அதற்காக மதப் புத்தகத்தில் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கணிதம் உதவுகிறதா, பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதற்கும் மேல் அதை நம்ப வேண்டியதில்லை "  என்று ஒரே போடாகப் போட்டு ஊத்தி மூடி விட்டனர்.

அதுசரி, இப்போ நீங்க தெளிவா குழம்பியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், முடிஞ்சா உங்களுக்கு இது பத்தி தெரிஞ்சதை வச்சு என்னையும் கொஞ்சம் குழப்பி விடுங்க நன்றி!!