Saturday, January 12, 2013

பெண்: திருமணத்திற்கு முன்னரும் பின்னரும்


இது திருமணமாகாத டாவடித்துக் கொண்டிருக்கும் பசங்களுக்கான பதிவு.  கல்யாணத்துக்கு முன்னாடி பெண் பார்க்கப் போகும்போதோ அல்லது காதலிக்கும் போதோ ஒரு பெண் எப்படி நம் கண்களுக்குத் தோன்றுவாள் என்பதற்கு சில உதாரணங்கள் கீழே:

 





    ஆனா இது நிஜமில்லை. உண்மையான உருவம் கல்யாணத்துக்கப்புறம் தான் நீங்க பாப்பீங்க.  அது எப்படி இருக்கும் தெரியுமா?



எப்படி இருக்கும்னு  யாரும் சொல்ல மாட்டாங்க..............



தான் பட்ட கஷ்டம் தன்னோட மகனும் படக்கூடாதுன்னு எல்லா விஷயத்திலும் நினைக்கும் உங்க அப்பாவே கூட சொல்ல மாட்டாரு..............


நீங்க ரொம்ப எதிர் பார்த்து ஏமாந்திடக் கூடாது.............


நிதர்சனம்னு ஒன்னு இருக்கு இல்லையா?


பாத்துக்குங்க கிட்டத் தட்ட இப்படித்தான் இருப்பாங்க.............






இதுதான் நிஜம்.   ஆனால் நாம யாரும் இதில் இருந்து தப்ப முடியாது, சில அதிர்ஷ்ட சாலிகள் இருக்கலாம், அப்படி ஒருத்தர் தான் கீழே இருக்கும் டி -ஷர்டில் இருப்பதை எழுதியிருப்பார் போல. பெஸ்ட் ஆ ஃ ப் லக்.




 






Friday, January 11, 2013

ஜகன்னாதர் ரத யாத்திரை, சென்னையில் ஜனவரி 12 ஆம் தேதி-விபரங்கள்

சென்னையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால் 12-01-2013 சனிக்கிழமை அன்று ஜகன்னாதர்-சுபத்திரை-பலதேவர்-சுதர்சனன் இரத யாத்திரை என்னும் தேர்த் திருவிழா நடை பெற இருக்கிறது.  20 அடி உயரத்திலான சிறிய தேரில் மூவரும் சென்னையை உலா வர இருக்கின்றனர்.

புறப்படும் இடம்/நேரம்:
மைலாப்பூர் சாரதா சில்க்ஸ் கடை முன்பாக,
2:30PM, 12   ஜனவரி 2013

சென்று சேரும் இடம்/நேரம்:
குசாலாம்பால் கலையான மண்டபம் சேத்துப் பட்டு,   
7:00 PM 12   ஜனவரி 2013 [அதே நாள் மாலை]

வழி:

மைலாப்பூர் சாரதா சில்க்ஸ் கடை முன்பாக
ராமகிருஷ்ண மடம் சாலை -RK Mutt rd.
ராயப்பேட்டை நெடுஞ்சாலை  -Royapettah high rd.
டாக்டர். இராதாகிருஷ்ணன் சாலை -Dr, Radha Krishnan Salai.
கதீட்ரல் சாலை -Cathedral Rd.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை.-Nungam Bhakam High rd.
வில்லேஜ் சாலை -Village rd.

சேத்துப் பட்டு குசலாம்பாள் திருமண மண்டபம்.

வழி நெடுகிலும் பக்தர்களின் நாம சந்கீர்த்தனம், பிரசாத விநியோகம் ஆகியவற்றுடன் ஜன்கன்னாதரின் தரிசனம் கிடைக்கும்.  இவ்வழிகளுக்கு அருகில் அலுவலகம் உள்ளோர் சற்று நேரம் ஒத்துக்கி கலந்து கொள்ளுங்கள்  குடும்பத்தோட மாலை கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு உணவருந்தி வீடு திரும்பலாம்.

இந்த இரத யாத்திரையின் பின்னணி:

ஜகன்னாதர் ஆலயம் ஓடிசாவில் உள்ள பூரியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஜகன்னாதருடன், அவரது மூத்த சகோதரர் பலதேவரும், தங்கை சுபத்திரையும் சுதர்சனரும் இணைந்து அருள் பாலிக்கிறார்கள்.


பூரி ஜகன்னாதர் ஆலயம்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கு உலகப் புகழ் பெற்ற  தேர்த் திருவிழா நடைபெறும்.  ஜன்கன்னத் [சுதர்ஷனருடன்]-பலதேவ்-சுபத்ரா மூவரையும் மூன்று பிரமாண்ட தேர்களில் இக்கோவிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குண்டிச்சா மந்திர் என்னும் இடத்திற்கு பக்தர்கள் அழைத்துச் செல்வார்கள்.  அங்கே ஒருவாரம் இருந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்க்கே தேர்கள் மூலம் திரும்ப அழைத்து வருவது மரபு.  இந்தத் திருவிழாவிற்கு பத்துலட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து கலந்து கொள்கிறார்கள்.  ஆங்கில அகராதிகளில்  Juggernaut என்னும் வார்த்தை ஜகன்னாத் என்பதில் இருந்து வந்ததாகும். 


பூரி ஜகன்னாதருக்கு அடிக்கடி அபிஷேகம் நடத்தப் படுவதில்லை  இவ் விக்ரகங்கள் மரத்தால் ஆனவர்கள்.  அரிதாக நடத்தப் படும் அபிஷேகத்திற்கான ஏற்ப்பாடுகள் மேலே. பூரிக்கு நாம் மூன்று முறை இரத யாத்திரையின் போது சென்று வந்துள்ளோம், அப்போது இந்த மூவரையும் தேரின் மீதேறி தழுவியிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!!
இதற்க்கான தேர்களைச் செய்ய வேலைகள் ரத யாத்திரைக்கு சில மாதங்கள் முன்னரே துவங்கும்.  ஜகன்னாதரின் தேர் 45 அடி உயரம், 35 சதுர அடி பரப்பளவில் 7 அடி விட்டமுள்ள 16 சக்கரங்களுடன் செய்யப் படும்.







