Thursday, August 23, 2012

ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?


கடவுளுக்கும் கடவுள் துகள் என்று தற்போது சொல்லப் படும் ஹிக்ஸ் போஸானுக்கும் என்ன சம்பந்தம்?  

 

மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் இடையே என்ன சம்பந்தம் உள்ளதோ  அதே சம்பந்தம்தான் ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ளது!!  எப்படி, எல்லா ஊரிலும் மைசூர் பாகு செய்வது போலவேதான் மைசூரிலும் செய்வார்கள் என்பதைத் தவிர்த்து வேறு எந்த சம்பந்தமும் மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் கிடையாதோ, அதே மாதிரி பிரபஞ்சத்தில் உள்ள படைப்பு அத்தனைக்கும் கடவுள் காரணமாக இருந்தது போலவே, ஹிக்ஸ் போஸானின் படைப்புக்கும் காரணமாக இருந்தார் என்பதைத் தவிர தனிப்பட்ட வேறெந்த தொடர்பும் இல்லை!!  அதே சமயம், இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலில் முன்னணியில் இருக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடான ஸ்டாண்டர்ட் மாடல் [Standard Model ] படி,  ஹிக்ஸ் போஸான் இல்லையென்றால், அடிப்படைத் துகள்கள் [Fundamental Particles] எதற்கும் நிறை [Mass] என்ற ஒன்றே இருந்திருக்காது,  நிறை இல்லாத துகள் நிலையாக நிற்காது, ஒளியின் வேகத்தில் [மணிக்கு மூன்று லட்சம் கி.மீ வேகம்] போய்க் கொண்டே இருந்திருக்கும்.  இந்தப் பிரஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் உருவாகியிருக்காது.  இந்தச் சூரியனோ, பூமியோ, அணுக்களோ, நீங்களோ, நானோ  தோன்றியே இருக்க மாட்டோம். அந்த வகையில்  "ராகங்களை உருவாக்குவதால் நானும் பிரம்மனே"  என்று ஒரு கவிஞன் பாடியதைப் போல, "எல்லா அடிப்படைத்  துகள்களும் நிறை [Mass] பெறுவதற்கு காரணமாக இருப்பதால் நீ கடவுள் துகளே " என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.


http://thebrowser.com/files/imagecache/448x296_reports/higgs.jpg

 

அப்படியானால் இதை ஏன் கடவுள் துகள் என்று சொல்ல வேண்டும்?

 

1988 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவரான, லியன் லெடர்மன்  [Leon Lederman]  என்ற விஞ்ஞானி ஹிக்ஸ் போஸான் பற்றி "The Goddamn Particle  If the Universe Is the Answer, What is the Question?" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை 1993 ஆம் ஆண்டு வெளியிட நினைத்தார்.  இதில், Goddamn Particle என்ற வார்த்தைக்கு  தமிழில் நேரடியான  பொருள் இல்லை எனினும், அதற்க்கு இணையாக  "என்ன இழவு எடுத்த துகள்", "பாழாய்ப் போன துகள்", "பாடாவதி துகள்" என்று எரிச்சல் வரும் போது சொல்லும்  ஏதாவது  ஒரு  வார்த்தையைப் போட்டு சொல்லிக் கொள்ளலாம்.  இந்த அர்த்தத்தில் தான் அவர் ஹிக்ஸ் போஸானுக்கு பெயரிட நினைத்தார். அதுசரி, ஏன் இந்த எரிச்சல்? ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாடு அடிப்படைத் துகள்களில்  குறிப்பிட்ட பண்புகளுடன் 12 துகள்கள் இருக்கவேண்டும் என்று கணித்தது, ஒவ்வொன்றாக அவை பரிசோதனைகள் மூலம் கண்டறியப் பட்டன, மொத்தம் 11 துகள்கள் இருப்பது உறுதியானது, ஆனாலும் 12-வதான ஹிக்ஸ் போஸான்  மட்டும் கடந்த அரை  நூற்றாண்டாக எல்லோருக்கும் அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறது!!  அதனால் எல்லோருக்கும் மனதளவில் பெரிய இம்சை, அத்தோடு இதைக் கண்டறிய ஆகும் செலவு, அதை ஏற்க அமெரிக்கா போன்ற நாடுகளே முன் வராது கை கழுவியது என்று ஏகப்பட்ட வயித்தெரிச்சல், ஆகையால் The Goddamn Particle என்ற பெயரை அதற்க்கு வைத்தார்.  ஆனால், பதிப்பதகத்தார், "சார் இப்படிப் பெயர் வைத்தால் புத்தகம் ஓடாது, நாங்கள் போண்டியாகி விடுவோம்'' என்று மறுத்துவிட்டனர். "அதற்குப் பதிலாக God Particle என்று பெயர் வைத்து விடுங்கள், பிரமாதமாக விற்கும்" என்று  கேட்டுக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் அந்தப் பெயரே வைக்கப் பட்டு நிலைத்து விட்டது.  தவறான அர்த்தத்தைத் தரும் இந்த பெயரில், பல விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, இதன் கோட்பாட்டை உருவாக்கிய ஆறு பேர்களில் ஒருவரான  பீட்டர் ஹிக்ஸ் அவர்களுக்கும் கூட சிறிதளவும் உடன்பாடில்லை, ஏனெனில் அவரும் ஒரு ஒன்னாம் நம்பர் நாத்தீகர்.

