Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Sunday, January 25, 2015

தயாநிதி சாப்பிட்ட ஒரே ஒரு பழம்

ஒரு ஊரில் தயாநிதி என்று ஒரு புத்தி கூர்மையுள்ள ஆள் இருந்தான்.  அவன் உண்மையைத்தான் எப்போதும் பேசுவான், ஆனால் அதற்குள் இருக்கும் சூட்சுமம் வெளியில் தெரியவே தெரியாது!!  அப்பேற்பட்ட சாமர்த்தியசாலி.

அவன் ஒரு  நாள் தன் நண்பர்களிடமிருந்து எப்படியாவது பணம் வசூல் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.  பணம் சும்மா கொடுப்பார்களா, காரணம் வேண்டுமே.  அதற்காக ஒரு பிட்டை போட்டான். 

"என்னிடம் சாப்பிடக் கூட பணமே இல்லை.  அதனால் இன்றைக்கு நான் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டேன்.  எனக்கு இன்றைக்கு வயிறு சரியில்லை, டாக்டரிடம் போக வேண்டும்.  பணம் கொடுத்து உதவி செய்யுங்கள்" என்றான்.

அவனுடைய நண்பர்கள் ஏமாளிகள்.  ஏதேதோ பண்ணி 440 ரூபாய் தேத்தி கொடுத்து போய் உடனடியாக மருத்துவரிடம் செல்லச் சொன்னார்கள்.

அவன் சென்ற பின்னர் அவனுடைய பக்கத்து வீட்டுக் காரர் அங்கே வந்தார்.  அவரிடம் நண்பர்கள் நடந்த விஷயத்தை சொல்ல அவர் ஷாக்காகி போனார்.

"அவன் உங்களையெல்லாம் முட்டாளாக்கிட்டான்பா......"  என்றார்.

"என்ன சொல்றீங்க, அவன் இன்றைக்கு சாப்பிடக்கூட பணம் இல்லையாமே, ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டானாமே?" என்று நண்பர்கள் வினவினார்கள்.

ஆமாப்பா, ஆமாம்.  அவன் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டான்.  ஆனா, அது வாழைப் பழமோ மாம்பழமோ அல்ல, பலா பழம்.  முழு  பழம்.  மொத்த பழத்தையும் வெட்டி அவனே சாப்பிட்டான்.  டேய்........டேய்.......  எனக்கு ஒன்னாச்சும் குடுடான்னு கேட்டேன், முடியாதுன்னு எல்லாத்தையும் அவனே சாப்பிட்டுட்டு கடைசியா மொத்தம் 343 சுளைகள் அதில் இருந்துச்சுன்னு எண்ணி கணக்கு மட்டும் சொல்லிட்டு கெக்கே...........பிக்கேன்னு சிரிச்சி கிட்டே ஓடிட்டான்.



இப்போ இங்கே வந்து உங்ககிட்ட 440 ரூபாய் ஆட்டயப் போட்டிருக்கான்.   அவன் விட்ட பீலாவை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டீங்களேப்பா...................??!!

Wednesday, May 7, 2014

தமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்?

வணக்கம் மக்கள்ஸ்!!

தமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது.  பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது.  ஆனால் அது உண்மையல்ல. 

 

உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த "தெய்வத் திரு(ட்டு)மகள்" என்ற படம்  ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை.  எப்படி தெரியுமா?  கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.


ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பலூன் வாங்கப் போகும் காட்சியில் எல்லா பலூன்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன, இடது புறமாக இருந்து வலது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை கதாயகனின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது.
அதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது.
இது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம்.  சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே!!  மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா?  அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க?

சிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர்.  அவை அனைத்துமே தவறு.

இந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம்.  அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா?  ரெண்டும் வேற வேறப்பா!!





ராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம்.  அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு!!






அதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான்  தோணும்,அது  வெறும் மனப் பிராந்தி.  தெளிவா இருங்க, ரெண்டும் வேற!!






என்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க.  அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம்.  உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, "ஏக் துஜே கே லியே"  மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா?  அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே!!  அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன ?  [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........!!].

அப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம்?  ஒரிஜினல் கதை தான் என்று  எப்படிச் சொல்வது?


எந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்?

இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி.  என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!!  பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!!   ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம்.  அவனை வழுக்கைத் தலையன் என்போம்.  அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போ அவன் வழுக்கைத் தலையன்  இல்லை என்போமா?  கிடையாது!!  சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ?  ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான்.  இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம்?  [இதையே ரிவர்சிலும் சொல்லலாம்.  தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும்.  எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார்?  இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]

அப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை!!  காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது.  அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம்?  எதுவரை காப்பி இல்லை?
 
சரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி  தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.  வடிவேலு, "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள்.  "ஸ்டோரி டிஸ்க ஷன்" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும்?  ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்!!] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள்.  அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும்.  இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், "நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா?" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.

 இதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு.  இதற்கு வேறு பெயர் இருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்கள்-மாற்றுத் திறனாளிகள்
விபச்சாரம் செய்வோர்-பாலியல் தொழிலாளிகள்
இலவசம்-விலையில்லா பொருள்
இரண்டு இனத்துமல்லாதவர்கள்-திருநங்கைகள்
புட்டுகிட்டான்-வைகுண்டப் பதவியை அடைந்தார்.

இப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா?

காப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.

எங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் !!   God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்!!

தொடர்புடைய பதிவுகள்:

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

 கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

Saturday, March 29, 2014

எருமை மாடு நாத்தீகத் தலைவரான கதை

வணக்கம் மக்கல்ஸ்!!

தகுஸ்தான் என்ற நாட்டில் ஒரு சிற்பி இருந்தாரு, சிலைகளை வடிப்பதில் வல்லவர்.  ஒருநாள் அவரிடம் ஒரு எருமை மாட்டின் சிலை வேண்டும் என்று ஒருத்தர் வந்தார்,  அதைக் கொண்டு போய் ஒரு பூங்காவில் வைக்க வேண்டும், மாணவர்கள் ஏறி விளையாட நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு என்ன விலை என்று சிற்பியிடம் கேட்டார்.   " ஒரு லட்சம் ஆகும்" என்றார் சிற்பி.   வந்தவர் ஐம்பதாயிரம் முன்பணம் கொடுத்துவிட்டு மீதியை சிலையைப் பெறும்போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று விடை பெற்றுச் சென்றார்.  சிற்பியும் அந்தப் பணத்தை வைத்து நல்ல கிரானைட் கல்லாக வாங்கி செவ்வனே என்று சிலையைச் செய்து முடித்தார். சிலை பிரமாதமாக வந்தது.

 

சிலையை வடிக்கச் சொன்னவரை தொடர்புகொண்டு, "சிலை தயார் வந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று தகவல் தெரிவித்தார் சிற்பி.  அதற்க்கு அவர், "ஐயா, அந்தச் சிலைக்கு வேண்டிய நிதியுதவி வசூல் சரியாகப் போகவில்லை, பணம் தருகிறேன் என்று சொன்னவர்கள் எல்லோரும் ரிவர்ஸ் கியர் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள், தயவு செய்து நீங்கள் வேறு யாருக்காவது விற்று விடுங்கள், நீங்கள் எனக்கு பணம் எதுவும் திருப்பித் தரத் தேவையில்லை" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்து  விட்டார்.

இதைக் கேட்டதும் சிற்பி சற்றே கதிகலங்கிப் போனார்.  இத்தனை நாள் உழைப்பு பாழாய்ப் போனதே என்று. அப்போது ஒரு பகுத்தறிவுவாதி அங்கே வந்தார்.   

பகுத்தறிவுவாதி என்றால் என்ன என்பதை நாம் இங்கே கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்.  யார் என்ன சொன்னாலும் கேட்கப் படாது, நீயே சிந்தி.... [ அய்யய்யோ,என்ன மூக்கை சிந்தப் போறீங்க..?!!  சிந்தி என்றால் சிந்தனைங்க......  நீங்க ஒன்னு!!]  அப்படி சிந்திச்சு உனக்கே சரின்னு பட்டால்  ஏத்துக்கொள். [ஒருவேளை சிந்திக்கிறவன் கேனை என்றால் அவன் எப்படி சரியா சிந்திப்பான்?!   இப்படியெல்லாம் புத்திசாலித் தனமா கொக்கி போடப் படாது.   தலைவன் சொன்னா அப்படியே ஏத்துக்கணும்.  ......  ஹி ...........ஹி ...........ஹி ...........   இப்பத்தானே, சொந்தமா சிந்தின்னு  சொன்னீங்க, அதுக்குள்ள தலைவன் சொன்னதை அப்படியே ஏத்துக்கணுமா?  குழப்புதே......  நாம்ம கொள்கையே அப்படித்தான்.   ...........ஹி ...........ஹி ...........  ]

