Friday, October 26, 2012

நிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை?


துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: 

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திரன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரகங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவில் ஐந்தாவது பெரிய துணைக்கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிரகங்களைச் சுற்றுகின்றன.  கோளின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் சந்திரனும் மட்டுமே.  பூமியின் அளவுக்கு ஒரு பந்து செய்து அதற்க்கு சந்திரனைப் போல 49 கோலிகளைப் போடலாம். பூமியை ஒரு தராசில் வைத்து அந்தப் பக்கம் 81 1/2 சந்திரன்களை வைத்தால் முள் சமாமாகக் காட்டும். நிலவின் விட்டம் 3,476 கி.மீ. சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது, குறைந்த பட்ச தூரம் 3,63,300 கி.மீ. பட்ச தூரம் 4,05,500  கி.மீ. பூமியை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் 29.5 நாட்கள். 

மனிதனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து பெண்ணின் முகத்தை அவன் தவறாமல் ஒப்பிடுவது நிலவுக்குத்தான்!!  கீழே அவள் முகத்தை பாருங்கள்...........


முதல் பிறை to அமாவாசை அத்தனை நாட்களும் எடுக்கப் பட்ட நிலவின் படம்.  இதை உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும், நிலவு தினமும் வளர்ந்து தேய்ந்தாலும் நமக்குத் தெரிவது ஒரு முகம் மட்டுமே!! ஏன் அவள் தன்னுடை இன்னொரு முகத்தைக் கட்டுவதே இல்லை???

 நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே எப்போதும் பார்க்க முடியும், அதன் இன்னொரு பக்கத்தை பார்க்கவேமுடியாது, காரணம் என்ன?  ஒரு வேலை நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லையோ?   அதுதான் இல்லை.  நிலவு தன்னைத் தானே நிச்சயம் சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருகிறது.  அப்புறம் ஏன் அதன் மறுபக்கம் நமக்குத் தெரிவதில்லை? காரணம் இருக்கிறது!! நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29.5 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நிலா தன்னைத் தானே ஒரு முறை சுட்டிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அல்லாது, அது தன்னைத் தானே சுற்றாமல் பூமியை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்திருந்தாலோ அல்லது ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் அதன் தற்சுழற்சி ஒரு தடவைக்கு மேல் இருந்திருந்தாலோ அதன் மறுபக்கத்தை நிச்சயம் நம்மால் பார்த்திருக்க முடியும், ஆனால் உண்மையில் அவ்வாறில்லை என்பதை பின்வரும் காணொளி காட்டுகிறது.




அதுசரி,  பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் 365 1/4 முறை தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்ளும்போது,  பூமியை ஒரு முறை சுற்றி முடிக்கும் நிலவுக்கு மட்டும் அது ஏன் ஒரே ஒரு முறை?  நல்ல கேள்விதான். உண்மையில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிலவும் பூமியைப் போலவே, ஒரு சுற்று முடிப்பதற்குள், பலமுறை தற்சுழற்சியையும் முடிக்கும் வண்ணம் வேகமாக சுழன்றுகொண்டு தான் இருந்தது.  காலப் போக்கில் இந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 29.5 நாட்களுக்கு வந்து Tidal Lock ஆகி எப்போதும் ஒரே முகத்தையே நமக்கு காண்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.  இதற்க்கு காரணம், சூரிய  குடும்பத்தில் எல்லா பிரச்சினைக்கும் காரணமாயிருக்கும் அதே போக்கிரி பொருளீர்ப்பு விசைதான்!!  [Gravitational force] அப்படி என்ன தான் அது செய்தது?