தேர்களின் பெயர்கள்:

ஜன்கன்னாதர்-  நந்திகோஷா ,
பலதேவர்-தாலத்விஜா [14 சக்கரங்களைக் கொண்டது]
சுபத்திரை-தேவதலனா.  [சிறியது 12 சக்கரங்கள்].

இந்த ரதங்கள் ஜகன்னாதர் கோவில் வடிவிலேயே இருக்கும்.  இதற்கென தனிப்பட்ட மரங்கள் உபயோகிப்பார்கள், பரம்பரை பரம்பரையாக தேர் செய்வதில் கைதேர்ந்த தட்சர்கள் இதில் ஈடுபடுவார்கள்.

ரதங்கள் குறித்த   மேலதிகத் தகவல்கள்

 ஒவ்வொரு தேரையும் 4500 பக்தர்கள் இழுப்பார்கள். தேர்களுக்கு முன்னர் பக்தர்கள் இறைவனின் திருநாமத்தை சங்கீர்த்தனம் செய்த வண்ணம் ஆடிப் பாடிச் செல்வர்.  பல்வேறு புராண கால பாத்திரங்களின் வேடம் அணிந்தோரும் கலந்து கொள்வர்.

பலராமர் [பலதேவ்] அழைத்து வரப்படுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் [ஜகன்னாத்] அழைத்து வரப் படுகிறார்.

வலதுபுறம் ஜகன்னாதரின் தேர், நடுவில் சுபத்திரையின் தேர், இடது புறம் பலதேவரின் தேர்.  பலதேவர்-சுபத்திரை, ஜகன்னாதர் என்ற வரிசையில் புறப்படுவார்கள்.


பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஜகன்னாதர் ஆலயத்தின் முன்னர் கிராண்ட் டிரன்க் ரோட்டில் தேரிழுக்கக் காத்திருக்கின்றனர்.



Tuesday, January 8, 2013

சிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது?

டியர் மக்காஸ்!! இன்னைக்கு நாம் பார்க்கப் போவது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த கதை.  இதில் கிடைக்கப் பெற்ற அமிழ்தினைப் பகிர்ந்தளிக்கவே விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுக்கிறார். இதில் நாம் முக்கியமாக கவனிக்கப் போவது, சிவனுக்கும் மோகினிக்கும் குழந்தை பிறந்ததாக உலவும் கதை புராணத்தில் சொல்லப் பட்டதா, இல்லை இடையில் கலந்து அடித்து விடப் பட்ட புனைசுருட்டா என்பதே.

இது ஸ்ரீமத் பாகவதத்தில் 8.5.11 ஆம் பதத்தில் பரீட்சித்து மன்னன் சுக முனியிடம் பகவானின் இந்த லீலையை எடுத்தியம்புமாறு கேட்டுக் கொள்வதில் இருந்து துவங்குகிறது.  அதை மகிழ்வுடன் ஏற்ற சுகமுனி இந்தக் கேள்வி கேட்டமைக்காகப் பரீக்ஷித்து மன்னனை பாராட்டிவிட்டு தொடர்ந்து பகவானின் லீலைகளை விவரிக்கிறார்.



ஒரு முறை தூர்வாச முனி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே இந்திரன் தனது யானையின் மேலமர்ந்து பவனி வருவதைக் கண்டார்.  மனம் மகிழ்ந்த அவர் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை எடுத்து இந்திரனிடம் தருகிறார், இது கிடைப்பதற்கரிய ஒரு பரிசாகும்.  மமதையில் இருந்த இந்திரனோ அதைப் பெற்றதும் தனது யானையின் தும்பிக்கையின் மேல் போடுகிறான், ஒன்றுமறிய மிருகமான யானை என்ன செய்யும்?  வாங்கி காலில் போட்டு மிதித்தது.  இதைக் கண்டு வெகுண்ட தூர்வாசர், இந்திரனைப் பார்த்து, "உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் இழந்து ஆண்டியாகி தரித்திரம் பிடித்தலைவாயாக" என்று சாபமிட்டார்.  அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக தங்களது செல்வச் செழிப்பை மூவுலகிலும் இழந்த இந்திரனுக்கும் பிற தேவர்களுக்கும் அந்நிலையில் இருந்து மீண்டு வர வழி ஏதும் தெரியவில்லை.  அதே சமயம் அரக்கர்கள் செல்வச் செழிப்பில் கொழிக்க ஆரம்பித்தனர். இதற்க்கு விமோசனம் வேண்டிய தேவர்கள் அனைவரும் சுமேரு மலையின் உச்சியில் பிரம்மாவைச் சந்தித்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, நடந்தவற்றையும் தங்களது நிலையையும் எடுத்துக் கூறி, தங்கள் செழிப்பிழந்த  நிலையில் இருந்து மீழ வழி கேட்டு வேண்டி நின்றனர்.

நடந்ததை பொறுமையுடன் கேட்டறிந்த பிரம்மா அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பாற்கடலில் அமைந்துள்ள ஸ்வேத தீவுக்கு சென்று அங்கு பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவிடம் பல்வேறு பாசுரங்களைப் புகழ்ந்து பாடி பிரார்த்தனைகளைச்  செய்தார்.   அதற்க்கு செவிசாய்த்த பகவான் அவர்கள் முன்னர் தோன்றினார், அவரது தோற்றம் எல்லோரையும் கண்களை கூசச் செய்யும் வண்ணம் இருந்தது.  முதலில் பிரம்மாவும், சிவனும் அவரைப் பார்க்க தங்களது பாசுரங்களால் புகழ் மாலை பாடினர். அதில் அகமகிழ்ந்த பகவான், இனி என்ன செய்யவேண்டுமென அறிவுரைகளை தேவர்களுக்கு வழங்கினார்.

