Monday, March 11, 2019

இளையராஜா 75: சில லாஜிக்கல் கேள்விகள்

# இளையராஜா 75

இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு ஞாயிறாக மாலை 3 மணிக்கு சன் டிவியில காமிச்சானுங்க.


அடுத்த ஞாயிறன்று மூன்றாம் பாகம் வரும், அதில் ரஹ்மான்-இளையராஜா சந்திப்பு இருக்கும். இந்த சுவராஸ்யமான பகுதியை கிட்டத்தட்ட முழுசாவே நம்மாளுங்க வீடியோ எடுத்துப்போட்டு காமிச்சிட்டாங்க.  பார்த்ததில் நமக்கு குழப்பமும் தீராத சந்தேகங்களுமே மிஞ்சியது.  நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் ரஹ்மான் 500 படங்களுக்கும் மேல் தன்னிடம் பணியாற்றியிருக்கிறார்னு ராஜா சொல்றார். அதை ரஹ்மான் ஆமாம்னு ஒப்புக்கொள்ளாமல், உங்களுடன் ஒரு படத்தில் வேலை செய்வதே 500 படங்களுக்கு வேலை செய்ததற்கு சமம்னு வேற மாதிரி பதிலைச்சொல்லி மழுப்புகிறார்.

"நீ எப்போ என்கிட்டே முதலில் வேலைக்கு சேர்ந்தே" ன்னு ராஜா கேட்கிறார்.

அதுக்கு, "மூன்றாம் பிறையில்"ன்னு சொல்லி பத்து பதினஞ்சு செகண்டு ஓடும் ஒரு இசையை  ரஹ்மான் போட்டு காண்பித்து இதுதான் ராஜா சார் முதலில் தனக்கு குடுத்த வேலைன்னும், அதுக்கப்புறம் "நீ ஸ்கூலுக்குப் போயி படி"ன்னு விரட்டி விட்டுட்டார்ன்னும் சொல்றார்.

அதுக்கடுத்து, புன்னகை மன்னன் படத்துக்குத்தான் திரும்ப வந்ததாக ரஹ்மான் சொல்றார்.  அந்த படத்தில் சில இசைக்குறிப்புகளை கம்ப்யூட்டரில் ஃபீடு செய்யும் வேலையை தன்னிடம் தந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.புன்னகை மன்னன் படம் வந்தது 1986, ரோஜா வெளியானது 1992.  அப்படின்னா ராஜா சொன்ன அந்த 500க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காலகட்டத்தில் வந்த படங்களாகத்தான் இருக்க வேண்டும்.  வாரத்துக்கு ஒரு படம்ன்னாலும் 6 வருஷத்துக்கு 500 படங்கள் வராதே?!

சமீபத்தில் ரஹ்மான் பத்தி சின்னக்குயில் சித்ரா வோட இன்டர்வியு ஒன்னு சமீபத்தில் பார்த்தேன்.  இளையராஜாகிட்ட ஒரு சின்னப்பையன் வேலை பார்த்தார், அவர்கிட்ட "திலீப், அந்த கீ போர்டை எடு, இதை அங்கே வை"  ன்னு ராஜா சார் வேலை சொல்லிக்கிட்டு இருப்பார்.  ரோஜா படத்துக்கு பாடப்போகும்போது தான் , அந்தச் சின்னப்பையன் தான் ரோஜாவின் இசையமைப்பாளர் ரஹ்மான் அப்படின்னு தெரியும்னு சித்ரா சொல்றாங்க.சித்ரா ராஜாவோட ஆஸ்தான பாடகி, 50 % பாட்டை அவங்க தான் பாடுறங்க.  500 படத்துக்கு வேலை செஞ்ச ஒரு இசைக்கலைஞரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்கிற அளவுக்குத்தான் ஞாபகம் இருக்குமா?!

