Thursday, April 10, 2014

மக்களை பரதேசிகளாக்கும் விஞ்ஞான வளர்ச்சி

வணக்கம் மக்கள்ஸ்!!

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்"- இது தமிழகத்தின் சில அறிவாளி கட்சிகளின் பஞ்ச் டயலாக் என்பது பலருக்கும் தெரிந்ததே. அவன் முன்னேற்றத்துக்கு இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.  மக்களை தெனாலி இராமன் குதிரை மாதிரியே வைத்திருப்பது தான் இவர்களது இராஜ தந்திரமே!!  ஏனெனில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தாலோ பொருளாதார தன்னிறைவு பெற்றாலோ இவர்களால் அரசியல் நடத்த முடியாது.

ஒரு உதாரணத்துக்கு காக்கா கூட்டத்தைப் பார்த்தோம்னா அது எல்லாத்துக்கும் உணவு, இருப்பிடம், துணை, வாரிசுகள் என அனைத்தும் கிடைக்கும்.  நாலு பணக்கார காக்கா, பத்து ஏழை கக்கா,  ரெண்டு பட்டினி கிடக்கும் கக்கா, துணை இல்லாமல் தவிக்கும் காக்கா அதற்குக் காரணம் வசதியின்மை என்றெல்லாம் பார்க்கவே முடியாது.  இத்தனைக்கும் காக்காவுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதன்  சிந்திக்கத் தெரிந்தவன், ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவு படைத்தவன் அது.... இது......... என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறான்.  இத்தனை அறிவு இருப்பவன் கஷ்டப் படாமல் சவுகரியாமாக அல்லவா இருக்க வேண்டும்?    ஆனாலும் பிழைப்புக்காக இவன் படும் பாடு காக்கையை விட மோசமாக இருக்கிறதே?  காரணம் என்ன? 

அறிவு இருந்தால் மட்டும் போதாது, அதை சரியாகப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் அதைச் செய்தானா?

 இன்றைக்கு உலகப் பொருளாதாரம் குறித்து ஒரு காணொளியைப் பார்த்தேன்.  அதில் சில பாயிண்டுகள் நம்மை கிறுகிறுக்க வைத்து விட்டன.  இதோ அவை உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும் வைக்கிறேன்.


உலகில் கிடைக்கும் பணம் தோராயமாக 223 ட்ரில்லியன் டாலர்கள்.  [ட்ரில்லியன்அப்படின்னா என்ன?  அப்படின்னெல்லாம் கேள்வி கேட்டு நம்மளை ஆந்தை மாதிரி முழிக்க விடப் படாது, அது எதுவோ இருந்துட்டு போகட்டும், இப்போ அது முக்கியமில்லை!!]

மொத்த உலகச் சொத்தில் 43% பணம்,  மக்கள் தொகையில் வெறும் 1% மட்டுமேயுள்ள பண முதலைகள் கைவசத்தில்  உள்ளதாம்.

பாதிப் பணம் [50%] எனக் கணக்கிட்டால் அது 2% பேரிடமும், அப்படியே அதிகரித்து 94% பணம் யாரிடம் என்று கணக்கிட்டால் அது 20% பேரிடம் உள்ளதாம்.

அப்படின்னா, உலக மக்கள் தொகையில் 80% பேரிடம் உள்ள பணம் 6% மட்டுமே.


இதில் இன்னொரு கணக்கு:  உலகின் கடைசி முன்னூறு கோடி எழைகளிடமுள்ள மொத்த பணத்திற்குச் சமமான பணத்தை டாப் முன்னூறு பணக்காரர்கள் வைத்திருக்கிறார்களாம்!!



அதுசரி, நாம சொத்து சேர்த்திட்டோம், கஷ்டப்படுற ஏழைகளைப் பார்த்து சும்மா இருக்கலாமா?  மனுஷன்னா அடுத்தவங்களுக்கு உதவனும்யா.  இப்படி யோசித்த பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 130 பில்லியன் அமரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கி வருகின்றன.

[1 பில்லியன் அமரிக்க டாலர் இன்றைய மதிப்பில் 6000 கோடி ரூபாய்.
1000 பில்லியன் =1 டிரில்லியன்].

அப்படிப் பார்த்தால் 130 பில்லியன் அமரிக்க டாலர் [ஏழு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய்!!] இது நல்ல தொகைதான் அல்லவா?  ஆனாலும் ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமான மேற்சொன்ன பாகுபாடு விகிதம் என்னவோ அதிரிக்கிறதே தவிர இறங்கி சமமாவதாகத் தெரியவே இல்லை!!   என்னதான் நடக்கிறது?



நம்மூரில், ஒருபுறம் இலவசம் குடுத்து இன்னொரு பக்கம் அதற்கும் பல மடங்கு மேலாக சாராய கடைகள் மூலம் திரும்பப் பிடுங்கிக் கொள்வதைப் போல, ஒரு பக்கம் நிதியுதவின்னு குடுத்தாலும் குடுத்த காசுக்கு வட்டி அது இதுன்னு வெவ்வேறு வழிகளில் ஏழை நாடுகளிடம் இருந்து பணக்கார நாடுகள் பலமடங்கு அதிகமாக கறந்து விடுகின்றன.

கொடுத்தது 130 பில்லியன், திரும்பப் பிடுங்குவது 2 டிரில்லியன் [2000 பில்லியன்!!].


உலக வரலாற்றின் கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட ஏழை- பணக்கார நாடுகளுக்கிடையேயான ஏற்றத் தாழ்வு அவ்வளவு அதிகமாக இருந்ததில்லை.