பூமியின் வட துருவத்துக்கு மேலே இருந்து பார்க்கும்போது,  நிலவு தன்னைத் தானே இடஞ்சுழியாகச் [Anti Clockwise] சுற்றிக் கொண்டே பூமியையும் அதே வகையில் இடஞ்சுழியாக சுற்றி வருகிறது.  ஆனாலும், நிலவு கிழக்கில் உதித்து மேற்க்கே மறைவது போலத் தோன்றுகிறது, காரணம் பூமி வேகமாகச் சுழல்வதே.  நிலவு பூமியைச் சுற்றி வர ஆகும் காலத்தில் பூமி தன்னைத் தானே 29.5 முறை சுற்றி  முடித்து விடுவதால் இவ்வாறு தோன்றுகிறது.
பொருளீர்ப்பு விசை [Gravitational Force], தொலைவு r  ஐப் பொறுத்து 1/r^2 என்ற விகிதத்தில் குறைந்துகொண்டே செல்லும்.  அதாவது தரையில் நாம் நின்று கொண்டிருந்தால், புவிஈர்ப்பு விசை நமது காலில் அதிகமாகவும், தலைப் பகுதியில் சிறிது குறைவாகவும் இருக்கும்.  ஆனால், இந்த மாற்றம் ஆறடி மனிதனுக்கு உணரத் தக்க அளவுக்கு பெரிதாக இருக்காது. ஆனால் 3,474 கி.மீ. விட்டமுள்ள நிலவு போன்ற பெரிய உருவங்களுக்கு இந்த வித்தியாசத்தை புறக்கணிக்க முடியாது.  பூமிக்கு அருகாமையில் உள்ள பக்கத்திற்கும், அதற்க்கு நேர் எதிரே உள்ள பக்கத்திற்கும் இடையே பொருளீர்ப்பு விசையில் உள்ள வேறுபாட்டால்,  நிலவின் மேற்ப்பரப்பு இருபுறமும் அரை மீட்டர் [55 செ.மீ] மேலே எழும்பி நீள்வட்ட வடிவைப் பெறுகிறது.  [மேலே உள்ள படத்தில்  நிலவின் A நிலையை கவனியுங்கள்.]   இதை ஆங்கிலத்தில் Tides என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த எழுச்சி  பூமி நிலவு இரண்டின் மையத்தையும் இணைக்கும் கோட்டைப் பொறுத்து சமச்சீராக [Symmetrical] இருக்கும்.  ஆனால், நிலவு B என்ற நிலைக்கு சற்றே நகர்ந்தால் இந்த சமச்சீர் நிலை மாறிவிடுகிறது,   அது நகர்ந்து மீன்றும் பூமி நிலவை இணைக்கும் கோட்டிற்க்கு சமச்சீராக ஆக சற்று தாமதமாகும்.  அந்த தாமதமாகும் நேரத்தில் உயர்ந்த நிலப்பரப்புகளை [நீல வண்ணத்தில் உள்ளவை] பூமி ஈர்க்கிறது, இதில் 1,2 என்ற இரண்டு பகுதிகளையும் ஈர்க்கும் பொது, அதில் 1 -ன் மீதான விசை நிலவின் தற்ச் சுழற்சிக்கு எதிர் திசையிலும் 2 ன் மீதான விசை நிலவு சுழலும் திசையிலும் இருப்பதால் இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்து விடலாம், அனால் 1 பூமிக்கு அருகில் இருப்பதால் அது ஜெயித்து, நிலவின் சுழற்சி வேகத்தை சற்றே மட்டுப் படுத்துகிறது.  மேலும் மேலெழும்பிய பரப்பு [நீல வண்ணத்தில் உள்ளது] நிலவின் சுழற்சிக்கேற்ப்ப மாறிக்கொண்டே இருப்பதால் சுழலும் ஆற்றல் வெப்பமாக மாற்றப் பட்டும் வேகம் மட்டுப் படும்.  இவ்வாறு சில நூறு கோடி ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை இழந்து சுழலும் வேகமும் குறைந்து இன்றைய வேகமான 29.3 நாட்களுக்கு ஒரு தற்சுழற்சி வந்து Tidal Lock ஆகி   விட்டது.  நிலா அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திருப்ப முயன்றால் ஒரு இடி இடித்து அதே பக்கம் தன்னை நோக்கி இருக்குமாறு பூமியின் ஈர்ப்பு விசை செய்துவிடும்.