உண்மையில் ரஹ்மான் ராஜாவுக்கு எத்தனை படங்கள் பணியாற்றினார், அது எந்த காலகட்டம்?! மேலும் வைரமுத்துவுக்கு செய்த அதே கொடுமையை ரஹ்மானுக்கும் இளையராஜா செய்தார் என்றும்,  அவர் சில வருடங்கள் யாரிடமும் பணியாற்ற முடியாமல் தவித்தார் என்றும் அரசல் புரசலாக வதந்திகளும் இல்லாமலில்லை.

இது அத்தனைக்கும் ரஹ்மான் வாயை திறக்காமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து விட்டுச் செல்கிறார்.  மொத்தத்தில் இளையராஜாவுக்கு ரஹ்மான் மீது மனதளவில் நல்லபிப்பிராயம் கிடையாது, ரஹ்மானுக்கோ அது ஒரு பொருட்டே கிடையாது, நான் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு செல்கிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கடந்து செல்கிறார்.

உண்மை தான் என்ன?! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Sunday, June 10, 2018

மனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன?


தேதி: 14 நவம்பர் 2013
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார். கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம் வரவில்லை!!
உடனே ராஜேஷ் குமார் 24 மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப் படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம் வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க, வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.
பின்னர், எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார் பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள் பெற்றனர்.
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம் எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச் சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று வந்தனா கேட்டிருக்கிறார்.
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும், PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று திருப்பி அடித்திருக்கின்றனர்.
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம் எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள் கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில் அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு காண்பித்திருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா திரும்ப கிடைக்காது.

Wednesday, January 31, 2018

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து!!

ஒரு ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன. எவரிடமும் கைநீட்ட வேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது. ஆனாலும், அவனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் அதை தான் அடைந்து விட வேண்டும் என்பதுதான் அது.

ஒரு நாள் தன் காடு கழனிகளை காணச் சென்று கொண்டிருந்தான். பயிர் பச்சைகள் செழிப்பாக வளர்ந்திருப்பதை பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு அவன் வீடு திரும்ப ஆரம்பித்தான். அப்பொழுது ராமு என்பவனின் தோட்டத்து வேலி ஓரம் நிறைய பூசணிக்காய்கள் காய்த்திருப்பதை பார்த்தான். தான்ஒரு பூசணிக்காயை எடுத்துச் சென்றால் என்ன என்று எண்ணினான். பூசணிக்காயில் பொரியல், கூட்டு எல்லாம் செய்யலாம் சுவையாக இருக்கும்.

