Saturday, November 8, 2014

கருப்பு பணம் திரும்ப வருமா? வரும்........ ஆனா வராது...........!!


 நம்ம திரைப்படங்களில் காலம் காலமாக கிளைமேக்ஸில் அடிக்கடி இடம் பெரும் காட்சி ஒன்று உண்டு.  கதாநாயகன் வில்லனை அடித்து துவைத்து போட்டுவிட்டு கடைசியாய் பிழைத்துப் போ என்று உயிர் பிச்சை கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து ஒரு பத்தடி திரும்பிப் பார்க்காமல் நகர்ந்திருப்பார்.  அடி வாங்கி இரணகளத்தில் இருக்கும் வில்லன் அப்போதும் அடங்க மாட்டார்.  தன்னிடமுள்ள ஆற்றல் அனைத்தையும் திரட்டி எப்படியோ எழுந்து ஹீரோவைத் தாக்க அவர் பின்னால் ஓடுவார்.  ஓடும்போது சும்மா ஓடமாட்டார்.   "ஏய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ............."  என்று பக்கத்து ஊருக்கே கேட்கும்படி காட்டு கத்தலாக கத்திக் கொண்டே ஓடுவார்.  இவர் கத்தும் சத்தம் கேட்ட ஹீரோ திரும்பிப் பார்ப்பார்.  அதுக்கப்புறம் வில்லன் உசிரு மிஞ்சுமா என்ன?  இதில் நம்மில் பலருக்கும் புரியாத ஒரு விஷயம், வில்லன் ஏன் அவ்வளவு பெரிய கூச்சலை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும், சப்தம் போடாமல் போனால் ஹீரோவை எளிதில் போட்டுத் தள்ளிவிடலாம் அல்லவா?  ஆனால் ஒரு வில்லனும் அவ்வளவு புத்திசாலியாய் செயல்படுவதில்லை, குறைந்த பட்சம் தமிழ்ப் படங்களில் இது நடக்காது!!






கறுப்புப் பணத்தை மீட்கப் போன நமது அரசின் செயலும் கிட்டத் தட்ட இப்படித்தான் இருக்கிறது.  "கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம்" என்று சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப் பட்ட கோஷம் இதோ....... அதோ........என்று வருடக் கணக்கில் இழுத்தடிக்கப் பட்டது.  இப்போ அறுநூறு சொச்சம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் சிக்கியிருக்கின்றன.  அதில் பாதிக்கும் மேல் பணமேயில்லையாம்.  இவ்வளவு வருடங்கள் எச்சரிக்கை விட்டும் எந்த மடையனாவது பணத்தை அங்கே வச்சிருப்பானா?  அப்படி வச்சிருந்தா, அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளனும், பணத்தை போட்டதுக்காக அல்ல, இவ்வளவு எச்சரிக்கை பண்ணியும் பணத்தை பத்திரமான இடத்துக்கு மாத்தாம இருந்ததுக்காக!!


ஆனா, நம்ம பிரதமர் கடந்த தேர்தலில் என்னென்ன வாக்குறுதி எல்லாம் குடுத்தாரு, அதை நம்பி நாமெல்லாம் என்னென்ன கனவில் மிதந்தோம்!!


  • வெளிநாடுகளில் 80 லட்சம் கோடி இந்திய பணம் சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். 
  • அதைக் கொண்டு வந்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து, நாடு முழுவதையும் சிங்கப்பூர் போல மாற்றி, ஆளுக்கு கையில் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும். 
  • அடுத்த முந்நூறு வருஷத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடுவோம்.
  • எல்லா சாலைகளும் மூஞ்சியைப் பார்க்கும் கண்ணாடி மாதிரி மாத்திடுவோம்.
  • ஊருக்கு ஒரு அப்போலோ ஆஸ்பத்திரி கட்டுவோம்.  கருணாநிதி மாதிரியே குப்பனும் சுப்பனும் கூட அந்த ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கலாம்.
  • பதுக்கியவர்கள் பெயர்களை காங்கிரஸ் அரசு வெளியிட மறுத்து, காப்பாற்றி வருகிறது, நாங்கள் அவர்களை வெளிச்சதுக்கு கொண்டு வருவோம்,
மோடி பேசுவதைக்  கேட்டவர்கள், அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியா சொர்க்கமாகிவிடும் என்றே நம்பினார்கள்.  அவ்வாறே ஆட்சியையும் மாறியது, மோடியும் வந்தார்.  நடந்தது என்ன? 
 
நேத்து NDTV -யில் இது குறித்து ஒரு விவாதத்தைப் பார்த்தேன்.  அப்பத்தான் கறுப்புப் பணம் மேலிருந்த கறுப்பு சாயம் வெளுத்தது.  உண்மை என்ன?

  • வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலர் பெயர்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது, அதுவும் நேரிடையாக அல்ல, ஜெர்மானிய அரசுக்கு எப்படியோ கிடைத்த தகவலை நம் அரசோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அதிலும் பலரது கணக்குகள் சட்டபடியானதாகவும் இருக்கக் கூடும். 
  • அவர்கள் எவரது பெயரையும் இவர்களால் வெளியிட முடியாது காரணம் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தை பதுக்கியுள்ளனர் என்று நிரூபிக்கப் படும் முன்னர் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது அவர்களது தனிநபர் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும்.
  • இன்னும் எவ்வளவு பேர் எங்கெங்கெல்லாம் ஒழித்து வைத்திருக்கிறாகள் என்ற தகவல் எதுவும் அரசிடம் இல்லை. 
  • ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கில் உள்ள பணம் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபணம் அரசிடம் தற்போது இல்லை.  அவ்வாறே நிரூபித்தாலும் பணத்தை கொடு என்று நேரிடையாக அந்த வங்கியை நாட முடியாது.  எனவே மிகப் பெரும் கேள்வியே, பணத்தை எப்படி மீட்பது என்பது தான்.  [இதுவே தெரியாமல் தான் அத்தனை வாக்குறுதிகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்!!]
  • பதுக்கியுள்ள பணம் 80 லட்சம் கோடி என்றவர்கள் தற்போது வெறும் 14,000 கோடி மட்டுமே என்கிறார்கள்.   இது தமிழகத்தில் ஒரு வருடத்திய TASMAC சாராய விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் பாதி.  அதிலும் கள்ளப் பணம் என்று பார்த்தால் இன்னமும் குறையும்.  இதைப் பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கப் போவது என்ன தெரியுமா?  பிதாமகன் படத்தில் சூர்யா கொடுப்பாரே அது தான்!!

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அன்பே வா...... படத்தில் பயன்படுத்திய சோப்பு டப்பா, ஒவ்வொரு குடிமகனுக்கும்............


பணத்தை எப்படி இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்?  மொரிஷியஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து மும்பை பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் உள்ளே வருகிறது.  மொரிஷியஸ் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதால் அங்கிருந்து வரும் பணத்தைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப் பட மாட்டாது என்ற சலுகை வழங்கப் பட்டுள்ளது!!

 பணத்தை எப்படித்தான் மீட்பது?

கறுப்புப் பணத்தில் இரண்டு வகை.  ஒன்று நேர்மையாக சம்பாதிக்கப் பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது. இரண்டாவது, அந்த பணமே சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஈட்டப் பட்டது.  இது எந்த வகையாய் இருந்தாலும் யார் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லாத பட்சத்தில் நேரிடையாக வங்கியை நாட முடியாது.  [இதிலும் கூட, அமரிக்க அரசு சிலருடைய கணக்குகளை கேட்டுப் பெற்று பணத்தை மீட்டுள்ளதகச் சொல்கிறார்கள்].

நடைமுறையில் என்னதான் செய்தால் பணத்தை மீட்க முடியும்?  முதலில் இந்தியர்கள் இந்தியாவில் வசிப்போர்  மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் [NRI] அனைவரையும் தாங்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் வைத்துள்ளோம் என்று முழுத் தகவலையும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.  இதனடிப்படையில், இந்த லிஸ்டில் இல்லாத அத்தனை கணக்குகளில் உள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணமே என்று சொல்லி அதை திருப்பித் தர கோர முடியும், அதற்கான வழிமுறைகளை ஐக்கிய நாடுகள் [United Nations] ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மனமிருந்தால் மார்க்க பந்து..........   இல்லையில்லை.......... மார்க்கமுண்டு.   மனது வைப்பார்களா?

9 comments:

  1. காலத்துக்கு தகுந்த நல்லதொரு பதிவை நகைச்சுவையோடு கொடுத்தவிதம் அருமை நண்பரே,,,, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Excellent....Excellent.....

    ReplyDelete
  3. #கணக்குகள் சிக்கியிருக்கின்றன. அதில் பாதிக்கும் மேல் பணமேயில்லையாம்.#
    கறுப்புப் பணம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் பணம் முழுவதும் செலவழிந்து விட்டதால் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கிறார்களாம் ,அவர்களுக்கு உதவ இந்திய மக்கள் குறைந்த பட்சம் தலா மூன்று லட்ச ரூபாய் கொடுக்க வேண்டுமென்று கூடச் சொல்வார்கள் :)
    த ம 2

    ReplyDelete
  4. வைரஸ் பாதித்த File போல எல்லா கணக்குகளும் empty ஆகி விட்டது!

    மீட்க்க முடியும் என்றோ, மீட்பார்கள் என்றோ நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்

      மத்திய அரசு மனது வைத்தால் நடக்கும், மனது வைப்பார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!!

      Delete
  5. I really enjoy this article. Very good and super.

    ReplyDelete
  6. இன்னமும் ஒரு சிறிய கீற்றுப்போல ஒரு நம்பிக்கையை நம்மூரில் நம்மை ஆளுபவர்கள் மீது வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்..... அதில்தான் அப்பாவி ஜெயதேவ்தாஸ் தெரிகிறார்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சாரி, சுப்ரமணிய சுவாமி 120 லட்சம் கோடி இருக்கு, இன்னும் ஒரு வருஷத்தில கொண்டாந்திருவோம்னு சொல்றாரே??!!

      இருந்தாலும் நம்ம கணிப்பு சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா மட்டும்தான் கிடைக்கும்!!

      Delete
  7. @ஜோதிஜி திருப்பூர்
    @KILLERGEE Devakottai
    @Alien
    @Bagawanjee KA

    உங்களைப் போன்றோரின் கருத்துக்களே பதிவுலகில் என்னை வாழ வைக்கிறது, தொடர்ந்து ஆதரவளிப்பீர்...................

    ReplyDelete