Thursday, November 19, 2015

நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம்

 நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம் அப்படின்னு யாரோ சொல்றாங்க, ஆனாலும் ஒன்னு கூட நம்ம கண்ணுக்குத் தெரியலையே?  என்ன காரணம்?


இந்த நேரத்தில் சம்பந்தேமேயில்லாமல் எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை, ஞாபகத்திற்கு வருகிறது. 

ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க அணை அந்த அணையை  நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்”

“ஓ அப்படியா மகிழ்ச்சி. அணையும் வீடும் அழகாக உள்ளது ”பாராட்டினார்.

பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.

பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.

எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.

“இது யாருடையது?”

“என் பங்களாதான் “

 “வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?”

“அதோ தெரியுது பாருங்க அந்த அணையை  நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்”

வெளி நாட்டு அமைச்சர்”- “அங்க எந்த பாலமும் தெரியலையே?”
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....

“நீங்க அணையை  கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க அணை கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....”

மகாபாரதத்தில் அபிமன்யு ஏன் போரில் கொல்லப் பட்டான்?

ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள் மிகவும் மோசமாக தோற்கடிக்கப் பட்டனர்.  மீண்டும் மீண்டும் போர் நடந்தது, ஆயினும் அனைத்துப் போர்களிலும் தேவர்கள் கையே ஓங்கியது, அசுரர்கள் அவர்களது லோகத்தில் இருந்தே விரட்டியடிக்கப் பட அவர்கள் பூமியில் தஞ்சம் புகுந்து அங்கே தோன்ற ஆரம்பித்தனர்.  அசுரர்களின் பாரத்தை [பாரம் அவர்கள் உடல் எடையால்  அல்ல, அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் !!] தாங்க முடியாத பூமிதேவி பிரம்ம தேவனிடம் முறையிட, அவர் சிவன் உட்பட தேவர்களை அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் அமர்ந்து அதில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமன் நாராயனனை எண்ணித் தவம் செய்கிறார். அதற்கு இசைந்த ஸ்ரீமன் நாராயணன் தான் பூமியில் அவதரித்து லீலைகள் புரிய இருப்பதாகவும், அப்போது அசுரர்கள் அழிக்கப் பட்டு பூமி பாரம் குறைக்கப் படும், அவதாரத்தின் போது தன்னுடன் தேவர்களும் உடன் வர வேண்டும், ஆகையால் அவர்கள் அனைவரும் பூமியில் சென்று பிறக்கவும் வேண்டும் என்ற செய்தியை பிரம்மனின் ஹிருதயத்திற்கு அனுப்புகிறார். [வாட்சப்பா, எஸ் எம் எஸ்ஸான்னு மட்டும் தெரியலை].





இதை மற்ற தேவர்களுக்கும், பூமாதேவிக்கும் பிரம்மா தெரிவிக்கிறார்.  மகிழ்ச்சியோடு பூமாதேவி  திரும்பிச் செல்ல, தேவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து யார் எங்கே பிறக்க வேண்டும் என்றுமுடிவெடுக்கின்றனர்.  அதன்படி சோமனின் [Moon god] மகன் வர்சாஸ் அர்ஜுனனின் மகன் அபிமன்யூவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது.  ஆனால் சோமனோ தன்னால் மகனைப் பிரிந்திருக்க இயலாது, ஆகையால் தனது மகனுக்கு பூமிக்குச் சென்று பிறப்பதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறான்.

இதை மறுத்த மற்ற தேவர்கள், இது பரம புருஷோத்தமனின் உத்தரவு என்பதால் அதை மீறுவது, மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.  மகனை அதிக காலம் பிரிந்திருக்க விரும்பாத சோமன் நிபந்தனையோடு தனது மகனை அர்ஜுனனின் மகனாகப் பிறக்க ஒப்புக் கொள்கிறான்.  அதன்படி அவன் இளம் வயதிலேயே தேர் படை செலுத்துவதில் வல்லவனாகத் தேர்வான். 16 வயது நிரம்பியதும் மகாபாரதப் போரில் வீரதீர பராக்கிரமத்தோடு போரிட்டு, வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் வண்ணம் பெயர் பெற்று  பின்னர் தன்னிடம் திரும்ப வேண்டும்.  அப்போரில் தனது உயிரை விடும் முன்னர் எதிரியின் படையில் கால் பங்கை அரை நாளிலேயே கொன்று குவிப்பான். அத்தோடு, பரத வம்சத்தின் அடுத்த வாரிசும் அபிமன்யூ மூலமாகவே உருவாக வேண்டும். அதன் படி பாரதப் போரின்போது கற்பமாக இருந்த அபிமன்யூவின் மனைவி உத்தராவின் வயிற்றில் பரிஷித்து மகாராஜா பிறக்கிறார். அப்போது போர் முடிந்த சமயம் அபிமன்யு உயிருடன் இல்லை.  பின்னர் பாண்டவர்கள்  ராஜ்ஜியத்தை மகாராஜா பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு மேலுலகம் சென்றனர். பாண்டவர்கள்  சென்ற பின்னர் நீதி நெறி தவறாது இப்புவியை பரிஷித்து மகாராஜா சீரும் சிறப்புமாக வெகு காலம் ஆட்சி புரிந்தார்.

Tuesday, November 17, 2015

கூந்தல் கருப்பு....... ஆஹா........ குங்குமம் சிவப்பு ஓஹோ....... பாடலின் உள்ளர்த்தம்.

கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ...........





