Monday, January 25, 2016

பத்மா புருஷன் அவார்டு.

சார் உங்களை பத்மா புருஷன் அவார்டு குடுக்க செலக்ட் பண்ணியிருக்கோம்!!

அப்படியா, ரொம்ப சந்தோசம்.  விருது கிடைச்ச சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை.  அதுசரி விருது குடுத்ததும், என் பேருக்கு முன்னாடி "பத்மா புருஷன்" அப்படின்னு போட்டுக்கலாமா?

ஏன் சார் அப்படி போட்டா ஒரிஜினல் பத்மாவோட புருஷன் அடிக்க வந்துட மாட்டானா, அதெல்லாம் முடியாது.  மீறி எங்கேயாச்சும் போட்டிங்கன்னு கண்டு பிடிச்சோம்னா  விருதை திரும்ப பிடுங்கிக்குவோம்.

என்னைய்யா இது, உங்ககிட்டா பேஜாரா போச்சு.  சரி பேருக்கு முன்னாடி தான் போட முடியாது, போனா போகட்டும்.  விருதுன்னா எதாச்சும் பணமுடிப்பு தருவாங்களே அதாவது இருக்குமா?

ஒரு ம..ரும் கிடையாது.

அட நாரப் பசங்களா, அதை காமிச்சு ஒரு இரயில் டிக்கெட்டாச்சும் புக் பண்ண முடியுமாடா??

அதுவும் முடியாது.

அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா.......................எனக்கு அவார்டு வேணும்னா நான் நாச்சியப்பன் பாத்திரக் கடையிலேயே வாங்கிக்கிறேன்டா...........

Tuesday, January 12, 2016

ராமன் வளர்த்த குதிரை-தெரிஞ்ச கதை தான் ஆனாலும்.............

ராமன் வளர்த்த குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படை வலிமையுள்ளதாக இருந்தது. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதன்படி , ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு அளவு பணமும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு, குதிரையை நன்கு உணவளித்து வளர்த்து வந்தார்கள் மக்கள். 


தெனாலிராமனும், வளர்ப்பதற்கென்று ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு பராமரிப்புத் தொகையையும் பெற்றுக் கொண்டார்.

குதிரையை கொண்டுபோய் ஒரு குடிசைக்குள் அடைத்து வைத்து சுவரின் வாசலில் சுவர் ஒன்றை எழுப்பி அந்தச் சுவரின் ஒரு பக்கத்தில் துவாரம் அமைத்தார். அந்தத் துவாரத்தின் வழியாக அன்றாடம் ஒரு கைப்பிடி புல்லை எடுத்து நீட்டுவார். பசி மிகுந்த குதிரையும் வெடுக்கென்று அதைப் பற்றி கொள்ளும். குதிரை சரியான தீனி கிடைக்காததால் எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டிருந்தது.

மன்னர் விதித்த நிபந்தனையின்படி மக்கள் அனைவரும் தாங்கள் வளர்க்கும் குதிரைகளை அரண்மனையில் கொண்டு காட்டும் நாள் வந்தது.
தெனாலிராமன் மட்டும் குதிரையின்றி தான் மட்டும் வந்திருந்தார். மன்னர் ராமனை நோக்கி, “தெனாலிராமா உன் குதிரை எங்கே” என்றார்.

ராமன் “அரசர் பெருந்தகையே, குதிரை மிகவும் முரட்டுத்தனமும் வலிமையும் கொண்டதாக உள்ளது. அதனால் இங்கே கொண்டு வரவில்லை. எனவே தயைகூர்ந்து நமது குதிரைலாயத் தலைவரை எனது குதிரையைப் பார்வையிட அனுப்புங்கள்” என்றார்.

அரசாங்க குதிரைலாயத் தலைவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் மன்னரின் உத்தரவுப்படி தெனாலி ராமனுடன் சென்றார். “அதோ அந்தத் துவாரத்தின் வழியாகக் குதிரையைப் பாருங்கள். முரட்டுக் குதிரை, ஜாக்கிரதை” என்று சொன்னான் ராமன்.

அதிகாரி துவாரத்தின் வழியாக கழுத்தை உள்ளே நீட்டி பார்த்தார். குதிரையோ, அதிகாரியின் நீண்ட தாடியை, தெனாலிராமன் தனக்கு வழக்கமாகக் கொடுக்கும் புல்தான் என எண்ணி வெடுக்கென்று வாயால் பற்றி இழுத்தது. “ஐயோ ஐயோ என்று அலறி குதிரையிடமிருந்து தாடியை விடுவித்துக்கொள்ள அதிகாரி படாத பாடுபட்டார். ஆனால் முடியவில்லை. அதிகாரியின் இந்த பிராணவதையைக் கேள்விப்பட்ட மன்னர் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தெனாலிராமன் வீட்டிற்கு வந்தார்.

உடனே காவலர்களிடம் கூறி அதிகாரியை மீட்க நடவடிக்கை எடுத்தார். கடைசியில் அதிகாரியின் தாடியைக் கத்தரித்து அதிகாரியை மீட்டனர். மன்னர் உத்தரவுப்படி குடிசையின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. உள்ளே பார்த்தால் நிற்கக் கூட சக்தியில்லாமல் குதிரை எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது.

தெனாலிராமனைப் பார்த்த அரசர், “ராமா, குதிரையை வளர்க்கக் கொடுத்த நிதியை நீ தின்றுவிட்டு குதிரையை இப்படி பட்டினிபோட்டு விட்டாயே” என்று கோபித்தார்.

உடனே ராமனும், “அரசே ஒருவாய்ப் புல்லுக்கே அதிகாரியின் தாடியை குதிரையிடமிருந்து மீட்பது பெரும்பாடாகிவிட்டது. இன்னும் வயிறு நிறையத் தீனி கொடுத்திருந்தால் அதிகாரியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்காதா” என்றான்.

மன்னர் தன்னை மறந்து சிரித்துவிட்டார். “ராமா, இனி இதுபோல் பிராணிகளை வதை செய்யாதே” என்று எச்சரித்தார்.

குறிப்பு:  இந்த கதைக்கும், தமிழக மக்கள் ரேஷன் கடையில் 100 ரூபாய் பணம், ஒன்னேமுக்கால் அடி நீள கரும்பு, ஒரு கிலோ பச்சரிசியை கூட்டமாய் நின்று அடித்துப் பிடித்து வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மக்களை இந்த கதையில் வரும் பஞ்சத்தில் கிடந்த குதிரையாகவும், குதிரையை கேவலமான நிலையில் வைத்திருந்த தெனாலிராமனை ஆட்சியாளர்களாகவும் நான் சித்தரிக்கவில்லை.