Wednesday, January 31, 2018

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து!!

ஒரு ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன. எவரிடமும் கைநீட்ட வேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது. ஆனாலும், அவனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் அதை தான் அடைந்து விட வேண்டும் என்பதுதான் அது.

ஒரு நாள் தன் காடு கழனிகளை காணச் சென்று கொண்டிருந்தான். பயிர் பச்சைகள் செழிப்பாக வளர்ந்திருப்பதை பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு அவன் வீடு திரும்ப ஆரம்பித்தான். அப்பொழுது ராமு என்பவனின் தோட்டத்து வேலி ஓரம் நிறைய பூசணிக்காய்கள் காய்த்திருப்பதை பார்த்தான். தான்ஒரு பூசணிக்காயை எடுத்துச் சென்றால் என்ன என்று எண்ணினான். பூசணிக்காயில் பொரியல், கூட்டு எல்லாம் செய்யலாம் சுவையாக இருக்கும்.

நன்கு விளைந்த ஒரு பூசணிக்காயை பறித்தான் சந்துரு. அது சற்று கனமாக இருந்தது. அதை தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தான் அவன். அதை ராமு பார்த்து விட்டான். பணக்காரன் ஒருவன் திருடுகிறானே எவ்வளவு பாடுபட்டு வளர்த்த பூசணிக்காயை அது சந்தைக்கு கொண்டு போய் விற்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தானே. அக்கம் பக்கத்தாரிடம் எல்லாம் பணக்காரனான சந்துரு. தன் தோட்டத்திலிருந்து ஒரு பூசணிக்காயை திருடிக் கொண்டு போய் விட்டானென்றும், அவனை விசாரித்து பூசணிக்காயை தனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டான். ராமுவும், பணக்காரன் வீட்டிற்குச் சென்று அவனை விசாரிக்க தயாராயினர்.
அவர்கள் வரப்போகிற செய்தி சந்துருவுக்கு எட்டியது. ஊர்க்காரர்கள் வந்து தன்னை விசாரித்து தன் திருட்டு வெளிப்பட்டு விட்டால் என்ன செய்வது? திருட்டுப்பட்டம் கொடுத்து விடுவார்களே... "அதோ பூசணிக்காய். திருடன் போகிறான்! என்று சொல்லி சிரிப்பார்களே?' ஊர்க்காரர்களை எப்படி வசியப்படுத்துவது? சந்துரு யோசித்து அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தான். தவசுப்பிள்ளையை அழைத்து ஆட்டுக்கறி, கோழிக்குருமா, ரசம், பொரியல், பாயாசம் எல்லாம் உடனே தயாரிக்கச் சொன்னான். பெரிய பெரிய நுனி வாழை இலைகளை அறுக்கச் சொன்னான். எல்லாம் "மடமட'வென தயாராகிவிட்டன.
ஊர்க்காரர்கள் ராமுவுடன் வந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்குவதற்கு முன், ""வாங்க! வாங்க! நீங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என் வீட்டுக்கு வந்திருப்பது என் பாக்கியம். உங்களை எல்லாம் என் வீட்டில் ஒரு நாள் சாப்பிடச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று விருந்தும் தயாராகிவிட்டது. முதலில் நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்கள்,'' என்று சொல்லி எல்லாரையும் சாப்பிட உட்கார வைத்துவிட்டான். சமையல்காரரும், வேலைக்காரர்களும் ஒன்றின்மேல் ஒன்றாக உணவு வகைகளை கொண்டு வந்து இவைகள் நிறைய பறிமாறி அவர்களை பேச முடியாமல் திக்கு முக்காடச் செய்து விட்டனர். இவ்வளவு வகையான உணவுப் பொருள்களை சாப்பிட்டிராத அவர்கள் மூக்குபிடிக்க சாப்பிட்டனர். அப்பொழுது அவர்களுக்கு இவ்வளவு செலவழித்து பிரமாதமாக சமையல் செய்து இவ்வளவு பேர்களுக்கு சாப்பாடு போடுகிற தயாளமனம் படைத்த சந்துரு நாலணா பெறாத பூசணிக்காயை திருடி விட்டதாக சொல்கிறான். அவன் பேச்சை நம்பிக் கொண்டு நாம் விசாரித்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள கூடாது என்று எண்ணினர். அதனால் பணக்காரனை விசாரிக்காமலேயே சாப்பிட்ட சந்தோஷத்தில் போய்விட்டனர்.

அவர்களுக்கு சோற்றைப் போட்டு பூசணிக்காய் திருட்டை எப்படி சந்துரு மறைத்தார். அன்றிலிருந்துதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி என்ற பழமொழி உருவானது.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அஞ்சு லட்சம் வழங்கினார் வைரமுத்து.-செய்தி.
(இந்த செய்திக்கும் மேலே சொன்ன கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!)

8 comments:

 1. வணக்கம் நண்பரே...
  பழமொழி தெரியும் ஆனால் பின்புலக்கமை இன்றே அறிந்தேன் நன்றி

  முடிவில் சொன்னதை நம்பி விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. "பின்புலக்கதை"

   Delete
  2. தமிழ் பழமொழிகள்/சொலவடைகள் பலவற்றுக்கு உண்மையான அர்த்தம் நமக்குத் தெரிவதில்லை, இதுவும் அதுபோல ஒன்று!! வருகைக்கு நன்றி கில்லர்ஜி...........

   Delete
 2. நண்பரே எல்லாம் சரிதான்.

  // தவசுப்பிள்ளையை அழைத்து ஆட்டுக்கறி, கோழிக்குருமா, ரசம், பொரியல், பாயாசம் எல்லாம் உடனே தயாரிக்கச் சொன்னான். //

  என்று நீங்கள் சொன்னதிலிருந்து விருந்து அசைவப் பிரியர்களுக்கு மட்டுமே; சைவச் சாப்பாடு இல்லை என்று தெரிகிறது. எப்படியோ ஒரு பழமொழிக்கான கதையைத் தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையானது நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொண்ட ஒன்று, தற்போது நினைவுக்கு வந்தது, இணையத்தில் தேடினேன் கிடைத்தது, இங்கே காபி,பேஸ்டு செய்தேன். மற்றபடி சைவம், அசைவம், ஆண்டாள் பிரச்சினைகள் குறித்து இந்த கதையை எழுதியவர்களுக்கு தெரிந்திருக்க வாய் ப்பேயில்லை!!

   Delete
 3. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வது எப்படி வந்தது என்ற கதையை இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!!

   Delete