 200 வருடங்களுக்கு முன்னர்,

பணக்கார நாடுகள் சொத்து =  ஏழை நாடுகள் போல மூன்று மடங்கு மட்டுமே. 


1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.

இந்த காலகட்டத்தை அப்படியே அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு படுத்திப் பாருங்க.  அது வளர வளர பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைப் போல பல மடங்கு பெருப்பதும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது.  இந்த மாதிரி இயலாதவனை கட்டி வச்சு பிடுங்குவது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்பது எனது கருத்து.


Tuesday, April 8, 2014

கிரிக்கெட் இரசிகர்களின் கோபம் சரியா?

வணக்கம் மக்கள்ஸ்,

ரெண்டு நாளா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீடு ரசிகர்களால் தாக்கப் பட்டது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  மேலும் T20 இறுதியாட்டத்தில் அவர் ஆட்டம் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.  அவர் தான் தோல்விக்கே காரணம் என்பது போலவும் பேசப் படுகிறது, ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஏன்னா நாம்தான் ஒரு மேட்ச் கூட பார்க்கவே இல்லையே!!  இத்தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் யுவராஜ் சிங் வீட்டை தாக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறார்கள்.  மேலும், கிரிக்கெட் வீரர் ஒருவரது வீடு தாக்கப் பட்டது இது முதன் முறையல்ல. முன்னர் தோனிக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது.  அது மட்டுமல்ல, வெவ்வேறு கால கட்டங்களில் இரசிகர்கள் தங்களது கோபங்களை வெவ்வேறு விதங்களில் வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள்.  இதில் கொல்கத்தா இரசிகர்கள் நம்பர் ஒன் எனலாம்.  ஈடன் கார்டனில் நான் இனி ஒருபோதும் விளையாடவே மாட்டேன் என்று கவாஸ்கர் சொல்லுமளவுக்கெல்லாம் இரசிகர்கள் நடத்தை இருந்திருக்கிறது.

கிரிக்கெட் இரசிகர்களின் இந்தக் கோபம் நியாயம் தானா?  இதை நாம் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.  

"எத்தனையோ மேட்ச் ஜெயிச்சிருக்கோமே, இப்போ தோத்திட்டோம்,  after all இது ஒரு விளையாட்டு தானே, அதைப் போய் பெரிசா எடுத்துக்கலாமா?  இதே இலங்கை கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை இறுதிப் போட்டி வரை வந்த பின்னர் தோற்றுப் போய் நாடு திரும்பியிருக்கிறது, அங்கே இரசிகர்கள் இப்படியெல்லாம் ஆர்பாட்டம் செய்யவில்லை, இந்திய இரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும்?"  என்றெல்லாம் ஊடகங்களில் ஒப்பாரி வைக்கப் படுகிறது.  அதுசரி, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாழ்வில் அதிக பட்சம் எவ்வளவு சம்பாதிப்பார்கள்,  அதே இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் வருவாய் என்ன என்பது குறித்து மட்டும் யாரும் பேசமாட்டார்கள்!!

இவர்களுக்கெல்லாம் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.  இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான கிரிக்கெட் ஆட்டம் கபில்தேவோடு போய்விட்டது.  அவர் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெயித்ததன் பலனை அதில் ஆடிய வீரர்கள் அனுபவிக்க வில்லை,  அவர்கள் பலருக்கு சொந்த வீடு கூட இல்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு,  நேற்றைக்கு வந்த "விரட்டிய கோழி", "ரொட்டி குருமா" எல்லாம் கோடியில் புரள்கிறது.  அதுமட்டுமல்ல போகிற இடமெல்லாம் இவர்களுடன் பைக்கில் சுற்றுவதற்கு ஒரு சினிமாக்காரி கிடைக்கிறாள்.  சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருத்தர் நூற்றுக் கணக்கான கோடி சொத்து சேர்க்க முடிகிறது, இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிற்கும் இது சாத்தியமே இல்லை.  ஹாக்கி வீரர்கள் ஆசிய கோப்பை வென்றால் கிடைப்பது தலா மூன்று இலட்சம் மட்டுமே.


அப்படியானால் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே எப்படி பணம் கூரையைப் பிச்சுகிட்டு கொட்டுது?  ஏன்னா இவர்கள் எஞ்சின் ஆயில், கார் டயர், மைசூர் சாண்டல் சோப்பு என சொரி, படைக்கு விற்கும் லோஷனைத் தவிர மற்ற அனைத்து நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் விளம்பர தூதுவராக ஆகிறார்கள், அவர்களது விளம்பரங்களில் தோன்ற கோடிக்கணக்கில் பெறுகிறார்கள்.  இவர்களுக்கு காசு கொட்டுகிறது.

அதுசரி, விளம்பரதாரர் இவர்களுக்கு சும்மா குடுத்திடுவானா?  இவனுங்க கோலாக்கள் எதையும் குடிப்பதில்லை, குடித்தால் கிரிக்கெட் ஆடமுடியாது,  ஆனால் இவர்கள் விளம்பரங்களில் சொல்கிறார்களே என்று கிரிக்கெட் ரசிகன் கோலாவை உள்ளே தள்ளுகிறான், அது அவனுடைய உடல்நலனுக்கு விளைவிக்கும் தீங்கை உணராமலேயே.  இவர்களை விளம்பரத்தில் போட்டால் கழுதை மூத்திரமும் பாட்டிலில் அடைத்து விற்று ஊருபட்ட காசு அல்ல முடியும் என்பதால் தானே அவன் காசு குடுக்கிறான்?

எனவே கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு கிடைக்கும் பணமும் புகழும் அந்தஸ்தும் கடைக்கோடி இரசிகன் "தொல்லை"காட்சி முன்னர் உட்கார்ந்து வெறித்தனமாக எல்லா உருப்படாத கிரிக்கெட் மேட்சுகளையும் பார்ப்பதால் தான்.  அவன் அந்த ஆட்டத்தை சீரியசாக எடுத்துக் கொண்டதால் தான் கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு பணம் கொட்டுகிறது.

இவர்கள் சொல்வது போல அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருந்தானேயானால் நம்மைப் போல அவனும் வெறும் 8 மணிச் செய்தியில் பார்த்து விட்டு அப்போதே மறந்திருப்பான்.  கிரிக்கெட் ஆட்டம் பார்க்கப் படுவதில்லை என்ற தகவல் விளம்பரதாரருக்குப் போகும், அவன் எல்லா ஸ்பான்சர்ஷிப்பையும் பிடுங்கி விடுவான், இன்றைக்கு கோடியில் புரளும் கிரிக்கெட் ஆட்டக் காரன் மற்ற எல்லா விளையாட்டு வீரர்களையும் போலவே ஆண்டியாகவே இருக்க வேண்டியிருந்திருக்கும்.

கிரிக்கெட் வாரியத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் பண வருவாயை பெற்றுத் தந்தவன் இந்த இரசிகன்.

பல வருடங்களாக மேட்ச் பிக்சிங் செய்து நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து கிரிக்கெட் மேல் நம்பிக்கையை இழக்காது உங்கள் வருவாயை காத்து வந்தவன் இந்த இரசிகன்.

வருடக் கணக்கில் ஓரிலக்க எண்ணிலேயே ரன் குவித்தவனையும் பொறுத்துக் கொண்டு அவனை நூறாவது சதம் அடிக்க வைத்து அழகு பார்த்தவன் இந்த இரசிகன்.

வீட்டில் புலி, வெளியில் எங்கே போனாலும் எலி என்று வெளிநாட்டு ஆட்டங்கள் பலவற்றில் பல்லு பகுடு உடைந்து வந்தாலும் அடுத்த ஆட்டத்திலேயே அதையெல்லாம் மறந்து இந்தியா........இந்தியா........ என்று கோஷம் போட்டு ஆதரித்தவன் இந்த இரசிகன்.

தொலைக்காட்சியில் ஆட்டத்தின் நடுவே எப்போதாவது விளம்பரம் என்பது போய் ஒவ்வொரு ஓவருக்கும் முடிவில் என்றாகி, தற்போது ஒவ்வொரு பந்துக்கும் நடுவே விளம்பரம் என்றாலும், பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கண்ணில் ரெண்டு ஓட்டையை விட்டு விட்டு உடம்பு பூராவும் விளம்பரங்களை ஒட்டிக் கொண்டு ஒரு விளம்பர வாகனம் போல ஆட வந்தாலும் ஏற்றுக் கொண்டவன் இந்த இரசிகன்.  கிரிக்கெட் மைதானத்தின் ஒவ்வொரு  அங்கமும் விளம்பரம், வர்ணனையாளர் வார்த்தைகளில் விளம்பரம்.  4,6 அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் அவற்றுக்கெல்லாம் விளம்பரக் கம்பனி பேரு வச்சதையும் பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கிரிக்கெட் ஆட்டக் காரனையும், கிரிக்கெட் வாரியத்தையும் கோடியில் புரள வைத்திருப்பது ரசிகனின் கிரிக்கெட் மீதான அளவிலடங்கா பற்றுதலேயாகும்.  அதுவே  நீங்கள் சொதப்பும்  போதும், உப்பு சப்பில்லாத ஏனோ தானோ ஆட்டம் ஆடி தோற்கும் போதும் கோபமாக மாறி வெளிப்படுகிறது.  இந்த கோபத்துக்கும், உங்கள் பணம் புகழ் இரண்டுக்கும்  மூல காரணம் ஒன்றே.  எனவே கிரிக்கெட் இரசிகனின் மூலம் கிடைத்த கோடி கணக்கான பணம் வேண்டும், ஆனால் அவன் கோபப் படக்கூடாது என்பதில் துளியும் நியாயம் இல்லை, காரணம் இரண்டும் தோன்றுவது ஒரே மூலத்தில், எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று சாத்தியமேயில்லை.  அவனது கோபத்தை வெளிப் படுத்திய விதம் தவறாக இருக்கலாம், ஆனால் அது தான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் பதிலுக்கு அவனை கோலா குடிக்கச் சொல்லி அவனது உடல் நலத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்துவரும்  இச்செயல் மாபெரும் நம்பிக்கைத் துரோகம்  என்பதை கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், கிரிக்கெட் வாரியமும் மறக்க வேண்டாம்.



Friday, April 4, 2014

மான் கராத்தே...... படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனம்!!

வணக்கம் மக்கள்ஸ்!!


சற்று முன்னர் தான் கவிதை வீதி சௌந்தர் எழுதிய மான் கராத்தே சினிமா விமர்சனம் 

படித்தேன்.  அவர் கதை என்ன என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நூறு வருஷத்துக்கு முன்னாடி சார்ளி சாப்ளின் நடித்த "சிட்டி லைட்ஸ்" என்ற படத்தின் ஞாபகம் தான் ப்ளாஷ் ஆகியது. 





அந்தப் படத்தில் கண் பார்வையற்ற தனது காதலியின் ஆபரேஷன் செலவுக்கான பணத்தை சம்பாதிக்க குத்துச் சண்டையில் பங்கேற்க சார்ளி சாப்ளின் ஒப்புக் கொண்டு முரட்டு வீரர்களுடன் அந்த உடம்போடே போட்டியிட்டு சிலரைத் தோற்கடிப்பார். ஆனால் இறுதியில் ஒருவரிடம் தோற்றுப் போவார்.
 



