Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, November 17, 2015

கூந்தல் கருப்பு....... ஆஹா........ குங்குமம் சிவப்பு ஓஹோ....... பாடலின் உள்ளர்த்தம்.

கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ...........





பரிசு படத்தில் வரும் இப்பாடலுக்கு எம்ஜிஆரும் சாவித்திரியும் வாயசைத்திருப்பார்கள்.

கூந்தல் கருப்பு என்று எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போதே, அடேயப்பா உலகமகா கண்டுபிடிப்புடா என்று அன்றைய இரசிகர்கள் நக்கலடித்திருக்கிறார்கள்.  மேலோட்டாமாகப் பார்த்தால் அதுவும் சரிதானே என்று தோன்றும்.

யாருக்கைய்யா கூந்தல் கருப்புன்னும், குங்குமம் சிவப்புன்னும்  தெரியாது?  ஆனாலும் இதற்கு என்ன முக்கியத்துவம் அதை ஏன் எம்ஜிஆர் பாட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விடை தெரியாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.


இன்னொரு பாடல், படம் : விவசாயி

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

சரி இந்தப் பாடலிலும் " கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்" என்ற வரியை இருமுறை அழுத்தமாக டிஎம்எஸ் பாடுவார்.  இதில் வரும் கருப்பு சிவப்பு எதற்கு?

இன்னமும் புரியவில்லையா?  ஹி ...........ஹி ...........ஹி ...........

சரி அடுத்த பத்திக்கு போவோமா?

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
[மீண்டும்] பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
.....................
இங்கே அப்படியே பாட்டு வேகம் குறைஞ்சு நின்றே போய்விடும்.  அப்புறம் மெதுவாக ஆரம்பிப்பார்.
அது....................

[இங்கே ஒரு சிறிய இடைவெளிவிட்டு பின்னர் அதே பழைய ஜோரில்!!]
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

இப்பவாச்சும் புரிஞ்சதா?!!  புரிஞ்சவங்க புரிஞ்சிக்குங்க, புரியாதவங்க விட்டிடுங்க.

நன்றி:  திண்டுக்கல் ஐ. லியோனி.

Monday, September 2, 2013

டாக்டர்......... சுவரு அசையுது........!!

வணக்கம் மக்கள்ஸ்,
 இன்று Facebook கில் உலாத்திக் கொண்டிருக்கும் போது சில சுவராஸ்யமான விஷயங்கள் தென்பட்டன.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
 
இந்தப் படத்தைப் பாருங்கள், சுவர் அலை போல அசைகிறதா!! நன்றி: Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
நம்மாளுங்க ஹைக்கூ எழுதுவாங்க, [எழுதி படிக்கிறவங்களை சாகடிப்பாங்க என்பது வேறு விஷயம்].  ஒரே வரியை மூணு வரியாக மடக்கி மடக்கி எழுதினால் அது ஹைக்கூ என்ற ரீதியில் தான் பலர் எழுதுகின்றனர்.  [சிலர் நாலஞ்சு வரியும் கூட எழுதிட்டு இதுவும் ஹைக்கூன்னு கணக்கு கண்பிப்பாங்க!!]  ஹைக்கூ எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும்.  அந்த வகையில் அழகான சில ஹைக்கூக்கள் இதோ:
 
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..

* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
ஹைக்கூக்களுக்கு நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்


என்ன கற்பனை..........!!  
நன்றி:
Ha ha ha, SEMA Comedy Maama SEMA Comedy. . .
 
  இறுதியாக:  சரி தூக்கம் வருது, தூக்கம் பத்திய ஒரு டிப்.
காய்கறிகள்

காய்கறிகளில் ஊட்டசசத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கலாம். ஆனால் இரவில் நன்கு தூங்க நினைத்தால், ஒருசில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். உதாரணமாக, வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.
 மேலும் படிக்க: நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்
மீண்டும் சந்திப்போம்.............!! 
வணக்கம் மக்கள்ஸ்!!



Wednesday, August 28, 2013

மைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்!!

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம்.  [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம்.   நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு.  அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும்.  எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள்.  பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை.  நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள்.  அதை இங்கே தருகிறோம்.  அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!!  [என்னது கேட்க மாட்டீங்களா?!  அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!]  அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!