1993 ஆம் ஆண்டு வெளியான The  God Particle புத்தகம்

இந்தத் துகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன? 

 

ஸ்டாண்டர்ட் மாடல் படி உருவாக்கப் பட்ட ஆயிரக் கணக்கான மற்ற கோட்பாடுகள்  வெற்றியடைந்தன ,  மேலும் அதன்படி நடத்தப் பட்ட ஆயிரக் கணக்கான  பரிசோதனை முடிவுகளும் கணிப்பு படியே கச்சிதமாக வந்தன.  இதுவரை அதற்குத் தோல்வியே இல்லை. ஆனால் ஒரு பிரச்சினை, இந்த மாடலின் படி அடிப்படைத் துகள்கள் எதற்கும் நிறை [Mass] இருக்க முடியாது.  நிறை இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்த மாடல் வேலை செய்யவில்லை.  [Fundamental Particles: அடிப்படைத் துகள்கள்-பகுக்க முடியாத துகள்கள், மற்ற அனைத்து துகள்களும் இவற்றின் கூட்டாக இருக்கும். உ.ம் . எலக்டிரான்கள், குவார்க்குகள் முதலானவை.]   ஆயிரமாயிரம் வெற்றிகளைக் குவித்த இந்த மாடலை புறக்கணிக்கவும் அறிவியலாளர்களுக்கு மனமில்லை.  இம்மாதிரியான சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையை சமாளிக்க பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்.   இக்கோட்பாட்டின் படி இந்த பிரபஞ்சம் முழுவதும் ஹிக்ஸ் புலம்  [Higgs  Field]  என்ற ஒரு புலம் நீக்கமற நிறைந்திருக்கிறது, இப்புலத்தை  உருவாக்க எந்த மூலமும் [Source] தேவையில்லை.  ஆகையால்,  பிரபஞ்சத்தில் உள்ள பூமி, சூரியன், கேளக்சிகள், என எல்லாவற்றையும் நீக்கிவிட்டாலும் ஹிக்ஸ் புலம் மட்டும் இருக்கும்.  [அடிப்படையில், எந்த ஒரு புலத்தையும் உருவாக்க வேண்டுமெனில் அதற்க்கு ஒரு மூலம்  [Source] வேண்டும். உதாரணத்திற்கு காந்தப் புலத்தை உருவாக்க வேண்டுமெனில் காந்தம் வேண்டும், ஆனால் ஹிக்ஸ் புலம் உருவாக மூலம் (Source) எதுவும்  தேவையில்லை.] அடிப்படைத் துகள்கள் ஹிக்ஸ் புலத்துடன் ஈடுபடுவதால்   [Interact]  அவற்றின் வேகம் தடைபடுகிறது,  [நாம் தரையில் நடப்பது போல வேகமாக சேற்றில் நடக்க முடியாதல்லாவா?]   அதுவே நிறை [Mass] எனப்படுகிறது.   ஹிக்ஸ் புலத்துடன் அதிகமாக ஈடுபடுகின்ற துகள்கள் நிறை அதிகமாகவும் [உ.ம் குவார்க்குகள்-இவையே கூட்டு சேர்ந்து புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் உருவாக்குகின்றன], குறைவாக ஈடுபடும் துகள்கள் நிறை குறைவாகவும் [உ.ம். எலக்ட்ரான்கள்], ஈடுபடாமலேயே செல்லும் துகள்கள் நிறை பூஜ்ஜியமாகவும் இருக்கும் [உ.ம். ஃ போட்டான்கள்].


ஹிக்ஸ் புலத்தினை அலைவுரச் செய்யும்போது உருவாகும் துகள் தான் ஹிக்ஸ் போஸான் ஆகும்.  அடிப்படைத் துகள்கள் ஹிக்ஸ் போஸானுடன் முட்டி மோதுவதால் ஏற்ப்படும் வேக இழப்பைத்தான் மேலே சொன்ன நிறை என்கிறோம்.  அதாவது ஹிக்ஸ் புலத்துடன் அவை ஈடுபடுவது ஹிக்ஸ் போஸான்கள் மூலம் நடைபெறுகிறது. எப்படி  தண்ணீரின் மேற்ப் பரப்பில் ஒரு கல்லைப் போட்டால் நீரலைகள் உருவாகிறதோ அதைப் போல, ஹிக்ஸ் புலத்தை உலுக்கினால் ஹிக்ஸ் போஸான் உருவாகும்.   அவ்வாறு ஹிக்ஸ் போஸான்கள்   உருவாவதை பரிசோதனைகள் மூலம் கண்டறியப் பட்டால் மட்டுமே  ஸ்டாண்டர்ட் மாடலை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும்,  இல்லாவிட்டால் அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதுவரை ஸ்டாண்டர்ட் மாடலைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள அத்தனை கோட்பாடுகளையும் வேறுவகையில் புதிதாக உருவாக்க வேண்டும்.   எனவே, ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்வது பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

Large Hadron Collider (LHC), Geneva, Switzerland இல் என்ன பரிசோதனை நடக்கிறது? அங்கே Big Bang பெருவெடிப்பையே நிகழ்த்துவார்களா? அதனால் கருந்துளைகள் [Black Holes] உருவாகி அது பூமியையே விழுங்கிவிடவும்  வாய்ப்பு உள்ளதாமே, உண்மையா?


CERN துகள் முடுக்கி, சுற்றளவு 27 கி.மீ . பூமிக்கடியில் 100 மீட்டார் ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது.  இதில் புரோட்டான்கள் ஒளியின் வேகத்தில் 99.99%  அளவுக்கு முடுக்கப் பட்டு எதிரெதிரே மோத விடப்படும்.  இதன் விளைவாக 7.2 டிரில்லியன் [7,20,000 கோடி] டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மோதல் ஏற்படும் புள்ளியில்  உருவாகும். ஆனால், அங்கே வாழ்பவர்களுக்கு தரைக்கடியில் என்ன நடக்கிறதென்றே தெரியாது!    



கேட்கிறவன் கேனையனாக இருந்தால் எருமை எரோபிளேன் ஓட்டும் என்றும் சொல்வார்கள் போல!!  உதாரணத்துக்கு சென்னையில் உள்ள சில தீம் பார்க்குகளில் ஐஸை பெரிய அளவில் உருவாக்கி, இமயமலையையே இங்கே உருவாக்கியுள்ளோம் என்று விளம்பரம் செய்வதாக வைத்துக் கொள்வோம், அதன் பொருள் என்ன?  இமயமலையைப் பெயர்த்து இங்கே கொண்டு வந்து வைத்து விட்டார்கள் என்று அர்த்தமா?  அங்கே உள்ளது போலவே ஒரு சூழ்நிலையை இங்கே உருவாக்கி விட்டார்கள், அதில் நீங்கள் ஸ்கேட்டிங் போகலாம், ஐஸை அள்ளி வீசி நண்பர்களுடன் விளையாடலாம் என்று தான் அர்த்தம். அதற்காக, இமய மலையில் உருவாகும் நதிகள் வெள்ளப் பெருக்கெடுத்து பல நகரங்களை மூழ்கடித்து விடுவது போல, அந்த தீம் பார்க்கில் உள்ள  ஐஸ் உருகி சென்னையே மூழ்கடித்து விடுமா என்று கேட்பது நகைப்புக்குரியது.  LHC யில் புரோட்டான்களை   ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு முடுக்கமடையைச் செய்து எதிரெதிர் திசையில் மோதவிட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து ஆராய்ச்சி செய்வார்கள்.  அவ்வாறு மோதல்கள் நடக்கும்போது வெப்பநிலை பெருவெடிப்பு [Big Bang] நடந்தபோது இருந்த அளவுக்கே செல்லும், அதாவது 7.2 டிரில்லியன் [7,20,000 கோடி] டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உருவாகும். [சூரியனின் மையப் பகுதியில் உள்ளது போல இரண்டரை லட்சம் மடங்கு அதிகம்!!].  ஆனால் இந்த வெப்பம் மோதும் புள்ளியில் மட்டுமே நிலவும்,  வெளியில் கசியாத வண்ணம் குளிரூட்டம் செய்யப் பட்டிருக்கும்.  [தங்கத்தின் உருகுநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸ் என்றாலும், அங்கேயே நெருப்பின் முன் உட்கார்ந்து வேலை செய்யும் பொற்க்கொல்லரை அது எதுவும் செய்வதில்லை என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்!!].  இந்தப் பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு [Big Bang] நடந்தபோது இந்த வெப்பநிலையே நிலவியது, அப்போது ஹிக்ஸ் புலம் இருக்கவில்லை, ஆகையால் அடிப்படைத் துகள்கள் [குவார்க்குகள், குளுவான்கள் எலக்ட்ரான்கள்] ஒளியின் வேகத்தில் பயணித்த வண்ணம் இருந்தன.  பெருவெடிப்பு நிகழ்ந்து 10^-12 வினாடிகள் ஆன பிறகு  [1 வினாடியில் ஒரு லட்சம் கோடியில் ஒரு பங்கு நேரம் கடந்த பிறகு] இந்த வெப்பநிலை சற்று தணிந்ததும் ஹிக்ஸ் புலம் தோன்றி எங்கும் நீக்கமற நிறைந்தது. ஒளியின் வேகத்தில் சென்று கொண்டிருந்த அடிப்படைத் துகள்களின் வேகம் ஹிக்ஸ் புலத்துடனான் ஈடுபாட்டால் [Interaction] விளக்கெண்ணையில் விழுந்த கோலிக் குண்டுகளின்  வேகம் மட்டுப் படுவது போல குறைந்து போனது.  அதையே நிறை என்று மேலே விளக்கியுள்ளோம். இவ்வாறு  பெருவெடிப்பின் போது இருந்த வெப்ப நிலையை மீண்டும் உருவாக்கும் போது, எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் நம் கருவிகளுக்கு புலப்படாத ஹிக்ஸ் போஸான், "கையில்" சிக்கும் வகையில் தோன்றலாம் என்பது எதிர்பார்ப்பு.  