இருப்பினும் இரவில் குடிபோதையில் மட்டுமே இவரை நினைவு கொண்டும், பகலில் மறந்து விட்டும் இருக்கும் ஒரு பணக்கார நண்பர் மூலம் பணத்தை பெற்று காதலிக்குத் தந்து விட்டு, அதே நண்பரின் கொலைக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குச் சென்று விடுவார்.  காதலிக்கு இவர் முகம் தெரியாது. கிளைமேக்சில் இவர் தான் தனக்கு கண் பார்வை கிடைக்கச் செய்தவர் என்று தெரிய வரும் காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாதவர் யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தின் கண்ணு தெரியாத காட்சி கன்சப்டை எடுத்து  இயக்குனர் எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தை எடுத்தாரு.

கிளைமாக்ஸ்

இப்போ குத்துச் சண்டை காட்சிகள் "மான் கராத்தே" ஆகியிருக்கு!!

 ஏ.ஆர். முருகதாஸ் அப்படின்னாலே ஆங்கிலப் பட காப்பிதானே!!  ஹி ...........ஹி ...........ஹி ...........

சிட்டி லைட்ஸ் முழுப் படம் 

Tuesday, April 1, 2014

இதை எந்த மெய்ஞானி சொன்னார்? சொல்லுங்க ஜோதிஜி...........!!

வணக்கம் மக்கள்ஸ், 

திரு.ஜோதிஜி, திருப்பூர்  ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? என்ற பெயரில் தனது ஆன்மீகப் பயண தொடரின்  இறுதிக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.   "ஆத்தீகம், நாத்தீகம் ஆகிய ரெண்டு டீமும் வேணாம், கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாதா?" என்று முன்னர் கேட்ட இவர் இதில் நாத்தீகம், நவீன அறிவியல், திருமூலர் அப்படின்னு எல்லா டீமுக்கும் விளையாடி கோல் போட்டிருக்கார், கட்டுரையை முழுசா படிச்சும் இவர் எந்த டீமுக்குத்தான்யா ஒரிஜினலா விளையாடுராருன்னு கண்டுபிடிக்க முடியலை!!

இவர் இக்கட்டுரையில் சொன்னது யாவும் பொதுவாக தி.க.வினர் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து வீசும்  குற்றச் சாட்டுகளே, புதிது ஏதும் இல்லை.


அறிவியலால் கிடைத்த சாதனங்களால் தான் 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதே  புரிந்தது என்கிறார்.  ஐயா, அறிவியல் சில வசதிகளைக் கொடுத்துள்ளது, ஆனால் அதற்கான விலையோ எக்கச் சக்கம்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவது புத்திசாலித் தனமோ?  கேரளத்திலிருந்து   தமிழகம் வழியாக கர்நாடகம்  செல்லும் எரிவாயுக்  குழாய் நம்மை எப்பாடு படுத்தும், கர்நாடகத்தில் தூய்மையாக வரும்  காவிரி தமிழகம் வந்தததும் எப்படி சின்னா பின்னமாகிறது என்பது குறித்தெல்லாம் அவர் அலசி ஆராய்ந்து தள்ளியுள்ள ஜோதிஜி அவர்களே, அறிவியல் கண்டுபிடிப்புகள் சுற்றுப் புறச் சூழலை எந்த அளவுக்கு நாசப் படுத்தியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

கணினி வந்த பின்னர் தான் நாம் எழுதுவது காக்கப் படுகிறதா?  எப்படி திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் நமக்குக் கிடைத்தன?

பகுத்தறிவுவாதி என்று தங்களை சொல்லிக் கொண்டு திரியும் கூட்டத்தை வைத்து அவர்கள் சொன்னது தான் பகுத்தறிவு என்று யாராவது நினைத்தால் மன்னிக்கணும்.  இவர்கள் போல ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் வேறு யாரும் இல்லை, பகுத்தறிவு என்ன சாதா அறிவு கூட இவர்களுக்கு குறைவு, கேள்வி கேட்காமல் ஓடும்  ஆட்டு மந்தைகள்,  போலிச் சாமியார்களுக்கு எப்படி அடிப்படை இல்லையே அதே போல இவர்கள் கொள்கைக்கும் அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ எந்த அடிப்படையும் கிடையாது. பகுத்தறிவுக்கும் இந்த கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகுத்தறிவு என்பதை  கெட்ட வார்த்தையாக்கிய பெருமை இந்த பகுத்தறியாவதிகளையே சாரும்.

ஒருவர் இறை நம்பியாளராக வேண்டுமா இல்லையா என்பது அவரவரது விருப்பம், யாரும் திணிக்க முடியாது.  கடவுள் உங்களை யூனிபார்ம்  போடச் சொல்லாவிட்டாலும், சடங்குகளைப் பின்பற்றச் சொல்லா விட்டாலும், எதாவது ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வதும், சில சடங்குகளைப் பின் பற்றுவதும் யாராலும் தவிர்க்க இயலாது.


அடுத்து தன் கட்டுரையில் ஆங்காங்கே முத்து முத்தா தத்துவத்தையும் பொழிஞ்சிருக்காரு!!


"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.

நம் கேள்வி:  இதற்க்கு ஆதாரம் என்ன?  எந்தெந்த மதங்களில் எங்கே இவை சொல்லப் பட்டுள்ளன?

"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட.  

 நம் கேள்வி: இந்த சூத்திரத்தை எழுதியது யார்?  ஆதாரம் என்ன?