நன்கு விளைந்த ஒரு பூசணிக்காயை பறித்தான் சந்துரு. அது சற்று கனமாக இருந்தது. அதை தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தான் அவன். அதை ராமு பார்த்து விட்டான். பணக்காரன் ஒருவன் திருடுகிறானே எவ்வளவு பாடுபட்டு வளர்த்த பூசணிக்காயை அது சந்தைக்கு கொண்டு போய் விற்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தானே. அக்கம் பக்கத்தாரிடம் எல்லாம் பணக்காரனான சந்துரு. தன் தோட்டத்திலிருந்து ஒரு பூசணிக்காயை திருடிக் கொண்டு போய் விட்டானென்றும், அவனை விசாரித்து பூசணிக்காயை தனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டான். ராமுவும், பணக்காரன் வீட்டிற்குச் சென்று அவனை விசாரிக்க தயாராயினர்.
அவர்கள் வரப்போகிற செய்தி சந்துருவுக்கு எட்டியது. ஊர்க்காரர்கள் வந்து தன்னை விசாரித்து தன் திருட்டு வெளிப்பட்டு விட்டால் என்ன செய்வது? திருட்டுப்பட்டம் கொடுத்து விடுவார்களே... "அதோ பூசணிக்காய். திருடன் போகிறான்! என்று சொல்லி சிரிப்பார்களே?' ஊர்க்காரர்களை எப்படி வசியப்படுத்துவது? சந்துரு யோசித்து அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தான். தவசுப்பிள்ளையை அழைத்து ஆட்டுக்கறி, கோழிக்குருமா, ரசம், பொரியல், பாயாசம் எல்லாம் உடனே தயாரிக்கச் சொன்னான். பெரிய பெரிய நுனி வாழை இலைகளை அறுக்கச் சொன்னான். எல்லாம் "மடமட'வென தயாராகிவிட்டன.
ஊர்க்காரர்கள் ராமுவுடன் வந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்குவதற்கு முன், ""வாங்க! வாங்க! நீங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என் வீட்டுக்கு வந்திருப்பது என் பாக்கியம். உங்களை எல்லாம் என் வீட்டில் ஒரு நாள் சாப்பிடச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று விருந்தும் தயாராகிவிட்டது. முதலில் நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்கள்,'' என்று சொல்லி எல்லாரையும் சாப்பிட உட்கார வைத்துவிட்டான். சமையல்காரரும், வேலைக்காரர்களும் ஒன்றின்மேல் ஒன்றாக உணவு வகைகளை கொண்டு வந்து இவைகள் நிறைய பறிமாறி அவர்களை பேச முடியாமல் திக்கு முக்காடச் செய்து விட்டனர். இவ்வளவு வகையான உணவுப் பொருள்களை சாப்பிட்டிராத அவர்கள் மூக்குபிடிக்க சாப்பிட்டனர். அப்பொழுது அவர்களுக்கு இவ்வளவு செலவழித்து பிரமாதமாக சமையல் செய்து இவ்வளவு பேர்களுக்கு சாப்பாடு போடுகிற தயாளமனம் படைத்த சந்துரு நாலணா பெறாத பூசணிக்காயை திருடி விட்டதாக சொல்கிறான். அவன் பேச்சை நம்பிக் கொண்டு நாம் விசாரித்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள கூடாது என்று எண்ணினர். அதனால் பணக்காரனை விசாரிக்காமலேயே சாப்பிட்ட சந்தோஷத்தில் போய்விட்டனர்.

அவர்களுக்கு சோற்றைப் போட்டு பூசணிக்காய் திருட்டை எப்படி சந்துரு மறைத்தார். அன்றிலிருந்துதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி என்ற பழமொழி உருவானது.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அஞ்சு லட்சம் வழங்கினார் வைரமுத்து.-செய்தி.
(இந்த செய்திக்கும் மேலே சொன்ன கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!)

Monday, March 20, 2017

இளையராஜா-எஸ்.பி.பி: அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

இளையராஜா எஸ்.பி.பி மேடைக் கச்சேரிகளுக்கு தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றதும் சிலர் இதுதான் சாக்கு என்று இளையராஜாவின் ஆணவத்தைப் பார்த்தீர்களா என்று தங்கள் வன்மத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். சிலர் புத்திசாலித்தனமாக இளையராஜா சம்பளம் வாங்கிக் கொண்டுதானே இசையமைத்தார், அதற்கு மேல் அவருக்கு என்ன உரிமை என்கின்றனர். இவற்றைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.


பொதுவாக அறிவுசார் சொத்துரிமை மூன்று வகைப்படும். முதல் வகை பேடண்ட்(காப்புரிமை). இது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. இரண்டாவது காப்பிரைட் (பதிவுரிமை ). இது கலைப்படைப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. மூன்றாவது டிரேட்மார்க் (வணிக முத்திரை ).இது வணிகரீதியாக வெற்றிபெற்ற பொருட்களின் முத்திரை, பெயரைப் பாதுகாப்பதற்கற்காக.
இளையராஜா சம்பளம் வாங்கியது படைப்பை உருவாக்க அவர் செலவிட்ட நேரத்திற்கான கூலி.ஆனால் அவரின் படைப்புத்திறனுக்கான பொருளாதார அங்கீகாரம்தான் காப்பிரைட் உரிமையின் கீழ் அவர் கேட்கும் ராயல்டி.பொதுவாக அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களின்படி இசைக்கான காப்பிரைட்டில் முதல் போட்ட தயாரிப்பாளர், படைப்புத் திறனைக் காட்டிய இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கே உரிமையுண்டு. பாடகர்கள் தங்கள் குரல்வளத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர கற்பனையிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்குவதில்லை. ஆகவே அவர்களுக்குச் சம்பளம் மட்டும்தான்.