அதன்படி, தேவர்கள் முதலில் அசுரர்களிடம் சென்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை தங்களுடன் இணைந்து பாற்கடலை கடைய அழைப்பு விடுக்க வேண்டும்.  மந்தார மலை மத்தாகவும், வாசுகி என்ற நாகம் மத்தை சுழற்றும் கயிராகவும் பயன்படுத்தப் படும்.  பாற்கடலைக் கடையும் போது  கொடிய விஷம் உருவாகும்.  ஆனாலும், சிவன் அதை உட்கொண்டு உலகை  காப்பார், எனவே யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை.  கவனத்தை ஈர்க்கும் பல்வேறு விஷயங்கள் பாற்கடலைக் கடையும் போது வெளிப்படும், ஆனால் தேவர்கள் யாரும் அவற்றால் தங்கள் மனம் அலைக்கழிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் எதைக் கண்டும் ஆத்திரப் படாமல் இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கப் பட்டனர்.  இவ்வாறு அறிவுரைகள் வழங்கிய விஷ்ணு அங்கிருந்து மறைந்தார்.




 பகவான் விஷ்ணுவின் கட்டளைப் படி தேவர்கள் அரக்கர்களின் மன்னரான பலி மகாராஜாவிடம் போய் சமாதனம் செய்து கொண்டு பாற்கடலை கடைய அழைப்பு விடுத்தனர்.  இருதரப்பும் சேர்ந்து மந்தார மலையைச் சுமந்து கொண்டு பாற்கடலை நோக்கி நடந்தனர்.  ஆனால் அது மிகவும் பாரமாக இருந்ததால் வழியிலேயே பலர் களைப்படைந்து வீழ்ந்தனர், சிலர் செத்தும் போயினர்.  அப்போது அங்கே விஷ்ணு தோன்றி அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார், மந்தார மலையை தனது வாகனமான கருடன் மேல் எடுத்து வைத்து பாற்க்கடலுக்குச் கொண்டு சென்று அதன் நடுவில் நிலை நிறுத்தினார்.  பின்னர் கருடனை அந்த இடத்திலிருந்து செல்லுமாறு கட்டளையிட்டார்.  [கருடன் அங்கேயே இருந்தால் வாசுகி நாகம் வர மாட்டார், காரணம் கருடன் நமக்கு நல்ல விருந்துடா..... என்று அவரை  துண்டு போட்டு சாப்பிட்டு விடுவார்!!]  கருடனும்  தனது தலைவனின் கட்டளையை ஏற்று இடத்தை காலி செய்தார்.

 அதன் பின்னர் வாசுகி நாகத்தை அழைத்து, கிடைக்கப் போகும் அமிர்தத்தில் உனக்கும் பங்கு உண்டு என்று வாக்குறுதியைத் தந்து மலையைச் சுற்றி கயிறாகக் கட்டி அதன் தலைப் பகுதியை தேவர்கள் பிடித்துக் கொண்டு வால்  பகுதியை அசூரர்களுக்குத் தந்தனர்.







ஆனால் அசுரர்கள் அதை ஏற்க மறுத்து, நாங்க வால் பிடிக்கிறவனுங்க இல்லை, அது கேவலம்.  தலையைப் பிடிப்பது தான் சாலச் சிறந்தது என்று சாஸ்திரத்தை கற்ற எங்களுக்குத் தெரியும், நீங்கள் வேண்டுமானால் வால் பிடியுங்கள் என்று தலைப் பகுதியில் நின்று இழுக்கும் உரிமையை கேட்டு பெற்றுக் கொண்டனர். தேவர்களும் மறுப்பே பேசாமல் ஒப்புக் கொண்டனர்.  இது பின்னால் பெரிய ஆப்பாக அமையும் என்று அசுரர்களுக்கு அப்போது தெரியவில்லை.

எந்தப் புறம் யார் நின்று செயல்படுவது என்ற விவாதம் முடிவுக்கு வந்து மந்தாரமலையை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வேலை ஆரம்பமானது.   ஆனால், மலை அடிப்பகுதியில் எந்த ஆதாரமும் இல்லாதபடியால் அது உடனே மூழ்கிப் போனது.  இதைப் பார்த்த இருபுறமுள்ளவர்களின் முகங்களும்  வாடிப் போனது.  இதையறிந்த விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து [ஆமை]  மந்தார மலையை தன முதுகால் சுமந்து நின்றார்.  இதைப் பார்த்ததும் குதூகலமடைந்த இரு சாராரும் மீண்டும் பணியில் இறங்கினர்.  கூர்மத்தின் முதுகு  எட்டு லட்சம் மைல் விசாலமாக ஒரு பெரிய தீவு போல பரந்திருந்தது.  இரு சாராரும் வாசுகியை கயிறாக மந்தார மலையை சுற்றிக் கட்டி மாறி மாறி இழுக்க அது அவரின் முதுகின் மேல் சுழலுவது முதுகைச் சொரிந்து விடுவது போல சுகமாக இருந்ததாம்!!


மந்தார மலையின் உச்சியின் மேல் தனது ஆயிரக் கணக்கான கரங்களுடன் பகவான் விஷ்ணு அமர்ந்து காட்சியளிக்க பிரம்மன், சிவன் உட்பட அனைத்து தேவர்களும் அவரைப் பூஜித்தனர்.

தேவர்களும்,  அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டுமே என்ற உத்வேகத்தில் கண்ணா பின்னாவென்று வாசுகியை இழுத்து மலையைச் சுழற்ற ஆரம்பித்தனர், பாற்கடலில் இருந்த பல்வேறு உயிரினங்களும் அச்சமுற்றன.  ஆயினும் வேகம் குறையாமல் வேலை மும்முரமாகச் சென்றது.  அவ்வேகத்தால் வாசுகியின் வாயில் இருந்து புகையும், தீப்பிழம்பும் கிளம்பியது, தலைப் பகுதியைப் பிடித்திருந்த அசுரர்களை அது தாக்கி அவர்கள் காட்டுத் தீயால் கருகிய மரங்களைப் போல காட்சியளித்தனர், அவர்களது உடல் பலமும் குன்றியது.  இச்சூழ்நிலையில் விஷ்ணுவின் அருளால் மழை வந்து அனைவரையும் குளிர்சியடையச் செய்தது.  வெகுநேரம் இவ்வாறு கடைந்தும் எதுவும் தோன்றவில்லை.  பகவான் விஷ்ணுவே வந்து தானும் கயிற்றைப் பிடிக்க இன்னமும் வேகமாக கடல் அலைக்கலைக்கப்  பட்டது.  அதன் பின்னர் முதன் முதலாக ஆலஹால விஷம் என்னும் கொடிய நஞ்சு தோன்றியது.