"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். 



எந்த சித்தர் சொன்னார், எந்த ஞானி சொன்னார், எங்கே சொன்னார்? மனது தெய்வமா?  [மண்டையை பிச்சிக்க வைக்குதே!].  அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை என்ன?  பொய் என்ன?


மேற்கண்ட தத்துவங்களைப் படித்ததும் ஏனோ எனக்கு நீயா ....... நானா.......  வில் பார்த்த காட்சி ஒன்று நினைவில் வந்தோடியது!!   நானும் அதில் வருவது மாதிரி, "எந்த மதத் தத்துவம் சொல்லிச்சு,  எந்த நூல் சொல்லிச்சு?" என்று திரும்பத் திரும்ப கேட்டாலும் ஜோதிஜியிடமிருந்து பதில் வருமா என்று தெரியவில்லை!!   இது பொதுவாக காணப் படுவதுதான்.  தத்துவமாகப் பொழிவார்கள், ஐயா இதை எங்கே படித்தீர்கள், சொன்னது யார்? என்று  கேட்டால் பதில்  கிடைக்காது. எல்லாம் அந்தரத்தில் காற்றிலேயே தொங்கிக் கொண்டிருக்கும், எதற்கும் அடிப்படையே இருக்காது.


Saturday, March 29, 2014

எருமை மாடு நாத்தீகத் தலைவரான கதை

வணக்கம் மக்கல்ஸ்!!

தகுஸ்தான் என்ற நாட்டில் ஒரு சிற்பி இருந்தாரு, சிலைகளை வடிப்பதில் வல்லவர்.  ஒருநாள் அவரிடம் ஒரு எருமை மாட்டின் சிலை வேண்டும் என்று ஒருத்தர் வந்தார்,  அதைக் கொண்டு போய் ஒரு பூங்காவில் வைக்க வேண்டும், மாணவர்கள் ஏறி விளையாட நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு என்ன விலை என்று சிற்பியிடம் கேட்டார்.   " ஒரு லட்சம் ஆகும்" என்றார் சிற்பி.   வந்தவர் ஐம்பதாயிரம் முன்பணம் கொடுத்துவிட்டு மீதியை சிலையைப் பெறும்போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று விடை பெற்றுச் சென்றார்.  சிற்பியும் அந்தப் பணத்தை வைத்து நல்ல கிரானைட் கல்லாக வாங்கி செவ்வனே என்று சிலையைச் செய்து முடித்தார். சிலை பிரமாதமாக வந்தது.

 

சிலையை வடிக்கச் சொன்னவரை தொடர்புகொண்டு, "சிலை தயார் வந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று தகவல் தெரிவித்தார் சிற்பி.  அதற்க்கு அவர், "ஐயா, அந்தச் சிலைக்கு வேண்டிய நிதியுதவி வசூல் சரியாகப் போகவில்லை, பணம் தருகிறேன் என்று சொன்னவர்கள் எல்லோரும் ரிவர்ஸ் கியர் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள், தயவு செய்து நீங்கள் வேறு யாருக்காவது விற்று விடுங்கள், நீங்கள் எனக்கு பணம் எதுவும் திருப்பித் தரத் தேவையில்லை" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்து  விட்டார்.

இதைக் கேட்டதும் சிற்பி சற்றே கதிகலங்கிப் போனார்.  இத்தனை நாள் உழைப்பு பாழாய்ப் போனதே என்று. அப்போது ஒரு பகுத்தறிவுவாதி அங்கே வந்தார்.   

பகுத்தறிவுவாதி என்றால் என்ன என்பதை நாம் இங்கே கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும்.  யார் என்ன சொன்னாலும் கேட்கப் படாது, நீயே சிந்தி.... [ அய்யய்யோ,என்ன மூக்கை சிந்தப் போறீங்க..?!!  சிந்தி என்றால் சிந்தனைங்க......  நீங்க ஒன்னு!!]  அப்படி சிந்திச்சு உனக்கே சரின்னு பட்டால்  ஏத்துக்கொள். [ஒருவேளை சிந்திக்கிறவன் கேனை என்றால் அவன் எப்படி சரியா சிந்திப்பான்?!   இப்படியெல்லாம் புத்திசாலித் தனமா கொக்கி போடப் படாது.   தலைவன் சொன்னா அப்படியே ஏத்துக்கணும்.  ......  ஹி ...........ஹி ...........ஹி ...........   இப்பத்தானே, சொந்தமா சிந்தின்னு  சொன்னீங்க, அதுக்குள்ள தலைவன் சொன்னதை அப்படியே ஏத்துக்கணுமா?  குழப்புதே......  நாம்ம கொள்கையே அப்படித்தான்.   ...........ஹி ...........ஹி ...........  ]

நாம் ரொம்ப விலகிப்   போயிட்டோம். சரி, வந்த பகுத்தறிவு என்ன சொல்லிச்சு?  "ஐயா, எங்க தலைவருக்கு சிலை வைக்கணும்,  எவ்வளவு ஆகும் சொல்லுங்க?"

சிற்பி  சொன்னார், " ஒரு லட்சம்".

"இதெல்லாம் ஜுஜுபி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றதுக்கு ஊரைச் சுத்தி  இளிச்சவா பயலுவ நிறைய பேர்  இருக்கானுவ,  இந்தாங்க அட்வான்ஸ் ஐம்பதாயிரம், சிலையை முடிங்க வந்து மிச்சத்த குடுத்துட்டு வாங்கிகிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியது பகுத்தறிவு.

சிற்பி  அந்த சிலைக்குத் தேவையான கல்லுக்கு ஆர்டர் குடுக்க போனை எடுத்தார்.