 ------------------------------------------------------------------------------------
 மைதா தயாரிப்பு முறை:

முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. 

         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது. 

               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். 

              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல. 
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.  [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!].  மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில்  பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.-  ஹி ....... ஹி ....... ஹி .......  உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள், 
தாது எண்ணெய்கள், 
சுவையூட்டிகள், 
 பதனப்பொருட்கள், 
வெள்ளை சீனி, 
சாக்கரின், 
அஜினோமோட்டோ 
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம்.  எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.  கீழே உள்ள படத்தை பாருங்க.

அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய்,  ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி?  விளங்கலையே?


 

Friday, May 10, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்கள்ஸ்,

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 அந்த கூட்டு பெருங்காயம் .....

 இந்த கூட்டு பெருங்காயம் .....

 

அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

 

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ........... 

 

படத்திற்கு நன்றி: ஆயுர்வேத மருத்துவம்


இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

இதைப் பத்தி ஒரு  பதிவை பார்த்தேன், நான் ரசித்தவை லிஸ்டில் போடலாம்னு நினைச்சேன், பிரச்சினையின் தீவிரம் காரணமாக லிங்கை தனிப் பதிவாக போட முடிவு செய்தேன்.  இதை தெரிந்தவர்கள் எல்லோருடனும் மெயில் மூலமாகவோ, அல்லது வாய்மொழி மூலமாகவோ கூட பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

Monday, May 6, 2013

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.

வணக்கம் மக்கள்ஸ்!!


எங்க அலுவலகத்தில் ஒரு மலையாளி.  தினமும் காலையில் வீட்டிலேயே சிற்றூண்டியை முடித்துவிடுவான்.  போதுமான அளவுக்கு  உண்டாலும், அலுவலகத்திற்கு வந்து கேண்டீனில் அன்றைக்கு பரோட்டாவும், கொண்டைக்கடலை குருமாவும் இருக்கிறது என்றால் போதும், அவனால் நண்பர்கள் சாப்பிடுவதை  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அதையும் ஒரு பிளேட் வாங்கி வெட்டுவான்.  பசிக்காக அல்ல, ருசிக்காக!!  மைதாவில் செய்யப்படும் இந்த பரோட்டாவின் ருசிக்காக  நம்மில் பலர் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.  இது மட்டுமல்ல, பேக்கரியில் தயாராகும் கேக்குகள், ப்ரெட், பிஸ்கட்டுகள் முதலான பல எண்ணற்ற அயிட்டங்களில் மைதாவே முதலிடம் வகிக்கறது.


நாட்டில் அதிக அளவு பரோட்டா சாப்பிடும் கேரளத்தில் நீரிழிவு நோயும் கோரத் தாண்டவமாடுகிறது.  இதை உணர்ந்த அவர்கள் தற்போது மைதா எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.  ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் மைதா தடை செய்யப் பட்டுள்ளது.



கோதுமையை அரைத்து கிடைக்கும் மாவில் செய்யும் சப்பாத்தி உடலுக்கு நல்லது, ஆனால், அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவில் அப்படி என்னதான் பிரச்சினை?  முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது,  கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை,  அதுவே  முழுமையான [wholesome food] ஆகும்.  கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து  நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது.  அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது.  அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.  இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர்.  இதன் விளைவு என்ன?  கிட்னி அடிவாங்கும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள்  வரும்.  எனவே மைதா, அது சம்பத்தப் பட்ட பொருட்களை அறவே நீக்குவது நலம் முழு கோதுமை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


மேலும் விபரங்களுக்கு:
தினகரன் செய்தி: பரோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம். மைதாவுக்கு மயங்காதீர்கள்.
தினகரன் செய்தி: பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்? 
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? [கழுகு]
WHITE_DEAD_ON_YOUR_PLATE [பவர் பாயின்ட்]