இச்சமயம் விஷ்ணு தேவர்களை அழைத்து சிவனிடம் சென்று இந்த நஞ்சை உண்டு தங்களைக் காக்குமாறு வேண்டுங்கள் என்று அறிவுறுத்த அவர்களும் அவ்வாறே செய்தனர்.  சிவ பெருமான் எளிதில் திருப்தியடைந்து விடுபவர் ஆதலால், உடனே சம்மதித்து எல்லா நஞ்சையும் சேர்த்து கையில் அள்ளி உண்டார்.  அது அவரது கழுத்தில் தங்கி அந்த இடம் நீல நிறத்தில் காட்சியளித்தபடியால் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.  அவர் பருகும் போது சிந்திய சிறிதளவு நஞ்சை பாம்புகள், தேள் போன்ற உயரினங்கள் கொஞ்சம் உண்டன.


சிவபெருமானின் இச்செயலால் மிகவும் மகிழ்ந்த தேவர்களும் அசுரர்களும் புத்துணர்வோடு மீண்டும் பாற்கடலைக் கடைவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.  அப்போது சுரபி என்னும் பசு பாற்கடலில் இருந்து தோன்றியது.  வேதங்களின்படி யாகம் செய்யும் முனிவர்கள், தங்களுக்கு தூய நெய், இன்னபிற பால் பொருட்கள் போன்றவை தேவை என்பதால் தங்களுக்கே வேண்டுமென்று பெற்றுக் கொண்டனர்.  அதையடுத்து உச்சைஸ்ரவா என்ற குதிரை, பால் நிலவையொத்த வெண்ணிறத்துடன் தோன்றியது, அதை பலி மகாராஜா தனக்கு வேண்டுமென்று கேட்க,  இந்திரன், முன்னரே பகவான் விஷ்ணு அறிவுறுத்திய படி, மறுப்பேதும் இன்றி  ஒப்புக் கொண்டான்.

அதையடுத்து ஐராவதம் என்ற வெண்ணிற யானை நான்கு தந்தங்களுடன் தோன்றியது, அதன் பெருமை சிவன் வாழும் கைலாயத்தையும் தோற்கடிக்கும் வண்ணம் இருந்தது.   தொடர்ந்து கௌஸ்தபா,  பத்மராக மணிகள் தோன்ற அவற்றை விஷ்ணு தனது மார்பில் அணிந்து கொண்டார்.  அதையடுத்து பாரிஜாத மலர் தோன்ற அது தேவலோகத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டது.   தொடர்ந்து அப்சரஸ்கள் எனும் பரத்தையர்கள் தோன்றினர்.

பின்னர் பாற்கடலில் இருந்து கையில் மாலையுடன் இலக்குமி தோன்றினாள்.  அவளது அழகில் எல்லோரும் மயங்கினாலும் அவள் பகவான் விஷ்ணுவே தனக்குத் தகுதியானவர் என தேர்ந்தெடுத்து அவர் கழுத்தில் மாலையைச் சூடி அவர் அருகில் நாணத்தோடு ஒட்டி நின்றாள்.   தொடர்ந்து வருணி என்னும் இளநங்கை தோன்ற அவளை விஷ்ணுவின் அனுமதியோடு  பலி மகாராஜா ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடைய இறுதியில், அழகிய அங்க அவயங்களுடனும், வலிமையான உடலமைப்போடும்  தன்வந்தரி  என்னும் அற்புதமான ஆண்மகன் அமிழ்தம்  நிரம்பிய கலசத்தைக்  கையில் ஏந்தியவாறு தோன்றினார்.


இதைக் கண்டதும் அசுரர்கள் அவர் கையிலிருந்து அமுதக் கலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர், பின்னர் யார் முதலில் பருகுவது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  அதிலும் சிலர், தேவர்களும் இதில் உழைத்திருப்பதால் அவர்களுக்கும் பங்கு தருவது தான் முறை என வாதிட்டனர்.   அமுதக் கலசம் பறிபோனாதால் கலக்கமடைந்த தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் உதவி நாடி நின்றனர்.  கவலை வேண்டாமென அவர்களைத் தைரியமூட்டிய விஷ்ணு , ஒர் அழகான பெண்ணாக மோகினி மூர்த்தி அவதாரமெடுத்தார். இதைக் கண்ட அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கி அமிழ்தை மறந்து அவளை எப்படியாவது அடைந்தால் போதும் என்று மதியிழந்து நின்றனர்.

மோகினியின் வசீகரத்தில் மயங்கிய அசுரர் தலைவன், பேசலானான்.  "அழகிய பெண்ணே, நாங்கள் [அசுரர்கள், தேவர்கள்] இருசாராரும் கஷ்யப முனியின் வழித் தோன்றல்களே.  தற்போது எங்களுக்கு இந்த அமிழ்தை பங்கிடுவதில் பிரச்சினை வந்துவிட்டது.   நீயே ஒரு நல்ல தீர்வைத் தருவாயாக" என்று கேட்டுக் கொண்டான்.  அதற்க்கு மோகினி, "நானே ஒரு நடத்தை கெட்டவள், கற்றறிந்த அறிஞர்கள் ஒருபோதும் பெண்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை அவ்வாறிருக்க என் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாமா?" என்று வினவினாள்.  இதைக் கேட்ட அசுரர்கள் மோகினி சும்மா தமாசுக்கு அவ்வாறு பேசுவதாக நினைத்துக் கொண்டு அமிழ்தக் கலசத்தை அவளிடம் ஒப்படைத்தனர்.  அதை வாங்கும் முன்னர் மோகினி ஒரு நிபந்தனையை விதித்தாள்.  "நான் என் விருப்பப் படிதான் இந்த அமிழ்தை பங்கிட்டுத் தருவேன், அதில் நியாயம், அநியாயம் எது வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்க்கு நீங்கள் யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது, இதற்க்குச் சாம்மதம் என்றால் என்னிடம் இக்கலசத்தை தரலாம்" என்றாள்.  மோகினியின் அழகில் முற்றிலும் மதி மயங்கிய அசுரர்கள், "நீங்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்" என ஒப்புக் கொண்டு கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.