நாம் ரொம்ப விலகிப்   போயிட்டோம். சரி, வந்த பகுத்தறிவு என்ன சொல்லிச்சு?  "ஐயா, எங்க தலைவருக்கு சிலை வைக்கணும்,  எவ்வளவு ஆகும் சொல்லுங்க?"

சிற்பி  சொன்னார், " ஒரு லட்சம்".

"இதெல்லாம் ஜுஜுபி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றதுக்கு ஊரைச் சுத்தி  இளிச்சவா பயலுவ நிறைய பேர்  இருக்கானுவ,  இந்தாங்க அட்வான்ஸ் ஐம்பதாயிரம், சிலையை முடிங்க வந்து மிச்சத்த குடுத்துட்டு வாங்கிகிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியது பகுத்தறிவு.

சிற்பி  அந்த சிலைக்குத் தேவையான கல்லுக்கு ஆர்டர் குடுக்க போனை எடுத்தார்.

அப்போது அவருடைய உதவியாளர் "ஒரு நிமிஷம்" என்றார்.

"என்ன?" என்றார் சிற்பி.

"ஐயா, ஒரு  யோசனை.  எதுக்கு வீணா பணத்தை செலவு  செய்யணும்,இருக்கிறதை வச்சே சமாளிக்கலாமே?" என்றார் உதவியாளர்.

"என்னடா சொல்றே, இருந்த பணத்தைஎல்லாம்தான் அந்த எருமை மாட்டுச் சிலை வடிப்பதற்க்கே போச்சேடா, வேறென்ன இருக்கு நம்மகிட்ட?" என்று புரியாமல் வினவினார் சிற்பி.

"அது தான் ஐயா இப்போ நம்ம பிரச்சினையை தீர்க்கப் போவுது!!""

"எப்படிடா?"  சிற்பிக்கு இன்னமும்  விளங்கவில்லை.

"அந்த எருமைச் சிலையை நிமிர்த்தி நிக்க வச்சு லைட்டா டிங்கரிங் பண்ணினா போதும்,   இப்ப வந்திருக்கிற ஆர்டரை முடிச்சிடலாம்,  போட்ட பணத்தை எடுத்திடலாம்,  என் யோசனை எப்பூடி..........ஹி ...ஹி ...ஹி ...." என  சிரித்தார்  உதவியாளர்.

"சபாஷ்டா.......உனக்கு உடம்பெல்லாம் மூளைடா"  என்று குதூகலித்தார் சிற்பி.  விரைந்து சிலையை மாற்றியமைத்து பகுத்தறிவுக்கு தெரியப் படுத்தினர். 



சிலையைப் பார்த்த பகுத்தறிவுக்கு ரொம்ப  சந்தோசம்,  நாடு முழுக்க 3,99,999  [நாலு லட்சத்துக்கு ஒன்னு தான் கம்மி!!] சிலைகள்  இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியா எதுவும்  இல்லை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தது பகுத்தறிவு.  குஷியோடு பணத்தை செட்டில் செய்துவிட்டு முப்பது ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து சிலையை நகர்த்திக் கொண்டு போனது. தகுஸ்தான் நாட்டின்  பிரதான கடற்கரையில் அந்த சிலை நிறுவப்பட்டது.


 


