Monday, March 11, 2019

இளையராஜா 75: சில லாஜிக்கல் கேள்விகள்

# இளையராஜா 75

இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு ஞாயிறாக மாலை 3 மணிக்கு சன் டிவியில காமிச்சானுங்க.


அடுத்த ஞாயிறன்று மூன்றாம் பாகம் வரும், அதில் ரஹ்மான்-இளையராஜா சந்திப்பு இருக்கும். இந்த சுவராஸ்யமான பகுதியை கிட்டத்தட்ட முழுசாவே நம்மாளுங்க வீடியோ எடுத்துப்போட்டு காமிச்சிட்டாங்க.  பார்த்ததில் நமக்கு குழப்பமும் தீராத சந்தேகங்களுமே மிஞ்சியது.  நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் ரஹ்மான் 500 படங்களுக்கும் மேல் தன்னிடம் பணியாற்றியிருக்கிறார்னு ராஜா சொல்றார். அதை ரஹ்மான் ஆமாம்னு ஒப்புக்கொள்ளாமல், உங்களுடன் ஒரு படத்தில் வேலை செய்வதே 500 படங்களுக்கு வேலை செய்ததற்கு சமம்னு வேற மாதிரி பதிலைச்சொல்லி மழுப்புகிறார்.

"நீ எப்போ என்கிட்டே முதலில் வேலைக்கு சேர்ந்தே" ன்னு ராஜா கேட்கிறார்.

அதுக்கு, "மூன்றாம் பிறையில்"ன்னு சொல்லி பத்து பதினஞ்சு செகண்டு ஓடும் ஒரு இசையை  ரஹ்மான் போட்டு காண்பித்து இதுதான் ராஜா சார் முதலில் தனக்கு குடுத்த வேலைன்னும், அதுக்கப்புறம் "நீ ஸ்கூலுக்குப் போயி படி"ன்னு விரட்டி விட்டுட்டார்ன்னும் சொல்றார்.

அதுக்கடுத்து, புன்னகை மன்னன் படத்துக்குத்தான் திரும்ப வந்ததாக ரஹ்மான் சொல்றார்.  அந்த படத்தில் சில இசைக்குறிப்புகளை கம்ப்யூட்டரில் ஃபீடு செய்யும் வேலையை தன்னிடம் தந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.



புன்னகை மன்னன் படம் வந்தது 1986, ரோஜா வெளியானது 1992.  அப்படின்னா ராஜா சொன்ன அந்த 500க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காலகட்டத்தில் வந்த படங்களாகத்தான் இருக்க வேண்டும்.  வாரத்துக்கு ஒரு படம்ன்னாலும் 6 வருஷத்துக்கு 500 படங்கள் வராதே?!

சமீபத்தில் ரஹ்மான் பத்தி சின்னக்குயில் சித்ரா வோட இன்டர்வியு ஒன்னு சமீபத்தில் பார்த்தேன்.  இளையராஜாகிட்ட ஒரு சின்னப்பையன் வேலை பார்த்தார், அவர்கிட்ட "திலீப், அந்த கீ போர்டை எடு, இதை அங்கே வை"  ன்னு ராஜா சார் வேலை சொல்லிக்கிட்டு இருப்பார்.  ரோஜா படத்துக்கு பாடப்போகும்போது தான் , அந்தச் சின்னப்பையன் தான் ரோஜாவின் இசையமைப்பாளர் ரஹ்மான் அப்படின்னு தெரியும்னு சித்ரா சொல்றாங்க.



சித்ரா ராஜாவோட ஆஸ்தான பாடகி, 50 % பாட்டை அவங்க தான் பாடுறங்க.  500 படத்துக்கு வேலை செஞ்ச ஒரு இசைக்கலைஞரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்கிற அளவுக்குத்தான் ஞாபகம் இருக்குமா?!

உண்மையில் ரஹ்மான் ராஜாவுக்கு எத்தனை படங்கள் பணியாற்றினார், அது எந்த காலகட்டம்?! மேலும் வைரமுத்துவுக்கு செய்த அதே கொடுமையை ரஹ்மானுக்கும் இளையராஜா செய்தார் என்றும்,  அவர் சில வருடங்கள் யாரிடமும் பணியாற்ற முடியாமல் தவித்தார் என்றும் அரசல் புரசலாக வதந்திகளும் இல்லாமலில்லை.

இது அத்தனைக்கும் ரஹ்மான் வாயை திறக்காமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து விட்டுச் செல்கிறார்.  மொத்தத்தில் இளையராஜாவுக்கு ரஹ்மான் மீது மனதளவில் நல்லபிப்பிராயம் கிடையாது, ரஹ்மானுக்கோ அது ஒரு பொருட்டே கிடையாது, நான் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு செல்கிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கடந்து செல்கிறார்.

உண்மை தான் என்ன?! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.