தேவர்கள் அசுரர்கள் இருபாலரும் விரதங்களை மேற்கொண்டு, பூஜை புனஸ்காரங்களையும் முடித்து அமிழ்தை உண்ண  வந்து சேர்ந்தனர்.  குஷா என்னும் தர்ப்பையால் ஆன பாயை விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்தனர். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியே உட்கார வைத்த மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிழ்தை வழங்க ஆரம்பித்தாள்.  அநியாயமே நடந்தாலும் எதிர்த்துக் கேட்க மாட்டோம் என வாக்கு தந்திருந்த படியால், அசுரர்கள் வாய் பேசாமல் அமர்ந்திருந்தனர்.  [இப்போது தகராறு செய்தால், அவளிடம் நமது இமேஜ் பாதிக்கப் படும், அப்புறம் அவளை இம்ப்ரெஸ் செய்வது கஷ்டம்  என நினைத்தும் சும்மாயிருந்தனர்!!].   இதில் ராகு மட்டும் தேவர்களைப் போல உடையணிந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் அருகில் போய் அமர்ந்தான்.  அமிழ்தை வாங்கி வாயில் சுவைத்தான்.  அப்போது அவன் அரக்கன் என உணர்ந்த விஷ்ணு தனது சக்ராயுதத்தால் அவனது தலையை சீவி எறிந்தார்.  தலை வெட்டப் பட்டாலும் அமிழ்தைச் சுவைத்திருந்த படியால் அவன் சாகவில்லை.  இவ்வாறாக அமிழ்து முழுவதும் தேவர்களுக்கே  வழங்கப் பட்ட பின்னர் மோகினி விஷ்ணுவாக மாறி காட்சியளிக்கிறார்.  அசுரர்களுக்கு அமிழ்ந்து வழங்குவது பாம்புக்கு நஞ்சு வார்ப்பது போல என நங்கறிந்திருந்த விஷ்ணு அவர்களை நயமாக ஏமாற்றினார்.

இந்த லீலைக்குப் பின்னர், இது குறித்து அறிந்த சிவன் உமையவளுடன் தனது காளை வாகனத்தின் மீதேறி , பூதகணங்கள்  சூழ விஷ்ணுவைச் சந்திக்கிறார்.  அவரைப் புகழ்ந்து பாசுரங்களைப் பாடி, மோகினி அவதாரத்தை தானும் காண வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.  அதற்க்கு இசைந்த விஷ்ணு அங்கிருந்து மறைந்து போகிறார்.  பின்னர் தூரத்தில் ஒரு அழகிய வனத்தில் பேரழகியான ஒரு பெண் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது உடலைச் சுற்றியிருக்கும் சேலையைத் தவிர வேறு ஆடைகள் எதுவும் அவள் அணிந்திருக்கவில்லை. அவ்வப்போது சிவனை தனது ஓரக்கண்ணால் புன்னகையுடன் பார்க்கிறாள்.  இதைக் கண்ட சிவன் தன்னை அவளுக்குப் பிடித்துவிட்டது போல என நினைத்து அவள்பால் மிகவும் ஈர்க்கப் படுகிறார்.


 அவளது பேரழகில் மயங்கிய சிவன் உமையவள்  தன்னுடன்  இருகிறாள் என்பதையும் மறந்து அவள் பின்னர் செல்கிறார்.  ஆனால் அவள் மீண்டும் விலகி சற்று தூரம் போய் விடுகிறாள்.   சிவனும் விரட்டிச் செல்கிறார்.  அப்போது காற்று பலமாக வீச அவளது ஆடை காற்றில் பறந்து செல்ல முழு நிர்வானமாகிறாள்.  விரட்டிச் சென்ற சிவன் அவளது ஜடையை  கையில் பிடித்து இழுத்து  அணைக்கிறார், ஆனாலும் உடனே அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மோகினி தப்பித்துச் சென்று விடுகிறாள்.  அவளை மீண்டும் விரட்டிய சிவன் அவளைப் பிடிக்க இயலாமல் விந்துவை வெளியிடுகிறார்.  சிவன் வெளியிட்ட அது ஒரு போதும் வீணாகாது.  பூமியில்  எங்கெல்லாம் அது விழுந்ததோ அங்கெல்லாம்  தங்கம், வெள்ளிச் சுரங்கங்களாக மாறின.


இவ்வாறு யாராலும் அசைக்க முடியாத மன உறுதியைக் கொண்ட சிவனையும் மதிமயக்கச் செய்யும் லீலைகளைப் புரிந்த பகவானை நான் வணங்குகிறேன் என சுகமுனி கதையை முடிக்கிறார்.

