வணக்கம் மக்கள்ஸ்!!
[இது முடி உதிர்தல் சம்பந்தப் பட்ட பதிவு அல்ல!!]
சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் மகனின் முதலாம் பிறந்தநாள். அலுவலக நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க எண்ணினேன், ஆனால் அவர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நினைத்தேன். பிறந்த நாள் விழா அன்று காலை ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒரு துண்டு சீட்டில் மாலை வீட்டிற்க்கு வந்து சிறப்பிக்குமாறு எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டேன். பரிசு வாங்க நேரமிருக்காது என்று மனசுக்குள் நினைப்பு!! ஆனால் அது பொய்யாகியது,மாலை நான் எதிர் பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது!! பார்த்தால் வந்தவர்கள் அனைவரும் பரிசோடு வந்திருந்தனர்!! சிலர் வெள்ளி பொருட்கள், சிலர் விளையாட்டு பொம்மைகள், முக்கியமாக கார்கள், சிலர் வீட்டில் மாட்டி வைக்கும் படங்கள் என அசத்தி விட்டனர்.
விழா, விருந்து எல்லாம் முடிந்த பின்னர் சென்னையில் இருந்து வந்திருந்த தங்கமணியின் சகோதரரும் அவரது நண்பர்களும்பரிசுப் பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்தார்கள். அவற்றில் இருந்த விதம் விதமான பொம்மை கார்களை இயக்கிப் பார்த்தனர். அதில் ஒரு பொம்மை, சுவிட்சை போட்டவுடன் முன்னோக்கி சென்றது, பின்னர் நின்றது, இனிமையான இசையுடன் கார் கதவு தானாகத் திறந்தது, பின்னர் கதவு தானாக மூடிக் கொண்டது, பின்னர் வேறு திசையை நோக்கி வளைந்து சென்றது. இது எங்களில் யாருக்கும் அதிசயமாகத் தெரியவில்லை, ஒரே ஒருத்தரைத் தவிர. அவர் மட்டும் வைத்த கண் வாங்காமல் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், கண்களில் ஒரு மிரட்சி, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து அதில் லயித்திருந்தார்!! பின்னர் அவரது முதுகில் தட்டி, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்ட போது, "ஒன்றுமில்லை, இத்தனை விதமாகவும் இயங்கும்படி எப்படிச் செய்திருப்பானோ என எண்ணி எண்ணி வியக்கிறேன்" என்றார். மற்றவர்கள் யாருக்கும் அதிசயமாகத் தோன்றாது அது அவருக்கு மட்டும் ஏன் அதிசயமாகத் தோன்றியது? காரணமில்லாமலில்லை!! அவர் ஒரு கார் மெக்கானிக். ஒரு காரில் A -Z பிரித்து திரும்ப சேர்க்கத் தெரிந்தவர், எது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்தவர். அதிலுள்ள சங்கதிகள் தெரிந்தபடியால் இந்த பொம்மை கார் இயங்கும் விதம் அவருக்கு அதிசயமாகத் தெரிந்தது. நாங்கள் அது குறித்து எதுவும் தெரியாதவர்கள், ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!! இதுதான் வித்தியாசம்.
அதுசரி எதற்கு இந்த கதை? காரணம் இருக்கிறது. இந்த உலகையும் நம்மையும் படைத்து, காத்து அழிக்கும் வேலையை செய்து வரும் அதிகாரம் படைத்த ஒருத்தன் [இறைவன்] இருக்கிறான் என்று ஒரு சாராரும், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று மறு சாராரும் பட்டி மன்றம் போட்டு வாதிட்டு வருகிறோம். இதில் எந்த கட்சியில் ஒருத்தர் இணைகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது?
உலகில் நம்மைச் சுற்றி அத்தனை அதிசயங்கள் இருந்தாலும் பலர் அதை கண்டுகொள்வதே இல்லை, மேலே சொன்ன மெக்கானிக் மாதிரி அதை அதிசயமாகப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. அந்த சிலருக்கு இறைவன் இருக்கிறான் என்ற சந்தேகம் ஒருபோதும் வருவதில்லை. ஆனால், பாதி அறிந்து மீதி அறியாத அன்பர்கள் எல்லோருக்கும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை ஒருபோதும் உணரவே முடியாது.