இதற்கடுத்து நாம் தினமும் உண்ணும் அரிசியைப் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது.  நாம்  நாவை மட்டுமல்ல கண்ணையும் திருப்திப் படுத்த உணவு உன்ன நினைக்கிறோம் விளைவு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் அரிசி இருக்க வேண்டும் என நினைத்து அதை நன்றாகப் பாலிஷ் செய்து வாங்கி உண்கிறோம்.  உண்மையில் பிரவுன் அரிசி எனப்படும், சிவப்பு நிறத்தில் உள்ள கைக்குத்தல் அரிசியே நமக்கு நல்லது.  தற்போது மெஷீனில் அரைத்தாலும், கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசி கிடைக்கிறது.  ஆனால் ருசிக்கு மயங்கிய நாம் அதற்க்கு மாறுவதில்லை.  பாலிஷ் செய்த அரிசியும் மேலே சொன்னபடி முழுமையான உணவு இல்லை.  வெள்ளை அரிசியையே  உண்டு பழகிய நமக்கு சிவப்பரிசிக்கு மாறும் போது ஜீரணப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் பழக்கிக் கொள்வது நல்லது.




எல்லாவற்றுக்கும் மேலாக மேற்ச்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி என்று சொல்லுமளவுக்கு நம் உடல் நலத்தை அழிக்கும் ஒரு அரக்கன் இருக்கிறான்.  நம்மில் பலருக்கும் இவன் அரக்கன் தான் என்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறோம்.  உங்களால் கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியாது, அவன் பெயர்:  வெள்ளைச் சர்க்கரை!!  இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும்.  எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன்.  எப்படி?  அச்சு வெல்லத்தில், சர்க்கரையும் அதை ஜீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சேர்த்து கிடைக்கின்றன.   ஆனால், வெள்ளைச் சர்க்கரையில் சர்க்கரை மட்டுமே உள்ளது, அதைச் சீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் ஆகப் பிரிக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய்விடுகிறது. நாம் சர்க்கரையை உண்ணும் பொது அதைச் சீரணிக்க நம் உடலின்  தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் ரிசர்வில் இருந்து சரக்கரையைச் சீரணிக்க செலவிடப் படுகிறது.   இவ்வாறு நாளடைவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான விட்டமின்களும், மினரல்களும் தொடர்ந்து இழந்த பின்னர் உடல் ஆரோக்கியம் படிப்படியாகச் சரிய ஆரம்பிக்கறது, இது எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது.  சர்க்கரை வியாதி உட்பட எல்லாம் எளிதில் வந்து விடும்.    சர்க்கரை வியாதிக்கு சர்க்கரை உண்ணுதல் நேரடியாக காரணமாகா விட்டாலும் மறைமுகமாக காரணமாகிறது.

அப்படியென்றால் இனிப்பே இல்லாத வாழ்க்கையா?  அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா?   மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம்  போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன?  இந்த வெள்ளை சர்க்கரை கருமத்தை நீக்கி விட்டால் மேற்கண்ட உடல் நலத்துக்குத் தேவையான பழங்களை வாழ்நாள் முழுவதும் உண்ணலாம் இல்லாவிட்டால், ஆங்கில மருத்துவன் வருவான் மேற்கண்ட பழங்களை உண்ணாதே என்பான் அந்த கூமுட்டையனுக்குத் தெரியாது இவை நமக்காகவே படைக்கப் பட்டவை என்று, அப்புறம் சர்க்கரை மாத்திரையைத் தின்னச் சொல்லுவான் அதுவும் போதாதுன்னு பென்சிலீனை ஊசியால் ஏற்றுவான், கடைசியாக கை, கால் விரல்களை வெட்டிப் போடுவான், குஷ்ட ரோகியைப் போல ஆக வேண்டும்.  தேவையா இது?!!



 


Wednesday, May 1, 2013

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக............





குழந்தைகள் முன்னைலையில் செய்யக்கூடாதவை!!!
************************************************

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


_________________________________________________

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!
 
நன்றி:  Facebook 

Sunday, April 28, 2013

ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........

வணக்கம் மக்கள்ஸ்!!

எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.  திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது.  ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம்.  இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது.  எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு.  இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான்.  அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான்.  ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை.  சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன்.  ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு.  இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர்.  இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....??  இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.

இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது.  வயது முப்பதை நெருங்குகிறார்.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.  இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு.   இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? 

எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது.  நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே..........  இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும்  யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.

மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!