மக்காஸ், இங்க உங்களில் சிலருக்கு கதையின் முடிவைப் பற்றி சந்தேகங்கள் வரலாம்.  சிவனால், மோகினி  கற்ப்பமானாள், அவங்களுக்கு ஒரு குழந்தை கூட பிறந்தது, அது கூட சிஷேரியன்னு கேள்விப்பட்டோம்.  இப்படி ஏக போகத்துக்கும் நீங்க கேட்கலாம்.  அப்படி எதையும் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடவில்லை.  அப்படி ஏதாவது கதைகள் உலாவினால் அது வியாசதேவரின் இலக்கியங்களின் படி ஏற்கத் தக்கவை அல்ல என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமது ஆச்சார்யர்கள் ஸ்ரீ இராமானுஜர்,  ஸ்ரீ மத்வாச்சாரியார், ஸ்ரீ சங்கராச்சாரியார் போன்றோர் அந்த மாதிரி கதைகளை எங்கேயும் சொல்ல வில்லை.  மேலும் வியாசதேவர் எழுதிய மற்ற 17 புராணங்களிலும் இந்த மாதிரியான கதைகளுக்கு  எந்த ஆதாரமும் இல்லை.  பகவத் கீதையில், தேவசேனாதிபதிகளில் நான் ஸ்கந்தன் என்று பகவான் கூறுகிறார்.  மகாபாரதத்தை எழுதியவரே விநாயகர் என்றும் அறிகிறோம்.  அனால், சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்த பிள்ளை, விநாயகன், முருகன் ஆகியோரின் தம்பி என்று ஒருத்தர் இவர்தான், அவர் இன்ன வேலையைச் செய்தார் என்று மகாபாரதத்தில் எங்காவது ஏதாவது குறிப்பு உள்ளதா?  அல்லது  வியாசதேவரின் மற்ற 17 புராணங்களில் அவ்வாறு ஏதாவது cross reference உள்ளதா?  தேடிப் பாருங்கள், என் சிற்றறிவுக்குத் தெரிந்து இல்லை.  ஒருவேளை இருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம், தடையில்லை.  இல்லாவிட்டால் பரவாயில்லை, கவலைப் படாதீர்கள், ஆனால் ஐயோ...அப்பா....  ஐயோ...அப்பா....  ஐயோ...அப்பா.... என்று மட்டும் கதறி அழாதீர்கள்.  என்  மனம் அதைத் தாங்காது.

Monday, January 7, 2013

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இது பல ஸ்ளைடுகளைக் கொண்ட  .PPS கோப்பு, கீழே உள்ள சுட்டியில் பதிவேற்றியுள்ளேன்.  வியத்தகு பறவைகளின் படங்கள் உள்ளன.


பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

Saturday, January 5, 2013

பாலைவனத்தில் தண்ணீரைத் தேடுவதன் பொருள் என்ன? [ப.கீ. 1.19]



மஹாபாரதப் போர் துவங்கும் சமயம்.  போர் துவங்கும் முன்னர்  பாண்டவர்கள், கௌரவர்கள் இரண்டு பக்கமும் உள்ள தளபதிகள் தத்தமது  சங்குகளை ஒலித்தனர்.  ரிஷிகேஷராகிய ஸ்ரீகிருஷ்ணர் தனது பாஞ்ச ஜன்யத்தையும், அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும் ஒலித்தனர்.  மாமன்னர்  யுதிஷ்டிரர் [அனந்த விஜயம்], பீமன் [பௌன்ட்ரம்], நகுலன் [சுகோஷா], சகாதேவன் [மணி புஷ்பகம்] ஆகியோரும் தத்தமது சங்குகளை ஒலித்தனர்.  
வெவ்வேறான சங்குகளின் ஒருங்கிணைத்த ஒலி பெரும் முழக்கமாக இருந்தது.  அது விண்ணையும், மண்ணையும் அதிரச் செய்தது,  அவ்வொலியில் கௌரவர்களின் நெஞ்சம் நொறுங்கியது. பகவத் கீதை 1.19
கௌரவர்கள் தங்கள் சங்குகளை ஒலித்தபோது பெரும் முழக்கம் ஏற்ப்பட்டாலும், பாண்டவர்கள் இதயம் நொருங்கியதாக பகவத் கீதையில் குறிப்பிடப் படவில்லை.  ஆனால், பாண்டவர்களின் சங்கொலி கேட்ட கௌரவர்கள் இதயம் நொறுக்கியதாக ப.கீ.1.19 பதம் கூறுகிறது.  ஏனிந்த வேறுபாடு?!

 சென்னை ISKCON கோவிலில் கடந்த 30 டிசம்பர் 2012 அன்று பதிவேதாந்த சுவாமியின் சீடரான அமெரிக்காவைச் சார்ந்த ஊர்மிளா தேவி அம்மையார் பகவத் கீதை உபன்யாசத்தில் இதற்க்கு விளக்கமளித்தார்கள்.  பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக நம்பியிருந்தனர், கௌரவர்கள் அப்படியில்லை.  இதுதான் வித்தியாசம்.   நம் வாழ்வில் இது எப்படி பொருந்தும் என்று தொடர்ந்து உரையில் கூறினார்கள்.  உலக வாழ்க்கையில் எப்போது எந்த மாதிரியான ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.   ஒரு பெண் வீட்டின் படியில் காலை வைக்கும் போது கால் பிசகி கீழே விழுந்தார், அதனால் மண்டையில் அடிபட்டு மூளை பாதிக்கப் பட்டது, அதன் பின்னர் அவரால் முன்புபோல ஒருபோதும் செயல்பட முடியவில்லை.  வாழ்நாள் முழுவதும் துன்பப் பட வேண்டியிருந்தது.  இதைப் போல ஒரு வினாடி நமது வாழ்வையே புரட்டிப் போட்டு விடக் கூடும்.  நாம் வெளியில் செல்லும்போது எந்நேரமும் விபத்தில் சிக்கிவிடலாம்.  சில நேரங்களில் நம் பிரியமான உறவினர்களை இழக்க நேரிடலாம்.  இது போன்ற துன்பங்கள், பேரிடர்கள்  கடந்த காலத்தில் ஏற்பட்டன, இனி வரும் காலங்களிலும் ஏற்படத்தான் போகின்றன.  அதை ஒருபோதும் தவிர்க்க இயலாது, ஆனால் ஸ்ரீகிருஷ்ணரிடம் தஞ்சம் புகுந்துவிட்டால், இப்பேரிடர்கள் அப்போதும் வரும், ஆனால் அவற்றால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.  

நாம் எல்லோரும் துன்பமற்ற வாழ்வையே விரும்புகிறோம், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை.  மேற்சொன்ன துன்பங்கள் எதையும் நம்மில் யாரும் விரும்புவதில்லை, ஆனாலும் யாராலும் தப்பிக்கவும் முடியாது.  துன்பங்கள் நிறைந்த இடத்தில் சாத்தியமே இல்லாத துன்பமேயில்லாத நிலையை எதிர்ப்பார்க்கிறோம்.  இது வேடிக்கையானது.  இவ்வாறு நாம் எதிர்பார்ப்பதன் காரணமென்ன?