பரிசு படத்தில் வரும் இப்பாடலுக்கு எம்ஜிஆரும் சாவித்திரியும் வாயசைத்திருப்பார்கள்.

கூந்தல் கருப்பு என்று எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போதே, அடேயப்பா உலகமகா கண்டுபிடிப்புடா என்று அன்றைய இரசிகர்கள் நக்கலடித்திருக்கிறார்கள்.  மேலோட்டாமாகப் பார்த்தால் அதுவும் சரிதானே என்று தோன்றும்.

யாருக்கைய்யா கூந்தல் கருப்புன்னும், குங்குமம் சிவப்புன்னும்  தெரியாது?  ஆனாலும் இதற்கு என்ன முக்கியத்துவம் அதை ஏன் எம்ஜிஆர் பாட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விடை தெரியாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.


இன்னொரு பாடல், படம் : விவசாயி

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

சரி இந்தப் பாடலிலும் " கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்" என்ற வரியை இருமுறை அழுத்தமாக டிஎம்எஸ் பாடுவார்.  இதில் வரும் கருப்பு சிவப்பு எதற்கு?

இன்னமும் புரியவில்லையா?  ஹி ...........ஹி ...........ஹி ...........

சரி அடுத்த பத்திக்கு போவோமா?

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
[மீண்டும்] பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
.....................
இங்கே அப்படியே பாட்டு வேகம் குறைஞ்சு நின்றே போய்விடும்.  அப்புறம் மெதுவாக ஆரம்பிப்பார்.
அது....................

[இங்கே ஒரு சிறிய இடைவெளிவிட்டு பின்னர் அதே பழைய ஜோரில்!!]
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

இப்பவாச்சும் புரிஞ்சதா?!!  புரிஞ்சவங்க புரிஞ்சிக்குங்க, புரியாதவங்க விட்டிடுங்க.

நன்றி:  திண்டுக்கல் ஐ. லியோனி.

Friday, November 13, 2015

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்- விஷால் முடிவு சரியா?

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது - விஷால்.





முதல் முறையாக சினிமாக் காரர் ஒருத்தர் தெளிவா பேசியிருக்கார்!!  இதைப் பார்த்துவிட்டு அவரை தமிழன் மேல் அக்கறையில்லாத தெலுங்கன் என்று சிலர் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள் போராட்டத்தால் எதாவது பலன் இருக்கிறதா எனக் கேட்டால், "அந்த ஆட்டோ கண்ணாடிய திருப்பினா இந்த ஆட்டோ எப்படி ஓடும்?" என்ற கதை தான்.  

இலங்கை பிரச்சினையை இந்திய-இலங்கை அரசுகள் ராஜீய ரீதியாகவும், காவிரிப் பிரச்சினை தமிழக-கர்நாடக அரசுகளால் சட்ட ரீதியாகவும் தீர்க்கப் பட வேண்டியவையாகும்.  பின்னர் நடிகர் சங்கம் ஏன் போராடுகிறது?  " இத்தனை பிரச்சினைகள் வெட்டு குத்துன்னு நடக்குது இவனுங்க சினிமா எடுக்கிறதிலேயே குறியா இருக்கானுங்களே, எதையாச்சும் கண்டுகிறானுங்களா?" என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றக் கூடும், அந்த மாதிரி கொதிக்கும் மன நிலையில் மக்கள் இருந்தால் அது இவர்களது படங்களின் வசூலைப் பாதிக்கும். அதை சமாதானம் செய்யவே நடிகர்களின் அறப் போராட்டம், அதாவது எந்த விளைவும் இல்லாத போராட்டம்!!  




இவர்கள் போராட்டங்கள் எதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு போதும் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சாராயக் கடையை எதிர்த்து இவர்கள் ஒரு போதும் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள்.  தற்போது அரசே தாமிரபரணி ஆற்று நீரை பெப்சிக்கு 100 வருடத்துக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செய்தி பற்றி இவர்களுக்கு தெரியவே தெரியாது.  மாநிலம் முழுவது நடந்து வரும் ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை பற்றி மூச்.  அவ்வளவு ஏன் முல்லை பெரியார் அணை விஷயத்தில் கூட நடிகர்கள் ஒருத்தரும் வாயையே திறக்கவில்லை, காரணம் அவர்கள் படம் கேரளத்தில் கணிசமான தொகையை வசூலிக்கிறது, அவர்களுக்கெதிராக எதையாது பேசினால் அது பாதிப்புக்குள்ளாகும், அதனால் ஒருத்தனும் வாயைத் திறக்கவே மாட்டான்.

சரி நடிகர்கள் போராட்டத்தால் பிரயோஜனம் தான் இல்லை, அது  பிரச்சினைகளையாவது கிளப்பாமல் இருக்க வேண்டுமல்லவா?  அதுவும் இல்லை.  காவிரிப் பிரச்சினைக்கு இவர்கள் கூட்டம் போட்டு கன்னாபின்னாவென்று கோபத்தில் பேச அவை தொலைக் காட்சியிலும் செய்தித் தாட்களிலும் வெளிவர, அது ஒரு மானப் பிரச்சினையாகி, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விட்டாலும் அடுத்த தேர்தலில் ஆட்சி போய்விடும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளி விடப் பட, பிரச்சினை தீர்க்கவே முடியாது என்ற கட்டத்திற்குப் போய் விட்டது தான் இவர்கள் போராட்டத்தால் நாம் கண்ட பலன்.

எனவே இந்த மாதிரி தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவது இவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  அத்தகைய முடிவை விஷால் எடுத்திருக்கிறார், அதை வரவேற்போம்.