இது ஏதோ பூமிக்கும் நிலவுக்குமிடையே மட்டுமே நிகழ்ந்த ஒன்று என நினைக்க வேண்டாம்.  செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் இரண்டு சந்திரன்கள் [ஃபோபோஸ், டெய்மோஸ்], ஜூபிடரைச் சுற்றும்  சந்திரன்களில் டஜனுக்கும் மேற்ப்பட்டவை, சனி கிரகத்தின் பல சந்திரன்கள், யுரேனஸ், நெப்டியூன்  கிரகத்தின் எல்லா துணைக்கோள்கள் என இத்தனையும் நமது சந்திரனைப் போலவே கிராவிட்டி பிணையில் [Gravity Lock /Tidal Lock ] மாட்டிக் கொண்டு ஒரே முகத்தை மட்டுமே அவற்றின் கோள்கள் பக்கம் திரும்பிய வண்ணம் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சனி கிரகத்தின் ஹைபரையான் [Hyperion]  இந்த மாதிரி கட்டுக்குள் இன்னமும் வரவில்லை என்பது ஆறுதல்!!

நாம் எப்போதும் பார்க்கும் நிலவின் முகம்.


நாம் பார்த்திராத நிலவின் முகம்.  நிலவின் மறுபக்கத்தை முதன் முதலாக ரஷ்யாவின் லூனா-3 என்ற விண்கலம் 1959 ஆம் ஆண்டு படமெடுத்தது.

 சரி பூமி மட்டும் தான் நிலவை இந்த மாதிரி முகத்தை திருப்ப விடாமல் செய்யுமா?   நிலவு பூமியின் மேல் எந்த தாக்கத்தையும்  செலுத்தாதா? ஆம், செலுத்துகிறது.  நிலவு, சூரியன் இரண்டும் சேர்ந்து பூமியின் மேல் அதிகாரம் செலுத்தத்தான் செய்கின்றன.  பூமியில் உள்ள நிலம்,நீர் மற்றும் காற்று ஆகிய மூன்றின் மேலும் இவற்றின் ஈர்ப்பு விசை செயல் பட்டு, மேலே சொன்ன அதே முறையில் பூமியில் Tides என்னும் பேரலைகளை ஏற்படுத்துகின்றன,  இவற்றில் நீரில் ஏற்ப்படும் பேரலைகளை மட்டுமே நாம் உணர முடிகிறது, மற்றவை நாம் உணரா வண்ணம் நடக்கிறது.  இவற்றின் காரணத்தால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்த வண்ணம் உள்ளது.  ஒரு நாளின் அளவு நூறு வருஷத்துக்கு 1.7 மில்லி செகண்டுகள் அதிகரிக்கும்!!  சில நூறு கோடி ஆண்டுகள் கழித்து பூமியும்  ஒரே ஒரு முகத்தை மட்டுமே நிலவுக்குக்  காண்பிக்கும்,  அப்புறம் போகப் போக பூமி சூரியனுக்கே ஒரே ஒரு முகத்தைக் காண்பிக்கும் காலம் வந்துவிடும்!!

5 comments:

  1. நல்ல தகவல் முக்கியமாக கிராவிட்டி லொக் காரணம் நான் யோசிக்காத விடயம்...

    இறுதியில் பூமியின் வேகம் குறைதல்...அதுவும் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. @ Kiruththikan Yogaraja

      யோகராஜா, நிலவு பூமியைச் சுற்றி வர ஆகும் காலம் 27.5 நாட்கள், 29.5 நாட்கள் என இரண்டு கணக்கீட்டு முறைகள் உள்ளன, இரண்டுக்கும் உள்ள தொடர்பை பின்னூட்டத்தில் தெரிவிக்க முடியுமா?

      Delete
    2. இதைப் பற்றி பதிவு ஒன்றை எழுத இருக்கிறேன்.

      Delete
  2. புதிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete