இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவர் அமுதவன் சாரிடமிருந்து ஒரு மெயில்- பெங்களூரில் நடக்கவிருக்கும் அவரது மகள் திருமணத்திற்கு வருகை தரும்படி அழைப்பு!! இது ஒரு கௌரவம் என்பதால் நிச்சயம் வருகிறோம் என உறுதி செய்து பதில் அனுப்பினேன். பின்னர் தான் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அமுதவன் சார் தெரிவித்தார். மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் இருப்பார்கள் என்றும் அதற்கு தகுந்தவாறு பிளான் செய்து வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார். [அவர்கள் வருகை திருமணத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்துகொண்டோம்!!]
சிவகுமார் குடும்பத்தினர் என்றால் சூர்யாவும் வரக்கூடும் என நினைத்தோம், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. தங்கமணி சூர்யாவின் தீவிர ரசிகை, அவர் இந்தச் செய்தியைக் கேட்டதும் பயங்கர குஷியானார். எனது குழந்தைகள் இரண்டும் சூர்யா அங்கிளைப் பார்க்கப் போகிறோம் என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். [அதுங்களுக்கு எப்படி தெரிஞ்சதோ, அதுங்க சொன்ன மாதிரியே சூர்யாவும் வந்து கலந்து கொண்டார்!!] திருமண நாள் வரவேற்புக்கு ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பி மாலை 6:30-க்கு மண்டபத்தை அடைந்தோம். அங்கே யாரையும் தெரியாததால் கொஞ்ச நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தோம்.
திடீரென தங்கமணி, "என்னங்க, இவங்க தாங்க சிவகுமாரோட மிஸஸ்" என உற்சாகமான குரலில் கூறவும், சட்டென திரும்பிப் பார்த்தேன், திருமதி லக்ஷ்மி சிவகுமார், மணமக்களை சந்தித்து விட்டு கீழே சென்று கொண்டிருந்தார். [அவரை நான் அதற்க்கு முன் பார்த்ததில்லை!!] "வாங்க நாமும் கீழே போகலாம்" என தர தரவென தங்கமணி நம்மை இழுத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்க்குச் சென்றார். அங்கே திருமதி லக்ஷ்மி சிவகுமார் மற்றும் சிலர் நின்று கொண்டிருக்க, தங்கமணி நேராக அவரிடம் சென்று "நீங்க சூர்யாவோட அம்மாதானே" என்று கேட்க, அவரும் ஆமாம் என்று ஆமோதிக்க, தங்கமணி தன்னையும் குழந்தைகளையும் அறிமுகப் படுத்திக் கொண்டார்!! நான் சற்று எட்டவே நின்று கொண்டிருந்தேன். தங்கமணி கிட்ட ஓடி வந்து,
"என்னங்க அமுதவன் சார் உங்களுக்குத் தானே ஃ பிரண்டு, யார்னு கண்டுபுடிச்சு ஹலோ சொல்லுங்க" என்றார்.
நான் அவரது படத்தை அவரது வலைப்பூவில் பார்த்திருக்கிறேன், தற்போது லக்ஷ்மி சிவகுமார் முன்னர் நின்று பேசிக் கொண்டிருந்தார். வி.ஐ.பி யுடன் பேச வேறு யாரால் முடியும் !! இதுதான் அமுதவன் சாராக இருக்க வேண்டும் என 90% உறுதி செய்துகொண்டு நெருங்கிச் சென்று கையை நீட்டி,
"ஹெலோ சார் என்றேன்", அவரும் கை குலுக்க, "நான் ஜெயதேவ்"- என்றேன்.
முகத்தில் மகிழ்ச்சியுடன் "ஓ ........ அப்படியா!! ரொம்ப சந்தோசம் சார் !!" என்றவர் உடனே திருமதி லக்ஷ்மி சிவகுமார் அவர்களிடம்,
"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'" என அறிமுகப் படுத்தியதும்,நமக்கு லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது!! அதைக் கேட்ட அவரும், " அப்படியா!" என புன்னகைத்தார். உடனே தங்கமணி கொண்டு வந்திருந்த கேமராவை என்னிடம் தந்து புகைப் படம் எடுக்கச் சொன்னார், ஒன்றிரண்டை கிளிக்கினேன். பின்னால் மின்விளக்கு இருந்ததால் படம் சரியாக வரவில்லை, எனவே எதிர் திசையில் நின்றால் பரவாயில்லை எனவும், மறுப்பேதும் சொல்லாமல் எங்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார் !!
 |
| திருமதி லஷ்மி சிவகுமார், பக்கத்தில் இருப்பவர் அவரது மகள், சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் என தங்கமணி சொன்னார், பின்னூட்டத்தில் ஒரு நண்பரும் இதை உறுதி படுத்தியிருக்கிறார். [ இணையத்தில் கிடைக்கும் அவரது திருமண படத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு!!] |
அவர் கிளம்பிச் சென்ற பின்னர், அவ்வளவு பிசியான நேரத்திலும், அமுதவன் சார் நான் எழுதியவற்றில் சிலதை நினைவு கூர்ந்து அவற்றைப் பாராட்டிய போது, நம்மை இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று வியப்பாய் இருந்தது! தங்கமணியின் சமையல் குறித்த பதிவு நன்றாக இருந்ததாக பதிவை பெயருடன் சொல்லி அசத்தினார்!! பலரது பதிவுகளை படிப்பதோடு, என்னைப் போல சாதாரண பதிவர்களுக்கும் அவர் தரும் முக்கியத்துவம் இவற்றை பார்க்கும்போது, "அமுதவன் சார், யு ஆர் ரியலி கிரேட் உங்களுக்கு சல்யூட்".
 |
| சிவகுமாருடன் அமுதவன் சார்!! |
சற்று நேரத்துக்கெல்லாம் சிவகுமார், பாடலாசிரியர் அறிவுமதி, ராமராஜன் காட்டன் அதிபர் என பல முக்கிய புள்ளிகள் வந்து சேர்ந்தனர். அமுதவன் சார் அனைவரையும் வரவேற்று மணமக்களை அறிமுகப் படுத்தி பேசினார். மணமகள் எலிசபெத் மில்கியோ TCS -ல் பணிபுரிவதாகவும், திருமணம் முடிந்தது பணி நிமித்தமாக அமரிக்காவில் ஹியூஸ்டன் நகரில் குடியேறப் போவதாகவும் சொன்னார். மணமகன் திரு.ஜான்கிளாட்ஸன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னர் NDTV யில் கேமராமேன் ஆகப் பணி புரிந்து வந்ததாகவும், தற்போது Bloomberg TV என்னும் அமரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பணி புரிவதாகவும் தெரிவித்தார். அவரை அடுத்து சிவகுமார் பேசினார்.
 |
| சிவக்குமார் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார், பின்னால் அமுதவன் சார். |
சிவகுமார் பேசும்போது, 31 ஆண்டுகளுக்கு முன்னர் அமுதவன் சார்
திருமணத்துக்கு இதே பெங்களூருக்கு கோயம்பத்தூரில் இருந்து பல வி.ஐ .பி
களுடன் வந்து கலந்து கொண்டதாகச் சொன்னார். கண்ணதாசனின் பாடல், "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல............... எனத் தொடங்கி, நீ இல்லாமல் நானும் நானல்ல........ என முடித்து, "நீங்கள் தலை முடி முழுதும் நரைத்து கிழமானாலும்
இந்த பாடலுக்கேற்றவாறு வாழுங்கள்" என வாழ்த்தி, "இன்னும் சில நிமிடங்களில்
சூர்யா வந்துவிடுவார், தள்ளு முள்ளு செய்யாமல் ஓரிரு படங்களை எடுத்துக்
கொண்டு எங்களை விட்டால் நாங்கள் சரியான நேரத்துக்கு விமான நிலையத்தை அடைவோம்" என்ற வேண்டுகோளுடன் கீழே இறங்கினார்.

அடுத்த சில நிமிடங்களுக்கு நுழைவு வாயிலில் அனைவரும் விழி வைத்துக் காத்திருக்க, பரிவாரங்களோடு வந்து சேர்த்தார் சூர்யா!! தங்கமணிக்கு குதூகலம் தாங்கவில்லை. மேடைக்கு மற்றவர்கள் வரவேண்டாம் என தடை இருந்தாலும் தங்கமணி எதையும் கண்டுகொள்ளவில்லை, எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு மேடைக்கே போய் மணமக்கள், திருமண வீட்டார் பலர் என சூழ்ந்திருந்த கூட்டத்தில் நுழைந்து, " ஹெலோ சார், நான் உங்க ரசிகை" எனச் சொல்லி கை குலுக்கினார், உங்களுடன் படமெடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, அதற்க்கு சிரித்துக் கொண்டே "சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், முதலில் திருமண வீட்டார் படமெடுத்துக் கொள்ளட்டும், பின்னர் நீங்களும் எடுத்துக் கொள்ளலாம்" என அவர் சொல்ல, நடுவில் ஒரு கருப்பு பூனை பாய்ந்து நீங்க யார் எனக் கேட்க, அவரை சமாதானப் படுத்தி பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என தங்கமணி எதிர்பார்க்க................ ஹி ..........ஹி ..........ஹி .......... சூர்யா கிளம்பிச் சென்று விட்டார்!!
இருந்தாலும், சில படங்களை நான் கீழேயே நின்று எடுத்திருந்தேன். தன்னுடைய நட்சத்திரத்தின் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்ளா விட்டாலும், அதே பிரேமில் தோன்றுவதே போதும் என தங்கமணிக்கு மகிழ்ச்சி. சுவையான திருமண விருந்தை உண்டு வீடு திரும்பினோம்.
தினமும், "புத்திகெட்ட மனுஷா தண்டத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்துகிட்டு பதிவு ...பதிவுன்னு போட்டு நேரத்தை வீனடிக்கிரியே, இதனால பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா? நீ சாதிச்சது என்ன?" அப்படின்னு கரிச்சுக் கொட்டிக் கொண்டிருந்த தங்கமணி இனிமே அப்படி ஒருபோதும் கேட்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்!! ஏன்னா சென்னையில் பிறந்திருதும் நிறைவேறாத அவரது வாழ்நாள் லட்சியம் பதிவுலகம் மூலம் நிறைவேறிடிச்சே!! பதிவர்களுக்கு அமுதவன் சார் தரும் முக்கியத்துவம் குறித்து என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!! நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் அவரைப் பின் பற்றலாம்!! புதுமணத் தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு............!!