Thursday, May 16, 2013

இனி எக்ஸாம் வைத்து கேள்வி கேட்பீங்க?




1.   எந்த போரின் போது மாவீரன் நெப்போலியன் இறந்தார்?

அவர் கடைசியா சண்டை போட்டாரே அந்த போராத்தான் இருக்கணும்.

2. சுதந்திரப் பிரகடனம் எங்கே கையொப்பமிடப் பட்டது?

பேப்பர் மேலதான்.

3.  தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் நிலை என்ன?

திரவ நிலை.

4.  விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

கல்யாணம்.

5.  பரீட்சைகள் வைப்பது எதற்கு?

பசங்களை பெயிலாக்குவதற்க்கு.

6.  எட்டு பொழுதுகள் ஒருத்தர் தூங்காமல் இருப்பது எப்படி?

ரொம்ப சிம்பிள்.  இரவு முழுதும் தூங்கிட்டு பொழுது விடிஞ்சதும் விழிசுக்கணும்.

7.  உங்களின் ஒரு கையில் 4 ஆரஞ்சும், 5 ஆப்பிளும் உள்ளன, இன்னொன்றில் 5 ஆரஞ்சும், 4 ஆப்பிளும் உள்ளன, அப்போ மொத்தத்தில் உங்ககிட்ட என்ன இருக்கும்?

பெரிசா ரெண்டு கை இருக்கும். பொறவு எப்படி இத்தனை பழத்தையும் வச்சிருக்க முடியும்!!

8. ஒரு சுவற்றை கட்டி முடிக்க 8 ஆட்களுக்கு 10 நாட்கள் பிடித்தது.  அதே சுவற்றை 4 பேர் கட்டி முடிக்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?

அதுதான் அந்த எட்டு பேரு ஏற்கனவே கட்டி முடிச்சிட்டாங்களே, அதனால
டைம் எதுவும் தேவைப்படாது

9.  வேக வைக்காத கோழி முட்டையை சிமென்ட் தரை மேல் உடையாமல் போடுவதெப்படி?

தாராளமா போடலாம் சிமென்ட் தரை ஒன்னும் ஆகாது!!

10. ஒரு ஆப்பிளை ரெண்டா கட் பண்ணி அதில் ஒரு பாதியை எடுத்தா அது எது மாதிரி இருக்கும்?

அந்த இன்னொரு பாதி மாதிரியே தான் இருக்கும்.

11.  காலையில் எதை சாப்பிட முடியாது?

லஞ்சும், டின்னரும்.

நன்றி:   Facebook






Friday, May 10, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்கள்ஸ்,

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 அந்த கூட்டு பெருங்காயம் .....

 இந்த கூட்டு பெருங்காயம் .....

 

அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

 

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ........... 

 

படத்திற்கு நன்றி: ஆயுர்வேத மருத்துவம்


இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

இதைப் பத்தி ஒரு  பதிவை பார்த்தேன், நான் ரசித்தவை லிஸ்டில் போடலாம்னு நினைச்சேன், பிரச்சினையின் தீவிரம் காரணமாக லிங்கை தனிப் பதிவாக போட முடிவு செய்தேன்.  இதை தெரிந்தவர்கள் எல்லோருடனும் மெயில் மூலமாகவோ, அல்லது வாய்மொழி மூலமாகவோ கூட பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

Thursday, May 9, 2013

எதையாச்சும் மூணு வரி எழுதிட்டா அது ஹைக்கூ ஆயிடுமா?


வணக்கம் மக்கள்ஸ்!!

இப்போ யாரைப் பார்த்தாலும் கவிதை எழுத ஆரம்பிச்சிடாங்க.  நமக்கு கழுதையைப் பத்தி தெரிஞ்ச அளவுக்கு கூட கவிதையைப் பத்தி தெரியாது. கவிதை எழுதுவதற்கு சில கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் எழுதுவது நெட்டே இல்லாமல் டென்னிஸ் ஆடுவது போல அப்படின்னு யாரோ விஷயம் தெரிஞ்சவங்க உவமை சொல்லியிருக்காங்க, ஏனோ தெரியலை நமக்கு இந்த உவமை ரொம்ப புடிச்சுப் போச்சு.