அதுசரி, எதை வைத்து இறைவன் இருக்கிறான் என்று சொல்ல முடியும்? உலகில் நாம் இரண்டு விதமான சங்கதிகளைப் பார்க்கிறோம், ஒன்று உயிருள்ளது, எறும்பிலிருந்து யானை வரை, இன்னொன்று உயிரற்றது [ஜடம்] கல்லில் இருந்து மலை வரை. எப்போதெல்லாம் ஜடம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன், உயிர் இருந்தே தீரும். உதாரணத்துக்கு பாழடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று சொன்னால் நம்புவதில் தவறில்லை. அதே சமயம் அழகாக வண்ணம் பூசப் பட்டு வரவேற்பறை முதல், சமையல் கட்டு, குளியலறை வரை எல்லாம் மிக நேர்த்தியாக உள்ளது, ஹாலில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டுள்ளன, படுக்கையறையில் கட்டில் தலையணை படுக்கை விரிப்பு எல்லாம் சுத்தமாக நேர்த்தியாக உள்ளன என்றால் அதன் பின்னணியில் மனிதர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இல்லையில்லை அந்த வீட்டில் பத்து வருடமாக யாரும் உள்ளே செல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இதைப் போலவே எங்கெல்லாம் ஜடத்தில் ஒரு ஒழுங்கமைவைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் அதன் பின்னணியில் ஒரு ஜீவன் நிச்சயம் இருக்கும்.
வீட்டைப் பராமரிக்கும் ஜீவனைப் போலவே தினமும் சூரியனை கிழக்கில் உதிக்க வைக்கவும், பூமி சுழலவும், காலநிலை மாறி மாறி வரவும் பூமியில் வசிக்கும் அத்தனை ஜீவன்களுக்கும் உணவு கிடைக்கவும் செய்யப் பட்டுள்ள ஒழுங்கமைவுக்குப் பின்னணியிலும் ஒரு ஜீவன் கண்டிப்பாக இருந்தே தீருவார். இது தான் ஒரு ஆத்தீகனின் முடிவு.
நாத்திக நண்பர்களே, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதில் சரியான முடிவு எது என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் உண்மையில் உங்களுக்கு இருந்தால் விஷயம் தெரிந்தவர்களை அணுக வேண்டும், அதை விடுத்து ஏமாந்த இளிச்சவா நண்பனை அழைத்து வந்து எடக்கு முடக்காக கேள்வியைக் கேட்டு அதைப் பதிவாகப் போட்டுவிட்டு, அதன் கமண்டு பாக்சையும் மூடி வைத்துவிட்டு, ஐயய்யோ எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டானே என்று ஒப்பாரி வைப்பதில் பிரயோஜனமேயில்லை. ஆகையால் கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்கு பதில் தரக் கூட வழி வைக்காமல் நம்மை விட அறிவாளி எவன்டா என்ற இறுமாப்பில் உழல வேண்டாம்.
உங்கள் கூமுட்டை கேள்விகள் அத்தனையும் பலமுறை நையப்புடைக்கப் பட்டு தோற்கடிக்கப் பட்டவை. புதுசு எதுவும் இல்லை.
இறைவன் இருக்கிறானா எனபதை அறிந்து கொள்ள நாத்தீகர்களுக்கும் ஆத்தீகர்க்களுமிடையே நடந்த விவாதம்.
http://www.youtube.com/watch?v=Xx0Y-4QeCu4
http://www.youtube.com/watch?v=VoAZmIaAxCw
முதல் வீடியோவின் லிங்க்:
http://www.youtube.com/watch?v=Y6VQwxmPzzA
இதன் தொடர்ச்சியாக உள்ள வீடியோக்களையும் பாருங்கள், உங்கள் நாத்தீக கேடராக்ட் திரை விலகும் உண்மை புரியும்.