சில இசையமைப்பாளர்கள் தங்கள் காப்பிரைட்
உரிமையைத் தயாரிப்பாளரிடமே விற்று விடுவார்கள். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு தன் பெரும்பாலான பாடல்களின் காப்பிரைட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று அறிவித்தார். ஆகவே வணிகரீதியாக தன் பாடல்களை யார் பயன்படுத்தினாலும் அதற்குத் தனக்கான ராயல்டியை கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் வரும் ராயல்டியில் தயாரிப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் உரிய பங்கை அளிப்பேன் என்றார். ரஹ்மான் ஒருமுறை இளையராஜா தன் காப்பிரைட் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் சில தீவுகளை வாங்கியிருப்பார் என்றார்.

உடனே சிலர் ராஜா கூட மற்ற இசையமைப்பாளர்கள் சிலரின் மெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா என்கிறார்கள். அது வேறு வழக்கு. அது போன்ற பாடல்களின் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடலுக்கும், பிரதி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாடலுக்கும் குறைந்தபட்சம் 50% ஒற்றுமை இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.

சிலர் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இளையராஜா பாரதியார் பாடல்கள், தியாகராஜ கீர்த்தனைகள், திருவாசகம் பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்தாரா என்று உளறுகிறார்கள். பாரதியார் படைப்புகள்தான் உலகத்திலேயே நாட்டுடமை ஆக்கப்பட்ட முதல் படைப்பாக இருக்கவேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் வேங்கடாசலபதி கூறுகிறார். 1949 ஆம் ஆண்டு பாரதியாரின் உறவினர்களுக்கு மதராஸ் மாகாண அரசு சன்மானம் வழங்கி இதைச் செய்தது. பதிவுரிமை வைத்திருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதை அப்போதைய மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கேட்டுக் கொண்டதால் பல போராட்டங்களுக்குப் பிறகு உரிமைத்தொகை ஏதும் கோராமல் விட்டுக் கொடுத்தார். சில உரிமைகள் பாரதியாரின் சகோதர விஸ்வநாத ஐயரிடம் இருந்தது. நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை யார் வேண்டுமானாலும் உரிமைத்தொகை கொடுக்காமல் பயன்படுத்தலாம்.

அடுத்தது நூல்கள், இசை, பாடல்கள் போன்றவற்றுக்கான பதிவுரிமை அதன் ஆசிரியர், இசையமைப்பாளர் போன்றோரின் காலத்திற்குப்பின் அறுபது ஆண்டுகள் வரை மட்டுமே. அதன் பின் அது தானாகவே நாட்டுடைமையாகி விடும். வாரிசுகள் யாராவது உரிமை கோரினால் அரசாங்கம் அதற்கான சன்மானம் அளிக்க வேண்டும். இதன்படிப் பார்த்தால் தியாகராஜர், மாணிக்கவாசகர் போன்றவர்களின் படைப்புகள் அறிவிக்கப்படாமலே நாட்டுடைமையாகி விட்டது. அவர்கள் வாரிசு என்று யாராவது உரிமை கோரினால் அரசாங்கத்திடம்தான் உரிமை கோர வேண்டும்.
 
நன்றி: 


Thursday, August 11, 2016

ஒலிம்பிக் தங்கப் பதக்கம், வியப்பான தகவல்கள்

ரியோ ஒலிம்பிக் ஆரம்பிச்சிடுச்சு, அமெரிக்காவும் சைனாவும் பதக்கப் பட்டியலில் யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, இந்தியா காரன் ஒரு தங்க மெடலாச்சும் வராதான்னு ஏக்கத்தோடு பார்த்துகிட்டு இருக்கான்.  வருஷம் முழுக்க கிரிக்கெட்டே கதின்னு டிவி முன்னாடி உட்கார்ந்தே இருந்தா எங்கிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்கும், நாச்சியப்பன் கடையில வாங்கினாத்தான் உண்டு!!