அப்போது அவருடைய உதவியாளர் "ஒரு நிமிஷம்" என்றார்.

"என்ன?" என்றார் சிற்பி.

"ஐயா, ஒரு  யோசனை.  எதுக்கு வீணா பணத்தை செலவு  செய்யணும்,இருக்கிறதை வச்சே சமாளிக்கலாமே?" என்றார் உதவியாளர்.

"என்னடா சொல்றே, இருந்த பணத்தைஎல்லாம்தான் அந்த எருமை மாட்டுச் சிலை வடிப்பதற்க்கே போச்சேடா, வேறென்ன இருக்கு நம்மகிட்ட?" என்று புரியாமல் வினவினார் சிற்பி.

"அது தான் ஐயா இப்போ நம்ம பிரச்சினையை தீர்க்கப் போவுது!!""

"எப்படிடா?"  சிற்பிக்கு இன்னமும்  விளங்கவில்லை.

"அந்த எருமைச் சிலையை நிமிர்த்தி நிக்க வச்சு லைட்டா டிங்கரிங் பண்ணினா போதும்,   இப்ப வந்திருக்கிற ஆர்டரை முடிச்சிடலாம்,  போட்ட பணத்தை எடுத்திடலாம்,  என் யோசனை எப்பூடி..........ஹி ...ஹி ...ஹி ...." என  சிரித்தார்  உதவியாளர்.

"சபாஷ்டா.......உனக்கு உடம்பெல்லாம் மூளைடா"  என்று குதூகலித்தார் சிற்பி.  விரைந்து சிலையை மாற்றியமைத்து பகுத்தறிவுக்கு தெரியப் படுத்தினர். 



சிலையைப் பார்த்த பகுத்தறிவுக்கு ரொம்ப  சந்தோசம்,  நாடு முழுக்க 3,99,999  [நாலு லட்சத்துக்கு ஒன்னு தான் கம்மி!!] சிலைகள்  இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியா எதுவும்  இல்லை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தது பகுத்தறிவு.  குஷியோடு பணத்தை செட்டில் செய்துவிட்டு முப்பது ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து சிலையை நகர்த்திக் கொண்டு போனது. தகுஸ்தான் நாட்டின்  பிரதான கடற்கரையில் அந்த சிலை நிறுவப்பட்டது.


 


தகுஸ்தான் நாட்டின் பகுத்தறிவுக் கட்சியின் தலைவர் கீரைமணிக்கு  சிலை நன்றாக வந்ததில் ஏக மகிழ்ச்சி.  தலைவனின் பிறந்த நாளையே சிலை திறப்புக்கு தெரிவு செய்தார்.  தலைவன் பிறந்த நாள் அன்று திறந்தால் தான் தலைவன் சிலை பிரதிஷ்டை ஆகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். வாசனையுள்ள ரோஜா பூக்களால் தொடுக்கப் பட்ட பெரிய பெரிய மாலைகளோடு வந்து சேருங்கள் என்று வாழ்வில் ஒருபோதும் மூளையைப் பயன்படுத்தாத தொண்டர்களுக்கு உத்தரவு போட்டார்.  மாலை போட்டதும் தலைவனின் சிலை வலதுபுறமும் இடதுபுறமும் தலையைத் திருப்பி, மூச்சை இழுத்து தோளிலுள்ள பூக்களை முகர்ந்து பார்க்கும் என்பதில் கீரை மணிக்கு அசையாத நம்பிக்கை.   இது நான்கு லட்சமாவது சிலை என்று திறப்புவிழாவில் பூரித்தார் கீரைமணி.  இதை நிறுவ எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு பணம் வந்தது என்ற லிஸ்டையும் வாசித்தார்.  மொத்தம் பத்து லட்சம் செலவு என்று கணக்கு காண்பித்தார்.  இந்த பணத்தையெல்லாம் தகுஸ்தான் நாட்டின் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து வீணடிக்கலாம் என்ற பிற்போக்கு சிந்தனையை சாடி தனது உரையை முடித்தார் கீரைமணி.


அதன் பின்னர் ஊரில் இருக்கும் காக்கா எல்லாம் வந்து மாதக் கணக்கில் அந்த சிலை மீதே கக்கா போனது.  அதைப் பார்க்கும் போது தலைவனின் தலையில் பாலையும் தயிரையும் கலந்து ஊற்றி அபிஷேகம் நடப்பது போல கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  எப்போதாவது ஒருநாள் நகர சுத்தீகரிப்பு தொழிலாளி ஒருத்தர் வந்து தனது வேலைக்கு வைத்திருக்கும் துடைப்பம், பிரஷ், பினாயில் போன்ற உபகரணங்களை வைத்தே சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்.  சிலையின் முகத்தினை பிரஷால் துடைக்கும்போது மட்டும் தலைவர் சிலை, உவ்வே........ என்று குமட்டுவதை அவர் அவ்வப்போது கவனிக்கத் தவறவில்லை.


இந்த நிகழ்வு பற்றி "எல்லாம் தெரிந்த எல்லப்பன் " பதிவர் திரு.மிதிமாறன் அவர்களிடம் வாசகர்கள் கேள்விகளைக் கேட்டனர்.  [எப்பேர்பட்ட சூரனுக்கும் ஒன்றிரண்டு துறைகளைப் பற்றி மட்டுமே பதிலளிக்க முடியும், ஆனால் இந்த எல்லப்பனால் ஆட்டுப் புளுக்கையில் இருந்து அமரிக்கா வரைக்கும் எதைப் பற்றி கேட்டாலும் பதில்களை  வாரி வாரி வழங்க முடியும்.]