ஆனால் இன்னைக்கு கவிதைன்னு நம்மாளுங்க எழுதுவதை படிச்சா வேடிக்கையா இருக்கு.  ஒரு வரியில் எழுதுவதை மடக்கி மடக்கி நாலு வரியாக எழுதினால் அது கவிதை என்ற ரேஞ்சில் தான் அவை இருக்கின்றன, உரைநடைக்கும் அதற்கும் வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னைக்கு நம்முடைய மெயின் டாபிக் கவிதை அல்ல, ஹைக்கூ கவிதை!!

ஹைக்கூ ஜப்பானில் ஆரம்பித்திருக்கிறது.  கவிதை எழுத விதிகள் இருப்பது போலவே இந்த குறுங் கவிதை எழுதுவதற்கும் சில விதிமுறைகள், மரபுகள் இருக்கு.  இதைப் பத்தி பல இணைய தளங்களில் நண்பர்கள் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.


ஹைக்கூ எழுத கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மரபுகளில் பலவற்றையும் பின்பற்றாத நம்மாளுங்க, ஒன்றே ஒன்றை மட்டும் தப்பாம செய்கிறார்கள்.   அது மூன்று வரிகளில் எழுதுவது!!  கொடுமை என்னவென்றால் உரைநடையை மடக்கி மடக்கி எழுதி அதை கவிதை எனும் அன்பர்கள், இங்கேயும் மூன்று வரி உரைநடையை எழுதிவிட்டு அதை ஹைக்கூ என்று சொல்லிக் கொள்வதுதான்.  அதிலும் சிலர் நான்கைந்து வரிகளை எழுதவும் செய்கிறார்கள் என்பது இன்னமும் வேடிக்கை.

ஹைக்கூ விதிமுறைகளைப் பற்றி மேல் சொன்ன தளங்களிலோ, வேறு தளங்களிலோ பார்த்துக் கொள்ளுங்கள், ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.    அது, ஹைக்கூ மூன்று வரிகளில், முதல் இரண்டு வரிகளைப் படித்தாலும்  நீங்கள் சொல்ல வருவது விளங்கக் கூடாது, மூன்றாவது வரியைப் படித்த பின்னர்தான் முதல் இரண்டு வரிகளும் சேர்த்து அர்த்தம் விளங்க வேண்டும்.  அதுதான் ஹைக்கூவின் ஸ்பெஷாலிட்டியே!!

இதை மேற்கண்ட இணைய பக்கத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: 

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.

உதாரணம்:

எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப் பிடித்துப்போனதுதான்!

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா.முத்துக்குமார்


உன் முகத்தை காண
கணக்கில்லா ரசிகர் கூட்டங்கள்.
நிலவினை சுற்றி நட்சத்திரங்கள்...

வண்ணப்
புடவைகளின் அணிவரிசை.
"பட்டாம் பூச்சிகள்"... 

கடும் வெயிலில்
இன்னும் ஆடும்
காலி ஊஞ்சல்!.  [சுஜாதா]

வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்
குழந்தையின் கிறுக்கல்கள்
- சீனு. தமிழ்மணி

ஆனால், இவையெல்லாம் ஹைக்கூவா?

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

மலர்கள் அடர்ந்த சோலை
ரம்மியமான மாலை
புத்தகத்துடன் நான் 

இதெல்லாம் ஹைக்கூவாம்.......செத்தாண்டா சேகரு...

எனவே மக்களே ஹைக்கூவை ஹைக்கூவா எழுதுங்க ஒருவரி உரைநடையை மூணு வரியாக்கி அதுதான் ஹைக்கூன்னு  சொல்லி சாவடிக்காதீங்க....

வணக்கம் மக்கள்ஸ்!! 

Monday, May 6, 2013

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.

வணக்கம் மக்கள்ஸ்!!


எங்க அலுவலகத்தில் ஒரு மலையாளி.  தினமும் காலையில் வீட்டிலேயே சிற்றூண்டியை முடித்துவிடுவான்.  போதுமான அளவுக்கு  உண்டாலும், அலுவலகத்திற்கு வந்து கேண்டீனில் அன்றைக்கு பரோட்டாவும், கொண்டைக்கடலை குருமாவும் இருக்கிறது என்றால் போதும், அவனால் நண்பர்கள் சாப்பிடுவதை  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அதையும் ஒரு பிளேட் வாங்கி வெட்டுவான்.  பசிக்காக அல்ல, ருசிக்காக!!  மைதாவில் செய்யப்படும் இந்த பரோட்டாவின் ருசிக்காக  நம்மில் பலர் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.  இது மட்டுமல்ல, பேக்கரியில் தயாராகும் கேக்குகள், ப்ரெட், பிஸ்கட்டுகள் முதலான பல எண்ணற்ற அயிட்டங்களில் மைதாவே முதலிடம் வகிக்கறது.