ஹிக்ஸ் போஸான் என்ற பெயரில் உள்ள போஸான் என்ற பெயர் இந்திய இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்குச் சொந்தம் என்கிறார்களே?  அவரும் இதில் சம்பந்தப் பட்டவரா? 

 

Satyendranath Bose
இந்திய இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ், ஐன்ஸ்டீனுடன் இணைத்து Bose-Einstein Statistics யை உருவாக்கியவர். 

 

அடிப்படைத் துகள்கள்  ஸ்பின் [Intrinsic Spin] என்னும் பண்பைப் பெற்றுள்ளன, அவற்றின் மதிப்பு 0,1,2 .... etc என முழு எண்களாக கொண்டுள்ள துகள்களுக்கான புள்ளியியலை  இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களும் ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் அவர்களும் சேர்ந்து [Bose-Einstein Statistics] உருவாக்கினார்கள்.  எனவே ஸ்பின் மதிப்பை  முழு எண்களாகக் கொண்ட துகள்கள் அனைத்தும் போஸான்கள் எனப்படும்.  அந்த வகையில் சுழற்சி [spin] 0 கொண்ட ஹிக்ஸ் துகள் ஒரு போஸானாகும், ஆகையால் ஹிக்ஸ் போஸான் என்றழைக்கப் படுகிறது.   சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் பணி ஓரளவுக்கு இங்கே பயன்படிருக்கக் கூடும், அதற்காக ஹிக்ஸும், போஸும்  கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக் கொண்டே இந்த தியரியை உருவாக்கினார்கள் என்பதெல்லாம் கட்டுக் கதை, கற்பனை.


பீட்டர் ஹிக்ஸ்


ஹிக்ஸ் போஸான் கண்டறியப் பட்டதாக 99.999% உறுதி செய்து விட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே, ஏன் 100% என்று அவர்களால் உறுதியாகச்  சொல்ல முடியவில்லை?