கேள்வி:  கோவில் சிலை வெறும் கல்லு, அதற்க்கு மாலை மரியாதை செலுத்துவது மூடத்தனம் என்றால் உங்க தலைவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் பகுத்தறிவா?

மிதிமாறன் பதில்:  "சாதாரண சிலைக்கு மாலை போட்டா அது கல்லு மாதிரிதான் நிக்கும், அதுக்கு ஒன்னும் விளங்காது.  மனிதனா வாழ்ந்து மண்டையைப் போட்ட ஒருத்தருக்கு தாராளமா சிலையை வைக்கலாம், தப்பேயில்லை.  ஏன்னா அந்த சிலைக்கு  போடுவது ரோஜா மாலை என்பதும், அது வாசனையானது என்பதும் நன்றாகவே தெரியும்,  மாலையை நுகர்ந்து பார்க்கும் அகமகிழும், இது தான்டா பகுத்தறிவு"

என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார் எல்லாம் பகுத்து அறிந்த தெரிந்த அறிவாளி.

இவ்வாறாக வருடத்தில் ஒருநாள் ரோஜா மாலைகளால் சூட்டப் பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு மற்ற நாட்களில் காக்காவின் கக்கா அபிஷேகத்தை வாங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது அந்த எருமை மாட்டுச் சிலை.




Friday, March 28, 2014

பொதுவாக எந்த விஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது

பொதுவாக எந்தவிஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது-














Wednesday, March 26, 2014

ஆன்மீகம் என்பது யாதெனில்? -திருப்பூர் ஜோதிஜிக்குப் பதில்........

வணக்கம் மக்கள்ஸ்!!

வாழ்க்கையில் நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறோம், சிலவற்றை  நாமே தீர்கிறோம், அதே சமயம் பல பிரச்சினைகளுக்கு இது சாத்தியமாக இருப்பதில்லை.  ஒரு வாராமா  நெஞ்சில வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால், "காலம் தாமதிக்காமல் போய் நல்ல டாக்டரா பாரு" என்று தான் சொல்கிறோமே தவிர நாமே மருந்து கடைக்குப் போய் ஏதாவது ரெண்டு மாத்திரைகளை வாங்கி உள்ளே தள்ளிவிட்டால் சரியாகிவிடும் என விட்டு விடுவதில்லை.  வீடு கட்ட நிலம் வாங்க வேண்டுமென்றால் இடத்துக்குரிய ஆவணங்களை ஒரு தேர்ந்த வழக்கறிஞரிடம் காட்டி அவரது கருத்தை கேட்டறிந்தே முடிவெடுக்கிறோம்.  இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அது நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை, நமக்குத் தெரியாத நாம் அறிந்திராத விஷயங்கள் எண்ணற்றவை உண்டு, மேலும் ஒரு துறை பற்றிய தகவல்களைப் பெற வேண்டுமானால் அந்தத் துறையில் தேர்ந்த வல்லுனர்களை அணுக வேண்டும்.



இதை நாம் எல்லா இடத்திலும் பின்பற்றித்தான் வருகிறோம்.  ஆனால் ஆன்மிகம், இறைவன் என்று வந்து விட்டால் மட்டும் நாம் மனதுக்குள் நினைப்பது இவைதான்:  ஆன்மிகம் குறித்து எனக்கே எல்லாம் தெரியும், வேறு யாரையும் நான் யோசனை கேட்க வேண்டியதில்லை,  வேண்டுமென்றால் மற்ற எல்லோரும் என்னிடம் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.  இப்படியெல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை, நாம் ஒவ்வொருவருமே நினைக்கிறோம்,  அதன் விளைவு பின்வரும் கேள்விகள் எழுகின்றன!!  இவற்றை திரு.ஜோதிஜி, திருப்பூர் தனது ஆன்மீகம் என்பது யாதெனில்?  என்ற பதிவில் கேட்டிருக்கிறார்.  ஜோதிஜி அடக்கமானவர் என்றாலும், மனித இயல்பு வேறு ஆயிற்றே!!


ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 



மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 



கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 



மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, இறைவன் என்று ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கான விடையை அறிவியல் கூட இன்னமும் கூறா விட்டாலும்,  தாங்களாகவே "கடவுள் இல்லை" என்று முந்திரி கொட்டையாக  நாத்தீகர்கள் வழங்கிய நாட்டமை தீர்ப்பிற்கும் அடிப்படை நாம் மேலே சொன்ன அதே காரணங்கள் தான்!!

இன்னும் சிலர், இந்த நினைப்பை தம்மோடு நிறுத்திக் கொள்வதில்லை, மற்றவர்களிடமும் போய், "நீ யாரிடமும் ஆன்மிகம் குறித்து எதையும் கேட்கத் தேவையில்லை, நீயே ரூம் போட்டு யோசி, எல்லாம் புரிந்துவிடும்"  என்று போதிக்க ஆரம்பித்து விடுவதும் நடக்கிறது.  அப்படியே ஒருவேளை எனக்கே எல்லாம் தெரியும் என்றால் "நான் யோசித்தாலே எல்லாம் புரியும்" என்பது மட்டும் ஏன் எனக்குத் தெரியாமல் போனது?!!   அதை இன்னொருவர் வந்து எனக்கு சொல்லி புரிய  வைக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?  அது மட்டுமல்ல, இன்னொருவருக்கு நாம் யோசனை சொல்லும் போதே அவருக்கு அந்த விஷயம் குறித்து தெரியவில்லை என்று நாமே ஒப்புக் கொள்கிறோம் என்று தானே அர்த்தம்.  பின்னர், உனக்கே எல்லாம் தெரியும் என்பது எப்படி சரியாகும்?  இவையெல்லாம் லாஜிக் ஓட்டைகள்.  சரி இப்போது ஜோதிஜியின் கேள்விகளுக்கு வருவோம்.