நாட்டில் அதிக அளவு பரோட்டா சாப்பிடும் கேரளத்தில் நீரிழிவு நோயும் கோரத் தாண்டவமாடுகிறது.  இதை உணர்ந்த அவர்கள் தற்போது மைதா எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.  ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் மைதா தடை செய்யப் பட்டுள்ளது.



கோதுமையை அரைத்து கிடைக்கும் மாவில் செய்யும் சப்பாத்தி உடலுக்கு நல்லது, ஆனால், அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவில் அப்படி என்னதான் பிரச்சினை?  முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது,  கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை,  அதுவே  முழுமையான [wholesome food] ஆகும்.  கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து  நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது.  அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது.  அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.  இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர்.  இதன் விளைவு என்ன?  கிட்னி அடிவாங்கும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள்  வரும்.  எனவே மைதா, அது சம்பத்தப் பட்ட பொருட்களை அறவே நீக்குவது நலம் முழு கோதுமை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


மேலும் விபரங்களுக்கு:
தினகரன் செய்தி: பரோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம். மைதாவுக்கு மயங்காதீர்கள்.
தினகரன் செய்தி: பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்? 
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? [கழுகு]
WHITE_DEAD_ON_YOUR_PLATE [பவர் பாயின்ட்]


இதற்கடுத்து நாம் தினமும் உண்ணும் அரிசியைப் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது.  நாம்  நாவை மட்டுமல்ல கண்ணையும் திருப்திப் படுத்த உணவு உன்ன நினைக்கிறோம் விளைவு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் அரிசி இருக்க வேண்டும் என நினைத்து அதை நன்றாகப் பாலிஷ் செய்து வாங்கி உண்கிறோம்.  உண்மையில் பிரவுன் அரிசி எனப்படும், சிவப்பு நிறத்தில் உள்ள கைக்குத்தல் அரிசியே நமக்கு நல்லது.  தற்போது மெஷீனில் அரைத்தாலும், கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசி கிடைக்கிறது.  ஆனால் ருசிக்கு மயங்கிய நாம் அதற்க்கு மாறுவதில்லை.  பாலிஷ் செய்த அரிசியும் மேலே சொன்னபடி முழுமையான உணவு இல்லை.  வெள்ளை அரிசியையே  உண்டு பழகிய நமக்கு சிவப்பரிசிக்கு மாறும் போது ஜீரணப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் பழக்கிக் கொள்வது நல்லது.




எல்லாவற்றுக்கும் மேலாக மேற்ச்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி என்று சொல்லுமளவுக்கு நம் உடல் நலத்தை அழிக்கும் ஒரு அரக்கன் இருக்கிறான்.  நம்மில் பலருக்கும் இவன் அரக்கன் தான் என்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறோம்.  உங்களால் கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியாது, அவன் பெயர்:  வெள்ளைச் சர்க்கரை!!  இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும்.  எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன்.  எப்படி?  அச்சு வெல்லத்தில், சர்க்கரையும் அதை ஜீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சேர்த்து கிடைக்கின்றன.   ஆனால், வெள்ளைச் சர்க்கரையில் சர்க்கரை மட்டுமே உள்ளது, அதைச் சீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் ஆகப் பிரிக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய்விடுகிறது. நாம் சர்க்கரையை உண்ணும் பொது அதைச் சீரணிக்க நம் உடலின்  தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் ரிசர்வில் இருந்து சரக்கரையைச் சீரணிக்க செலவிடப் படுகிறது.   இவ்வாறு நாளடைவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான விட்டமின்களும், மினரல்களும் தொடர்ந்து இழந்த பின்னர் உடல் ஆரோக்கியம் படிப்படியாகச் சரிய ஆரம்பிக்கறது, இது எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது.  சர்க்கரை வியாதி உட்பட எல்லாம் எளிதில் வந்து விடும்.    சர்க்கரை வியாதிக்கு சர்க்கரை உண்ணுதல் நேரடியாக காரணமாகா விட்டாலும் மறைமுகமாக காரணமாகிறது.