பள்ளியில் படிக்கும் போது நான் லண்டன் பிபிசி தமிழ் சேவையை தவறாமல் கேட்பதுண்டு.  ஒருநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பற்றி சொன்னார்கள்.  எனக்கு அது வியப்பாகவும் விந்தையாகவும் இருந்தது!!   அப்படி என்ன சொன்னார்கள்....???  நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஒலிம்பிக்கில் வழங்கப் படும் தங்கப் பதக்கம் என்பது தங்கத்தால் செய்யப் பட்டது இல்லையாம், வெறும் தங்க முலாம் பூசப் பட்டதாம்!!  (இதை நண்பர்களிடம் சொல்லப் போய் அவர்கள் யாரும் நம்பாமல் என்னை உதைக்க வந்தது வேறு கதை!!).

2016 ஆம் கனக்குப் படி ஒரு தங்க மெடலின் மொத்த எடை 500 கிராம், ஒரு ஆளுக்கு அரை கிலோ தங்கமாகவே கொடுக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் தங்க மெடல்களுக்கே சரியாகி விடும்!!  இது தாங்காதுடான்னு யோசிச்ச ஒலிம்பிக் கமிட்டீ 1912-ம் ஆண்டுடன் தங்கப் பதக்கத்தை தங்கமாகவே கொடுப்பதை நிறுத்திவிட்டு, தங்க முலாம் பூசிய மெடல்களையே  பரிசளிக்க பயன்படுத்தி வருகிறதாம்.  இதில் தங்கம் வெறும் 6 கிராம் மட்டுமே, மீதம் 494 கிராம் தூய வெள்ளி !!  அப்போ முலாம் பூசிய பதக்கத்துக்கா மனுஷன் இந்த அடி அடிச்சிக்கிறான்?  பதக்கத்தின் மதிப்பு அதை செய்யப் பட்ட பொருளால் அல்ல, சொல்லப் போனால் அதன் மதிப்பு கண்ணால் தெரியும் பொருளாக இல்லை, அது அதற்கும் மேலே........!!

Tuesday, February 23, 2016

அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.

அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.
அடுத்து என்ன தி.மு.க தானே ???...
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்"
எது வேண்டும்? என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை.
எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்-
எரிச்சல் தாங்கவே முடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.
அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
நாமேதான்.
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும் தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?


[ஃபேஸ் புக்கில் படித்தது] கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான்.  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன்.  இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?  அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!

Thursday, February 4, 2016

கெயில் - இளிச்சவாயன் தமிழன் மட்டுமே............

கெயில் எரிவாயு குழாய் கேரளாவிலும், கர்நாடகாவிலும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலை ஓரங்களின் வழியாக கொண்டு செல்லப் படும்.  தமிழகத்தில் மட்டும் அது ஆயிரக்கணக்கான் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும்.

இதற்காக நிலங்கள் கையகப் படுத்தப் படும், அங்கிருக்கும் மரங்கள் பிடுங்கி வீசப் படும், நஷ்ட ஈடு அடிமாட்டு விலைக்கு தரப் படும், இருபுறம் 6 மீட்டருக்கு எந்த விவசாயமும் செய்யக் கூடாது, எக்காரணத்தைக் கொண்டு குழாய் வெடித்தாலும் அந்த விவசாயியே [ஒரு வேலை உயிர் தப்பியிருந்தால்] குற்றவாளியாக்கப் படுவார்.
தமிழக அரசு இதை எதிர்த்து வழக்கு போட்டது, ஆனால் உப்பு சப்பில்லாத வழக்கறிஞர்கள் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  வரைவுத் திட்டம் போடும்போது தமிழக அரசு சும்மா இருந்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  அப்பாவி மக்களை நம்ப வைத்து முதுகில் குத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
விவாசாயிகளுக்கு ஆதரவாக எந்த கட்சியும் இல்லை.  காரணம் அதனால் எத்தனை வாக்குகளை இழந்து விடப் போகிறோம் என்பதே.  தமிழக மக்கள் அனாதையாக சாக வேண்டியது தான், யாரும் காக்கப் போவதில்லை.