உதாரணத்திற்கு பாலைவனத்தில் பல்வேறு விலங்குகள் உள்ளன, அவை தண்ணீரை குடிப்பதே இல்லை.  தங்களுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள் உண்ணும் தாவரங்கள் அல்லது மற்ற விலங்குகளின் உடலில் இருந்தே பெறுகின்றன.   அவை நீர் குடிப்பதைப் பற்றி நினைப்பதே இல்லை.  அதே சமயம் நாம் பாலை வனத்திற்குப் போனால் அவ்வாறு இருப்போமா?  நீரை குடிக்க வேண்டுமென்று தேடுவோம்.  காரணமென்ன?  நாம் பாலை வனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.  நாம் தண்ணீர் குடிக்கும் இடத்தைச் சார்ந்தவர்கள், பாலைவனத்திற்க்குச் சென்றிருக்கிறோம்.  அதனால் அங்கேயும் நீரைத் தேடுகிறோம் அது கிடைக்காவிட்டாலும்!!

அதைப் போலவே, இங்கே துன்பமில்லாத வாழ்க்கையைத் தேடுகிறோம், அப்படி யாரும் வாழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை என்பது தெரிந்திருதாலும்!!  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாம் துன்பம் என்பதே என்ன என்று தெரியாத இடத்தைச் சார்ந்தவர்கள் தவறிப் பொய் இங்கே விழுந்து அல்லாடிக் கொண்டிருக்கிறோம், இங்கிருந்து வெளியேறி நம் சொந்த வீட்டிற்க்குச் செல்ல வேண்டும், அது தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.  இந்த பொன்னான வாய்ப்பு போனால் கிடைப்பது அரிது.

அது சரி ஸ்ரீ கிருஷ்ணரை நாம் நம்பியிருப்பது எப்படி?  அதன் பொருள் என்ன?  அது இந்த கலியுகத்தில் மிகவும் எளிது.  அவருடைய திருநாமங்களை நாவால் ஒலிக்கச் செய்து கொண்டிருந்தாலே போதும், வேறு எதுவும் தேவையே இல்லை!!


இறைவனின் பெயர்களுக்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  பெயர்களைச் சொன்னாலே போதும் இறைவன் நம்முடன் இருக்கிறான்.  அந்த பெயர்களை தியானித்திருந்தாலே போதும் எந்த வித துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும். 


Thursday, January 3, 2013

ஹாக்கி வீரர் வடிவமைத்த வியத்தகு மின்விசிறி

வணக்கம் மக்காஸ்.   அதென்னடா வியத்தகு மின்விசிறி, போய்த்தான் பார்ப்போமேன்னு என்னோட கடைக்கு உள்ளே வந்த உங்க மனோ தைரியத்தையும், புதிய கண்டுபிடிப்புகள் மேல் உங்களுக்குள்ள ஆர்வத்தையும்  நான் ரொம்ப அப்பிரிஷியேட் பண்றேன்!!  முதலில் தலைப்பில் சொல்லப் பட்டுள்ள ஹாக்கி வீரர்  யாருன்னு உங்களுக்கு அறிமுகப் படுத்திடறேன்.  அவர் என் வீட்டு பாஸோட அண்ணா, என் மைத்துனர்.  கல்லூரியில் படிக்கும் போது பல்கலைக் கழக அளவில் ஹாக்கி  அணிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தேசிய அணியில் இடம் பிடிக்க டெல்லிவரை சென்றவர், ஆனால் அது கை கூடவில்லை.  விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் படிப்பை முடிக்கும் முன்னரே சென்னை AGS அலுவலகத்தில் வேலை கிடைத்து தற்போது வரை அங்கேயே பணி புரிந்து வருகிறார்.   இன்றும் அவர்கள் அலுவலக [TN - zone] அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்வது வழக்கம்.  ஒருமுறை அவ்வாறு ஹைதராபாதிற்கு விளையாடச் சென்றார்.  வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை ஒரு நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.  அந்த சமயம் இவருக்கு வழங்கப் பட்டது ஒரு அழகான தரமான மின்விசிறி.  அதை பார்சலோடு வாங்கி வந்தவர் வீட்டில் வைத்துவிட்டு மறந்தே போனார்.   அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவரது தாய் மாமா, [இவர் சிங்காரச் சென்னையின் புகழ்பெற்ற பேருந்து கழகத்தில் கண்டக்டர்!!] வீட்டிற்கு கேஷுவல் விசிட் அடித்தபோது இந்த மின்விசிறியைப் பார்த்திருக்கிறார்.

"டேய் மச்சி, என்னடா இது பார்சலு?"

"நான்   ஹைதராபாத் விளையாடப் போனப்போ ஸ்பான்சர் பண்ணியவங்க ஜெயிச்சதுக்காக குடுத்த கிஃப்ட் மாமு!!"

"அப்படியா, திறடா பார்ப்போம்!! ஆஹா, சூப்பர் ஃ பேன்டா. டேய் ஒரு ஸ்குரூ ட்ரைவர், டெஸ்டர் இருந்தா கொண்டுவா, இதை ஃ பிட் பண்ணி மாட்டலாம்'' என்று சொல்லி எல்லாத்தையும் பிரித்துப் போட்டார்.


மின்விசிறியின் பாகங்களை இருவரும் ஆராய்ந்தனர்.  அதன் இறக்கைகளைப் [Blades] பார்த்தபோது ஒரு விஷயம் விந்தையாகப் பட்டது.  இறக்கையும், அதனை மையத்தில் உள்ள மோட்டருடன் இணைக்க உதவும் 'T' வடிவப்  பகுதியும்  நேராக இல்லை.  T பகுதி சற்றே வளைந்த மாதிரி இருந்தது.  இது ஏன் என்று கண்டக்டருக்குப் புரியவில்லை.