அப்படியென்றால் இனிப்பே இல்லாத வாழ்க்கையா?  அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா?   மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம்  போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன?  இந்த வெள்ளை சர்க்கரை கருமத்தை நீக்கி விட்டால் மேற்கண்ட உடல் நலத்துக்குத் தேவையான பழங்களை வாழ்நாள் முழுவதும் உண்ணலாம் இல்லாவிட்டால், ஆங்கில மருத்துவன் வருவான் மேற்கண்ட பழங்களை உண்ணாதே என்பான் அந்த கூமுட்டையனுக்குத் தெரியாது இவை நமக்காகவே படைக்கப் பட்டவை என்று, அப்புறம் சர்க்கரை மாத்திரையைத் தின்னச் சொல்லுவான் அதுவும் போதாதுன்னு பென்சிலீனை ஊசியால் ஏற்றுவான், கடைசியாக கை, கால் விரல்களை வெட்டிப் போடுவான், குஷ்ட ரோகியைப் போல ஆக வேண்டும்.  தேவையா இது?!!



 


Thursday, May 2, 2013

பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்ளும் பகுத்தறியாவாதிகள்

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில் ஒரு நண்பர், தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர், தனது கல்லூரிக் கால காதல் வாழ்க்கையைப் பற்றிய அவரது பேட்டியை ஒரு வார இதழில் வெளியானது குறித்து பதிவிட்டிருந்தார்.  காதலிச்சு திருமணம் செய்திருக்கிறார்.  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். அதுக்கு மேல அது பத்தி நாம் ஒன்னும் சொல்லப் போவதில்லை.   அவர் அத்தோட நிறுத்தியிருக்கலாம், ஆனா தான் எப்படி மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழித்து அவங்க அறிவுக் கண்களை திறக்கிறேன் என்பதையும் அதனுடன் கலந்துவிட்டிருக்கிறார்.  அங்கதான் நமக்கு இடிக்குது.

அவர் சொல்ல வருவது, "என் திருமணதிற்கு நல்ல நாள், கெட்ட நாள் எதுவும் பார்க்கவில்லை, ஏனெனில் பகுத்தறிவுப் படி அப்படியொரு நாள் இல்லை".  ஆஹா..... அருமை........  விஞ்ஞான ரீதியா பார்த்தா இது சரிதான்.  நாம் இதையும் கேள்வி கேட்கப் போவதில்லை. அதையடுத்து ஒரு பாயிண்டைத் தூக்கி போடுகிறார்.  நான் பெரியார் பிறந்தநாளில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அது நடக்க வில்லை, பின்னர் காத்திருந்து அண்ணா திருமண நாளில் மணமுடித்தேன்.  இங்க தான் இடிக்குது.  ஒரு தலைவர்  120 அல்லது 130 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளில் பிறக்கிறார், ரைட்டு, அவர் பிறந்ததால் அந்த நாள் விஞ்ஞான ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக ஏதாவது ஒரு சிறப்புத் தன்மையைப் பெறுகிறதா?  அந்த நாளில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் கொள்கையில் வெற்றியடைவீர்கள் என்று அர்த்தமா?  தலைவர் பிறந்த நாளை மட்டும்தானா தேர்ந்தெடுக்க வேண்டும் பிறந்த நேரத்தையும் கண்டுபிடித்து அதே நேரத்தில் தாலி கட்டலாம்.  அதை ஏன் விட்டீர்கள்? 

ஒரு தலைவர் பிறந்த நாள் செப்டம்பர் 15 என்றால், அடுத்தடுத்த மாதங்களிலும் 15 தேதி வரும், அதற்க்கெல்லாம் சிறப்பு எதுவும் கிடையாதா?  அல்லது புதன் கிழமை பிறந்தார் என வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு புதன் கிழமைக்கும் ஏதாவது சிறப்பு இருக்காதா?  அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால், தலைவர் பிறந்த நாளில் இருந்து 365-தே கால் நாட்கள் இடைவெளியில் வரும் நாளுக்கு மட்டும் விஞ்ஞான ரீதியாக சிறப்பு வந்து விடுமா?

அதுசரி இன்னொரு தலைவர் பிறந்த நாளில் மணமுடித்தீர்கள், அந்த தலைவர் கொள்கை ரீதியாகவாவது உங்க தலைவரோடு ஒத்துப் போனவரா?  கடவுள் என்று எதுவும் இல்லை, அதை கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி, இதுதானே ஐயா உங்க தலைவரோட கொள்கை? ஆனா, அண்ணாவோட திருத்தப் பட்ட கொள்கை என்ன?  "ஒன்றே குலம், [பரவாயில்லை தப்பில்லை விட்டுடடலாம்], ஒருவனே தேவன்!!" அதாவது   கடவுள் ஒருத்தன்-  இது தான் உங்க தலைவர் கொள்கையா?  எப்படிப் பார்த்தாலும் இடிக்குதே ஐயா?