ஆத்திகம், நாத்திகம் என்ற கொள்கையைத் தாண்டி ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் நம்மால் வாழ முடியுமா? 

ஏன் முடியாது?  நிச்சயம் முடியும், ஆடு, மாடுகள் அப்படித்தான் வாழ்கின்றன, மேலும் 99.99% மனிதன் அப்படித்தான் வாழ்ந்து முடிக்கிறான்.

மத அடையாளங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் வாழ்வதால் என்ன பலன்? என்ன பிரச்சனை? 

 
அடையாளங்கள் சம்பிரதாயங்கள் இல்லாமல் உலகில் எதுவுமே  நடப்பதில்லை.   பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சீருடை எதற்கு?  ஏன் ஒரு வக்கீல் கோவணம் கட்டிக் கொண்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது?  போலீசுக்கு காக்கிச் சட்டை எதற்கு?  நர்ஸ் ஏன் வெள்ளை நிற உடை அணிய வேண்டும்?  அடையாளங்களே கூடாது என்று சொல்லும் நாத்தீகர்கள் கூட கறுப்புச் சொக்காயைப் போட்டுக் கொண்டு கூட்டமாக நிற்ப்பது எதற்கு? ஒரு ஆண் சேலை கட்டிக் கொண்டு போனால் தான் என்ன?  இந்தக் கேள்விகள்  எதற்காவது பதில் தர முடியுமா?   ஆக அடையாளங்கள் என்பவை தவிர்க்க இயலாதவை.
 
"உனக்கு ஏன்டா குடுமி, உனக்கு ஏன்டா பூணூல், உனக்கு ஏன்டா தொப்பி, லுங்கி" என்று எங்க கூட்டத்துக்கு கேள்விதான் கேட்கத் தெரியும், பதிலுக்கு "உங்களுக்கு எதுக்கு கறுப்புச் சொக்கா, வெயிலில் போனா குளு குளுன்னு இருக்குமுன்னா?"- ன்னு பதிலுக்கு கேள்வி கேட்டுடாதீங்க தம்பி, ஏன்னா எங்களுக்கு கேட்க மட்டும் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது!!

ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழா என்றால் கூட அங்கே சம்பிரதாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பட்டம் வாங்குபவர்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து சென்று எங்கு நின்று வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்து பட்டம் பெற்று வெளியே வரும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்று அதற்கு முதல் நாளே தனி பயிற்சியளிக்கப் படும்.  செனட் தலைவர், "இந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதை நீங்கள் அமோதிக்கிறீர்களா" என்று செனட் குழுவைப் பார்த்து கேட்பார், "ஆம் அமோதிக்கிறோம்"  என்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  இதெல்லாம் அங்கே உட்கார்ந்து பார்க்கும் போது கோமாளித் தனமாகத் தோன்றும்.  ஆனாலும் சம்பிரதாயங்களை நீக்க முடியுமா?  



நம் நாட்டில் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்கும் போதும் சம்பிரதாயங்கள் இருக்கத் தானே செய்கிறது?  சம்பிரதாயங்கள் கூடாது என்று சொல்லும் நாத்தீகன்,  மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல் என சம்பிரதாயம் எதுவும் இல்லாமல், நேராக பெண்ணை அவள் வீட்டிலிருந்து அழைத்துப் போய் குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவாரா என்ன?
ஆக எந்த செயலிலும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சம்பிரதாயங்கள் சடங்குகள் இருக்கத்தான் செய்கின்றன, இவற்றைத் தவிர்க்க இயலாது. 


கடவுள் என்பவர் யார்? அவர் கொள்கை தான் என்ன? 


இங்கதான் நாம் பதிவின் ஆரம்பித்தில் சொன்ன விஷயங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது. 
முதலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.   எல்லா பிரச்சினைகளுக்கும் வல்லுனர்களை நாடிய நீங்கள் இதற்கும் வல்லுனர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை நாடி கேள்விகள் கேட்டு பதிலை அறிந்து கொள்ள வேண்டும்.


மனிதர்களின் தற்போதைய ஆன்மீகத்தின் அளவுகோல் தான் என்ன? 

நாத்தீகனை எடுத்துக் கொண்டால் பிரியாணியும் அதற்க்கு தயிர் பச்சடியும் நன்றாக இருக்கும் இதற்கும் மேல் வேறு எதுவும் இல்லை என்பான். [இதை நான் சொல்லலீங்க, கண்ணதாசன் சொல்லியிருக்கார்!!].  நாட்டிலுள்ள ஒவ்வொரு கள்ளச் சாமியாருடைய சீடர்களுக்கும் அந்தந்த  சாமியார் தான் கடவுள்.  அதற்கும் மேல் எதையாச்சும் சொன்னால் நம்மை அவரது சீடர்கள் காலி செய்து விடுவார்கள்.  இதைத் தவிர்த்து ஊர் ஊருக்கு ஒரு சாமி மீசை அரிவாளோட நின்னுகிட்டு இருக்கும்.  இவற்றில் எந்த கும்பலோட அளவுகோளைச் சொல்வது?  எனவே இன்னொரு மனிதன் என்ன அளவுகோல் வைத்திருக்கிறான் என்று ஆராய்வதில் பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையான ஆன்மீகத்திற்கு என்றென்றைக்குமான அளவுகோல் என்ன என்று கேட்பதே சரியான கேள்வியாக இருக்கும் என்பது எனது கருத்து!!