இருபுறமும் சமமாகச் செய்யப் பட்ட ஒரு சீரான நாணயம் இருபதாக வைத்துக் கொள்வோம்.  அதைச் சுண்டி விட்டால் 50% பூ விழவும், 50% தலை விழவும் சம வாய்ப்பு உள்ளது.   இதை பல முறை சுண்டினால் தலை, பூ இரண்டின் எண்ணிக்கையும் கிட்டத் தட்ட சமமாக வருவதை வைத்து கண்டு கொள்ளலாம்.  ஒரு வேலை இவற்றில் ஏதாவது ஒன்று அதிகமாக வரும் வகையில் சமமாக இல்லாத நாணயமாக இருந்தால், அதையும்  பல முறை சுண்டினால் கண்டு பிடித்துவிட முடியும்.  ஆனால் எத்தனை முறை சுண்டுவது?  வெறும் பத்து முறை என்று வைத்துக் கொள்வோம்.  அதில், வாய்ப்பு குறைவாக உள்ள பக்கம் ஐந்து முறைக்கு மேல் வருவதற்கும் சான்ஸ் இருக்கிறது, ஏனெனில் நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் சுண்டியிருக்கிரீர்கள்.  அது தவறான முடிவுகளைத் தரக்கூடும்.  அதே பிரச்சினைதான் இங்கும்.  தற்போது கண்டு பிடிக்கப் பட்ட துகள் ஹிக்ஸ் போஸான்தான் என்பதை 5 சிக்மா நம்பிக்கைக்கு உறுதி செய்துள்ளார்கள், அதாவது அது வேறு துகளாக இருப்பதற்கான வாய்ப்பு முப்பைந்தைந்து  லட்சத்தில் ஒன்றாகும்.  அதுசரி, 100% எப்போது உறுதியாகும்? புரோட்டான்களை  கிட்டத் தட்ட ஒளியின் வேகத்திற்கு முடுக்கி, அவற்றை எதிரெதிர் திசையில் பயணிக்க வைத்து  மோதவிட்டு, ஒரு வினாடிக்கு 20கோடி -60 கோடி மோதல்கள் நடக்க வைத்து,  தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு இரவு பகலாக அதே அளவில் மோதல்கள் நடந்த பின்னர் அதன் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்த பின்னரே,    தற்போது கண்டறியப் பட்ட துகள் உண்மையில் ஹிக்ஸ் போஸான்தனா இல்லையா என்று 100% உறுதியாகச் சொல்ல முடியும்.  எனவே காத்திருங்கள்.


ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்யும் LHC, 80 நாடுகள் கூட்டு சேர்ந்து  ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டு, பத்தாயிரம் இயற்பியல் விஞ்ஞானிகளும், எஞ்ஜினீயர்களும் இராப் பகலா உழைக்கிறார்களாமே?  இதப் பத்தி சொல்றதெல்லாம் ஒன்னும் மண்டையில ஏற மாட்டேங்குது, நீங்க என்னமோ பண்ணிக்கிட்டு போங்க, ஆனா ஒரு கேள்வி: இவ்வளவு கஷ்டப் பட்டு இதைக் கண்டு பிடிச்சதுக்கப்புறம், மனித இனத்துக்கு இதனால எதாவது பிரயோஜனம் உண்டா?  


நெஞ்சு மேல கை வச்சு சொல்லனும்னா, இதனால என்ன பிரயோஜம்னு  தெரியாது.  ஆனால் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டும் நினைவுக்கு வருகிறது.  இருநூறு வருடங்களுக்கு முன்னர், மைக்கேல் ஃபாரடேவின் ஆய்வுக் கூடத்துக்கு அந்நாட்டு [இங்கிலாந்து] பிரதமர் கிளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.  அங்கே இருந்த லேடன் ஜார், கசமுசாவென்று கிடந்த வயர்கள் எல்லாம் பார்த்தார்.   மைக்கேல் ஃபாரடே, மின்சாரம் செல்லும் வயர்கள் இயக்கம், காந்தப் புலத்தால் என்ன மாற்றமடைகிறது என்பதை விளக்கினார்.  அதையெல்லாம் கவனமாக கேட்ட பிரதமர், "நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா என்றைக்காவது ஒருநாள் இதால மனுஷனுக்கு எதாச்சும் பிரயோஜனம்  இருக்குமான்னு தெரியலையே" என்றாராம்.  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், மின்சார மோட்டார்,  எல்லா மின் உற்பத்தி நிலையங்களிலும் [நீர், நிலக்கரி, அணு மின் நிலையங்கள்] இயங்கும் ஜெனரேட்டர்கள், எலக்டிரானிக்ஸ், ரேடியோ அலைகள்- இவை இல்லாத உலகம் இன்றைக்கு எப்படி இருந்திருக்கும் என்று!!  ஹிக்ஸ் போசானைப் பிடிப்பது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சாதனை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சரி இப்போ ஹிக்ஸ் போஸான் பத்தி எளிமையான, அருமையான காமிக் படம் ஒன்னு பாருங்க!!