இப்படி ஒருத்தர் என்றால், இன்னொருத்தர் இருக்காரு.  அவரோட பேரிலும் ஒரு மதி இருக்கு.  அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி உங்க கண்ணை திறந்து விடுபவர்.

ஒருத்தர் கேட்கிறார்,

"பெரியாருக்கு சிலை வக்கிறீங்களே, இது பகுத்தறிவா?"

அதற்க்கு பதில் இப்படி தருகிறார்:

"வாழ்ந்து மறைந்த தலைவர் தானே அவர், ஆகையால் அவருக்கு சிலை வைக்கலாம், அதற்க்கு மாலை போடலாம், மரியாதை செய்யலாம், தப்பேயில்லை.".

எனக்கு இங்க என்ன புரியலைன்னா,  ஏன் மாலையோட மட்டும் நிறுத்தனும், தினமும் தேங்காய், பழம் வைத்து ஆரத்தி காட்டலாம், நல்லா பகுத்தறிவை பரப்புவதற்கு அருள் புரிக என்று வேண்டுதல்களை வைக்கலாம். என்ன தப்பு?  நீங்க போட்ட ரோஜாப்பூ மாலையை ஏற்றுக் கொண்டு அதை நுகர்ந்து பார்த்து, "ஆஹா அருமையான வாசனை" என்று சொல்லத் தெரிந்த சிலைக்கு, நீங்க வைக்கும் தேங்காய், பழங்களையும் ஏற்றுக் கொள்ளத் தெரியாதா?  [இதையும்  சிலர் செய்யக்கூடும், யார் கண்டது!!]   உங்க ஆசைகளையும் நிறைவேத்தி வைக்க முடியாதா?   சிலைகள் கல்லு, அதை வணங்குவது மூடநம்பிக்கை என்றால் எந்த சிலைக்கும் அது பொருந்தும் தானே?  அதென்ன கணக்கு, வாழ்ந்து மறைந்தவர் சிலைக்கு மட்டும் உசிர் வந்திடும் என்பது?  உங்க தலைவர் சிலை கல்லோ, உலோகமோ அல்லது சிமாண்டோ தானே?  அதெப்படி உங்க தலைவராக முடியும்?  அவ்வாறு நினைப்பது முட்டாள் தனம் என்பது தானே உங்க கொள்கை, திரும்ப நீங்களும் அதையே செய்கிறீர்களே, இது தான் பகுத்து அறிந்ததா?

பகுத்தறிவுவாதிகளே, நீங்க உங்க அறிவை என்னைக்கும் உபயோகப் படித்தியதாகத் தெரியவில்லை.  உங்க தலைவர் எனக்கு சிலையை வையுங்கடா என்றார், நீங்களும் பூம்........பூம்........ மாடு மாதிரி தலையாட்டி விட்டு செய்து வருகிறீர்கள் செம்மறி ஆடுகள் போல கேள்வியே கேட்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் பகுத்தறிந்தவன், சுயமாக சிந்திக்கக் கூடியவன், விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எனக்கு உண்மை என்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.........  இப்படியெல்லாம் டமாரம் அடிக்கும் நீங்கள் உங்கள் மதியை எந்த அளவுக்கு சிந்திக்கப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? நீங்கள் என்றைக்காவது உட்கார்ந்து சிந்தித்திருந்தால் இந்த மாதிரி பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியா வாதிகள்.

வணக்கம் மக்கள்ஸ்.........!!




Wednesday, May 1, 2013

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக............





குழந்தைகள் முன்னைலையில் செய்யக்கூடாதவை!!!
************************************************

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


_________________________________________________

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!
 
நன்றி:  Facebook 

Sunday, April 28, 2013

ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........

வணக்கம் மக்கள்ஸ்!!

எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.  திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது.  ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம்.  இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது.  எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு.  இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான்.  அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான்.  ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை.  சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன்.  ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு.  இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர்.  இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....??  இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.

இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது.  வயது முப்பதை நெருங்குகிறார்.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.  இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு.   இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? 

எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது.  நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே..........  இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும்  யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.

மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!