"ஏன்டா மச்சி இந்த மாதிரி இருக்கு?"

"தெரியலையே மாமு, எங்கே இன்னும் இரண்டு இறக்கையை பாருங்க"

"டேய், எல்லாமே வலைஞ்சுதாண்டா இருக்கு!!"

"மூன்றையும் ஒன்னு மேல ஒண்ணா வச்சுதானே மாமு பார்சல் பண்ணுறான், நான் டிரெயினில் எடுத்துகிட்டு வந்தப்போ எங்கோ அடி பட்டு மூணுமே வளைஞ்சு போச்சு போல!!"

"சரிடா, இதை நேராக்கிடலாம்.  நீ  ஒன்னு பண்ணு, ஒரு கல்லையும், சுத்தியலையும் கொண்டாடா"

"மாமு, கல்ல வச்சி தட்டினா பெயிண்டு டேமேஜ் ஆயிடுமே, பார்க்கிறதுக்கு அசிங்கமா இருக்குமே?"

"அப்போ ஒரு கோணிப்பை இருந்தா குடு, அதுக்கு உள்ளே வச்சி மெதுவா தட்டி நிமிர்த்தி விடலாம்"

ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வழியாக அடித்து, தட்டி இறக்கையின் முழுப்பகுதியும் நேராக்கினார்கள்.  கோணலே எங்கும் இல்லை.  எல்லாம் பர்ஃபக்ட்!!



தற்போது இறக்கைகளை மோட்டார் உள்ள மையப் பகுதியோடு இணைக்க வேண்டும்.  இவர்கள் தான் கில்லாடிகளாச்சே இணைத்தார்கள்.  அடுத்து மேலே சீலிங்கில் தூக்கி மாட்டி மின் இணைப்பையும் கொடுத்தனர்.



"ஸ் ..........  அப்பாடா.....  எல்லாம் முடிஞ்சதுடா, மச்சி, எங்கே ஸ்விட்சைப் போடு"

"நீங்க கீழே இறங்குங்க மாமு, நான் போடறேன்"

அவர் ஸ்டூலில் இருந்து கீழே இறங்கினார்.  ஹாக்கி வீரர்  வேகம் 1-ல்  வைத்து  ஸ்விட்சைப் போட்டார்.   மின்விசிறி அற்புதமாக ஓடியது.  எந்தக் குறையும் இல்லை.  ஆனால்...........!!   மின்விசிறியில் இருந்து காற்று மட்டும் வரவில்லை[?!].  தப்பு.........  தப்பு.......  காற்று வீசிக் கொண்டு இருக்கலாம், ஆனால் கீழே நிற்ப்பவர்  உணரத்தக்க அளவுக்கு காற்று  வரவில்லை.

"மாமு, என்னது காத்து வர்றா மாதிரியே ஃ பீல் ஆவலியே?!!"

"டேய், மாங்கா.....  ஸ்பீடை 1-ல வச்சிட்டு  புயல் மாதிரி காத்து வரும்னு பார்க்கிறியா?  கொஞ்சம் ஜாஸ்தி பண்ணுடா, காத்து வரும்"

"அட ஆமாம், சரி 2-ல் வைப்போமோ....... " என்று ஹாக்கி வீரர் ஸ்விட்சைத் திருப்பினார்.  விசிறியின் வேகம் கூடியது.  காத்து வந்துச்சா?  இப்பவும் ம்ஹூம்.  ஒன்னும் வித்தியாசமே தெரியவில்லை.  3, 4, 5........  எல்லாம் வச்சாச்சு!! அதுக்கு மேல வைக்க முடியாது!!   மின்விசிறி வேகமா ஓடுது.  ஆனா, காற்று மட்டும் கீழே வரவேயில்லை!!  இவ்வளவு வேகமா ஓடும் மின்விசிறியில் இருந்து ஏன் காற்று வீசவில்லை என்று இருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.   ரொம்ப நேரம் முயன்று பார்த்துவிட்டு  எதுவும் பலனளிக்காமல்  தங்களுக்குத்  தெரிந்த ஒரு  எலக்டிரீஷியனை அழைத்து வந்து காண்பித்தனர்.  அவருக்கும் முதலில் எதுவும் புரியவில்லை.  என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.  முழு கதையையும் மாமனும் மச்சானும் சொன்னார்கள்.

அதைக் கேட்டுவிட்டு, "ஏன்யா ஃ பேன் செய்தவன் என்ன பைத்தியக்காரனா?  அதன் இறக்கை சற்றே வளைந்திருந்தால் தானே காற்றை அதனால் தள்ள முடியும், நீங்கள் நேராக்கிவிட்டீர்கள், தற்போது அது கற்றை எந்த தொந்தரவும் செய்யாமல் ஜோராக ஓடுகிறது, என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடடா, இவ்வளவு கேனையாக இருந்துவிட்டோமே என்று,  மின்விசிறியைக் கலட்டி  மீண்டும் குத்து மதிப்பாக "T " பகுதியை மட்டும் வளைத்தார்கள்.  திரும்பவும் இணைத்து ஓட்டிப் பார்த்தார்கள்.  ஆனால் மின்விசிறி மசியவில்லை.  "பெப்பே..."  காட்டியது.  கடைசியில் சலித்துப் போய் ஏமாற்றத்துடன்  அதை மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டனர்!! பழைய இரும்புக்காரனுக்காக அது இன்னமும் அங்கேயே தூங்கிக் கொண்டிருக்கிறது!!

நீதி:   நம்மிடம் நிறைய குறைகள் இருக்கலாம்.  ஆனால் அவை எல்லாம் நீங்கி  நான் எல்லா விதத்திலும் 100% Perfect ஆக இருக்க வேண்டுமென்று நாம் முயற்சி செய்கிறோம்.  அது தவறு.  குறைகளை நினைத்து வருந்தாமல், நம்மைப் படைத்தவன் ஒரு நோக்கத்தோடுதான் அக்குறைகளை நம்மிடம் வைத்துள்ளான் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்!!

[இப்படியெல்லாம் நீதி சொல்றேன்னு  கிளம்பிட்டானுவளே!!]