தகுஸ்தான் நாட்டின் பகுத்தறிவுக் கட்சியின் தலைவர் கீரைமணிக்கு  சிலை நன்றாக வந்ததில் ஏக மகிழ்ச்சி.  தலைவனின் பிறந்த நாளையே சிலை திறப்புக்கு தெரிவு செய்தார்.  தலைவன் பிறந்த நாள் அன்று திறந்தால் தான் தலைவன் சிலை பிரதிஷ்டை ஆகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். வாசனையுள்ள ரோஜா பூக்களால் தொடுக்கப் பட்ட பெரிய பெரிய மாலைகளோடு வந்து சேருங்கள் என்று வாழ்வில் ஒருபோதும் மூளையைப் பயன்படுத்தாத தொண்டர்களுக்கு உத்தரவு போட்டார்.  மாலை போட்டதும் தலைவனின் சிலை வலதுபுறமும் இடதுபுறமும் தலையைத் திருப்பி, மூச்சை இழுத்து தோளிலுள்ள பூக்களை முகர்ந்து பார்க்கும் என்பதில் கீரை மணிக்கு அசையாத நம்பிக்கை.   இது நான்கு லட்சமாவது சிலை என்று திறப்புவிழாவில் பூரித்தார் கீரைமணி.  இதை நிறுவ எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு பணம் வந்தது என்ற லிஸ்டையும் வாசித்தார்.  மொத்தம் பத்து லட்சம் செலவு என்று கணக்கு காண்பித்தார்.  இந்த பணத்தையெல்லாம் தகுஸ்தான் நாட்டின் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து வீணடிக்கலாம் என்ற பிற்போக்கு சிந்தனையை சாடி தனது உரையை முடித்தார் கீரைமணி.


அதன் பின்னர் ஊரில் இருக்கும் காக்கா எல்லாம் வந்து மாதக் கணக்கில் அந்த சிலை மீதே கக்கா போனது.  அதைப் பார்க்கும் போது தலைவனின் தலையில் பாலையும் தயிரையும் கலந்து ஊற்றி அபிஷேகம் நடப்பது போல கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  எப்போதாவது ஒருநாள் நகர சுத்தீகரிப்பு தொழிலாளி ஒருத்தர் வந்து தனது வேலைக்கு வைத்திருக்கும் துடைப்பம், பிரஷ், பினாயில் போன்ற உபகரணங்களை வைத்தே சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்.  சிலையின் முகத்தினை பிரஷால் துடைக்கும்போது மட்டும் தலைவர் சிலை, உவ்வே........ என்று குமட்டுவதை அவர் அவ்வப்போது கவனிக்கத் தவறவில்லை.


இந்த நிகழ்வு பற்றி "எல்லாம் தெரிந்த எல்லப்பன் " பதிவர் திரு.மிதிமாறன் அவர்களிடம் வாசகர்கள் கேள்விகளைக் கேட்டனர்.  [எப்பேர்பட்ட சூரனுக்கும் ஒன்றிரண்டு துறைகளைப் பற்றி மட்டுமே பதிலளிக்க முடியும், ஆனால் இந்த எல்லப்பனால் ஆட்டுப் புளுக்கையில் இருந்து அமரிக்கா வரைக்கும் எதைப் பற்றி கேட்டாலும் பதில்களை  வாரி வாரி வழங்க முடியும்.]

கேள்வி:  கோவில் சிலை வெறும் கல்லு, அதற்க்கு மாலை மரியாதை செலுத்துவது மூடத்தனம் என்றால் உங்க தலைவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் பகுத்தறிவா?

மிதிமாறன் பதில்:  "சாதாரண சிலைக்கு மாலை போட்டா அது கல்லு மாதிரிதான் நிக்கும், அதுக்கு ஒன்னும் விளங்காது.  மனிதனா வாழ்ந்து மண்டையைப் போட்ட ஒருத்தருக்கு தாராளமா சிலையை வைக்கலாம், தப்பேயில்லை.  ஏன்னா அந்த சிலைக்கு  போடுவது ரோஜா மாலை என்பதும், அது வாசனையானது என்பதும் நன்றாகவே தெரியும்,  மாலையை நுகர்ந்து பார்க்கும் அகமகிழும், இது தான்டா பகுத்தறிவு"

என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார் எல்லாம் பகுத்து அறிந்த தெரிந்த அறிவாளி.

இவ்வாறாக வருடத்தில் ஒருநாள் ரோஜா மாலைகளால் சூட்டப் பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு மற்ற நாட்களில் காக்காவின் கக்கா அபிஷேகத்தை வாங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது அந்த எருமை மாட்டுச் சிலை.




Wednesday, June 12, 2013

வெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.

 Facebook -ல் படித்தது.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

இதையும் வாசிக்கலாமே!!

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..


இப்பக்கத்தின் கீழே:  Photoon-பொருள் ஒன்று, அதன் தோற்றம் பார்ப்பவர் கோணத்தை பொறுத்து மாறும்.